சுப. உதயகுமாரன்
பிரதமர் நரசிம்மராவ் அரசில் (1991 – 1996) நிதித்துறை அமைச்சராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங், 2004-ஆம் ஆண்டு தானே பிரதமராக ஆட்சிப் பொறுப்பேற்றார். பொருளாதாரம் படித்தவர், நல்லவர், நேர்மையானவர், நாட்டை நன்றாக்கிவிடுவார் என்று பெரும்பான்மையான இந்தியர்கள் எதிர்பார்த்தனர். இவர் உலக வங்கியில் வேலை பார்த்தவர், உலகமயக் கொள்கையில் நம்பிக்கை கொண்டவர், பாமர மக்கள் தொடர்பு இல்லாதவர் என்பன போன்ற உண்மைகள் நம்மில் சிலரை எச்சரித்து நின்றன.
அப்போது உலக வங்கியின் தலைவர் ஜேம்ஸ் ஊல்ஃபென்சன் இந்தியாவுக்கு வந்தார். இரண்டு இந்தியாக்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், வளரும் இந்தியா ஆண்டுக்கு 8 விழுக்காடு வளர்வதாகவும், கிராமப்புற இந்தியா 2-3 விழுக்காட்டுக்கும் குறைவாகவே வளர்வதாகவும் சுட்டிக்காட்டினார்.
ஆனால் கடந்த செப்டம்பர் 22, 2017 அன்று மொஹாலியில் மேலாண்மைக் கல்வி பயிலும் மாணவர்களிடம் உரையாற்றிய மன்மோகன் சிங், “உலகமயமாக்கல் கொள்கையால் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் அதிகரித்தது. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. இன்றைய சூழலில் உலகமயமாக்கல் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டது” என்று பேசியிருக்கிறார்.
மன்மோகன் சிங் அரசில் அமைச்சராகப் பணியாற்றிய ஜெய்ராம் ரமேஷ் கடந்த செப்டம்பர் 21, 2017 அன்று சென்னையில் ஒரு வர்த்தகர் நிகழ்வில் பேசியபோது, புதிய பொருளாதாரக் கொள்கையால் சமூக ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துவிட்டன என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.
மேற்குறிப்பிட்டப் பேச்சிலேயே மன்மோகன்சிங் இன்னொன்றையும் குறிப்பிடுகிறார். அதாவது “இந்தியாவைப் பொறுத்தவரை குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களைக் கொண்டு வளர்ச்சியை அடையும் சூழல் நிலவுகிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு புதிய முதலீடுகளை ஈர்ப்பது அவசியம். ஒருவேளை அதிலிருந்து தவறிவிட்டால் வேலைவாய்ப்புக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். ஏனென்றால் தொழில் உற்பத்தி முறைகள் பெரும்பாலும் தானியங்கிமயமாகும் நிலை உருவாகிவிட்டது.”
மன்மோகன் சிங் சொல்வதை இப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும்: “உலகமயமின்றி வாழ முடியாது. உற்பத்தி முறைகள் தானியங்கிமயமாகி வருவதால், குறைந்த சம்பளமே கிடைத்தாலும் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு, புதிய முதலீடுகளை ஈர்த்து, கிடைக்கிற வேலைவாய்ப்புக்களைத் தக்கவைத்து வாழ்க்கையை ஓட்டுங்கள். அதுதான் உசிதமானது.” உலகமயத்தைப் பொறுத்தவரை, காங்கிரசு, பாரதிய ஜனதா கட்சிகளின் மனப்போக்கு ஒரே மாதிரிதான் இருக்கிறது.
கள யதார்த்தம் என்னவென்றால், இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து நலிவடைந்து கொண்டிருக்கிறது. ஆண்டு வளர்ச்சி விகிதம் 5 விழுக்காடாக குறைந்திருக்கிறது. புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படவில்லை. “இந்தியாவில் தயாரிப்போம்” என்கிற பெயர்தான் தயாரிக்கப்பட்டதே தவிர, வேறு எதையும் பெரிதாக தயாரிக்கவில்லை. முதலீடுகள் குறைந்து கொண்டிருப்பதால், உற்பத்தியும் குறைகிறது. நிலைமையை இன்னும் மோசமாக்குவது எதுவென்றால் மக்களின் நுகர்வும் குறைந்து கொண்டிருப்பதுதான்.
மொத்தத்தில் ஓடிக் கொண்டிருந்த குதிரை இப்போது நொண்டிக் கொண்டிருக்கிறது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல, பல்வேறு சமூக-கலாச்சாரப் பிரச்சினைகளில் பாசிச அணுகுமுறைகளைக் கைக்கொண்டது, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு போன்றவை பிரச்சினையை இன்னும் பெரிதாக்கிவிட்டன.
ஆக, இந்தியப் பொருளாதாரம் மந்தநிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதை சரி செய்ய பலரும் பல வழிகளைச் சுட்டிக்காட்டுகின்றனர். இறுக்கமான பணக் கொள்கை, நிதிக் கட்டுப்பாடு, குறைந்த வட்டி விகிதம், ரூபாயின் பணமாற்று மதிப்பைக் குறைப்பது என பல ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரவும், பொருளாதாரத்தை இன்னும் மோசமாகாமல் காத்துக்கொள்ளவும், ஊக்கத் தொகை (stimulus package) கொடுக்கலாம் என்று மத்திய அரசு சிந்தித்துக் கொண்டிருக்கிறது. ரூபாய் 135 லட்சம் கோடி மதிப்புள்ள இந்தியப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த வங்கிகளுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் ஊக்கத்தொகை கொடுக்கலாம் என்பது அரசின் திட்டம்.
விவசாயம் சார்ந்ததாக இருந்த இந்தியப் பொருளாதாரத்தை உற்பத்திச் சார்ந்ததாக மாற்றப் போகிறோம் என்று உறுதிபூண்டு, விவசாயத்தை, விவசாயிகளை முழுவதுமாகக் கைவிட்டார்கள் மன்மோகன் சிங்கும், மோடியும். விவசாயிகளின் அதிக விளைச்சலுக்கு உதவில்லை; விளை பொருட்களுக்கு உரிய விலை கொடுக்கவில்லை. அவர்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் பற்றி கேட்டுத் தெரிந்துகொள்ளக்கூட ஆர்வம் காட்டவில்லை.
இதன் விளைவாக விவசாயம் நட்டகரமானத் தொழிலாயிற்று. மக்கள் நிலத்தை விட்டு, விவசாயத்தை விட்டு ஓடினார்கள். பிடிவாதமாக நின்று விவசாயம் செய்தவர்கள் தற்கொலை செய்துகொள்ள வேண்டிய நிலையை ஆட்சியாளர்கள் உருவாக்கினார்கள். ஆக, ஆறு லட்சம் கிராமங்களை உள்ளடக்கிய கிராமப்புறப் பொருளாதாரம் படுபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறது. விவசாயக் கூலிகள், கட்டுமானத் தொழிலாளர்கள், சிறு குறு தொழிற்சாலைத் தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர்.
“முதலீடு செய்கிறார்கள், வேலைகளை உருவாக்குகிறார்கள்” என்கிற பெயரில், பன்னாட்டு நிறுவனங்களுக்கும், உள்நாட்டு முதலாளிகளுக்கும் இலவச நிலம், இலவச தண்ணீர், இலவச மின்சாரம், மலிவான உரிமைகளில்லாத் தொழிலாளர்கள், சுற்றுச்சூழல் நியமங்களை மீறும் உரிமை என அனைத்தையும் வாரி வாரி வழங்கியது மத்திய அரசு. விவசாயிகள், மீனவர்கள், வணிகர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் போன்றோர் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டனர். அதானிகள், அம்பானிகள் நலன்கள் கவனமாகப் பேணப்பட்டனவேயொழிய சாதாரண மக்கள் சாலையில் நிறுத்தப்பட்டனர்.
இப்போது ஒட்டுமொத்த நாடும் முட்டுச்சந்தில் நிற்கிறது. ஊக்க மருந்து வேலை செய்யுமா என்பது சந்தேகம் என்கிறார்கள் வல்லுனர்கள். ரூபாய் 45,000 கோடி முதல் ரூ.68,000 கோடி வரை ஊக்கத்தொகைக் கொடுக்கப்படலாம் என்று பத்திரிகைச் செய்திகள் சொல்கின்றன. இது கடலில் கரைத்த காயமாகத்தான் இருக்கும் என்பது எதிர்வாதமாக இருக்கிறது. ஊக்கத்தொகைக் கொடுத்தாலும் உற்பத்தி பெருகாது என்கின்றனர் அவர்கள்.
இந்த நிலையிலாவது பொருளாதாரக் கொள்கைகளில் உரிய மாற்றங்கள் கொண்டுவந்து, சாதாரண மக்களைக் காத்துக்கொள்வதற்கு பதிலாக, ரேஷன் கடைகளை மூடுவோம், கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடுகளை அகற்றுவோம், தொழிலாளர் உரிமைகளை இன்னும் நசுக்குவோம் என்று சிந்திப்பதும், செயல்படுவதும் மாபெரும் வரலாற்றுப் பிழைகளாகவே வந்து முடியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.