சுப. உதயகுமாரன்
‘முடங்கிக் கிடக்கும் பொருளாதாரத்தை முடுக்கி விடுவது எப்படி’ என்பதுதான் மோடி அரசின் பெரும் கவலையாக இருக்கிறது இப்போது! அண்மையில் எழுந்த ஜெய் ஷா பிரச்சினை நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டபோது, இந்திய அரசின் வங்கிகளுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் ஊக்கத்தொகைக் கொடுக்கலாம் எனும் திட்டம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. கேரளாவில் ‘ஜனரக்ஷா யாத்ரா” நடத்திக்கொண்டிருந்த அமித் ஷா, அவசரம் அவசரமாக தில்லிக்குப் புறப்பட்டுச் சென்றது ஊக்கத்தொகை குறித்து முடிவு எடுப்பதற்காகத்தான் என்று ஒரு செய்தி பரவியது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 2009-ஆம் ஆண்டு எழுந்த மிகப்பெரிய உலகளாவியப் பொருளாதார நெருக்கடி அமெரிக்காவுக்கும் பெரும் தலைவலியை உருவாக்கியது. பிரச்சினையை அதிபர் ஜார்ஜ் புஷ் திறம்படக் கையாளாத நிலையில், அடுத்து அதிபராக வந்த பாரக் ஒபாமா அந்தப் பொறுப்பை ஏற்கவேண்டி வந்தது. அவர் அமெரிக்கப் பொருளாதாரத்தைத் தூக்கிநிறுத்த ஊக்கத்தொகை அளிப்பது என்று முடிவெடுத்தார்.
அந்த காலகட்டத்தில் இந்தியாவிலும் சுங்க வரியைக் குறைத்து, ஐம்பதாயிரம் கோடி ரூபாய் அரசு செலவினத்தில் அதிகமாகச் சேர்த்து ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3 விழுக்காடு உயர்ந்ததாக சொல்லப்பட்டது.
ஓர் அரசு தன் நாட்டுப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு, குறுகிய கால அடிப்படையில் மக்களையும், தொழில் நிறுவனங்களையும் அதிகமாக நுகரச்செய்ய வைப்பதற்கோ, அல்லது நீண்டகால அடிப்படையில் உள்கட்டமைப்புக்களிலும், ஆய்வுகளிலும் அதிக முதலீடுகள் செய்து, வேலைவாய்ப்புக்களை உருவாக்கி, வணிக நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவுவதற்கோ ஊக்கத்தொகைக் கொடுக்கலாம்.
ஊக்கத்தொகை கொடுத்த ஒபாமா தனது நடவடிக்கை முப்பது லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்கும், அமெரிக்கர்களுக்கு வரிச்சலுகை அளிக்கும், உடல்நலம், எரிசக்தி உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்தும் என்று உறுதியளித்தார். கடந்த 2009 பிப்ருவரி 17 அன்று கற்பனை செய்யமுடியாத மாபெரும் தொகையான 787 பில்லியன் டாலர் பணத்தை ஊக்கத்தொகையாக வழங்கினார்.
அமெரிக்க நாடாளுமன்றம் பரிந்துரைத்த ஊக்கத்தொகைத் திட்டமும், அதிபர் ஒபாமா வடிவமைத்தத் திட்டமும் சில விடயங்களில் முரண்பட்டாலும், பல பொது அம்சங்களைக் கொண்டிருந்தன. அமெரிக்க நுகர்வோர்களை அதிகம் செலவழிக்கச் செய்வது, வேலைவாய்ப்புக்களை உருவாக்குவது, சில முக்கியமானத் துறைகளை புனருத்தாரணம் செய்வது போன்றவைதான் பொதுவான அம்சங்களாக இருந்தன.
மரபுசாரா எரிசக்தித் திட்டங்கள், மின்சார வழித்தடங்கள் மேம்பாடு, ஏழை எளியோர் வீடுகளுக்கு சூடேற்றும் வசதி போன்ற திட்டங்களுக்கு கணிசமான நிதி ஒதுக்கப்பட்டது. கிராமப் புறங்களில் இணைய வசதிகள் உருவாக்கல், ஆய்வியல் வளாகங்கள் கட்டுதல், சாலைகள், அதிவேக ரயில்கள், சுத்தமான தண்ணீர் வழங்கல், கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டுத் திட்டங்கள் போன்றவற்றில் ஊக்கத்தொகையை செலவிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
பொதுப்பணித் திட்டங்களில் பயன்படுத்தப்பட்ட இரும்புக் கம்பிகள் உள்ளிட்ட பொருட்களை அமெரிக்காவிலேயே தயாரிக்க வேண்டும் என்றும், “அமெரிக்கப் பொருட்களையே வாங்குவோம்” எனும் கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. வேலையற்றோருக்கான உதவிகள், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், வீட்டுக்கடன் திட்டம், ஓய்வுபெற்ற இராணுவத்தினருக்கான சலுகைகள் போன்ற பல்வேறு திட்டங்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
மக்களுக்கு வழங்கும் வரிச்சலுகை அவர்களை அதிகமாக செலவு செய்ய ஊக்குவிக்கும் என்றும், பெரிய நிறுவனங்களுக்கு வழங்கும் வரிச்சலுகை அவர்களை மேலும் முதலீடு செய்ய ஊக்குவிக்கும் என்றும் சொல்லப்பட்டது. பொதுப்பணிகளில் அரசுப்பணத்தை செலவு செய்வது கம்பெனிகளுக்கு ஒப்பந்தங்களைப் பெற்றுத்தரும்; அதன் மூலம் வேலைவாய்ப்புக்கள் உருவாகும் என்றும் கருதப்பட்டது. வருங்காலத்தில் அறிவார்ந்த முதலீட்டு முடிவுகளை எடுக்கும்பொருட்டு, அதற்குத் தேவையான ஆய்வு மற்றும் உருவாக்கங்களில் கவனம் செலுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இப்படி ஊக்கத்தொகை வழங்குவதில் மாறுபட்டக் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. மையநீரோட்டப் பொருளாதார நிபுணர்கள் ஊக்கத்தொகைக்கு ஆதரவாக சிந்தித்தனர். ஆனால் வலதுசாரி நிபுணர்கள் அரசு தனது செலவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டுமென்றும், பொதுப்பணிகளை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்திவிட முடியாது என்றும், 1990-களில் ஜப்பான் இதை நடைமுறைப்படுத்தி தோல்வி கண்டது என்றும் வாதாடினார்கள்.
ஊக்கத்தொகை வேலையே செய்யாமலோ, அல்லது போதுமான அளவு வேலை செய்யாமலோகூடப் போகலாம் என்றும் சிலர் அஞ்சினர். வேறு பல கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. ஊக்கத்தொகை என்பது பொருளாதாரத்தின்மீது தாக்கம் ஏற்படுத்தும் வகையில் உரிய நேரத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை. செலவு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாயும் உரிய பின்விளைவுகளை ஏற்படுத்தி, தேக்கநிலையால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். இது ஒரு தற்காலிக நடவடிக்கையாகத்தான் இருக்க வேண்டும்; குறுகிய கால ஊக்கத்தொகை நீண்டகால பட்ஜெட் சுமையாக மாறிவிடக்கூடாது.
பொருளாதாரத்தை மேம்படுத்த வங்கிகளை மறுமூலதனமாக்கத்துக்கு ஆட்படுத்துவோம் எனும் குரல்கள் இந்தியாவில் ஓங்கி ஒலிக்கத் துவங்குகின்றன. ஆனால் உலக வங்கியின் வருடாந்திரக் கூட்டத்துக்குச் சென்ற மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ஊக்கத்தொகை பற்றி தான் எதுவுமே பேசவில்லை, அப்படி ஒரு திட்டமே இல்லை என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் நிதி-ஆயோக் அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார் உற்பத்தியையும் மூலதனத்தையும் பெருக்குவதற்கு ஊக்கத்தொகைக் கொடுக்கலாம் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
பணத்தை வாரி எறிந்து, இலவசங்கள் கொடுத்தால், அது தவறான சமிக்ஞையைக் கொடுக்கும். ஆனால் சாலைகள், விமான நிலையங்கள், தொடர் வண்டிகள் போன்றவற்றை உருவாக்கும்போது, யாரும் இதை மோசமான சமிக்ஞை என்று கண்டிக்கமாட்டார்கள் என்கிறார் அவர். ஆண்டுதோறும் படித்து முடித்துவிட்டு கல்லூரிகளிலிருந்து வெளியே வரும் 1.2 கோடி இளைஞர்களுக்கு வேலை தேடி கொடுக்கவேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2017-ஆம் ஆண்டில் 7.2 விழுக்காடாக இருக்கும் என்று கணித்திருந்த உலக வங்கி தற்போது அதை 6.7 விழுக்காடாகக் குறைத்திருக்கிறது.
இந்நிலையில், இந்தியாவின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்த மூன்று யோசனைகளை சர்வதேச செலாவணி நிதியம் (ஐ.எம்.எஃப்) அளித்திருக்கிறது. முதலாவதாக, வங்கிகளிடம் திருப்பி செலுத்தப்படாமல் இருக்கும் கடன்தொகை விவாகரத்துக்குத் தீர்வு காண வேண்டும். பொதுத் துறை வங்கிகளின் மூலதனத்தைப் பெருக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வங்கிகளில் இருந்து கடன் வாங்கியிருப்பவர்களிடம் இருந்து அதை வசூலிப்பதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும். இரண்டாவதாக, மானியங்களைக் குறைக்க வேண்டும். மூன்றாவதாக, உள்கட்டமைப்பு மேம்படுத்துவது.
வேளாண் துறையில் சீர்திருத்தம், தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இம்மாதிரியான வெளியார் வலிந்துத் திணிக்கும் கட்டமைப்பு சீர்த்திருத்தங்கள்தான் தற்போதைய பிரச்சினைக்கான மூலக் காரணங்களுள் முக்கியமானவை எனும்போது, அவர்கள் தரும் மருந்தையே அரசு கேள்விகேட்காமல் அருந்தத் துடிப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் பிணம் தின்றுதானே தீர வேண்டும்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.