சுப. உதயகுமாரன்
வளர்ச்சி எனும் விழுமியத்தைப் புரிந்துகொள்ள மூன்று சிந்தனையோட்டங்கள் இருக்கின்றன. இவற்றை நவீனமயமாக்கல், சார்பு நிலை, உலக அமைப்பு என்று பெயரிட்டு அழைக்கிறோம்.
1950-களில் நவீனமயமாக்கல் (modernization) அணுகுமுறை பிரசித்திப் பெற்றதாக இருந்தது. 1960-களின் இறுதிக்கட்டத்தில் அது சார்பு நிலை (dependency) அணுகுமுறையால் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. 1970-களின் இறுதியில் ஒரு மாற்றுப் புரிதலை உருவாக்குவதற்காக உலக அமைப்பு (World-System) அணுகுமுறை முகிழ்த்தது. 1980-களின் இறுதிக்கட்டத்தில் இம்மூன்று முறைகளையும் இணைத்துப் பார்க்கும் போக்கு நிலவியது. 1990-களில் தாராளமயமாதல் (liberalization), தனியார்மயமாதல் (privatization), உலகமயமாதல் (globalization) எனும் மும்மை ஆட்சி செலுத்தத் துவங்கியது.
நவீனமயமாக்கல் என்பது ஓர் ஒருவழிப்பாதையாகப் பார்க்கப்படுகிறது. அதாவது கற்கால நிலையிலிருந்து தற்கால நிலைக்கு சமூகங்களை மெதுவாக, படிப்படியாக இட்டுச் செல்வதுதான் நவீனமயமாக்கல் என்று புரிந்துகொள்ளப்படுகிறது. இது ஒவ்வோர் கட்டமாக நடந்தேறும் என்றும், தொடர்ச்சியான இந்த மாற்றம் நீண்டகாலம் எடுத்துகொள்ளும் என்றும், இது மாற்றியமைக்கப்பட முடியாதது என்றும் வாதிடுகின்றனர் அறிஞர்கள்.
உண்மையில், நவீனமயமாக்கல் என்பது ஐரோப்பிய மயமாக்கல், அல்லது அமெரிக்க மயமாக்கல் என்றாகிறது. தொழில் மயமாக்கல், நகரமயமாக்கல், மையப்படுத்துதல் போன்ற பல அம்சங்களை உள்ளடக்கிய நவீனமயமாக்கல் அனைத்துச் சமூகங்களையும் ஒன்றுபோலத் தோன்றச்செய்யும் என்கிற குற்றச்சாட்டும் எழுகிறது.
மூன்றாம் உலக நாடுகளில் நிலவிவந்த முன்னேற்றச் சிந்தனைகளை, நடவடிக்கைகளை முற்றிலுமாகப் புறந்தள்ளி, அந்த நாடுகளின் அருமை பெருமைகளை மட்டம் தட்டி, மேற்கத்திய நாடுகளின் மேன்மையை உறுதி செய்வதாகவே இருக்கிறது நவீனமயமாக்கல் அணுகுமுறை.
பாரம்பரியம் என்பதும் நவீனம் என்பதும் இருவேறு துருவங்களாகப் பார்க்கப்படவேண்டுமா எனும் கேள்வி எழுகிறது. பாரம்பரிய சமூகங்களிலும் அவர்களுக்கே உரித்தான நவீனம் இருக்கத்தான் செய்தது. அது வளர்ந்து மேலோங்க அனுமதிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. அதேபோல, தற்போதைய நவீன சமூகங்களிலும், பாரம்பரிய அனுமானங்கள், பார்வைகள், மதிப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. பாரம்பரிய விழுமியங்கள்கூட நவீனமயமாக்கலுக்கு உதவ முடியும். எடுத்துக்காட்டாக, நாணயம் போற்றுதல், வாக்குக் கொடுத்துவிட்டால் மீறாமல் இருத்தல் போன்ற பண்பாட்டு விடயங்கள் நவீனகால வர்த்தகத்துக்கு மிகவும் உகந்தவைதான்.
பாரம்பரிய விழுமியங்கள், உற்பத்தி முதலீடுகள் குறைவு போன்ற பிரச்சினைகள் பற்றி பெரிதும் கவலைப்படும் நவீனமயமாக்கல் அணுகுமுறை, காலனி ஆதிக்கம், மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதாரங்கள் மீது பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துவது, வளரும் நாடுகளுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையேயுள்ள ஏற்றத்தாழ்வுகள், உலக சமூகத்தின் குறைபாடுகள் பற்றியெல்லாம் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை.
சார்பு நிலை அணுகுமுறை என்பது விளிம்புநிலைக் குரல்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நவீனமயமாக்கல் விழுமியம் எப்படி ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உள் கட்டமைப்புக்களை, பாரம்பரிய ஏற்பாடுகளை அலசி ஆராய்கிறதோ, அதுபோல சார்பு நிலை அணுகுமுறை வெளிப்புற விவகாரங்களை விவாதிக்கிறது. எடுத்துக்காட்டாக, வளரும் நாடுகளின் பின்னடைவு இயற்கையாக நடந்த ஒன்றல்ல; மாறாக நீண்டகால காலனி ஆதிக்கத்தாலும், சுரண்டல்களாலும் நடத்தப்பட்ட ஒன்று என்று சார்பு நிலை அணுகுமுறை வாதிடுகிறது.
உபரி கச்சாப் பொருட்களும், வளங்களும், வணிக சாதனங்களும், லாபங்களும் மூன்றாம் உலக நாடுகளின் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கும், நாடுகளின் தலைநகரங்களுக்கும், இறுதியாக மேற்கத்திய நாடுகளின் பெருநகரங்களுக்கும் சென்றடைகின்றன. இப்படியாக மேற்கத்திய நாடுகள் எனும் மையங்களை வளரச்செய்யும் வரலாற்றுச் செயல்முறை மூன்றாம் உலக நாடுகளான விளிம்புகளை தேய்வடையச் செய்கிறது.
இதில் காலனி சார்பு நிலை, நிதியாதார சார்பு நிலை, தொழிற்நுட்ப சார்புநிலை எனும் மூன்று சார்பு நிலைகளை நாம் கண்டுணர முடியும். காலனி சார்பு நிலையில் மைய நாடுகள் வளரும் நாடுகளின் நிலம், சுரங்கங்கள், மனித வளம் உள்ளிட்ட அனைத்தையும் அபகரிக்கின்றன. நிதியாதார சார்பு நிலை என்பது மேலை நாடுகளுக்குக் கச்சாப் பொருட்களும், விவசாயப் பொருட்களும் ஏற்றுமதி செய்து அதன் மூலம் கிடைக்கிற வருவாயை ஆதாரமாகக் கொண்டு வளரும் நாடுகள் இயங்குவது. அதேபோல, தொழிற்நுட்ப சார்புநிலை என்பது ஏற்றுமதியின் மூலம் பொருளீட்டி, அந்த அந்நியச் செலாவணியின் உதவியோடு கனரக இயந்திரங்கள், உபகரணங்கள் வாங்கும் நிலை. ஏற்றுமதித் துறையை அந்நிய முதலீடு ஆட்டிவைப்பதால், முதலீடு செய்யும் வெளிநாடுகளின் ஈடுபாடுகளைக் காக்கும் ஓர் அரசியல் சார்பும் தலைதூக்குகிறது.
இந்தச் சார்பு நிலை அணுகுமுறை வளரும் நாடுகளுக்குள் நிலவும் வகுப்பு பேதங்களை கணக்கில் எடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. உள்நாட்டு சக்திகளும் நிறுவனங்களும் வெளிநாட்டு ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட முடியுமென்றும், தனித்த வளர்ச்சி முறை ஒன்றை தகவமைக்க முடியுமென்றும் இந்த அணுகுமுறை நம்புவதில்லை. இந்தச் சார்பு நிலை விழுமியம் வெளிநாடுகளின் அதிகாரத்தை மிகைப்படுத்துகிறது என்று குறைபடுகின்றனர் சிலர். மைய நாடுகள் விளிம்புநிலை நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்தினாலும், அவை புதிய கருத்துக்களையும், நிறுவனங்களையும், தொழிற்நுட்பங்களையும் அறிமுகம் செய்கின்றன என்பதும் மறுக்கமுடியாத உண்மை.
நீண்டகால அடிப்படையில், பரந்து விரிந்த உலகப் பெருவெளியில், சமூக வரலாற்று செயல்முறைகளின் முழுமை மற்றும் விழுமியங்களின் நிலையற்ற தன்மை போன்றவற்றை உள்ளடக்கிய பொருளாதாரங்கள் குறித்த ஆய்வைத்தான் உலக அமைப்பு அணுகுமுறை என்கிறோம். இன்னொரு விதத்தில் சொல்வதென்றால், ஓர் அரசையோ அல்லது ஒரு சமூகத்தையோ ஆய்வு செய்வதற்கு பதிலாக, ஓர் ஒட்டுமொத்த வரலாற்று அமைப்பை ஆய்வின் அடிப்படையாகக் கொள்வதுதான் உலக அமைப்பு அணுகுமுறை.
பண்டைக்காலத்தில் சிறு சிறு அமைப்புக்களே உலகில் இயங்கிவந்தன. கி.மு. 8000 முதல் கி.பி. 1500 வரை உலகப் பேரரசுகள் முக்கியமான உலக அமைப்புக்களாகப் பரிணமித்தன. பின்னர் 1500-ஆம் ஆண்டு வாக்கில் ஐரோப்பாவில் முதலாளித்துவ உலகப் பொருளாதாரங்கள் முகிழ்த்தன. இன்று முதலாளித்துவம் ஒட்டுமொத்த உலகத்தையும் கவ்விக்கொண்டிருக்கும் நிலையில், அந்த முழு உலகத்தையே நம் ஆய்வுகளின் அடிப்படையாகக் கொள்வதே உலக அமைப்பு அணுகுமுறை.
மேற்குறிப்பிட்ட அணுகுமுறைகளை தனித்தனியாக பாவிப்பதற்கு பதிலாக, 1980-களின் இறுதிக்கட்டத்தில் இம்மூன்று அணுகுமுறைகளையும் இணைத்தே அறிஞர்கள் உலகப் பொருளாதாரத்தை, வளர்ச்சியை அலசி ஆராய்ந்து வந்தார்கள். 1990-களில் ஒட்டுமொத்த உலகத்தையும் ஒரே சந்தையாக பாவிக்ககூடிய தாராளமயமாதல், தனியார்மயமாதல், உலகமயமாதல் போன்ற விழுமியங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இன்று அந்நிய முதலீடு, சர்வதேச நிதி நிறுவனங்களின் தலையீடு, லாப நோக்கு, மேற்கத்திய வளர்ச்சி முறை போன்ற கட்டமைப்புகள் கட்டி எழுப்பப்படும் நிலையில் வடக்கு நாடுகளுக்கும் தெற்கு நாடுகளுக்கும் இடையே, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான ஏற்றுத் தாழ்வுகள் பூதாகரமாகிக் கொண்டிருப்பதன் பின்னணி இவைதான்! (தொடர்வோம் )
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.