சுப. உதயகுமாரன்
கடந்த ஜூலை மாத இறுதியில் நானும், என் தோழர்கள் சிலரும் கதிராமங்கலம் சென்று அங்கே போராடிக்கொண்டிருக்கும் மக்களைச் சந்தித்தோம். அது கம்பனின் புரவலரான சடையப்ப வள்ளல் வாழ்ந்த ஊரென்றும், அதன் பழைய பெயர் கதிர்வேய்ந்தமங்கலம் என்றும் மக்கள் பெருமையோடு தெரிவித்தார்கள். அவர்களோடு நீண்ட நேரம் கலந்துரையாடிவிட்டு பக்கத்து கிராமத்துக்குச் சென்றோம்.
காவிரி ஆறு மற்றும் விக்ரமன் ஆறு ஆகியவற்றுக்கு இடையே அமைந்திருக்கும் அந்த ஊரின் புராதனப் பெயர் நடுவெளி. இப்போது அது மருவி நறுவெளி என்றாகி இருக்கிறது. ஊரின் நடுவே ஓர் அழகிய பராமரிக்கப்படாத பழமையான சிவன் கோவில் இருக்கிறது. ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் அய்யா அரங்க கலியமூர்த்தி உள்ளிட்ட பல பெரியவர்கள் தங்கள் ஊரின் சிறப்புக்களை எங்களுக்கு விவரித்தனர்.
கோவிலுக்கு எதிரேயுள்ளத் தெருவில் நானும் நண்பர்களும் நடந்து சென்று மக்களை சந்தித்தோம். ஒரு வீட்டின் பின்புறம் உடல்நலம் குன்றியிருந்த ஒரு பெரியவரை அவரது மனைவி குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். அந்தத் தண்ணீர் மஞ்சள் பொடி கலந்த தண்ணீர் போன்று கடுமையான நிறத்துடன் தோற்றமளித்தது. விசாரித்தபோது, அந்தப் பெண்மணி தங்கள் வீட்டு சிமென்ட் நீர்த்தொட்டிகளை சுட்டிக்காட்டினார். அவை இரண்டிலுமே கடுமையான மஞ்சள் நிறம் படிந்திருந்தது. தண்ணீரின் மேல்மட்டத்தில் எண்ணெய்ப் படலமும் படர்ந்திருந்தது. அந்தத் தண்ணீர் வழவழப்பாக, நாற்றத்துடன், குடிக்கவோ, குளிக்கவோ முடியாத நிலையில் இருந்தது.
இன்னொரு வீட்டில் முத்துச்சரண் என்கிற ஓர் எட்டு வயதுப் பையனை சந்தித்தோம். ஓ.என்.ஜி.சி. நடவடிக்கைகளால் மாசுபட்ட தண்ணீர் மற்றும் காற்றால் எழுந்த ஒவ்வாமையினால் இதய நோய், மூச்சுத் திணறல், உடல் வீக்கம் போன்ற நோய்களால் அவன் அவதிப்படுவதாக அவனது தாயார் சொன்னார். அண்மையில் தஞ்சாவூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அவனைக் கொண்டுபோய் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்ததாகவும், அதனால் குடும்பம் ஏழ்மைக்குள்ளும், வறுமைக்குள்ளும் தள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் எங்களிடம் சொல்லி அழுதார். தன் பிள்ளையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக மாதம் தோறும் ஐந்தாயிரம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியிருப்பதாகவும் வேதனைப்பட்டார்.
அந்த ஊரின் மாசுபட்டத் தண்ணீரை குழந்தைக்கு குடிக்கக் கொடுக்காதீர்கள் என்று மருத்துவர்கள் அறிவுரைத்திருப்பதால், பக்கத்துவீட்டுக்காரர் ஆர்.ஓ. முறையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கொஞ்சம் தினமும் கொடுப்பதாகவும் சொன்னார். அந்த வீட்டுப் பெண்மணியை சந்தித்து, அவரிடம் தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு, முத்துச்சரணுக்கு உதவுவதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றியை நாங்கள் தெரிவித்தோம்.
நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, கணவனை இழந்த ஒரு பெண்மணி தனது இரண்டு சிறு குழந்தைகளுடன் அங்கே வந்தார். தனது ஏழு வயது பெண் குழந்தை வினோதினியும் முத்துச்சரண் போலவே பாதிக்கப்பட்டிருப்பதாகவும், சிகிச்சை அளிக்க வழியில்லை என்றும் விவரித்துக் கண்கலங்கினார். தன் கண் முன்னால் வாடி வதங்கிக்கொண்டிருக்கும் தான் பெற்றக் குழந்தையைக் காப்பாற்ற வழியில்லையே என்று விக்கித்து நின்ற அந்தப் பெண்மணியைப் பார்த்து மிகுந்த வேதனையாக இருந்தது. அந்தப் பகுதியிலுள்ள ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப் போன்ற நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு அந்தச் சகோதரிக்கும் தந்தையில்லாக் குழந்தை வினோதினிக்கும் உதவ முடியுமா என்று பாருங்கள் என உள்ளூர் நண்பர்களிடம் கேட்டுக்கொண்டோம்.
கதிராமங்கலம், ஓ.என்.ஜி.சி., விளைநிலம் அழிப்பு, விவசாயம் ஒழிப்பு, நீர் மாசுபாடு, குடி தண்ணீரின்மை, நிலத்தடி தண்ணீர் தாழ்ச்சி, பெட்ரோ-கெமிக்கல் மண்டலங்கள், மக்கள் விரோத வளர்ச்சி என்பன போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து பெரியவர்கள் நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, ஏதும் அறியாத அந்த இரண்டு பச்சைக் குழந்தைகளும் சூனியத்தை உற்று நோக்கியவாறே மிரட்சியுடன் நின்று கொண்டிருந்தனர். வளர்ச்சி என்கிற பெயரில் முத்துச்சரண், வினோதினி போன்ற பச்சிளம் குழந்தைகளை வதைக்கும் நம் தலைமுறையின் ஆணவப்போக்கு எங்களுக்குள் மிகுந்த இதய வேதனையையும், மன உளைச்சலையும் உருவாக்கியது.
அடுத்த நாள் திருவாரூர் மாவட்டம் வெள்ளக்குடி என்கிற ஊருக்குப் போய் ஓ.என்.ஜி.சி.யின் பெரிய எண்ணெய்க் கிடங்கு ஒன்றின் அருகே வாழும் கீழத்தெரு மக்களைச் சந்தித்தோம். அங்குள்ளவர்களில் பலரும் ஐம்பது வயது நிரம்பாமலே சாவதாகச் சொல்லி வருத்தப்பட்டார்கள் அந்த மக்கள். ஏராளமான ஆண்களுக்கும், பெண்களுக்கும் கடுமையான தோல் வியாதிகள் இருப்பதை நாங்கள் பார்த்தோம்.
அங்கிருந்து பனங்குடி, நரிமணம் போன்ற ஊர்களுக்குச் சென்றோம். அங்கே எண்ணெய்க் கிணறுகள் தோண்டப்பட்டிருக்கும் பகுதிகளில் மட்டுமல்ல, சுற்றியுள்ள நிலங்களிலும் புல் பூண்டுகூட வளரவில்லை. இந்தக் கிணறுகளைச் சுற்றிலும் ஏராளமான இரும்புக் குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாக பதிக்கப்பட்டிருக்கின்றன. துருப்பிடித்த நிலையில் அவை தங்கள் கோரப் பற்களை துருத்திக் கொண்டிருப்பதை ஆங்காங்கேப் பார்க்க முடிந்தது.
கீழ்வேளூர் எனும் கிராமத்தில் விளைநிலங்களினூடே கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீண்டுகொண்டே செல்லும் குழாய்களை நாங்கள் பார்த்தோம். நில உரிமையாளர்களின் அனுமதியை முறைப்படிப் பெறாமல், எந்தவிதமான இழப்பீடும் கொடுக்காமல், மிரட்டலோடு வெறும் மூன்று நான்கு அடி ஆழத்தில் குழி தோண்டி அந்தக் குழாய்களை பதித்திருந்தார்கள். பெரிய நீரோடை ஒன்று இடைமறிக்கப்பட்டு அதன் மீதும் குழாய்கள் பதிக்கப்பட்டிருந்தன. விவசாயத்துக்கு தண்ணீர் கொண்டு போவதற்கு அந்த நீரோடைகள் இனி உதவாத நிலையைப் பார்க்க முடிந்தது.
இந்தக் குழாய்கள் கெய்ல் நிறுவனத்தால் பதிக்கப்படுகின்றன. இவை விவசாயத்தை பாதிப்பது ஒரு புறம் இருந்தாலும், வெடிக்கத் துடிக்கும் கண்ணி வெடிகளின் மீது காலம் தள்ளுவது போன்ற ஓர் இக்கட்டான நிலையில் அந்த விவசாயிகள் தத்தளிக்கிறார்கள்.
பின்னர் அங்கிருந்து கருப்பூர், அடியக்கமங்கலம் போன்ற பகுதிகளுக்குச் சென்றோம். அடியக்கமங்கலத்தில் குழாய்கள் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த இசுலாமியத் தோழர்கள் பலர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். இரவோடு இரவாக குழாய்கள் பதிப்பதும், கேள்வி கேட்போர் மீது பொய் வழக்குகள் போடுவதும், இளைஞர்கள் மிரட்டப்படுவதும் சர்வ சாதாரணமாக நடப்பதாகச் சொன்னார்கள். ஓ.என்.ஜி.சி. நிறுவனமும், கெய்ல் நிறுவனமும் கைகோர்த்து இந்தப் பகுதியில் ஓர் சர்வாதிகார ராஜாங்கம் நடத்துவதை வேதனையுடன் சுட்டிக்காட்டினார்கள். ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டும் கதை அங்கே நடந்து கொண்டிருக்கிறது.
நாங்கள் இரண்டு நாட்களாக சுற்றுப்பயணம் செய்த தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் நிலத்தடி நீர் வெகுவாக தாழ்ந்து போயிருப்பது குறித்து மக்கள் பரவலாக தெரிவித்தார்கள். வரலாறு காணாத வறட்சியால் நீர்நிலைகள் எல்லாம் வறண்டு கிடக்கின்றன. எண்ணெய்க் கிணறுகள், காவிரிப் படுகை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (Cauvery Basin Refinery) போன்ற சுத்திகரிப்பு நிலையங்களைச் சுற்றியுள்ள நிலங்கள் எல்லாம் தரிசு நிலங்களாக பதவிசு இன்றி பாழ்பட்டிருக்கின்றன. குடிதண்ணீர் மாசுபட்டு விசமாக மாறியிருக்கிறது. சுவாசிக்கும் காற்றும் ஒருவித முடை நாற்றமும், நுண் மாசுத் துகள்களும் விரவி வீசிக்கொண்டிருக்கிறது. அடியக்கமங்கலத்தில் ஓர் எண்ணெய்க் கிணறு அருகே குப்பைக்கூளங்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தன. எந்த அதிகாரியும் அதைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. தீ சற்றே காற்றில் பரவி எண்ணெய்க் கிணறைத் தொட்டுவிட்டால் என்னவெல்லாமோ நடக்கலாம். எத்தனயோ பேர் சாகலாம்.
கடந்த 1990-களில் உலகெங்கும் தலைதூக்கிய தாராளமயமாதல், தனியார்மயமாதல், உலகமயமாதல் எனும் மும்மையின் விளைவுகள்தான் இவையெல்லாம். தாராளமயமாதல் என்றால் உலகச் சந்தையைத் திறந்துவிடுகிறோம், அங்கே நீங்கள் தாராளமாகச் சென்று, பொருட்களை சுதந்திரமாக விற்பனை செய்து, ஏராளமாகப் பொருளீட்டலாம் என்கிற புரிதல் முன்வைக்கப்படுகிறது. உலகின் வளங்கள் எல்லாம் குறிப்பிட்ட அளவே இருப்பதால் அவற்றுக்கு உரிய விலை நிர்ணயித்து, அவற்றை வாங்கி விற்று பயன்படுத்தவில்லை என்றால் நாம் வீணாக்கி விடுவோம், பாழாகிப் போவோம் என்கிற தனியார்மயமாதல் வாதம் சிரத்தையுடன் புகட்டப்படுகிறது. தேச எல்லைகளைப் புறந்தள்ளி பரந்து விரிந்த உலகம் முழுவதும் உற்பத்திப் பொருட்களும், சேவைகளும், கருத்துக்களும், படைப்புக்களும் தங்குதடையின்றி பயனாளிகளைச் சென்றடையலாம் எனும் உலகமயமாதல் கனவு முதலாளித்துவ சக்திகளால் ஊதிப் பெரிதாக்கப்படுகிறது.
இந்த தாராளமயமாதல், தனியார்மயமாதல், உலகமயமாதல் மும்மை எப்படி முத்துச்சரண்களையும், வினோதினிகளையும் உருவாக்குகின்றன? திறந்து கிடப்பதாகச் சொல்லப்படும் இந்த உலகச் சந்தைக்குள்ளே என்னென்ன நடக்கின்றன? இந்த வளர்ச்சி நாடகங்களுக்குப் பின்னே யார் யார் இருந்து இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்? (தொடர்வோம்)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.