Advertisment

இடிந்தகரை முதல் கதிராமங்கலம் வரை–5 : வளர்ச்சியின் நரபலிகள்

நரபலிகள் கிராமங்களிலும், குப்பங்களிலும், சேரிகளிலும் இருந்துதான் கொண்டுபோகப்படுகின்றன. வளம், வாய்ப்பு, வசதி படைத்தவர்கள் வளர்ச்சியின் நரபலிகள் ஆவதேயில்லை.

author-image
WebDesk
Aug 16, 2017 15:00 IST
இடிந்தகரை முதல் கதிராமங்கலம் வரை–5 : வளர்ச்சியின் நரபலிகள்

சுப. உதயகுமாரன்

Advertisment

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நான் மெக்சிகோ நாட்டுக்குப் போயிருந்தேன். மாநாடு முடிந்ததும் ஒரு சில நண்பர்களோடு மாயன் பண்பாட்டுத் தலங்கள் சிலவற்றை சுற்றிப்பார்க்கச் சென்றேன். மாயன் மக்களின் கோவில்களில் மனிதர்களை நரபலி கொடுக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. அதற்கென அவர்கள் பயன்படுத்திய கற்களெல்லாம் பல இடங்களில் அப்படியே பாதுகாக்கப்பட்டிருந்தன.

இயற்கையாகவே நரபலி பற்றி நாங்கள் உரையாடத் துவங்கினோம். உலகின் பல இடங்களில் இந்த வழக்கம் இன்னும் இருப்பது பற்றியும், அதன் பல்வேறு பரிணாமங்கள் பற்றியும் நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, ஓர் அமெரிக்க நண்பர் “எங்களைப் போன்ற வளர்ந்த நாடுகளில் இப்பழக்கம் இல்லை” என்று பெருமையுடன் குறிப்பிட்டார். மெக்சிகோ நாட்டு நண்பர்களும், நானும் அவரை பிடி பிடி என்று பிடித்துக்கொண்டோம்.

காலனி ஆதிக்கம், ஏகாதிபத்தியம் என்பவை நவீன நரபலி அன்றி வேறென்ன? உலக வங்கி, உலக வர்த்தக மையம் போன்ற சர்வதேச நிதி அமைப்புக்கள் வளரும் நாடுகளுக்குப் பரிந்துரைக்கும் கட்டமைப்பு மாறுதல்கள் (Structural Adjustment) நரபலிதானே என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு அவரைக் கலங்கடித்தோம். கட்டமைப்பை சரிசெய்தல் என்பது எதைக் குறிக்கிறது? அதைப் புரிந்துகொள்வதற்கு முன்னால், தாராளமயமாதல், தனியார்மயமாதல், உலகமயமாதல் மும்மை பற்றி நாம் கொஞ்சம் பேசியாக வேண்டும்.

தாராளமயமாதல் என்பது சந்தைப் பொருளாதாரத்தை முன்னிறுத்துகிறது. சந்தை தாராளமயமாக்கப்பட்டு விட்டது, யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் விற்று லாபம் சம்பாதித்துக் கொள்ளலாம், அதற்கு தேசிய, உள்ளூர்த் தடைகள் எதுவும் இனிமேல் இல்லை எனும் தோற்றத்தை உருவாக்குகிறது. ஆனால் உண்மையில் உள்ளூர் சந்தை முதல் உலகச் சந்தை வரை அத்தனைச் சந்தைகளும் ஆதிக்க சக்திகளின், இடைத் தரகர்களின் கட்டுக்குள்தான் இருக்கின்றன, இயங்குகின்றன.

publive-image சுப.உதயகுமாரன்

எடுத்துக்காட்டாக, உங்களிடம் ஆயிரம் தேங்காய்கள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அவற்றை எடுத்துக்கொண்டுபோய் உள்ளூர் சந்தையில் விற்று நீங்கள் லாபம் சம்பாதித்துவிட முடியுமா? சந்தைக்குள் நுழைவதற்கும், கடை விரிப்பதற்குமே ஏராளமானத் தடைகள், சிக்கல்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் கடந்து உள்ளே போய்விட்டாலும், ஏற்கனவே நீண்ட காலமாக தேங்காய் விற்றுக் கொண்டிருக்கிற வியாபாரிகள் அன்றைய விலையில் ஐம்பது காசு குறைத்து விற்கத் துணிந்தால் நீங்கள் காலியாகி விடுவீர்கள். சந்தைக்கு நீதி, நேர்மை, நியாயம், தர்மம் என எதுவும் கிடையாது. பணம் மட்டும்தான் அதன் ஒரே குறிக்கோள்.

அதே போலத்தான் உலகச் சந்தையிலும் சக்தி வாய்ந்த நாடுகளின் தர்பார்தான் இன்றளவும் நடந்து கொண்டிருக்கிறது. அங்கே பொருட்களை விற்கும் நாடுகள் அவற்றுக்கான விலையை நிர்ணயிக்க முடிவதில்லை. அவற்றை வாங்கும் சக்தி வாய்ந்த நாடுகள்தான் விலையை, விற்கும் நிபந்தனைகளை முடிவு செய்கின்றன. சக்தி வாய்ந்தவர்கள் சந்தைக்குள் புகுந்து சகட்டு மேனிக்கு சதிராட்டம் போடுவதைத்தான் தாராளமயமாக்கப்பட்டச் சந்தை என்று தவறாகப் போற்றிப் புகழ்கிறோம்.

தனியார்மயம் என்பதும் இதுபோன்ற ஒரு பத்தாம்பசலித்தனம்தான். தனியார் நிறுவனங்களுக்கிடையே போட்டியை உருவாக்கி, மக்களுக்கு குறைந்த விலையில் நிறைந்த சேவை கிடைக்க ஆவன செய்கிறோம் என்பதுதான் தனியார்மயமாக்கலின் தத்துவார்த்த அடிப்படை. ஆனால் உண்மையில் நடப்பது என்ன? ஏழைகள் அதிகமாக வாழும் மூன்றாம் உலக நாடுகளில் கல்வி, மருத்துவம், போக்குவரத்து, எரிசக்தி போன்ற அத்தியாவசியத் துறைகளில் அரசின் பங்களிப்பு இருந்தே ஆக வேண்டும். இல்லையென்றால், அம்மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாது.

எடுத்துக்காட்டாக, போக்குவரத்துத் துறையை எடுத்துக்கொள்வோம். அரசின் தலையீடு ஏதுமின்றி தனியார் பஸ் கம்பெனிகளை தறிகெட்டு ஆட விட்டால், பெரும்பாலான பேருந்துகள் சென்னை-திருச்சி, சென்னை-மதுரை போன்ற அதிக லாபம் தரும் தடங்களில்தான் ஓடும். வருமானம் வராத குக்கிராமங்களுக்கு பேருந்துகள் ஓடாது.

உலகமயமாதல் என்பதும் தாராளமயம், தனியார்மயம் போன்ற ஒரு பித்தலாட்டம்தான். எடுத்துக்காட்டாக, அமெரிக்க நாட்டுப் பணக்காரர் ஒருவர் தன்னுடைய பணத்தை அந்நிய முதலீடு எனும் பெயரில் உலகின் எந்த நாட்டுக்கு வேண்டுமென்றாலும் எடுத்துச் சென்று முதலீடு செய்யலாம், அதிக லாபம் சம்பாதிக்கலாம். ஆனால் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஒரு பழத்தோட்டத்துக்குச் சென்று இரண்டு மாதங்கள் மட்டும் வேலை செய்வதற்கு அனுமதி தாருங்கள் என்று அமெரிக்கத் தூதரகம் சென்று விசா கேட்டுப் பாருங்கள். எக்காரணம் கொண்டு அனுமதி தர மாட்டார்கள். முதலாளிகளின் முதலீடு உலகமயமாக்கப்பட்டிருக்கிறது, ஆனால் தொழிலாளர்களின் உடலுழைப்பு நாடுகளின் எல்லைக்குள் முடக்கப்படுகிறது.

பணக்காரர்களுக்காக, பணக்காரர்களால் நடத்தப்படும் பணக்காரர்களின் தாராளமயம், தனியார்மயம், உலகமயம் அமைப்பில் ஏழைகள் ஒரு பொருட்டேயல்ல. ஏழை நாடுகள் உற்பத்தியைப் பெருக்கவும், இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்கவும், நாட்டின் வருமானத்தை உயர்த்தவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றன. இவற்றைச் செய்ய வேண்டுமென்றால், ஏழை நாடுகளுக்கு ஏராளமான பணம் தேவைப்படுகிறது. இந்தப் பணத்தை கடனாகத் தருவதற்கு உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, சர்வதேச நிதிக் குழுமம், மேல்நாட்டு தனியார் வங்கிகள், கார்ப்பரேட்டுகள் போன்றோர் அணியமாக இருக்கின்றனர்.

நம்மூர் கந்துவட்டிக்காரர்களைவிட மோசமான இந்த நபர்கள் கடன் தருவதற்கு பல நிபந்தனைகள் விதிக்கிறார்கள். கந்துவட்டிக்காரர்கள் வட்டியைக் கறப்பதில் மட்டும்தான் கவனமாய் இருப்பார்களே தவிர, நம் வீட்டுக்குள் வந்தமர்ந்து நம்மை மேய்க்கவும், நம்வீட்டை நிர்வகிக்கவும் எத்தனிக்க மாட்டார்கள். ஆனால் சர்வதேச கந்துவட்டிக்காரர்கள் மிகக் கொடூரமானவர்கள்.

இவர்கள் ஒரு நாட்டுக்குக் கடன் தரும்போது பற்பல நிபந்தனைகளை விதிக்கிறார்கள். பண மதிப்பிழப்பு செய்யுங்கள், மக்கள் மீது அதிக வரிகளைச் சுமத்துங்கள், மக்களுக்காகச் செய்யும் அரசு செலவினத்தைக் குறையுங்கள், நிதிக் கொள்கையை கடன்காரர்களுக்கு ஏதுவானதாக மாற்றுங்கள், உணவு மானியங்கள் கொடுக்காதீர்கள், ஏழைகளுக்கு உதவும் வழிகளை அடையுங்கள் என்றெல்லாம் நிர்ப்பந்திக்கின்றனர்.

மக்களுக்கு மானியங்கள் கொடுக்காதே, ரேஷன் கடைகளை மூடி விடு, மலிவு விலையில் எந்தப் பொருட்களையும் வழங்காதே, அரசுப் பள்ளி, அரசு மருத்துவமனை, அரசுப் போக்குவரத்து என அனைத்தையும் மூடு என்று ஆணையிடுகிறார்கள் இந்த அயல்நாட்டு முதலாளிகள்.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குங்கள், புதிய நிதி அமைப்புக்களை உருவாக்குங்கள், லஞ்ச ஊழலை அழித்து, உங்கள் நாட்டுச் சட்டங்களை வெளிநாட்டுக்காரர்களுக்கு தோதுவானதாக மாற்றுங்கள், உள்நாட்டு பங்குச்சந்தைகளை உறுதிப்படுத்துங்கள் என்றெல்லாம் நீண்டகாலத் திட்டங்களையும் திணிக்கிறார்கள்.

அதாவது உங்கள் நாட்டின் கட்டமைப்பு சரியில்லை. நீங்கள் ஏழைகளுக்கு உதவிகள் செய்யக் கூடாது. கல்வி, மருத்துவம் என எதையும் இலவசமாகக் கொடுக்கக் கூடாது. உங்கள் வங்கிகளைத் திறம்பட இயக்க வேண்டும். நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர்ந்தால் எங்களுக்கு உடனடி நீதி கிடைக்க வேண்டும் என்றெல்லாம் தங்கள் முதலீடுகளைக் காப்பாற்றிக்கொள்ளவும், தங்கள் நலன்களை காத்துக்கொள்ளவும் நம் நாட்டின் கட்டமைப்புக்களை மாற்றச் செய்கிறார்கள். இதைத்தான் கட்டமைப்பு மாறுதல்கள் (Structural Adjustment) என்றழைக்கிறார்கள்.

அதேபோல நமது பொருளாதாரம் பலவீனமாக, ஏற்றத்தாழ்வுகளுடன் இருக்கிறது. அதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் (Stabilization Program) எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள். இருக்க இடம் கொடுத்தால், கிடக்க வழிதேடும் இவர்கள், நாளடைவில் நம்மை ஆளத் தொடங்குகிறார்கள்.

இந்த ஒண்ட வரும் உலகமயப் பிடாரிகள் வந்தால்தான், அந்நிய முதலீடு வரும், தொழிற்சாலைகள் வரும், வேலைவாய்ப்புக்கள் வரும், வருமானம் வரும், பலமான பொருளாதாரம் வரும், அரசியல் ஸ்திரத்தன்மை வரும் என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள் ஊர்ப்பிடாரிகள். உண்மை என்னவென்றால், உலகமயப் பிடாரிகள் வந்தால்தான் ஊர்ப்பிடாரிகள் கொழுக்க முடியும். ஊர்ப்பிடாரிகள் கொழுத்தால்தான்

உலகமயப் பிடாரிகள் அதிக லாபம் பெற முடியும், கையில் கிடைக்கும் வளங்களை எல்லாம் அள்ளிச்சுரண்டி அவர்கள் நாட்டுக்குக் கொண்டுபோக முடியும்.

எனவேதான் பன்னாட்டு நிறுவனங்கள் வந்து தொழில் தொடங்க இலவச நிலம், இலவச தண்ணீர், இலவச மின்சாரம், வரிச்சலுகைகள், சுற்றுச்சூழல் சட்டங்களை மீறும் உரிமை, தொழிலாளர் நலச்சட்டங்களை மீறும் உரிமை என ரத்தினக் கம்பளம் விரித்து காலில் விழுந்து கிடக்கின்றன மூன்றாம் உலக நாடுகளின் அரசுகளும், ஆதிக்க சக்திகளும்.

ஏழை மக்களுக்கு ரேஷன் கொடுக்காதே, உதவிகள் செய்யாதே என்று வலியுறுத்தும் உலக வங்கி (World Bank), ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank), சர்வதேச நிதிக் குழுமம் (International Monetary Fund), உலக வர்த்தக நிறுவனம் (World Trade Organization), மேல்நாட்டு தனியார் வங்கிகள், கார்ப்பரேட்டுகள் போன்றோர் எப்போதாவது பெரு முதலாளிகளுக்கு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு எந்தச் சலுகையும் கொடுக்காதே என்று எந்த அரசையாவது தடுத்திருக்கிறார்களா? அறிவுரைத்திருக்கிறார்களா? கிடையவே கிடையாது.

நவீன வளர்ச்சிக்கான நரபலிகள் கிராமங்களிலும், குப்பங்களிலும், சேரிகளிலும் இருந்துதான் கொண்டுபோகப்படுகின்றன. வளம், வாய்ப்பு, வசதி படைத்தவர்கள் வளர்ச்சியின் நரபலிகள் ஆவதேயில்லை.

#Idinthakarai #S P Udayakumaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment