Advertisment

இடிந்தகரை முதல் கதிராமங்கலம் வரை – 6 : உலகமயமும் இனப் பாகுபாடும்

தாங்கள் வாழ விரும்புகிற வழியில் மக்கள் வாழ்க்கையை வாழ்ந்திடச் செய்யும் திறன்களை வளர்ச்சி வழங்க வேண்டும் என்கிறார் அமர்த்யா சென்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இடிந்தகரை முதல் கதிராமங்கலம் வரை – 6 : உலகமயமும் இனப் பாகுபாடும்

சுப. உதயகுமாரன்

Advertisment

உலகமயமாதல் தவிர்க்கப்பட முடியாதது, நாம் வாழும் காலகட்டத்தின் மிக முக்கியமான அம்சம் அது என்று உலகமயத்தின் ஆதரவாளர்கள் அதனை வானளாவப் புகழ்கின்றனர். உலகமயமாக்கும்போது ஒரு சிலர் பின்தள்ளப்பட்டு விடுகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளும் இவர்கள், உலகமயமாக்கல் லட்சக்கணக்கானவர்களை கைதூக்கிவிடுவதை கவனியுங்கள் என்று கோருகிறார்கள்.

உலகமயம் மக்களின் திறமைகளை வளர்த்தெடுத்து, செல்வச் செழிப்பை உருவாக்கித்தருவதாகவும், நம்மில் பலரை பணக்காரர்கள் ஆக்குவதாகவும் இவர்கள் பூரிப்படைகிறார்கள். இந்த நிலைப்பாட்டின் உள் அர்த்தம் என்னவென்றால், பின்தள்ளப்பட்டிருக்கும் மக்கள் எல்லோரும் திறமையற்றவர்கள், பணக்காரர்கள் ஆவதற்கு தகுதியற்றவர்கள் என்பதுதான்.

உலகமயமாக்கல் என்பது பிற மக்களை அடிமைப்படுத்தி வைப்பதற்காக அமெரிக்கா கொண்டுவந்த சதித்திட்டம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறானது என்று தாமஸ் ஃப்ரீட்மேன் என்கிற அமெரிக்க எழுத்தாளர் சொல்கிறார்: (அமெரிக்கத் தலைநகரான) வாஷிங்டன் டி.சி. நகரில் இருக்கும் நாங்கள் உங்களைப் பற்றி ஒரு கணம்கூட சிந்திப்பதில்லை; உண்மையில் நாங்கள் உங்களைப் பொருட்படுத்துவதேயில்லை; உங்களுக்கு வேண்டுமென்றால், உலகமயமாக்கலோடு தொடர்புகொள்ள ஓர் இசுலாமிய பாலமோ, அல்லது ஒரு மாவோயிஸ்ட் பாலமோ கட்டிக்கொள்ளுங்கள்; இந்த உலகமயத் தொடர்வண்டி நீங்கள் இல்லாமலேயேப் புறப்பட்டு போய்க்கொண்டிருக்கும் என்று எகத்தாளமாய் பேசுகிறார் அவர்.

idinthakarai, kathiramangalam, racism, globalization எஸ்.பி.உதயகுமாரன்

உலகமயம் வளர்ந்தோங்கி சிறக்க, அமெரிக்கா இன்றும், நாளையும், எல்லா காலத்திலும் ஒரு முன் மாதிரி நாடாகத் திகழ்ந்தாக வேண்டும் என்று அவர் விரும்புகிறார். உலகமயமாதலை எதிர்ப்பவர்களோ உலகமயம் என்பது உண்மையில் மேற்கத்தியமயம், அமெரிக்கமயம், பணமயம் என்று பறைசாற்றுகின்றனர். உலக வங்கியும், சர்வதேச நிதி நிறுவனங்களும் வளரும் நாடுகள் மீதுத் திணிக்கும் “கட்டமைப்பு மாறுதல்கள்” (Structural Adjustment) கொடுமையானவை என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர்.

தெற்கத்திய நாடுகள் வடக்கத்திய நாடுகளை சார்ந்திருக்க வேண்டியத் தேவையை, ஏழை நாடுகளின் வளங்களை பணக்கார நாடுகள் சுரண்டிக் கொழுப்பதை, ஏழைகளும், சிறுபான்மையினரும் வறுமைக்குள் தள்ளப்படுவதை எல்லாம் அவர்கள் சாடுகின்றனர். ஏகாதிபத்தியம், சார்பு நிலை போன்றவை ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல என வாதிடுகின்றனர்.

உலகமயமாதல் சூழல் நலத்தை சீர்கேடாக்குவதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குறைபடுகின்றனர். உலக நாடுகள் அனைத்தின் மீதும் மேற்கத்திய கலாச்சாரமான வணிகத்தன்மையையும், போட்டி மனப்பான்மையையும், தனிமனித மற்றும் முதலாளித்துவ ஒற்றைக் கலாச்சாரத்தையும்  சுமத்துகிற சூழ்ச்சிதான் உலகமயம் என்று எதிர்க்கின்றனர் இவர்கள். உலகமயமாக்கலில் சனநாயகம் ஏதுமில்லை, அரச பரிபாலனத்தை அது பலவீனப்படுத்துகிறது என்றெல்லாம் சாடுகிறார்கள் அவர்கள்.

உலகளாவியப் பொருளாதார நடவடிக்கைகளில் சமத்துவமான ஒருங்கிணைப்பைக் கொண்டு வருவதல்ல உலகமயத்தின் நோக்கம்; மாறாக, காலனி ஆதிக்க முறைகளை, நடவடிக்கைகளை அது கொணர்கிறது என்கின்றனர். தேசியத் திட்டமிடலை, சனநாயகப் பண்புகளை, ஏழைகளுக்கு உதவும் திட்டங்களை அழித்தொழித்து, உலகு தழுவிய ஏற்றத்தாழ்வுகளும், ஒருதலைப்பட்சமுமான வளர்ச்சியை உலகமயம் நியாயப்படுத்துகிறது.

உலகமயத்தை ஆதரிப்போர், எதிர்ப்போர் தவிர தற்போது மூன்றாம் பார்வை ஒன்றும் முகிழ்க்கிறது. இந்தியாவைச் சார்ந்த அமர்த்யா சென் என்கிற அறிஞர் உலகமயம் கல்வி, உடல்நலம் போன்றவற்றுக்கான சமூகச் செலவுகளை அதிகப்படுத்தி அதையே நவீன உலகின் பொருளாதார வெற்றியின் அடிப்படையாகப் பார்க்கவேண்டும் என்று வாதிடுகிறார். கொள்கைத் திட்டங்களை உருவாக்கி, அவற்றை எப்படி நடைமுறைப்படுத்துவது என்று சிந்திப்பதுதான் இந்த மூன்றாம் பார்வையின் முக்கிய அம்சம்.

மக்களின் வருமானம், அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பு, மொத்த தேசிய உற்பத்தி (ஜி.என்.பி.) போன்றவற்றைவிட மக்களின் அன்றாட வாழ்வில் வளர்ச்சி ஏற்படுத்தும் நல்ல  விளைவுகளையே பொருளாதார நலத்தின் அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்கிறார் சென். தாங்கள் வாழ விரும்புகிற வழியில் மக்கள் வாழ்க்கையை வாழ்ந்திடச் செய்யும் திறன்களை வளர்ச்சி வழங்க வேண்டும் என்கிறார் சென்.

அமெரிக்காவில் வாழும் கறுப்பின மக்களை ஓர் எடுத்துக்காட்டாகச் சொல்கிறார். அவர்கள் சீனர்களைவிட, கேரளாக்காரர்களைவிட செல்வந்தர்கள்; ஆனால் இவர்கள் இருவரையும்விட கறுப்பினத்தவர்கள் வாழும் நாட்கள் குறைவானவை. ஏழ்மையை குறைந்த வருமானம் கொண்டிருப்பது என்று தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது; மாறாக, திறன் இழப்புதான் ஏழ்மை என்கிறார் சென்.

அதேபோல பஞ்சம் என்பதை உணவுப் பற்றாக்குறை என்று புரிந்துகொள்வதைவிட, உணவை வாங்கிக்கொள்ளும் பொருளாதார சக்தி மற்றும் நிலையான சுதந்திரம் ஆகியவற்றை இழப்பதுதான் பஞ்சம் எனக் கொள்ளவேண்டும் என்கிறார். பொருளாதார மாற்றங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை ஊதியத்தையும், உரிமைகளையும் வளர்த்தெடுப்பதுதான் ஒரே வழி என்கிறார் சென்.

இந்த உலகம் மூன்று அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. தொழில் வளமிக்க நாடுகளும் அவற்றின் பன்னாட்டு நிறுவனங்களும் முதல் அடுக்கு. அவர்களோடு தொடர்பில் இருக்கும் தொழிற்சாலைகளும், விவசாயப் பண்ணைகளும், தாராளவாத சிந்தனையாளர்களும் கொண்ட நாடுகள் இரண்டாவது அடுக்காக இருக்கின்றன. விலக்கி வைக்கப்பட்டுள்ள பெண்கள், பூர்வீகக் குடிகள், இன (Race) மற்றும் தேசிய இன (Ethnic) சிறுபான்மையினர் மூன்றாவது அடுக்கு எனக் கொள்வோம்.

இனம், தேசியம், வகுப்பு, பாலினம், தலைமுறை போன்றவற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் இவர்கள் உலகமயத்தால் சமூக-பொருளாதார-அரசியல் அடக்குமுறைக்கு ஆளாகின்றனர். உலகமயமாதலால் இனம், தேசிய இனம் போன்றவை மிக முக்கியமானவை ஆகியிருக்கின்றன.

இனப் பிரச்சினைகளை தேசியவாதக் கருத்துக்களோடு இணைத்து அரசியலில் இனவெறியைப் புகுத்துவது, சமூகநீதி கருத்துக்கு எதிராக வலதுசாரி சக்திகள் முற்போக்குக் கருத்துக்களை பயன்படுத்துவது, பணக்கார நாடுகள் கடுமையான குடியேற்றத் தடைகள் விதிப்பது போன்றவை உலகமயமாதலின் அண்மை விளைவுகளில் சில.

வெள்ளையர் அல்லாத பிற இனத்தவர்கள் அனைவரும் ஏழைகள் அல்ல. அதேபோல,  வெள்ளையின மக்கள் மத்தியிலும் ஏராளமான ஏழைகள் இருக்கின்றனர். உண்மையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பல வெள்ளையின மக்கள் வேலையை, வருமானத்தை, சமூக உறுதித்தன்மையை உலகமயத்தால் இழந்திருக்கிறார்கள்.

உலக அரசியலில் தோலின் நிறமும், பொருளாதார வகுப்பும் இரண்டறக் கலந்திருக்கின்றன. அமெரிக்காவில் நிறம் முக்கியமானதாக இருப்பதுபோல, வேறு பல நாடுகளில் வகுப்பு முக்கியமானதாக இருக்கிறது. இந்தியாவைப் போன்ற நாடுகளில் சாதி இன்றியமையாததாக இருக்கிறது. மனிதர்களின் கண்ணியத்தை, பொருளாதார பலத்தை, அரசியல் அதிகாரத்தை, மறுக்கவொண்ணா உரிமைகளை மறுதலிக்க இனம், தேசிய இனம், சாதி போன்ற விடயங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இம்மாதிரியான மக்களை வேற்றுப்படுத்தும், பிரித்தாளும் பல விடயங்கள் உலகமயமான உலகத்தில் நடக்கின்றன; இன்னும் மோசமாகிக் கொண்டிருக்கின்றன.

பொருளாதார தேசியவாதம், தன்னலம், பூர்வீகவாதம் போன்றவை பேசும் கட்டுப்பாட்டுவாதிகள் (protectionists) இனவாதம் பேசி அயல்நாட்டவர், அயல்நாட்டுப் பொருட்கள் என்று பிரித்துப்பார்கின்றனர். குடியேற்றத் தடைகள் விதிப்பது, பொருளாதாரத் துரோகம் எனக் குற்றம் சாட்டுவது, இனவெறுப்பை பரப்புவது. அமெரிக்கப் பொருட்களையே வாங்குங்கள் என்று தன் நாட்டு மக்களை கேட்டுக்கொள்வது, ஜப்பானியர்களும், சீனர்களும் தங்கள் நாட்டு பொருளாதாரத்தை அழித்துவிடுவார்கள் என்று பயம்காட்டுவது, இப்படி பல்வேறு வழிகளில் கட்டுப்பாட்டுவாதம் வெளிப்படுகிறது.

ஜப்பானியர்கள் அமெரிக்கர்களை அண்ணாந்து பார்த்து அனுசரித்துப் போனாலும், வெள்ளையினச் சமூகம் அவர்களை வெறுப்புடனேயேப் பார்க்கிறது. அமெரிக்காவிலும், கனடாவிலும் பிரிட்டன் ஏறத்தாழ 26% சொத்துக்களை வாங்கி வைத்திருந்தாலும், வெறும் 15% சொத்துக்களை மட்டுமே வாங்கியிருக்கும் ஜப்பானியர்களை “அமெரிக்காவையே மொத்தமாக விலைக்கு வாங்குகிறார்கள்” என்று குற்றம் சாட்டுகின்றனர்.

பொருளாதார சக்தி படைத்த ஜப்பானும் இதே தவறைச் செய்கிறது. கொரிய சிறுபான்மையினர், சீனர்கள், பூர்வீகக் குடிகளான அய்னு மக்கள் போன்றோரை அடக்கி ஒடுக்குகின்றனர். திறமையற்ற, கல்வியறிவற்ற, மூன்றாம் உலக நாடுகளின் ஏழை வந்தேறி மக்களை இன துவேசத்தோடு நடத்துகின்றனர். (தொடர்வோம்)

S P Udayakumaran Racism Idinthakarai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment