சுப. உதயகுமாரன்
உலகச்சந்தைக்கு சாதியில்லை, மதமில்லை, இனமில்லை, மொழியில்லை, தேசமில்லை என்றெல்லாம் அழகாகப் பூசி மெழுகப்பட்டாலும், இவை அனைத்துமே அதற்கு இருக்கின்றன என்பதுதான் வேதனையான உண்மை. எடுத்துக்காட்டாக மெக் டானல்ட்ஸ், கெண்டாக்கி ஃபிரைட் சிக்கன், சப் வே போன்ற அமெரிக்க உணவகங்கள் எல்லாம் இந்தியாவுக்குப் படையெடுத்து வரும்போது, நமது தலைப்பாக்கட்டி பிரியாணிக் கடை அமெரிக்காவுக்குப் போக முடியவில்லையே, ஏன்?
ஓர் அமெரிக்கர் அல்லது ஐரோப்பியர் எழுதிய ஒரு கதையை, அல்லது உருவாக்கிய ஒரு பொருளை ‘அறிவார்ந்த சொத்து’ என உரிமை கொண்டாடி, அதற்குரிய விலையை அல்லது கட்டணத்தை ஈடாக்காமல் அதை பயன்படுத்த அனுமதிக்காதவர்கள், தெற்கத்திய நாட்டு மக்களின் பாரம்பரிய இசை, நடனம், திரைப்படங்கள், படைப்புக்கள், கைவினைப் பொருட்கள், உணவுப் பொருட்கள் என எதற்குமே உரிய அங்கீகாரமோ, மரியாதையோ, கட்டணமோ தருவதில்லையே, ஏன்? இந்தியர்கள் தலைமுறை தலைமுறையாக பயன்படுத்திவரும் வேம்பு, மஞ்சள், பாசுமதி அரிசி போன்றவற்றுக்கு அமெரிக்க நிறுவனங்கள் உரிமை கொண்டாடினார்களே, எப்படி?
உலகுக்கே சனநாயகம், திறந்தவெளித்தன்மை, பொறுப்புணர்வு பற்றியெல்லாம் வகுப்பெடுக்கும் அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் உலகப் பொருளாதாரம் குறித்து எந்த முடிவையும் சனநாயக அடிப்படையில் எடுப்பதில்லையே, ஏன்? அமெரிக்கர்கள் நடத்தும் சூப்பர் மார்க்கெட்டுகளில் உரிமையாளர் நிர்ணயிக்கும் விலைகளை எந்த பேரப்பேச்சும் நடத்தாமல் நுகர்வோர் வாங்கிக்கொள்ளும் நிலை இருக்கும்போது, உலகச்சந்தையில் மட்டும் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு அதே உரிமையைக் கொடுக்காமல் பணக்கார நாடுகளே விலைகளை நிர்ணயிக்கின்றனவே, ஏன்? கானாவும், ஐவரி கோஸ்டும் உற்பத்தி செய்யும் கொக்கோவுக்கு அந்த நாடுகளே விலை நிர்ணயிக்காமல், அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் விலையை முடிவு செய்வது என்ன நியாயம்?
இனவாதம் எனும்போது, உலகளாவிய இலவச வர்த்தக (free trade) அமைப்புக்குள் நிகழும் இனவாதம், தனிமனிதத் தலைவர்கள், பன்னாட்டு நிறுவனங்கள், அரசுசாரா அமைப்புக்களின் இனவாதம் என இரண்டு விதத்தில் இந்தப் பிரச்சினையை நாம் பார்த்தாக வேண்டும். எடுத்துக்காட்டாக, டொனால்ட் ட்ரம்ப் போன்ற அமெரிக்கத் தலைவர்கள் சிலர் இசுலாமியர்களுக்கு எதிரான, ஜப்பானியர்களுக்கு எதிரான எண்ணவோட்டம் கொண்டிருக்கின்றனர்.
அதேபோல, சில ஜப்பானியத் தலைவர்கள் கறுப்பின மற்றும் ஹிஸ்பானிக் (மெக்சிகன்) மக்களுக்கு எதிரான உணர்வு கொண்டிருக்கின்றனர். கறுப்பின மக்கள் கடனைத் திருப்பித் தரமாட்டார்கள்; கொரிய, சீன மக்கள் குற்றங்கள் புரிவார்கள் என்றெல்லாம் தவறான நம்பிக்கை கொண்டிருக்கின்றனர் அவர்கள். பல நாடுகளில் நிலவும் நிறுவன மயமாக்கப்பட்டிருக்கும் இனவாதத்தைப் பார்க்கும்போது, இந்த தனிமனித குறைபாடுகள் பெரிதல்ல எனத் தோன்றுகிறது.
நிதி உலகமயமாக்கலில் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, நியுசிலாந்து போன்ற ஆங்கில மொழி பேசும், தனிநபர் உரிமைகளைப் போற்றும் நாடுகளில் நிலவும் முதலாளித்துவத்தை ‘அமெரிக்க முறை’ அல்லது ‘ஆங்கிலோ-சாக்சன்’ முறை என்றே அழைக்கின்றனர். ஓர் ஐரோப்பியரே சர்வதேச நிதி மையத்தின் தலைவராக இருக்க வேண்டும், ஓர் அமெரிக்கரே உலக வங்கியை நிர்வகிக்க வேண்டும் எனும் எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்றை இவர்கள் உருவாக்கி வைத்திருக்கின்றனர்.
ஜெஃப்ரி சாக்ஸ் (Jeffrey Sachs) என்பவர் 30 வருமானம் அதிகமான நாடுகளையும், 42 அதிக கடன்பட்ட நாடுகளையும் (highly indebted poor countries – HIPCs) ஒப்பிட்டு சில இனரீதியிலான, பொருளாதார வேற்றுப்படுத்தல்களை சுட்டிக்காட்டுகிறார். பணக்கார நாடுகளின் மருத்துவ ஆராய்ச்சிகள் அவர்கள் நாட்டுப் பிரச்சினைகளான இதய நோய், புற்றுநோய் போன்றவற்றுக்கான மருந்துகளை உருவாக்குவதிலேயே கவனம் செலுத்துகின்றன. ஏழை நாடுகளின் மலேரியா, டிபி, எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கு தீர்வு தேடுவதில் அக்கறை கொள்வதில்லை.
உலகின் எய்ட்ஸ் நோயாளிகளில் மூன்றில் இரண்டு பேர் சகாரா பாலைவனத்துக்குத் தெற்கேயுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் வாழ்கிறார்கள். இவர்களுக்கு வைத்தியம் செய்ய 2.3 பில்லியன் டாலர் பணம் தேவைப்படுகிறது. ஆனால் பணக்கார நாடுகள் வெறும் 165 மில்லியன் டாலர் பணத்தை மட்டுமே நன்கொடையாகத் தருகின்றன.
கொரியப் போரிலும், வியட்னாம் போரிலும் கொல்லப்பட்ட அமெரிக்கர்களின் எலும்புகளை, தடயங்களை, போர் எச்சங்களை ஏராளமான பொருட்செலவில் தேடிய வடக்கத்திய நாடுகள் இதே முக்கியத்துவத்தை பிற நாட்டு மக்களின் நினைவுகளுக்கு அளிக்கவில்லை. எண்ணெய் வளம் கொண்ட பாரசீக வளைகுடாவிலும், வெள்ளையின மக்கள் வாழும் பால்கன் நாடுகளிலும் இராணுவத் தலையீடுகள் செய்த வடக்கத்திய நாடுகள், ருவாண்டா நாட்டில் ஆறு லட்சம் கறுப்பின மக்களை கொன்றுகுவித்த இனப்படுகொலையில் அக்கறை காட்டவேயில்லை.
உயிர்த் தொழில்நுட்ப ஆய்விலும் (biotechnology research) ஒப்பனை மருந்துகள் (cosmetic drugs), மெதுவாக பழுக்கும் தக்காளி போன்றவற்றுக்குத் தரப்படும் முக்கியத்துவம் மலேரியா நோய் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கு தரப்படுவதில்லை. தகவல் தொடர்பு, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு தொழிற்நுட்பங்களில் புதுப்புது உத்திகளைப் புகுத்தி உலகப் பொருளாதாரத்தை மாற்றி அமைக்கும்போது, ஏழ்மையை, வறுமையை விரட்டுவதில் மட்டும் எந்த அக்கறையும் கொள்வதில்லை ஆதிக்க நாடுகள்.
இணையம் போன்ற தொழிற்நுட்பங்கள் அறிவார்ந்த வளர்ச்சிக்கு உதவினாலும், பணமுள்ளவர்களுக்கும், படிப்பறிவு உள்ளவர்களுக்கும் மட்டுமே இவை உதவுகின்றன. ஏறத்தாழ 88% இணைய உபயோகிப்பாளர்கள் வளர்ந்த நாடுகளில் வசிக்கின்றனர். இவர்கள் உலக மக்கள் தொகையில் வெறும் 17% பேர்தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
உலகமயம் உள்ளூர் சமூகங்களை, அவர்களின் தற்சார்பு வாழ்க்கையை அழிக்கிறது. பல்வேறு இனங்களின், தேசிய இனங்களின் மீதான வெறுப்பை, அன்னியர் மீதான கோபதாபங்களை வளர்த்தெடுக்கிறது. இணைய உலகம் இதற்கு இன்னும் உதவி செய்கிறது. உலகமய சக்திகள் செய்யும் சுற்றுச்சூழல் தவறுகளுக்கு ஏழை மக்கள் தண்டிக்கப்படுகின்றனர். பருவநிலை மாற்றம், வறட்சி, வளக் கொள்ளை, கழிவுகள் உருவாக்கம், ஆபத்தானப் பொருட்களை கொட்டிக் குவிப்பது என பல வழிகளில் சுற்றுச்சூழல் இனவெறி தலைகாட்டுகிறது.
உலகச்சந்தையின் இனவெறி (இன, தேசிய இன) சிறுபான்மையினரின் அரசியல் அதிகாரமிழப்பில், சமூக விலக்கில், பொருளாதாரச் சுரண்டலில் பெரும் பங்காற்றுகிறது. உலகமய சக்திகள் இந்த மக்களை திட்டமிட்டு பலவீனப்படுத்தி, அவர்களின் மனித உரிமைகளைப் பறித்து, நிலைபெறு வளர்ச்சியைத் தடுத்து, தங்கள் அதிகாரத்தையும், ஆதிக்கத்தையும் அவர்கள் மீது திணிக்கின்றன. (தொடர்வோம்)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.