சுப. உதயகுமாரன்
இன்றைய உலகமயம் பெயரளவில்தான் உலகமயமே தவிர உண்மையில் வடக்கத்தி நாடுகள் மயமானது, நகரமயமானது. இந்த உலகமயம் நியூயார்க் மற்றும் லண்டன் போன்ற நகரங்களில் பொருளாதார ஆதிக்கம், கண்காணிப்பு, மேலாண்மை, நிதிச் சேவைகள் போன்றவற்றை குவித்து வைக்கிறது. ஒரு சிறு வெள்ளையின ஆண் கூட்டம் இதை ஒருங்கிணைத்து, தகவல்களைப் பரிமாறி, உலக முதலீடுகளின் இயக்கங்களை நிர்வகித்து, நகரங்களின் வர்த்தகம், நுகர்வு, குடியிருப்புக்கள் என அனைத்தையும் கட்டிக்காக்கிறது
உலகமயமான நகரம் இரட்டைத் தன்மை கொண்டதாக இருக்கிறது. திறமைகளற்ற தொழிலாளர்களும், பெண் ஊழியர்களும், கூலி வேலைக்காரர்களும் விளிம்புநிலையில் குவிந்துகிடக்க, பொருளாதார மேம்பாடு நகரங்களின் மையங்களிலும், அவற்றைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளிலும் மண்டிக் கிடக்கிறது. குறைந்த வருவாய் கொண்ட ஏழைச் சமூகங்களை பொருளாதார வளர்ச்சி முற்றிலுமாக கைவிட்டிருக்கிறது.
செழுமையும், வளமையும், அதிகாரமும் ஒருசிலரின் கரங்களில் மட்டுமே குவிந்து, அவர்கள் மற்றவர்கள் அனைவரின் மீதும் ஆதிக்கம் செலுத்துகிற அமைப்பு தனிப்பட்ட நாடுகளிலும் உலக அளவிலும் நடக்கிறது.
வளரும் நாடுகளுக்குச் செல்லும் அந்நிய முதலீடுகளில் எண்பது விழுக்காடு வெறும் இருபது நாடுகளுக்கேச் செல்கின்றன. சீனா, பிரேசில், மெக்சிகோ, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு ஓடோடிச் செல்லும் முதலீடு, உலகின் ஏழ்மைப் பகுதியான ஆப்பிரிக்காவுக்குப் போக மறுக்கிறது. அங்கே தனிநபர் வருமானம் தொடர்ந்து முப்பது ஆண்டுகளாக வீழ்ச்சியடைந்து வருகிறது. தெற்காசியா, கறுப்பின ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, கரீபியன் நாடுகளில் வாழும் கணிசமான மக்கள் ஏழ்மையிலும், வறுமையிலும் வாடிக் கொண்டிருக்கின்றனர். நமது பூமியின் மக்கள்தொகையின் சரிபாதி பேரின் ஆண்டு வருமானத்தை உலகின் சில நூறு பணக்காரர்கள் பெற்றிருக்கின்றனர். மக்களின் இனமும், நிறமும், ஏழ்மையும் பின்னிப் பிணைந்திருக்கின்றன.

‘உலக அபார்தைட்’ அமைப்பில் எண்ணிக்கையில் மிகக்குறைந்த வெள்ளையினச் சிறுபான்மையினர் உலகின் அபரிமிதமான செல்வங்களையும் வாய்ப்புக்களையும் அனுபவிக்கின்றனர். வெள்ளையின மக்கள் சிறுபான்மையினராக இருக்கும் தனிப்பட்ட நாடுகளிலும்கூட, நாட்டின் வளங்களை அவர்களே கட்டுக்குள் வைத்திருக்கின்றனர். எடுத்துக்காட்டாக, அதிகமாக கறுப்பின மக்கள் வாழும் ஜிம்பாப்வே நாட்டில், 4,500 வெள்ளையின விவசாயிகளே பெரும்பான்மை நிலங்களைக் கைவசம் வைத்திருக்கின்றனர். அதே போல, தென்னாப்பிரிக்கா நாட்டில் ஏழு விழுக்காடு மட்டுமே இருக்கும் வெள்ளையின மக்கள் மொத்த பொருளாதாரத்தையும் தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கின்றனர்.
இன வேற்றுப்படுத்துதல் என்பது எப்போதுமே கருப்பு-வெள்ளை பிரச்சினையல்ல என்பதும் உண்மை. எடுத்தக்காட்டாக, இந்தியாவில் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் பார்ப்பனீயர்கள் தலித் மக்கள், சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோருக்கு எதிரான மனப்போக்கினையும், அணுகுமுறையையும் கொண்டிருக்கின்றனர்.
இப்படியாக சமூக விலக்கு (social exclusion) என்பது தற்போது சமூகத்தில் நிலவும் பிற்போக்கு உறவுமுறைகளை தக்க வைத்துக்கொள்கிறது. சக்தியற்றோர் வளருவதற்கான வாய்ப்புக்களைத் தர மறுக்கிறது, உரிமைகளையும், சலுகைகளையும் திட்டமிட்டுப் பறித்துக் கொள்கிறது, இனச் சிறுபான்மையினரின் சமூக அந்தஸ்தையும், நலன்களையும் பல்வேறு நடவடிக்கைகளால் பாதிப்படையச் செய்கிறது.
இனச் சிறுபான்மையினரை ஒதுக்கிவைப்பதும் நடக்கிறது. அமெரிக்காவில் கறுப்பின மக்களும், செவ்விந்தியர்களும் வாழும் பகுதிகளில் வறுமை மண்டிக் கிடக்கிறது. பிரேசில் நாட்டில் இருபது மில்லியன் மக்கள் ஒரு மாதத்துக்கு எழுபது டாலருக்கும் குறைந்த மாத வருமானம் பெற்றிருக்கின்றனர்.
இம்மாதிரியான சமூக விலக்கு மக்களுக்கு வாய்ப்புக்களை மறுக்கிறது. கொள்கை உருவாக்கங்களில் இனவெறி புகுந்து அது மக்களுக்கு வளர்ச்சியை மறுக்கிறது. இந்தியாவில் ஆதிவாசிகள் வாழும் பகுதிகளில் நடப்பது ஓர் அதிர்ச்சி தரும் எடுத்துக்காட்டு. இந்திய மக்கள் தொகையில் எட்டு விழுக்காடு பேர் ஆதிவாசிகள். அவர்கள் எழுபது விழுக்காடு கனிமங்கள், காடுகள், நீர் வளங்கள் கொண்ட இருபது விழுக்காடு நிலங்களை தங்கள் வசம் வைத்திருக்கின்றனர். இந்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கை இவர்களின் வாழ்க்கை முறையை போதாமைகள் கொண்டதாக, அசாத்தியமானதாகக் கருதுகிறது. இருபது லட்சத்துக்கும் அதிகமான ஆதிவாசி மக்களை இடம்பெயரச் செய்யும் மெகா வளர்ச்சித் திட்டங்களை இந்திய அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.
கல்வி, வேலை வாய்ப்பு, வீட்டு வசதி போன்றவற்றில் சிறுபான்மையினர் வேற்றுப்படுத்தப்படுவது உலகின் பல்வேறு நாடுகளில் நடக்கிறது. அமெரிக்காவில் கறுப்பின மக்கள் வீட்டுக்கடன் வாங்குவது மிகவும் கடினம். இன ரீதியில் சிறுபான்மையினர் தொல்லைகளுக்குள்ளாவதும் தொடர்ந்து நடக்கிறது. இன விபரங்கள் சேகரித்தல், வன்முறைகளுக்குள்ளாதல், காவல்துறை அடக்குமுறைகள் என பற்பல பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
அமெரிக்காவில் மொத்த இளையோர் எண்ணிக்கையில் சுமார் முப்பது விழுக்காடு பேர்தான் கறுப்பின இளைஞர்கள். ஆனால் சிறையில் இருப்பவர்களில் அறுபது விழுக்காடு பேர் இவர்கள்தான். வெள்ளையின இளைஞர்களைவிட கறுப்பின இளைஞர்கள் போதைப் பொருள் விவகாரங்களில் சிக்குவதற்கான வாய்ப்பு ஐம்பது மடங்கு அதிகமானதாக இருக்கிறது. கருப்பின இளைஞர்கள்தான் போக்குவரத்து காவல்துறையினராலும் அதிகமாக நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர்.
உயர்கல்வியும், கூர் திறன்களும், பண வசதியும் உள்ளவர்களுக்கு உலகம் சுற்றும் வாய்ப்புக்களை வாரி வழங்குகிறது இன்றைய உலகமயம். வேறு சிலருக்கு கைநிறைய சம்பளம் வழங்கினாலும், முடிவெடுக்கும் அதிகாரத்தையோ, தலைமைப் பொறுப்புக்களையோ உலகமயம் கொடுப்பதில்லை. நீண்டகாலச் சலுகைகளை, ஓய்வூதியத்தை, பாதுகாப்பைக் கொடுப்பதில்லை. திறமையற்ற தொழிலாளர்கள், அகதிகள், அடைக்கலம் கோருவோர் போன்றோர் முற்றிலுமாக வெறுக்கப்படுகின்றனர்.
இவையெல்லாம் போதாதென்று வலதுசாரி பாசிச அமைப்புக்கள், கட்சிகள் பெரும்பான்மைச் சமூகங்களின் அச்சங்களை, பயங்களை பயன்படுத்திக்கொண்டு, இனச் சிறுபான்மையினருக்கு எதிராக அரசியல் செய்கின்றன.
அறிவியலும், உயர் தொழிற்நுட்பங்களும் கலந்த பொருள் உற்பத்தியை எல்லா இனத்தவரும் செய்ய முடியும் என்கிற சமமான நிலையை உலகமயம் உருவாக்கினாலும், மேற்கத்திய கலாசாரப் பொருட்களை உருவாக்கும் வாய்ப்புக்களை மட்டுமே இது ஏழை நாடுகளுக்கு வழங்குகிறது.
இப்படியாக உலகமயம் இனச் சிறுபான்மையினரோடு கண்ணாமூச்சி விளையாடுகிறது. அவர்களின் அடையாளங்களைத் தூக்கிப்பிடிக்கும் உலகமயம், அவர்களின் அரசியல் குரல்களை அப்படியே நசுக்குகிறது. நவீன உலகின் ஏற்றத்தாழ்வுகள் சிலவற்றை உலகமயம் சரிசெய்வது போலத் தோன்றினாலும், அது உண்மையில் சிறுபான்மையினரைத் துன்புறவேச் செய்கிறது. உலக மயமாக்கப்பட்ட உலகத்தை வழிநடத்தும் மையமாக வெள்ளையினம் வந்து நின்றாலும், சுற்றுவெளியும், விளிம்புகளும் பொலிவிழந்து, அதிகாரமிழந்து கிடக்கின்றன. உலகமயம் இனவெறிக்குள் கட்டுண்டு கிடந்தாலும், அது கவனமாக சாமர்த்தியமாக மூடி மறைக்கப்படுகிறது. (தொடர்வோம்)