இடிந்தகரை முதல் கதிராமங்கலம் வரை–9 : உலகமயமும் ஒரு புல்லட் ரயில்தான்

உலகமயமும் ஒரு புல்லட் ரயில் போன்றதுதான். இது பணக்காரர்களுக்கானது, பாமரர்களைக் கண்டுகொள்ளாதது. உலகமய புல்லட் ட்ரெயின் உங்களுக்கும், எனக்குமானதல்ல.

By: September 18, 2017, 5:53:29 PM

சுப. உதயகுமாரன்
அண்மையில் அகமதாபாத்தில் புல்லட் ரயில் துவக்க விழாவில் பேசிய பிரதமர் மோடி இப்படிச் சொன்னார்: “எங்கள் கவனம் அதிவேக இணைப்போடுகூடிய அதிவேக உற்பத்தியில் குவிந்திருக்கிறது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அந்நாட்டின் உற்பத்தித் திறனோடு நேரடித் தொடர்புடையது. அதிவேகப் பாதைகள் நாட்டின் பொருளாதாரத்துக்கு உந்துதல் அளிக்கும்.”

புல்லட் ட்ரெயின் போன்ற பொருட்செலவு மிக்க தொழிற்நுட்பங்கள் பணக்காரர்களுக்கானவை என்கிற குற்றச்சாட்டை மறுத்த பிரதமர், தொழிற்நுட்பங்கள் அனைவருக்குமானவை என்று தான் நம்புவதாகவும், சாதாரண மக்களும் பயனடைவதற்கு தொழிற்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் சொன்னார்.

பொருளாதார வளர்ச்சிக்கும் உற்பத்தித் திறனுக்கும் இடையே இருக்கும் நேரடித் தொடர்பு நாம் எல்லோரும் அறிந்ததுதான். இந்தத் தொடர்பில் அதிவேகப் பாதைகளுக்கு ஒரு பங்கு இருப்பதும் நமக்குத் தெரியும். ஆனால் சாதாரண மக்கள் இதில் எப்படி பங்கேற்கிறார்கள், அவர்கள் பங்கேற்பதற்கு சந்தையும், அரசுகளும் எப்படி அனுசரணையாக இருக்கின்றன என்பவை முக்கியமான கேள்விகள்.

ஏறத்தாழ 32 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இந்தியாவில் மும்பை முதல் அகமதாபாத் வரையிலான 508 கி.மீ. தூரத்துக்கு புல்லட் ரயில் விட்டுவிட்டால் அதிவேகப் பாதைகள் உருவாகிவிட்டதாகக் கொள்ள முடியுமா? ஒரு மணி நேரத்துக்கு 320 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் இந்த ரயில் சுமார் ஒன்றரை மணி நேரத்தில் அடுத்த ஊர்ப் போய் சேரும். இதற்கு கட்டணமாக ரூ. 3,000 வசூலிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புல்லட் ரயிலில் எத்தனை விவசாயிகளும், மீனவர்களும், சிறு வணிகர்களும் பயணம் செய்வார்கள், அல்லது செய்ய முடியும்?

idinthakarai, kathiramangalam, globalization, bullet train, pm narendra modi, s.p.udayakumaran சுப.உதயகுமாரன்

புல்லட் ரயில் ஓடப்போகும் குஜராத் மாநிலத்தின் வளர்ச்சியைக் காட்டித்தான், இதே வளர்ச்சியை நாடு முழுக்கக் கொண்டு வருவோம் என்று பாரதிய ஜனதா கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மக்களைக் கவர்ந்தது, வென்றது. ஆனால் 2015 ஏப்ரல் 1 அன்று வெளியிடப்பட்ட இந்திய அரசின் தலைமை கணக்காயர்–தணிக்கையாளர் (CAG) அறிக்கை மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது விவசாயத்திலும், சமூகக் கட்டுமானங்களிலும், கல்வி அபிவிருத்தியிலும், சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதிலும் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என்று தெரிவித்தது.

அதே போல, 2017 சனவரி 4 அன்று ‘இந்தியா டுடே’ இதழ் வெளியிட்ட அறிக்கை ஒன்று இதே உண்மையை மீண்டும் போட்டு உடைத்திருக்கிறது. குஜராத் மாநிலம் 1980 முதல் 2013 வரை வேகமான வளர்ச்சி அடைந்தது. அதன் தனி நபர் வருமானம் ஆண்டுக்கு 5.1 விழுக்காடு என்ற விகிதத்தில் உயர்ந்தது. ஆனால் கல்வி, உடல்நலம் போன்ற சமூக விடயங்களில் குஜராத்தின் நிலைமை மிகவும் மோசமாகி இருக்கிறது. ஆண்டுக்கு 2.2 விழுக்காடு என்ற அளவில்தான் கல்வித்தரம் உயர்ந்தது. ஆதிவாசிகள், தலித் மக்கள், கிராமப்புறங்களில் வாழும் சிறுபான்மையினர் ஆகியோர் சந்தைப் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

மோடி விடப்போகும் புல்லட் ரயிலின் அடுத்து வரவிருக்கும் குஜராத் மாநிலத் தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படலாமே தவிர, அந்த மாநில பாமர மக்களின் நல்வாழ்வுக்கு எந்த விதத்திலும் பயன்படாது. அதே போல, இந்த உலகமயமும் ஒரு புல்லட் ரயில் போன்றதுதான். இது முழுக்க முழுக்க பணக்காரர்களுக்கானது, பாமரர்களைக் கண்டுகொள்ளாதது.

ஏதோ ஒட்டுமொத்த உலகத்தையும் வளர்ச்சியடையச் செய்து, நம்மையெல்லாம் உய்வடையச் செய்வது போலவே உலகமயம் பற்றி சிலர் பேசினார்கள், இன்னும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் உலகமயத்தின் அடிப்படைக் கூறுகளான சந்தை தாராளமயமாக்கல், சலுகைகள் அளிக்கா அரசு, இறுக்கமான பணக் கொள்கை மற்றும் நிதிக் கட்டுப்பாடு, தொழிலாளர் எதிர்ப்பு, இயற்கை வளங்களை விட்டுவிட்டு செயற்கை வளம் நாடுதல், சனநாயகப் பற்றாக்குறை – அனைத்துமே பாமர மக்களை வெகுவாக பாதிக்கின்ற அம்சங்கள்.

சந்தை தாராளமயமாக்கல் என்பது உள்ளூர் சந்தைகளை, உலக வர்த்தகத்தைத் திறந்து விடுகிறது. அரசுகளின் வரிகள், தலையீடுகள், கட்டுப்பாடுகள் இல்லாத, போட்டியின் அடிப்படையிலான சந்தை வர்த்தகத்தை விரிவுபடுத்தும், அதற்கான அந்நிய முதலீட்டைக் கொண்டுவரும் என்பதுதான் நம்பிக்கை. முதலீடுகளைக் கொண்டுவரும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் பணத்துக்கானப் பாதுகாப்பையும், தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கானச் சந்தையையும், தங்கள் முதலீட்டின் மீதான பெரும் லாபத்தையும் மட்டுமே தேடுகின்றன. அவர்களின் முதலீடுகளையும், கடன்களையும் மிகவும் விரும்பும் அரசுகள் அந்த முதலீடுகளை, முதலாளிகளைப் பாதுகாப்பதில் தனிக்கவனம் செலுத்துகின்றன.

மக்கள் தங்களுக்குத் தேவையானவற்றை திறந்த சந்தையில் உரிய விலை கொடுத்து வங்கிக் கொள்ளட்டும் என்று நினைக்கிறவர்கள், மக்களுக்கு அரசுகள் வேறு எந்த சலுகைகளையும் கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்துகின்றனர். எனவே அரசுகள் கல்வி, மருத்துவம், போக்குவரத்து போன்ற மக்களின் தேவைகளை நிறைவேற்றத் தவறுகின்றன. அதே நேரம் பணக்காரர்களின் பாதுகாப்புக்காக, லாபத்துக்காக, அபரிமித வளர்ச்சிக்காக அரசுகள் தங்களால் ஆன அனைத்தையும் செய்கின்றன. இதன் காரணமாக, வருமானப் பகிர்விலும், சொத்து சேர்ப்பதிலும், வளரும் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்வதிலும் பெரும் ஏற்றத்தாழ்வுகள் உருவாகின்றன. இதன் காரணமாக பலவீனப்பட்டவர்கள் இன்னும் பலவீனமடைகிறார்கள்.

இறுக்கமான பணக் கொள்கை, நிதிக் கட்டுப்பாடு போன்றவற்றை மேற்கொள்ளும் அரசுகள் கடன் வாங்குவது, வட்டிக் கட்டுவது, பணமாற்று மதிப்பை மட்டுப்படுத்துவது, அரசின் செலவினங்களைக் குறைப்பது என சிந்திக்கின்றன, செயல்படுகின்றன.

உலகமயம் வேலைப் பாதுகாப்பு, உரிய சம்பளம், ஓய்வூதியம் போன்ற சலுகைகள் அனைத்தையும் பறித்துவிட்டு, தொழிலாளர் எதிர்ப்பு மனோபாவத்துடனேயே இயங்குகிறது. புதிய தொழில்களை கொண்டுவரும் உலகமயம், உற்பத்திப் பெருக்கத்தில் கவனம் செலுத்துகிறதே தவிர, மனிதவளப் பெருக்கத்தில் நாட்டம் கொள்வதில்லை. வேலை நிறுத்தம் செய்யக் கூடாது, வேலையிடத் தரம், பாதுகாப்பு பற்றி கண்டுகொள்ளக் கூடாது என்றெல்லாம் வற்புறுத்துகிறது.

இயற்கை வளங்களை, வாழ்வாதாரங்களைத் திட்டமிட்டு பாழ்படுத்திவிட்டு, வேலைவாய்ப்பு, வருமானம், வளர்ச்சி, வசதி வாய்ப்புக்கள் என செயற்கை வளங்களில் நாட்டம் செலுத்துகிறது உலகமயம். பொதுமக்களின் இறையாண்மையை மறுதலித்தல், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கல், வாய்ப்புக்கள் மறுத்தல் என இயங்கும் உலகமயத்தின் முடிவுகள் அனைத்தும் எந்தவிதமான பொது விவாதமின்றி, திறந்தவெளித் தன்மையின்றி, சனநாயக நடைமுறைகளின்றி உலக வங்கி, சர்வதேச வர்த்தக நிறுவனம் போன்ற அமைப்புக்களின் பூட்டிய அறைகளுக்குள்ளேயே எடுக்கப்படுகின்றன.

உலகமய புல்லட் ட்ரெயின் உங்களுக்கும், எனக்குமானதல்ல.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in by following us on Twitter and Facebook

Web Title:From idinthakarai to kathiramangalam 9 globalization and bullet train

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X