சுப. உதயகுமாரன்
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன் மீது இந்தியத் தேசிய ஒற்றுமைக்கு எதிராக புத்தகம் எழுதி வெளியிட்டதாக மயிலாடுதுறை போலீசார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். பேராசிரியர் எழுதிய புத்தகத்தின் பெயர், ‘நதிகள் இணைப்புத்திட்டம்: ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா’ என்பதாகும். கடந்த அக்டோபர் 22 அன்று கொளத்தூர் மணி புத்தகத்தை வெளியிட இயக்குனர் கௌதமன் பெற்றுக்கொண்டார்.
இந்தப் புத்தகத்துக்கே வழக்கு என்றால், அண்மையில் கா. அய்யநாதன் வெளியிட்டிருக்கும் “ஹைட்ரோகார்பன் அபாயம்: இயற்கைக்கும் மனிதகுலத்துக்கும் எதிரான பேரழிவுத் திட்டம்” எனும் புத்தகத்துக்கு அவரை சிரச்சேதமே செய்ய வேண்டும். காரணம் அந்த நூல் நம்மையெல்லாம் மிரட்டும் பல தகவல்களைக் கொண்டுள்ளது.

இந்திய தீபகற்பத்தை முப்புறமும் சூழ்ந்துள்ள கடற்பகுதியிலும், நிலப்பகுதியின் நீட்சியாக கடற்பகுதிக்குள்ளே அமிழ்ந்துள்ள குறைந்த ஆழங்களிலும் ஏராளமான ஹைட்ரோகார்பன் வளம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடற்கரையை ஒட்டிய 200 மீட்டருக்கும் குறைவான ஆழமுள்ள கடற்பகுதியின் பரப்பு 17.80 லட்சம் சதுர கி.மீ. ஆகும். இதிலுள்ள ஹைட்ரோகார்பன் வளம் 2,000 கோடி டன்கள். இதற்கும் அப்பாலுள்ள கடற்பகுதியில் உள்ள வளங்களைக் கணக்கிட்டால், ஹைட்ரோகார்பன் இருப்பு மேலும் 500 கோடி டன்கள் கூடுதலாக இருக்குமாம்.
புதுவை கடற்கரையில் இருந்து 22 கிமீ தொலைவில் 400 மீட்டர் முதல் 3,000 மீட்டர் ஆழமுள்ள கடற்பகுதியில் 10,665 சதுர கி.மீ. பரப்பளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக் கண்டறியப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி முதலீட்டில் இவற்றைத் தோண்டி எடுக்கவிருக்கிறது.
காவிரி டெல்டாவில் எண்ணெய், எரிவாயு எடுத்தால் தமிழர்களின் உணவுப் பெட்டகம் எப்படிக் காணாமல் போகுமோ, அதேபோல, இந்தக் கடற்கரைப் பகுதிகளில் எண்ணெய், எரிவாயு தோண்டி எடுக்கப்படும்போது, ஏழரை லட்சம் தமிழக மீனவர்களின் வாழ்வும், மீன் உற்பத்தியும் கேள்விக்குறியாகும். நிலத்தில் துரப்பணப் பணிகள் மேற்கொள்ளும்போது வெளியேறும் கழிவுகள், வாயுக்கள் போன்றவற்றால் நீர்நிலைகளும், நிலத்தடி நீரும், காற்றும் மாசுபடுவதைவிட, கடலில் துரப்பணப் பணிகள் மேற்கொள்வது இன்னும் பெரும் பாதிப்புக்களை உருவாக்கும். ஆழ்துளையிடுவதற்கு பயன்படுத்தப்படும் இரசாயனக் கலவைகளும், வெளியேறும் எண்ணெய் கசடுகளும், கழிவுகளும் கடல்வாழ் உயிரினங்கள் மீது கடுமையான பதிப்புக்களை உருவாக்கும்.
நிலத்தை ஒட்டிய கடல்பரப்பின் மீது அமைந்திருக்கும் இயற்கைச் சூழலும், உயிரியல் வளங்களும் பாதிப்படையும்போது, மீன்பிடித் தொழில் நசிந்து போகும். உயிரினங்களின் வாழ்வுக்கு ஆதாரமான நீர்ச் சூழல் மாசுபடும். கடல் நீரில் இரசாயன மாசு அதிகமாகும். கடல்பாசியின் வளர்ச்சி, கடல் நீரின் ஆக்சிஜன் அளவு போன்றவை பாதிப்புக்குள்ளாகும். இந்த கடற்பகுதி மீனவருக்கா அல்லது ஹைட்ரோகார்பனுக்கா எனும் முக்கியமான கேள்வியைக் கேட்கிறார் அய்யநாதன்.
உண்மையில், எட்டுக் கோடி தமிழர்களின் உணவுப் பாதுகாப்பும், ஊட்டச்சத்துப் பாதுகாப்பும் இல்லாமலாகிப் போகும். சோறும் இல்லாமல், மீனும் இல்லாமல் தெருவுக்கு வரும் தமிழினம். காவிரி டெல்டா விவசாயிகள் போல, தமிழக மீனவர்களும் மொத்தமாக அழிக்கப்படுவார்கள். உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்துப் பாதுகாப்பு பற்றியெல்லாம் இங்கே யாருக்கும் எந்தக் கவலையும் இல்லையே?
எதிர்வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் ஓ.என்.ஜி.சி. நான்கு மில்லியன் டன் (mt) கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யத் திட்டமிட்டிருக்கிறது. அதேபோல 2020-ஆம் ஆண்டுக்குள் இயற்கை எரிவாயுவின் உற்பத்தியும் இரண்டு மடங்காக உயர்த்தப்படுமாம். இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் அளவை 2022-ஆம் ஆண்டுக்குள் பத்து சதவீதம் குறைக்க வேண்டுமென்று பிரதமர் விரும்புகிறார். எனவே ஓ.என்.ஜி.சி. 2017-18 காலகட்டத்தில் உற்பத்தி செய்த 22.6 மில்லியன் டன் கச்சா எண்ணெய் உற்பத்தியை 2021-22 காலகட்டத்தில் 26.42 டன்னாக உயர்த்தத் திட்டமிட்டிருக்கிறது என்று ஓ.என்.ஜி.சி. தலைவர் சசி சங்கர் தெரிவித்திருக்கிறார்.
இயற்கை எரிவாயுவைப் பொறுத்தவரை, தற்போது உற்பத்தியாகும் 19.73 bcm (billion cubic meters) 2021-22 காலகட்டத்தில் 11.9 bcm ஆக குறையும். ஆனாலும் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடங்களிலிருந்து 2021-22 காலகட்டத்தில் 29.65 bcm எரிவாயு கூடுதலாகக் கிடைக்கும் என்கிறது ஓ.என்.ஜி.சி. நிறுவனம்.
“2016-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி வரை 577 ஹைட்ரோகார்பன் புதைந்திருக்கும் இடங்களை கண்டறிந்திருக்கிறோம். இவை அனைத்திலும் வளங்களைத் தோண்டி எடுக்க ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கிறோம்” என்று அறிவித்திருக்கிறது ஓ.என்.ஜி.சி. நெடுவாசல், வடகாடு, கதிராமங்கலம் என பல்வேறு இடங்கள் சுடுகாடாக்கப்படும். திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைக் கடித்துக் குதறிக் கொன்றழிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர். சசி சங்கர் சொல்ல வரும் செய்தி என்னவென்றால், ஓ.என்.ஜி.சி. எனும் ஒண்டவந்தப் பிடாரி, ஊர்ப்பிடாரியை விரட்டாமல் விடாது என்பதுதான்.
இந்த நிலையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 2017-2018—ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.5,131 கோடி லாபம் சம்பாதித்திருக்கிறதாம். இதன் காரணமாக ரூ. 5 மதிப்புள்ள ஒவ்வொரு ஓ.என்.ஜி.சி. பங்கின் மீதும் ரூ. 3, அதாவது 60 விழுக்காடு லாபம் ஏற்றிக் கொடுக்கப்போவதாக அதன் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இதற்கு மொத்தம் ரூ. 3,850 கோடி செலவாகும் என்றும் கம்பெனி நிர்ணயித்திருக்கிறது.
வெந்தப் புண்ணிலே வேல் பாய்ச்சுவதுபோல, இன்னுமொரு மோசமான செய்தியும் வருகிறது. அதாவது இந்தியாவும், அமெரிக்காவும் சேர்ந்து தமிழ் நாடு, ஆந்திரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருக்கும் 96 டிரில்லியன் கன அடி ஷேல் எரிவாயுவைத் தோண்டி எடுக்கப்போகிறார்களாம். இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் பல அமெரிக்க நிறுவனங்கள் ஷேல் எரிவாயு எடுப்பதற்கானப் பணிகளில் இறங்கவுள்ளன என்று பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சக அதிகாரிகள் அண்மையில் தெரிவித்திருக்கின்றனர். இந்த அமைச்சகமும், அமெரிக்க எரிசக்தித் துறையும் இணைந்து வெகுவிரைவில் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட இருக்கிறார்கள்.
பெரும்பான்மையான இந்திய நிறுவனங்கள் ஷேல் எரிவாயுவைத்தான் வருங்காலத்தின் எரிசக்தி மூலமாகக் கருதுகின்றன; எனவே இதைத் தோண்டி எடுப்பதற்கு வெளிநாட்டு நிறுவனங்களோடு தொழிற்நுட்ப ஒத்துழைப்பு, கூட்டு முயற்சி போன்றவற்றில் இறங்க ஆர்வமாக உள்ளன இந்திய நிறுவனங்கள். மொத்தத்தில், தமிழரைத் துரத்தும் ஹைட்ரோகார்பன் பேயை விரட்ட கடுமையானப் பிரயத்தனங்கள் தேவைப்படும்.