இடிந்தகரை முதல் கதிராமங்கலம் வரை –14 : கலைஞர்-எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா ‘புரிந்த’ முன்னேற்றம்!

கலைஞர் கருணாநிதிக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர். அவர்களின் “முன்னேற்றம்” குறித்த புரிதல் இதே மேம்போக்கான, அரைகுறை அறிவுப் பாதையிலேயே பயணித்தது.

By: November 10, 2017, 5:31:34 PM

சுப. உதயகுமாரன்

சமூகப் பொருளாதார அரசியல் துறைகளில் பார்ப்பனரல்லாத தென்னக மக்கள் அதிகமான வாய்ப்புக்களைப் பெறவும், பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கவுமாக சர். பி. தியாகராயர், டாக்டர். நடேசன், டாக்டர் டி.எம். நாயர் போன்றோரால் 1916-ஆம் ஆண்டு தென் இந்திய நல உரிமைச்சங்கம் எனும் அமைப்புத் துவங்கப்பட்டது. இவர்கள் நடத்திய “ஜஸ்டிஸ்” (நீதி) எனும் ஆங்கில இதழின் பெயர்க்காரணத்தால், இந்த அமைப்பு நீதிக்கட்சி (Justice Party) என்றழைக்கப்பட்டது. மேற்கண்ட பெயர்களில் உள்ள “நலம்,” “உரிமை,” “நீதி” போன்றவை ஆழமான அரசியல் அர்த்தம் கொண்ட வார்த்தைகள்.

பார்ப்பனர்களின், வட இந்தியர்களின் ஆதிக்கத்திலிருந்து தென்னிந்திய மக்களைக் காப்பாற்றும் பொருட்டு ஜஸ்டிஸ் கட்சியை 1944-ஆம் ஆண்டு திராவிடர் கழகம் என பெயர் மாற்றி நடத்திய தந்தை பெரியார், இந்தியாவின் விடுதலை நாளை கருப்பு நாளாக அறிவித்தார். அதனை எதிர்த்த அண்ணாவோ இந்திய விடுதலை வெறும் ஆரிய வட இந்தியர்களால் மட்டும் பெறப்பட்டதல்ல, அனைத்து இந்தியர்களின் உழைப்பும் அதிலே அடங்கியிருக்கிறது என்று வாதாடினார்.

s.p.udayakumaran, m.karunanidhi, dmk, MGR, jeyalalitha, aiadmk, idinthakarai, kathiramangalam மூன்று முன்னாள் முதல்வர்களும் (பழைய படம்)

அரசியலுக்கு அப்பாற்பட்டு இருந்தாலொழிய தான் நினைக்கும் சமூக சீர்திருத்தங்களை, விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை தொடர்ந்து நடத்த முடியாது என்று உறுதியாக நம்பினார் பெரியார். ஆனால் தேர்தலில் பங்குபெறாமல் திராவிடர் கழகம் விலகி நிற்பது அண்ணாவுக்கும் அவர் தோழர்களுக்கும் ஏற்புடையதாக இருக்கவில்லை. பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையே ஏற்பட்ட விரிசல், முன்னவர் தன்னைவிட ஏறத்தாழ 40 வயது இளையவரான மணியம்மையாரை மணம்புரிய முடிவு செய்தபோது, உடைப்பாக உருவெடுத்தது. அண்ணாவும் அவர் தோழர்களும் திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறினார்.

குடந்தை கே. கே. நீலமேகம், இரா. நெடுஞ்செழியன், கே. ஏ. மதியழகன், என். வி. நடராஜன், பெரியாரின் அரசியல் வாரிசு என்று கருதப்பட்ட அவரது அண்ணன் மகன் ஈ.வி.கே. சம்பத் எனும் “ஐம்பெரும் தலைவர்கள்” புடைசூழ, அண்ணா திராவிடர் கழகத்திலிருந்து விலகி 1949 செப்டம்பர் 17 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் கனத்த மழைக்கிடையே புதிய கட்சி துவங்கப்பட்டபோது, குடந்தை கே. கே. நீலமேகம்-தான் கட்சியின் பெயரை அறிவித்ததாகக் கேள்விப்படுகிறோம்.

s.p.udayakumaran, m.karunanidhi, dmk, MGR, jeyalalitha, aiadmk, idinthakarai, kathiramangalam தமிழகத்தின் ஒரு கொடூரக் காட்சி

பகுத்தறிவு, சுயமரியாதை, சாதி (தீண்டாமை) ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு போன்ற கொள்கைகளோடு பெரியாரின் திராவிடர் கழகம் இயங்கிக் கொண்டிருக்க, “முன்னேற்றம்” எனும் கருத்தை ஏற்றெடுத்து திராவிட முன்னேற்றக் கழகம் என்று தன் கட்சிக்கு பெயர் வைத்தார் அண்ணா. திராவிட இனமக்களின் உரிமைகளை பாதுகாக்கவும், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைக்கவும், தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும் பாதுகாத்து மேம்படுத்தவுமாக, ஏறக்குறைய திராவிடர் கழகத்தின் கொள்கைகளை ஒத்தே தி.மு.க. சிந்தித்தது. தேர்தலில் போட்டியிட்டு ஆட்சிக்கு வந்தால்தான் மாநிலத்தை சீரமைக்க முடியும் என்று உறுதியாக தி.மு.க. நம்பியது.

கட்சியின் பெயரில் எப்படி “முன்னேற்றம்” என்கிற சொல் சேர்க்கப்பட்டது, யார் இதனை முன்மொழிந்தார்கள், “முன்னேற்றம்” என்பதை புதிய கட்சியினர் எப்படிப் புரிந்துகொண்டார்கள் என்றெல்லாம் தெரியவில்லை. அண்ணா சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பொருளியல் மற்றும் அரசியல் பாடங்களில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர் என்கிற முறையில் “முன்னேற்றம்” பற்றி நிச்சயமாகப் படித்திருப்பார், சிந்தித்திருப்பார்.

தி.மு.க. படிப்படியாக முன்னேறி ஆட்சியைப் பிடித்தபோது, அண்ணா முதல்வர் பொறுப்பை ஏற்றார். அவர் குறுகிய காலமே ஆட்சியில் இருந்தபோதும், சென்னை மாநிலம் என்றழைக்கப்பட்ட தமிழகத்தின் பெயரை தமிழ்நாடு என மாற்றினார். சீர்திருத்தத் திருமணங்களுக்கு சட்டப்பாதுகாப்பு அளித்தார். தமிழகப் பள்ளிகளிலிருந்து இந்தி மொழியை அறவே நீக்கினார். சென்னை, கோவை ஆகிய பெருநகரங்களில் ரூபாய்க்கு ஒரு படி அரிசி எனும் திட்டத்தை சோதனை முறையில் அமுல்படுத்தினார். ஏழைகளுக்கு எரியாத வீடுகள் அளித்தார். பேருந்துகளை நாட்டுடமை ஆக்கினார். ஆனால் ஆட்சி அதிகாரத்தின் உதவியுடன் தன் குடும்பத்தையோ, நண்பர்களையோ “முன்னேற்றிக்” கொள்ளாத அறிஞர் அண்ணா 1969 பிப்ரவரி 3-இல் மறைந்தார்.

ஒரு பெரும் அதிகாரப் போட்டி நிகழ்ந்து கலைஞர் மு. கருணாநிதி அடுத்த முதல்வராகப் பதவியேற்றார். “ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தேத் தீருவோம்,” “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்றெல்லாம் முழக்கங்களை முன்வைத்த தி.மு.க. “முன்னேற்றம்” என்பதை மேம்போக்காகவேப் புரிந்துகொண்டது. “முன்னேற்றம்” குறித்த ஆழமான தத்துவார்த்தப் பார்வையோ, பரந்துபட்டப் பொருளாதாரப் புரிதலோ, அரசியல் பொருளாதார அறிவோ, சுற்றுச்சூழல் விழிப்புணர்வோ பெரிதாக இருக்கவில்லை. அவதிப்பட்டுக் கொண்டிருந்த தமிழர் முகத்துக்கு அரிதாரம் பூசுவதிலேயேக் குறியாய் இருந்தார்கள்.

கலைஞரின் அரசு நலிவுற்ற, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக பல திட்டங்களை நிறைவேற்றியது. குடிசை மாற்று வாரியம், பிச்சைக்காரர் மற்றும் தொழு நோயாளர் மறுவாழ்வு இல்லங்கள், கருணை இல்லங்கள், கண்ணொளி வழங்கும் திட்டம், பண்டிகை நாட்களில் ஏழைகளுக்கு இலவச அரிசி மற்றும் ஆடைகள், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், கை ரிக்சாக்களை ஒழித்து இலவச சைக்கிள் ரிக்சாக்கள் வழங்கியது, ஊனமுற்றோர் மறுவாழ்வுத் திட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை, மகளிர் இலவச பட்டப்படிப்பு திட்டம், ஏழைப்பெண்கள் திருமண உதவித்திட்டம், ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீடுகள், மாநில திட்டக்குழு அமைப்பு என பல நடவடிக்கைகளைக் குறிப்பிடலாம்.
சமூக நீதி, இட ஒதுக்கீடு போன்ற விடயங்களிலும் பெரும் பங்களிப்பினைச் செய்தார் கலைஞர்.

தமிழ் இனத்தின் பழைய சிறப்புக்களை நினைவுகூறும் வகையிலும், தமிழ் மொழிக்காக பாடுபட்ட பெரியோர்களின் சேவைகளை நிலைநிறுத்தும் விதத்திலும் பூம்புகார் கலைக்கூடம், வள்ளுவர் கோட்டம், கட்டபொம்மன் கோட்டை, நினைவில்லங்கள் போன்றவற்றை உருவாக்கினார். இராஜாஜியின் குலக்கல்வித்திட்டத்தை எதிர்த்தது, தமிழர்களை `முட்டாள்கள்’ என்று நிந்தித்த நேருவை கண்டித்தது, டால்மியாபுரம் தொடர்வண்டி நிலையத்தின் பெயரை கல்லக்குடி என்று மாற்றியது, என உணர்ச்சி அரசியலே மேலோங்கி நின்றது.

மக்களின் உணர்வுகளைத் தூண்டி வழிநடத்தும் குறியீட்டு அரசியலும், கல்வி, வேலை வாய்ப்புக்களில் சலுகைகள் பெற்றுத்தருவதும் மட்டுமே பொருளாதார வளர்ச்சிக்கு வழிகோல முடியாது. அனைத்துத் தரப்பு மக்களும் தங்களின் சமூக நிலையை உயர்த்திக் கொள்வதற்கும், பொருளாதார மேம்பாட்டினை அடைவதற்கும், அரசியல் அதிகாரம் பெறுவதற்கும் தத்துவார்த்த அடிப்படையும், நீண்டகால அரசியல் செயல் திட்டங்களும், தெளிவானப் பொருளாதார நடவடிக்கைகளும் வேண்டும்.

இவையெல்லாம் மேம்போக்காக இருந்த காரணத்தினால்தான், திராவிட “முன்னேற்றம்” சாராயக்கடை திறப்பிலும், மணல் கொள்ளையிலும் போய் முடிந்தது. கட்சிக்காரர்கள் தம்மையும், தம்மைச் சார்ந்தோரையும் “முன்னேற்றிக் கொள்ள” அனுமதிப்பதன் மூலம்தான், அவர்களின் தொடர்ந்த ஆதரவைப் பெற முடியும் என்ற அடிப்படையில் லஞ்சமும், ஊழலும், ஊதாரித்தனமும் முன்னேற்றத்தின் அங்கங்களாக மாறின.

கலைஞர் கருணாநிதிக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர். அவர்களின் “முன்னேற்றம்” குறித்த புரிதல் இதே மேம்போக்கான, அரைகுறை அறிவுப் பாதையிலேயே பயணித்தது. அண்ணாயிசம் எனும் யாரும் அறியா தத்துவம் வழியாகவும், சினிமாப் பாடல்கள், வசனங்கள் மூலமாகவுமே முன்னேற்றம்/வளர்ச்சி மட்டுமல்ல, நல்வாழ்க்கையும்கூட அறியப்பட்டது.

எடுத்துக்காட்டாக,
“தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று,
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று?
என்றும் நல்லவர்க்கு வாழ்வு வரும் நாளை,
இது அறிஞர் அண்ணா எழுதிவைத்த ஓலை”
எனும் பாடல் வரிகளைச் சொல்லலாம்.

வறுமையிலிருந்தும், ஏழ்மையிலிருந்தும் குழந்தைகளை மீட்டு, பள்ளிக்குச் செல்லவைக்க பெருந்தலைவர் காமராசர் இலவச மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தார். ஐம்பதாண்டு கால “திராவிட முன்னேற்ற” கட்சிகளின் ஆட்சிக்குப் பிறகு, அந்தத் திட்டம் கைவிடப்படவேண்டிய நிலையை உருவாக்க முடியவில்லை.

முதல்வர் எம்.ஜி.ஆர். அதனை சத்துணவுத் திட்டம் என்று பெயர் மாற்றி, முட்டையும் சேர்த்துக் கொடுத்தார். கூடவே மக்களுக்கு இலவசக் காலணியும், பல்பொடியும் கொடுத்தார். மீண்டும் ஆட்சிக்கு வந்த கலைஞர் தங்கள் குடும்ப டி.வி. வியாபாரம் “முன்னேற” உதவும் வகையில் இலவச கலர் டி.வி. கொடுத்தார்.

அடுத்து வந்த முதல்வர் ஜெயலலிதா பொங்கல் கொண்டாடுவதற்கு இலவச அரிசியும், பருப்பும், சர்க்கரையும் கொடுத்தார். ஆடு, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, மிதிவண்டி, மடிக்கணினி என தமிழகத்தில் “முன்னேற்றம்’ தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

விவசாய மேம்பாடோ, தொழில் வளர்ச்சியோ, உற்பத்திப் பெருக்கமோ, வேலைவாய்ப்புக்களோ, வருமான உயர்வோ, மக்களின் வாங்கும்திறன் அதிகரிப்போ – எதையும் நடத்தாமல், இவை எதைப்பற்றியும் கவலைப்படாமல், இலவசங்கள் வழங்குவது, அதில் கமிஷன் பெறுவது, இயற்கை வளங்களைச் சுரண்டிக் கொழுப்பது, மக்களின் வாக்குக்களை விலைக்கு வாங்குவது என “திராவிட முன்னேற்றத்தின்” நிலைமை தொடர்ந்து மோசமாகிக் கொண்டிருக்கிறது.

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு, கூடங்குளம் அணுமின் நிலையம், மீத்தேன் எரிவாயுத் திட்டம் போன்ற திட்டங்களில் எல்லாம் மத்திய அரசின் நிலைப்பாட்டை கேள்வி கேட்காமல் ஆதரிப்பது என்பதுதான் “திராவிட முன்னேற்ற” நிலைப்பாடு. காவிரி டெல்டா பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் ஹைட்ரோகார்பன் கண்டுபிடிப்புச் சோதனைகள்தான் இப்போதைய அவலத்துக்கு அடித்தளமாக அமைகின்றன.
இந்தக் காலகட்டத்தில் “முன்னேற்றம்” பற்றிப் பேசிய கழகங்கள் இரண்டும்தான் மாறி மாறி ஆட்சியில் இருந்திருக்கின்றன. குறிப்பாக, இந்தப் பகுதியில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, தேர்தல்களிலும் வெற்றி பெற்ற கலைஞர் கருணாநிதி இவை பற்றியெல்லாம் எதுவுமே தெரியாமல், புரியாமல் இருந்தாரா? அல்லது நடப்பது நடக்கட்டும், நமக்கேன் வம்பு என்று கண்டுகொள்ளாமல் வாளாவிருந்தாரா? அல்லது இதுதான் “முன்னேற்றம்” என்ற முடிவில் அழிவு சக்திகளுடன் ஒத்துழைத்தாரா?

மிகப் பெரிய அறிவாளி, காவிரித்தாய், அனைவருக்கும் ‘அம்மா’ ஜெயலலிதாவுக்கும் எதுவுமே தெரியவில்லையா, அல்லது புரியவில்லையா?

இந்த இரண்டு “திராவிட முன்னேற்றம்” பேசிய, பேசும் கட்சிகளாலும் தமிழர்கள் எப்படி வஞ்சிக்கப்படிருக்கிறோம் என்பது தெளிவாக விளங்குகிறது. முன்னேற்றம், வளர்ச்சி, உயர்வு பற்றிய இந்தத் திராவிட கட்சிகளின் புரிதலை சுருக்கமாக இப்படிச் சொல்லாம்: “குங்குமம் என்பதை நானறிவேன், அது மஞ்சள் போல வெண்மையாய் இருக்கும்!”

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in by following us on Twitter and Facebook

Web Title:From idinthakarai to kathiramangalam progress by kalaignar mgr jeyalalitha

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X