வன்முறைக்கு எதிரான வழிகாட்டி, காந்தி

எழுத்தாளர் தேவிபாரதி, காந்தியை அறிமுகம் செய்தது யார்? இன்றைக்கு காந்தியின் கொள்கை எந்தளவுக்குத் தேவைப்படுகிறது. வன்முறைக்கு எதிரான ஆயுதம் பற்றி விவரிக்கிறார்

தேவிபாரதி

நான் காந்தியை அறிந்து கொண்டது டால்ஸ்டாயின் வழியாகத்தான். காந்தி ஒரு வரலாறாக அறிமுகமான பள்ளிப்பருவ நினைவுகளிலிருந்தும் அவை ஏற்படுத்தியிருந்த தாக்கங்களிலிருந்தும் எனது இருபதுகளில் விடுபடத் தொடங்கியிருந்தேன். காந்தியின் மீது கோபமும் அவரது வழிமுறைகளின் மீது வெறுப்பும் மேலோங்கத் தொடங்கியிருந்தது. அப்போது நான் சார்ந்திருந்த இடதுசாரி இயக்கமொன்றின் இதழ்களில் காந்தியின் அரசியல் குறித்தும் அவரது நிலைபாடுகள் குறித்தும் கடும் விமர்சனங்கள் வெளிவந்துகொண்டிருந்தன. குறிப்பாக அவரது அஹிம்சை பற்றி. இந்திய சுதந்திரம் பற்றிய விமர்சனக் கட்டுரையொன்றில் இடம்பெற்றிருந்த “ஒரு சோனிக்கிழவன் உப்புக்காய்ச்சியதால்தான் இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தது என்பன போன்ற கட்டுக்கதைகள்” என்னும் வாக்கியம் எனக்கும் எனது சகாக்களுக்கும் அதிகக் கவர்ச்சி தருவதாக இருந்தது.
அப்போதைய அரசியல் சூழல் அதற்கு நியாயம் தருவதாக இருந்ததே முக்கியக் காரணம்.

எனது இருபதுகள் (1975-80கள்) தமிழக, இந்திய அரசியலில் பெரும் மாற்றங்கள் உருவாகத் தொடங்கியிருந்த காலம். 1975இல் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரநிலைக் காலத்தின் அத்து மீறல்கள், இந்திய ஜனநாயகம் என்பதை ஒரு கட்டுக்கதையாக மாற்றியிருந்த அதிகாரவர்க்கத்தின் மூர்க்கமான செயல்பாடுகள், அவசரநிலை விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு அதிகாரத்திற்கு வந்திருந்த இரண்டாவது சுதந்திரப் போராட்ட வீரர்களின் பேராசைகள், துரோகங்கள் என இந்திய அரசியல் களம் சூதாட்டக்களமாக மாற்றப்பட்டிருந்தது. ஏறக்குறைய அனைத்துமே காந்தியின் பெயரால் அவரது சீடர்களாகத் தம்மைப் பிரகடனப்படுத்திக்கொண்டவர்களால் தலைமையேற்று நடத்தப்பட்டவை.

அப்போதுதான் அரசியலிலும் எழுத்திலும் அக்கறைகொள்ளத் தொடங்கியிருந்த நான் இவற்றைக் கூர்மையாகக் கவனிக்கத் தொடங்கியிருந்தேன். உண்மையில் அவசர நிலையைத் தொடர்ந்து உருவான புதிய அரசியல் சூழல் ஜனநாயகம் என்பது இந்திராகாந்தி உணர்த்த விரும்பியதைப் போன்ற ஒரு கட்டுக்கதை அல்ல என்னும் நம்பிக்கை உருவாகத் தொடங்கியிருந்தது.

ஒரு புதிய இந்தியா குறித்த கனவு அப்போதே உருவாகத் தொடங்கியிருந்தது. கோடிக்கணக்கான இந்தியர்களைப் போலவே நானும் அந்தக் கனவில் மூழ்கத் தொடங்கியிருந்தேன். அந்தக் கனவு இரண்டு மூன்றாண்டுகளுக்குள் சிதைக்கப்பட்டது வரலாற்றின் துயரம் தோய்ந்த அனுபவங்களில் ஒன்று. ஜனநாயகம் குறித்த எனது கற்பனைகள் புரட்சிகரமானவையாக மாறத் தொடங்கின. இந்தியா ஒரு புரட்சியை எதிர்நோக்கியிருப்பதாக நம்பத் தொடங்கினேன். எனது நம்பிக்கைக்கு ஆதாரமான அரசியல் நிகழ்வுகளைத் தொகுத்துக்கொள்ளத் தொடங்கினேன். வரலாற்றில் அதற்கான ஆதாரங்களைத் தேடினேன். அவை தேவைக்கும் அதிகமாக கிடைத்துக்கொண்டிருந்தன. பாரிஸ் கம்யூன், அக்டோபர் புரட்சி, மாவோவின் நெடும் பயணங்கள், தெலங்கானா விவசாயிகள் எழுச்சி, பிடி ரணதிவே தலைமையில் அப்போதைய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய தோல்வியில் முடிவுற்ற ஆயுதந்தாங்கிய புரட்சி, கீழ் வெண்மணி விவாசாயிகள் படுகொலை இப்படிப் பல. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வாழ்வின் அன்றாடங்களோடு போராடிக்கொண்டிருந்த கீழ் மத்தியத்தர வர்க்கமொன்றைச் சேர்ந்த இளைஞனொருவனின் மனத்தில் புரட்சியின் கனலை மூழச்செய்வதற்கு இவை போதுமானவை.
இதழியல் சார்ந்த விவாதங்கள், கட்டுரைகள், இலக்கியச் சிற்றிதழ்களில் இடம்பெற்றுககொண்டிருந்த கவிதைகள், கதைகள், நாடகங்கள், திரைப்படங்கள் என எனது கனவு ஒரு அகன்ற திரைச்சீலையில் வடிக்கப்பட்ட பல்வேறு வண்ணங்களாலான ஓவியத்தை ஒத்ததாக வளர்ந்துகொண்டிருந்தது.

ஓர் எழுத்தாளனாக எனது இலக்கைத் தேர்வு செய்வதற்கு நான் திணறினேன். காலம் காலமாக வாழ்வை எதிர்கொள்வதற்குத் திணறும் மனித குலத்தின் மீது அக்கறை கொண்டவையாகவே படைப்பிலக்கியம் சார்ந்த செயல்பாடுகள் இருந்து வந்திருக்கின்றன. மகாபாரதம் முதலான இதிகாசங்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை முதலான காப்பியங்கள், டால்ஸ்டாய், தாஸ்த்யேவ்ஸ்கி, ப்ரேம்சந்த், சதத் ஹசன் மண்டோ, வைக்கம் முகம்மது பஷீர், யூ.ஆர். அனந்த மூர்த்தி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, அசோகமித்திரன், பூமணி, சத்யஜித் ராய், மிருணாள்சென் முதலான ஆயிரக்கணக்கான படைப்பாளிகள் மனித குலத்தின் திணறல்களை ஓயாது பரிசீலித்துக்கொண்டிருந்தார்கள்.

நான் அவர்களிடமிருந்து எனது படைப்புமொழியைக் கற்றுக்கொள்ள முயன்றேன். எழுத்தின் வழியாக சமூகத்தை மாற்றும் முனைப்புக்கொண்ட தத்துவங்களோடும் இயக்கங்களோடும் எனது செயல்பாடுகளை இணைத்துக்கொண்டேன். நாட்டின் எண்பது விழுக்காடு மக்களை ஓயாது அலைக்கழித்துக்கொண்டிருக்கும் வறுமை, சாதி, மத, இனம் சார்ந்த கலவரங்கள், தனி மனிதனின் மனதில் வேரூன்றியிருக்கும் வன்மமும் பழியும்.
நாட்டின் ஏதாவதொரு இடத்தில் ஏதாவது காரணத்திற்காகக் குருதி தெறித்துக்கொண்டிருந்தது, உடல்கள் சிதறடிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. வன்முறை தீர்வுகளைப் பரிந்துரைக்கும் அறமாக மாறிக்கொண்டிருந்தது. ஆனால் எனது அனுபவங்களும் வாசிப்பும் அதை ஏற்க மறுத்தன. நான் எனது தேடலின் புள்ளிகளைத் தொடர்ந்து மாற்றியமைத்துக்கொண்டே இருந்தேன். வன்முறை மாற்றத்திற்கான வழிமுறையாக இருக்க முடியுமா என்னும் சந்தேகம் என்னைப் பீடிக்கத் தொடங்கியது.

அந்தச் சந்தேகத்தைத் தோற்றுவித்தது டால்ஸ்டாயின் மீதான எனது வாசிப்புக்கள்.
காலம் எண்பதுகளின் பிற்பகுதி.

சில ஆண்டுகளுக்கு முன்பாகவே நான் அவரது புத்துயிர்ப்பு நாவல், சில சிறுகதைகள், குறுநாவல்களைப் படித்திருந்தேன். இப்போது அன்ன கரீனினாவைப் படித்தேன். தொடர்ந்து அவரது வாழ்க்கைக் கதை. இவை என்னை தீவிரமாகப் பாதித்தன. வாழ்க்கை பற்றிய சமூகம் பற்றிய எனது சிந்தனையில் தீவிரமான மாற்றங்களைக் கோரின. ஏறத்தாழ அதே தருணங்களில்தான் மத அடிப்படைவாத சக்திகள் செல்வாக்குப் பெறத்தொடங்கின. ராமஜென்ம பூமி முக்கியமான அரசியல் பிரச்சினையாக மாறிக்கொண்டிருந்தது. சிறுபான்மையினர், தலித்துக்கள், பெண்களின் வாழ்க்கை பாதுகாப்பற்றதாக மாறிக்கொண்டிருந்தது. நாடு அபாயகரமான அரசியல் சூழலுக்கு இரையாகிகொண்டிருப்பதாக நினைத்தேன். கோத்ரா கலவரங்களின் பின்னணியில் வன்முறையின் மீது வெறுப்பும் அவநம்பிக்கையும் எனது சிந்தனைகளை ஆட்கொள்ளத் தொடங்கியன. 1947க்கு முன்பும் பிரிவினையையொட்டி எழுந்த வன்முறைகளும் இந்தத் தருணங்களில் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வந்தன. 2002இன் குஜராத் வன்முறைகளில் சிதறிய மனித உடல்கள் தொடர்ந்து ஊடகங்களில் காட்சிப்படுத்தக்கொண்டிருந்தன.

தன் கொலையாளிகளுக்கு எதிரே கண்ணீர் மல்கும் விழிகளுடன் கைகூப்பி நின்ற குஜராத்தின் அந்தப் பரிதாபகரமான மனிதனின் புகைப்படம் பிறகு என்றுமே மறக்க முடியாத வரலாற்று சாட்சியமாயிற்று. அதைப் பார்த்தபோது துக்ககரமான ஒரு வரலாறு மிக அவமானகரமான முறையில் மறுபிரவேசம் செய்தது போல் உணர்ந்தேன். அந்த வரலாற்றின் சாம்பல் மேடுகளில் துணிவுடன் நடக்க முற்பட்ட ஒரு தலைவராக காந்தியை அடையாளம் கண்டுகொள்வதற்கு நான் அதிகம் சிரமப்படவில்லை.

மனிதகுலம் மீள முடியாத நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும்போது யாராவது ஒரு மகாத்மா தோன்றுவதை ஆன்மீகம் சார்ந்த நம்பிக்கையாகக் கொள்ள முடியாவிட்டாலும் அதை ஒரு இயற்கை நியதி எனக்கொள்வதற்கான சில சாட்சியங்கள் மனிதகுல வரலாற்றில் காணக்கிடைக்கின்றன. அந்த சாட்சியங்களில் ஒருவரே மகாத்மா மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. புத்தனுடனோ இயேசுவுடனோ அவரை நிச்சயமாக ஒப்பிட முடியும். மொழி, இனம், மதம், சாதி சார்ந்த ஏராளமான வேற்றுமைகளைக்கொண்ட ஒரு சமூகத்தினிடையே பற்றியெரிந்துகொண்டிருந்த பகைமையின் நெருப்பை அவர் அன்பின் வழி எதிர்கொண்டார். சத்தியம், உண்மை, அன்பு, கருணை என்னும் புராதன காலம் தொட்டு புழங்கிவந்த எளிய சொற்களை அவர் வலிமையான ஆயுதங்களாக மாற்றிக்காட்டினார். அஹிம்சை மனிதனின் இயல்பான குணம் என்பதை உணர்ந்துகொள்ள முடிந்த எளிய மனிதர் அவர். கன்னத்தில் அறையும் எந்தக் கைக்கும் தயக்கமேயில்லாமல் மறுகன்னத்தைக் காட்ட முடியும் என்பதையும் மேலாடையைக் கேட்பவருக்கு உள்ளாடையைக் கழற்றிக்கொடுத்துவிட்டு நிர்வாணமாக நிற்பதற்குத் துணிய முடியும் என்பதையும் பலமுறை நிரூபித்தவர்.

கோத்ரா கலவரங்களுக்குப் பிறகு காந்தியின் மீது அரசியல் ரீதியில் முரண்பாடு கொண்டிருந்தவர்களில் பலர் தமது நிலைபாடுகளை மறுபரிசீலனைக்குட்படுத்த முற்பட்டார்கள். வன்முறையைத் தமது அரசியல் வழிமுறையாக ஏற்றுக்கொண்டிருந்தவர்களில் சிலரும் இதில் அடக்கம். வன்முறைகளாலும் பயங்கரவாதங்களாலும் சூழப்பட்ட வெறுப்பு அரசியலுக்கு எதிரான குரல்களுக்கு நிச்சயமாக காந்தி வழிகாட்டுபவராக உயிர்த்தெழுந்திருந்தார்.

அவர் அல்லது அவரைப்போன்ற ஒரு தலைவர் இருந்திருந்தால் 2002க்குப் பிறகான இந்திய அரசியல் தற்போது இருந்துகொண்டிருக்கிற இதே அடையாளம் கொண்டதாக இருந்திருக்க முடியாது என்னும் பரவலான நம்பிக்கை உருவானது. இன்றைய அறிவுத்துறை சார்ந்த விவாதங்கள் போர்களற்ற, வன்முறையற்ற ஒரு சமூகம் பற்றிய கற்பனைகளில் மூழ்கியிருக்க முடிவதற்குக் காரணம் அந்த நம்பிக்கைதான்.

காந்தி அவரது சமகாலத்திய உலகத் தலைவர்களைப் போல் கோட்பாடுகளாலும் தத்துவங்களாலும் வடிவமைக்கப்பட்டவரல்ல. அவர் பிரிட்டிஷாரின் காலனியாக இருந்த தென்னாப்பிரிக்காவுக்குப் பிழைப்புத் தேடிச் சென்ற ஒரு வக்கீல். அங்கே நிறவெறியால் பாதிக்கப்பட்ட மிக எளிய மனிதர்களைப் பாதுகாப்பதற்காக சத்தியாக்கிரகம் என்னும் உறுதியான போராட்ட வடிவத்தை முன்னெடுக்க நேர்ந்தது இந்திய சுதந்திரத்தோடு நேரடியான தொடர்புடையது அல்ல. அப்போது காந்தி டால்ஸ்டாயின் செல்வாக்குக்குட்பட்டிருந்தார். அவரோடு தொடர்ந்து கடிதத் தொடர்புகளைக் கொண்டிருந்தார். அவரது அனுமதியோடு தென்னாப்பிரிக்காவில் டால்ஸ்டாய் பண்ணையைத் தொடங்கினார். தவிர காந்திக்கு இந்திய இதிகாசங்களும் புராணங்களும் வலியுறுத்திய அறம் சார்ந்த பாதிப்புகள் இருந்தன. ஒரு மகாத்மா உருவானதற்கான சூழல் சார்ந்த தற்செயலான காரணங்களில் இவை முக்கியமாவை. இந்த மகாத்மா இயேசுவைப் போல ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தைக் காட்டுபவராக இருந்தார். மேலாடையைக் கேட்பவருக்கு உள்ளாடையைக் கழற்றித் தருபவராக இருந்தார்.
தென்னாப்பிரிக்காவிலும் பிறகு இந்தியாவிலும் துப்பாக்கிகளையும் டாங்குகளையும் எளிதாக ஒடுக்கி வெற்றிகொண்ட பிரிட்டிஷ் பேரரசு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்னும் ஆயுதம் தரிக்காத எளிய மனிதனை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.

பிரிட்டிஷாருக்கு இயேசு கிறித்துவை எதிர்கொள்வதில் இருந்த அதே திணறல் காந்தியை எதிர்கொள்வதில் இருந்தது. அவரை என்ன செய்வது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை. பாகிஸ்தானுக்கு உடனடியாக ஐம்பது கோடி ரூபாயை வழங்க வலியுறுத்தி அவர் மேற்கொண்ட கடைசி உண்ணாவிரதத்தை அப்போது அதிகாரத்திற்கு வந்திருந்த அவரது சீடர்களாலேயே எதிர்கொள்ள முடிவில்லை. காலனியத்திற்குப் பிந்தைய இந்தியச் சமூகம் குறித்த தனது கனவைப் பரிமாறிகொள்வதற்கு உண்மையில் அப்போது அவருக்கு யாருமே இல்லை. சுதந்திரம் பெற்றபோது அவர் மனதளவில் தனிமைப்பட்டுப் போயிருந்தார். அவரது படுகொலை யாருக்கும் ஆச்சரியம் தருவதாகவோ எதிர்பாராததாகவோ இருந்திருக்கவில்லை.

காந்தியே அதை எதிர்பார்த்தார். ஆனால் அவர் ஒருபோதும் பின்னோக்கிச் செல்லவோ தனது நிலைபாடுகளை மாற்றிக்கொள்ளவோ விரும்பாதவராக இருந்தார். தனக்கான சிலுவையைச் சுமந்துகொண்டே அவர் இந்தியாவின் கலவர பூமியில் நடந்தார். அவரே சொன்னது போல அவர் ஒரு உண்மையான கிறித்தவர், கிறித்தவர்களைக் காட்டிலும் உண்மையான கிறித்தவர். வன்முறையாலும் பேராசையாலும் சூழப்பட்ட ஒரு காலத்தின் விதியில் குறுக்கீடுகளை நிகழ்த்த முற்பட்ட மகாத்மா. அதனால்தான் அவர் கொல்லப்பட்டார்.

ஆனால் இயேசுவுக்குப் பிறகும் புத்தனுக்குப் பிறகும் நடந்தது போல எண்ணற்ற போலி தீர்க்கதரிசிகள் இப்போது இந்திய அரசியல், ஆன்மீகக் களங்களில் தோன்றிவிட்டார்கள்.

அவரைப் போலவே உடுத்திக்கொண்டு, அவரைப் போலவே கைராட்டையில் நூல் நூற்றுக்கொண்டு, அவரைப் போலவே கீதையின் புத்தம் புதிய பிரதிகளைச் சுமந்து கொண்டு நடமாடத் தொடங்கியிருக்கிறார்கள்.
பாதுகாப்பற்றதாகவும் கைவிடப்பட்டதாகவும் மாற்றப்பட்டிருக்கும் ஒரு சமூகத்தின் விதியை மாற்றுவதற்கு அவ்வளவு நம்பகமற்ற, கிட்டத்தட்ட மூடநம்பிக்கை எனக் கருதத்தக்க இயற்கை நியதிகளின்படி யாராவது ஒரு மகாத்மாவை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் கையறுநிலையிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டிருக்கிறது.

×Close
×Close