சூதாட்டமும் திரைப்படமும் ஒன்றா?

திரைத் துறை பல்வேறு சிக்கல்களில் மாட்டிக்கொண்டிருக்கிறது. தொலைக்காட்சி, இணையம், திருட்டு விசிடி முதலாவனற்றால் திரையரங்கங்களுக்கு வரும் கூட்டம் குறைந்துவருகிறது.

By: Updated: June 3, 2017, 02:02:35 PM

அங்கதன்

ஜிஎஸ்டி வரி மசோதா நிறைவேற்றப்பட்டு எந்தெந்தப் பொருளுக்கு என்னென்ன வரி என்பது நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. ஜிஎஸ்டி வரி மசோதாவினால், மக்கள் தங்கள் பொழுதுபோக்காகக் கருதும் சினிமா, உணவகங்களில் விரும்பிச் சாப்பிடும் உணவு மற்றும் தங்குமிடம், போதை வஸ்துகள், ஆடம்பர விஷயங்கள், சூதாட்டம் ஆகியவற்றின் மீதான வரிகள் முன்பை விடக் கணிசமாக அதிகரித்திருக்கின்றன.

வெகுஜன பொழுதுபோக்கு

சினிமா என்பது சாமானிய மனிதர்களின் பொழுதுபோக்கு என்பதை மறந்து அதற்கு அதிகபட்ச வரியான 28 சதவிகித வரியை நிர்ணயித்துள்ளது மத்திய அரசு. ஆனால் கலைப் பொருட்களுக்கான வரியை 18 சதவிகிதமாக நிர்ணயித்துள்ளது. ஒரு திரைப்படம் என்பது பல்வேறு கலைகளின் சங்கமம்தானே. இசையமைப்பாளர்கள், கலை இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள் எனப் பல்வேறு கலைஞர்களின் உழைப்பால் இணைந்து உருவாக்கப்படுவதுதான் திரைப்படம். சினிமா என்பது கலையில் சேராதா? கலைப் பொருட்களுக்கு ஒரு வரி, கலைகளின் சங்கமமான திரைப்படங்களுக்கு ஒரு வரியா?

சூதாட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச வரியான 28 சதவிகிம் சினிமாக்களுக்கும் நிர்ணயிக்கட்டிருக்கிறது. இது எந்த வகையில் நியாயம், சூதாட்டமும் சினிமாவும் ஒன்றா என்று திரைத் துறையினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். திரைத் துறையினரைப் பொறுத்தவரை ஒவ்வொரு திரைப்படமும் பல்வேறு கலைஞர்களின் கூட்டணியில்தான் உருவாகிறது. கிரியேட்டிவ் ஆர்ட்டுகளுக்கு 18 சதவிகிதம் வரி, திரைப்படங்களுக்கு 28 சதவிகிதம் வரி எனப் பிரிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. ஆகவே 12% முதல் 18% வரையிலான விரி விதிபுதான் திரைப்படங்களுக்கான ஜிஎஸ்டி வரியாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Tamil cinema - GST - Arun Jaitley
கமல் ஹாஸனின் குரல்

திரைத் துறையில் பல்வேறு முன்னோடி முயற்சிகளை மேற்கொண்டுவரும் கமல் ஹாஸன் இது குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிரார். “திடீரென ஜிஎஸ்டிக்கு எதிராகப் பேசுவதாக எண்ணிவிட வேண்டாம். முறையான வரி விதிப்பு குறித்து சில வருடங்களாகவே முயற்சித்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஜிஎஸ்டி வரியை எங்களுக்கான தண்டனையாகத்தான் பார்க்கிறேன்” என்று சொன்னவர் அரசியல்வாதிகளுக்குச் சூடு போடவும் தவறவில்லை. “பல அரசியல்வாதிகள், பிரபலங்கள் சினிமாவிலிருந்து வந்தவர்கள்தான். அதனால் இதைப் பாவம் செய்யும் துறையாக நினைத்துவிடக் கூடாது. உலக நடப்புகளும் செய்திகளும் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்குக் கலையும் முக்கியம். கலையும் சினிமாவும் வேறு வேறல்ல. எனவே இரண்டுக்கும் ஒரே விதமான வரி விதிக்கப்பட வேண்டும்” என்றவர், “சினிமாதான் என் வாழ்க்கை. எனக்கு வேறு தொழில் எதுவும் தெரியாது. என் தொழிலுக்கு ஒரு பிரச்னையென்றால் எனக்கு கோபம் வரத்தான் செய்யும். ஜிஎஸ்டி வரியைக் குறைக்காவிட்டால், சினிமாவை விட்டு விலகிவிடுவேன்” என்று பேசியிருக்கிறார்.

இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளிலுமாக மொத்தம் ஆண்டு ஒன்றுக்கு இரண்டாயிரம் படங்களுக்கு மேல் வெளியாகின்றன. பெரிய பட்ஜெட்டும் விசாலமான சந்தையும் கொண்ட இந்திப் படங்களுக்குச் சமமாக, மற்ற பிராந்திய மொழி படங்களுக்கும் வரி விதிப்பது சரியல்ல. இந்திப் படங்களைக் காட்டிலும் பிற பிராந்திய மொழிப் படங்களின் பட்ஜெடும் வீச்சும் குறைவு.

இன்று திரைத் துறை பல்வேறு சிக்கல்களில் மாட்டிக்கொண்டிருக்கிறது. தொலைக்காட்சி, இணையம், திருட்டு விசிடி முதலாவனற்றால் திரையரங்கங்களுக்கு வரும் கூட்டம் குறைந்துவருகிறது. இந்நிலையில் இவ்வளவு கடுமையான வரி விதிப்பு சினிமாவை மேலும் தள்ளாடவே வைக்கும். திரைப்படங்களின் நோக்கம், தன்மை, பட்ஜெட் ஆகியவற்றைப் பொறுத்து அவற்றின் வரி நிர்ணயிக்கப்பட வேண்டும். வெகுமக்களின் பொழுதுபோக்கு என்ற முறையில் இத்துறையை அணுக வேண்டும்.

ஒரு படம் வெற்றிபெறுமா, பெறாதா என்பது வேண்டுமானால் சூதாட்டம் போல இருக்கலாம். ஆனால், சினிமாவே சூதாட்டம் அல்ல. எனவே சூதாட்டத்துக்கு விதிக்கும் வரியை இதற்கும் விதிக்கக் கூடாது. மத்திய அரசு இதை உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும் என்பதே திரைத்துரையினரின் எதிர்பார்ப்பு.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in by following us on Twitter and Facebook

Web Title:Gambling and film one

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X