Advertisment

அரசியல் பழகுவோம் 13 : நிர்மலா சீதாராமன் எதிர் நோக்கும் இரட்டை சவால்

பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிர்மலா சீதாராமன் முன் உள்ள இரட்டை சவால்கள் என்ன? அதை அவர் சமாளிப்பாரா என்பது பற்றி விவாதிக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nirmala seetharaman - get inveloved in politics

சுகிதா

Advertisment

இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளில் முதன் முறையாக முழுநேர பாதுகாப்பு துறைக்கு அமைச்சராக ஒரு பெண் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆம், வர்த்தக துறை இணை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனுக்கு பதவி உயர்வோடு அதி முக்கியமான உயர்வான துறையை மோடி வழங்கி இருக்கிறார். பெண் முன்னேற்றத்திற்கான குறியீடு, பாஜக பெண்களை மதிக்கும் விதம் என்ற வழக்கமான விமர்சனங்களை கடந்தும் இது வரவேற்க கூடிய ஒன்று. இந்த தேர்வு, நியமனம் கொண்டாடப்படக் கூடிய ஒன்று தான். பாதுகாப்பு போன்ற உயர் துறைக்கு பெண் அமைச்சர் என்பதை தாண்டி இதுவரை பெண்கள் மத்திய அமைச்சர்களாக எவ்வளவு பேர், எந்தந்த துறைக்கு இருந்தார்கள் என்பதையும் கணக்கில் கொண்டு தான் இதனை வரவேற்க வேண்டி உள்ளது.

ஏன் எனில் நேருவின் முதல் அமைச்சரவையில் சுகாதார துறைக்கு அமித் கவுர் நியமிக்கப்பட்டார். அதை தொடர்ந்து நேருவின் அடுத்த 3 அமைச்சரவையில் பெண் அமைச்சர்களே இல்லை. அடுத்து வந்த இந்திரா காந்தியும் பெண் அமைச்சர்களை நியமிக்காமல் தனி ராஜ்ஜியம் நடத்தினார். அதன்பிறகு வந்த ராஜூவ் காந்தியின் அமைச்சரவையில் உத்திரபிரதேசத்தை சேர்ந்த மோக்சினா கித்வாய்க்கு மட்டுமே இடம் கிடைத்தது. வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மமதா பானர்ஜி ரயில்வே துறைக்கு பொறுப்பேற்றார். காங்கிரஸ், பாஜக என்று ஆளும் கட்சி அல்லாது கூட்டணி கட்சியில் இருந்து ஒரு பெண் அமைச்சர் தேர்வு என்பது மம்தாவிலிருந்து தான் தொடங்குகிறது. வாஜ்பாய் அமைச்சரவையில் குடும்ப நலம் மற்றும் சுகாதாரத் துறைக்கு சுஷ்மா சுவராஜ் அமைச்சராக நியமனம் ஆனார். அதன் பிறகு மோடி அமைச்சரவையில் தான் 7 பெண் அமைச்சர்கள் நாடாளுமன்ற மொத்த அமைச்சரவையில் 25 சதவிதம் பெண் அமைச்சர்கள் என்ற பெரும்பான்மை பெருமையோடு பதவி வகித்து வருகிறார்கள்.

அதிலும் கங்கையை சுத்தப்படுத்தும் துறைக்கு அமைச்சரான உமா பாரதி, உணவு பதப்படுத்துதல் துறைக்கு அமைச்சரான ஹர்மித் கவுர் போன்றோர் என்ன செய்தார்கள் என்ற கேள்வியும் கூடவே வருகிறது. சிறுபான்மை துறை அமைச்சராக இருக்கும் நஜ்மா ஹெப்துல்லா பெரும்பான்மை மக்களுக்காகவே அதிகம் பேசுகிறார், செயல்படுகிறார் என்ற விமர்சனங்களில் உண்மை இல்லாமல் இல்லை.

சர்ச்சையில் சிக்கிய பிறகு மனித வள மேம்பாட்டு துறையிலிருந்து அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்ட கதர் துறைக்கு போன ஸ்மிரிதி ராணியின் அமைதியும் சில கேள்விகளை எழுப்புகிறது. இந்த சூழ்நிலையில் வெளியுறவு கொள்கையில் ஓரளவிற்கு வேலை நடக்கிறது என்பதை அவ்வப்போது வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை எதிர்கொள்ளும் போது சுஷ்மாவின் அமைச்சரவையின் செயல்பாடுகள் பரவாயில்லை எனலாம். சிலர் காப்பாற்றப்பட்டார்கள், சிலர் பிரச்சினையிலிருந்து விடுபட்டு தாயகம் திரும்பினார்கள் இன்னும் சிலருக்கு கோரிக்கையோடு நிற்கிறது.

இந்த நேரத்தில் தான் நிர்மலா சீதாராமனின் செயல்பாடுகள் குறித்த பார்வை மக்களை விட மோடிக்கு சிறப்பாக தெரிகிறது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற பொருளாதாரம் சார்ந்த முக்கிய முடிவுகளில் நிர்மலா சீதாராமனின் செயல்பாடுகள் மோடிக்கு அவர் மீதான மதிப்பையும், நம்பிக்கையையும் உயர்த்தி இருப்பதாகவும் அதன் வெளிபாடே பாதுகாப்பு துறை வழங்கப்பட்டிருப்பதாக டெல்லி பாஜக தரப்பில் கூறப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஜிஎஸ்டி, மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொலை, ஜல்லிக்கட்டு, நெடுவாசல், நீட் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு முன்நின்றார். அவர் குரல் டெல்லி குரலாக மோடியின் குரலாக தமிழகத்தில் ஒலித்தது. ஆனால் நீட்டில் தான் பெரிய சறுக்கல். அனிதாவின் தற்கொலை மூலம் அவர் தமிழக மக்களின் நம்பிக்கையில் இருந்து கீழே விழுந்த அந்த நொடியில் தான் அவருக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்டு பாதுகாப்பு துறை அமைச்சராக அதி உயர பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டார். இது தான் அரசியல் ஆடுகளம். ஏற்றுமதியில் அவர் கோட்டைவிட்டார் என்ற விமர்சினத்தை ஏற்றுக் கொள்வதாகவும் அதிலிருந்து கற்றுக் கொண்ட அனுபவங்கள் வருங்காலத்தில் உதவும் என்று பாசிட்டாவாக அந்த குறையை ஏற்றுக் கொண்டிருக்கிறார். அப்படியே அனிதா தற்கொலையின் போது நீட் நம்பிக்கை பொய்த்ததை ஏற்றுக் கொண்டிருந்தால் அவரது பெரிய மனசு எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இவ்வளவுக்கும் ஆந்திராவில் பிரனவா என்ற பள்ளியை நிறுவி நடத்தி வருபவர் என்ற முறையில் கல்வியாளராகவும் அவருக்கு பொறுப்புகள் இருக்கின்றன.

மதுரையில் பிறந்து திருச்சியில் கல்லூரி படிப்பை முடித்த நிர்மலா சீதாராமன், பொருளாதாரத்தில் உயர்கல்வி கற்றது டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில். நிர்மலாவின் முனைவர் பட்டத்திற்கான ஆய்வானது இந்தியா- ஐரோப்பா நாடுகளுக்கு இடையே காட் ஒப்பந்த அடிப்படையில் நடைபெறும் ஆயத்த ஆடை வர்த்தகம் தொடர்புடையது. அவர் வர்த்தக துறை இணை அமைச்சராக இருந்த போது இது கை கொடுத்திருக்கும். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தேர்தலில் free thinkers என்ற அமைப்பை உருவாக்கி களம் கண்டவர். சமீபத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் அப்போது தேர்தல் பணியாற்றிய படங்களை நிர்மலா சீதாராமன் டிவிட்டரில் நினைவுகளாக பதிவிட்டு மறைமுகமாக ஒரு செய்தியை ஜவஹர்லால் நேரு பல்கலைகழக ஏபிவிபி மாணவர்களுக்கு சொன்னார.

2006ம் ஆண்டு பாஜகவில் இணைந்து, பிறகு 2010ம் ஆண்டு முதல் தேசிய ஊடகங்களில் பாஜகவின் அதிகாரப் பூர்வ செய்தி தொடர்பாளராக ஊடக நண்பர்களிடம் கவனம் ஈர்த்தவர். தொழில் துறை அமைச்சராக கடந்த 3 ஆண்டு அனுபவங்களில் ஏற்றுமதி தொடர்பான விமர்சினங்களை தாண்டி கவனிக்க கூடிய அமைச்சராக, தனது செயல்பாடுகளில் தொடர்ந்து பேசு பொருளாகும் ஒருவராக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இருந்தவர் நிர்மலா சீதாராமன். ஊடக விவாதங்கள் மூலம் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் தனி செல்வாக்கை நிர்மலா சீதாராமன் கட்டி எழுப்பினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் இரண்டு முறையும் மாநிலங்களவை உறுப்பினராகவே தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று உலகின் மிக முக்கிய நபர்களில் ஒருவராக மாறி இருக்கிறார். முதல் முறை அவர் திருமணம் செய்து கொண்டு போன மாநிலமான ஆந்திராவிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது முறையாக கர்நாடாகவிலிருந்து தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கணவர் பரகலா பிரபாகர் 2000 மாவது ஆண்டு பாஜகவின் செய்தி தொடர்பாளர் பிறகு சிரஞ்சீவியின் பிரச்சா ராஜ்ஜியம் கட்சியில் சேர்ந்தார். மாமனார் 70களில் ஆந்திர அரசின் அமைச்சரவையில் இருந்தவர். மாமியார் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இப்படி குடும்பமே அரசியல் நெடி அதிகம் கொண்டிருந்த காலகட்டத்தில் பாஜகவை நாடினார் நிர்மலா சீதாராமன். மாற்று கட்சியினர் குடும்பத்தில் இருந்து வந்த நிர்மலாவிற்கு கூடுதல் கவனம் நிதின் கட்கரி பாஜக தேசிய தலைவராக இருந்த காலகட்டத்தில் கிடைத்தது. அதன்பின் ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான செய்தி தொடர்பாளர் குழுவில் செய்தி தொடர்பாளராகவும் இணைந்தார். மகளிர் ஆணைய உறுப்பினராகவும் நிர்மலா இருந்தார்.

நிர்மலா சீதாராமன் சரியான தேர்வு என்று ஊடகங்கள் தொடங்கி சாமான்யர்கள் வரை உச்சி முகர்கிறார்கள் . வாழ்த்து மழை ஒரு பக்கம் இன்னொரு பக்கம் பாதுகாப்பு துறைக்கு நிர்மலா சீதாராமன் சரியான ஆள்தானா என்ற கூர்மையான கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன. எகானமிக் டைம்ஸ் போன்ற ஒரு பத்திரிக்கை பாலினம் கடந்து தகுதி என்பதை துறை சார் அறிவோடு ஒப்பிட்டுப் பார்த்துள்ளது. பொருளாதாரம் பயின்றவர் பொருளாதார துறைக்கு வருவது போன்று ராணுவத்தின் முன்னால் தளபதிகளை பாதுகாப்பு துறைக்கு நியமிக்க வேண்டும் என்று எப்போதும் இல்லாமல் புதிய கோணத்தில் விவாதிக்கிறது. துறை சார்ந்த நிபுணர்கள் அந்த துறைக்கு தலைமை பொறுப்பிற்கு வரும் போது தொலை நோக்கு திட்டங்களை முன்னெடுக்க அனுபவங்கள் உதவும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.ஆனால் அதை இப்போது சொல்வது என்பது ஒரு பெண்ணாக பாதுகாப்பு துறையில் என்ன செய்து விட முடியும் என்ற கிண்டல் இல்லாமல் இல்லை. இன்னொன்று பெண்களுக்கென்றே பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாடு, கைத்தறி போன்ற மென்மையான அணுகுமுறையை கையாளும் துறைகள் இருக்கும் போது எல்லையில் அன்னிய நாட்டோடு சண்டையிடும் துறைக்கு பெண்களை நியமிப்பது சரியா என்ற நையாண்டித்தனமும் அதில் அடங்கி இருக்கிறது.

இது தான் தன் உறவினர் ஒருவர் ஊறுகாய் போடும் போது அருகில் அமர்ந்த எதார்த்தமாக பார்த்துக் கொண்டிருந்த நிர்மலா சீதாராமனின் புகைப்படத்தை முற்போக்குவாதிகள் கூட கிண்டலடித்து சமூக வலைதளங்களில் பதிவிட வைத்தது. இது தான் அவர் துப்பாக்கியுடன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குடன் எடுத்த புகைப்படத்தை கேலி கிண்டல் செய்யவைத்தது. இந்தியாவில் விடுதலை போரில் பெண்கள் இருந்த வரலாறு இங்குண்டு. அப்படி இருக்கும் போது போர் தொடங்கி போராட்டம் வரை இன்று பெண்கள் முன்னிலையில் நிற்கிறார்கள். இந்த தொழில்நுட்ப யுகத்திலும் பெண்களுக்கு இந்த வேலை சரிவராது என்று அவர்கள் வட்டத்தை குறுக்குவதை விட நிர்மலா சீதாராமன் போன்றவர்களுக்கான தனி நபர் அதிகாரம் நாட்டு நலன், பெண்கள் உரிமை கோட்பாடு என்ற அடிப்படையில் இவை எல்லாம் தீர்மானிக்கப்படுகின்றன.

நிர்மலா சீதாராமனுக்கு துறை சார் புரிதல் இருக்கிறதா என்ற கேள்வியை விட அவருடைய தேர்ந்த உடல்மொழியும், கறார் பேச்சும், கம்பீர குரலும் எதிர் தரப்பை சற்று அசைத்து பார்க்கும் என்பது தனிபட்ட முறையில் பத்திரிகையாளராக என்னுடைய மதீப்பிடு இது. நீட் போன்ற விஷயத்தில் சொன்னது ஒன்று செய்தது ஒன்று போன்ற விமர்சினங்களும், அதிகார தோரணையிலயே ஊடகங்களை கையாள்கிறார் என்ற குற்றச்சாட்டும் அனிதா தற்கொலையின் போது ஊரே அவரை பற்றி பேச அவர் மவுனம் சாதித்தது அனிதாவின் இறப்பு அவரை தனிபட்ட முறையில் கூட பாதிக்கவில்லை என்பதை எல்லாம் வைத்து பார்க்கும் போது ஒரு குட்டி ஜெயலலிதாவும், இந்திரா காந்தியும் நிர்மலா சீதாராமனுக்குள் இருப்பது தெரிந்தது. இது மிகைப் படுத்தப்பட்ட விமர்சனமாக கூட தோன்றலாம். ஆனால் காலம் காலமாக அதிகாரத்திலோ அல்லது அதற்கு பக்கத்திலோ இருக்கும் பெண்கள் மனநிலை, செயல்பாடுகளை அளவிட்டால் நிர்மலா சீதாராமனை பற்றிய இந்த மதிப்பீடு சரி என சொல்லலாம்.

பாதுகாப்பு துறையில் கடந்தாண்டு பெண்கள் விமானப்படை முக்கியப் பிரிவுகளில் சோதனை அடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஃபைட்டர் பைலட்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆசிய கண்டத்தில் நமது அண்டை நாடான வங்கதேசத்திலும் பெண்களை ராணுவத்தின் முக்கிய பிரவுகளில் சேர்ப்பது நடைபெற்று வருகிறது. வங்கதேசத்தின் அதிபர் ஷேக் ஹசினா தான் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சரும் ஆவார். பிரேசில் தொடங்கி நெதர்லாந்து, ஜெர்மனி என்று பாதுகாப்பு துறை அமைச்சராக பல பெண்கள் இருந்து வருகிறார்கள். இந்தியா அந்த பட்டியலில் இப்போது தான் இடம்பெறுகிறது.

நிர்மலா சீதாராமனுக்கு பல சவால்கள் பாதுகாப்பு துறையில் காத்திருக்கின்றன. காலாட் படைகளை வலுப்படுத்துவதில் தொடங்கி தொழில்நுட்பத்தை புகுத்துவது வரை பல சீர்திருத்தங்கள் செய்ய வேண்டி உள்ளது. காஷ்மீர் எல்லை மாவட்டங்களில் தொடர்ந்து துப்பாக்கி சூடும் ராணுவ வீரர்களின் பலி எண்ணிக்கையும் அன்றாட நிகழ்வாக உள்ளது. குறிப்பாக பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு எல்லையில் வீரர்கள் ஹேஷ்டாக்காக வலம் வந்த நேரத்தில் தொடர்ந்து வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட எண்ணிக்கையும் அதிகம் என்கிறது புள்ளி விபரங்கள். இது நிர்மலா சீதாராமனுக்கு உள்ள முதல் சவால். உணவு மற்றும் ராணுவ வீரர்களுக்கான தேவைகளை முறையாக வழங்குவது தொடங்கி ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதிய திட்டம் என்று ராணுவ வீரர்கள் தரப்பிலான கோரிக்கைகளை செவிமெடுப்பாரா என்பதெல்லாம் மிகப் பெரிய கேள்வி.

ராணுவ தளவாடங்கள் பற்றாகுறை என்ற மத்திய கணக்கு தணிக்கை குழுவின் அறிக்கை தவறானது என்பது தான் ராணுவம் தொடர்பாக நிர்மலா சீதாராமன் அளித்திருக்கும் முதல் சர்ச்சை பேட்டி. போர் வந்தால் தளவாடங்கள் 10 நாட்களுக்கு மட்டுமே உள்ளது என்ற கணக்கு தணிக்கை குழுவின் அறிக்கை தவறானது என்று மறுத்துள்ள நிர்மலா சீதாராமன் இது குறித்து நிபுணர்களுடன் ஆலோசித்ததாகவும் ஆயுதங்கள் வாங்குவது வழக்கமான ஒன்று தான் என்றும் குறிப்பிட்டுள்ளார். ராணுவம், விமானப்படை, கப்பற்படை முப்படைகளும் வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை என்பது தான் நிர்மலா சீதாராமனின் முதல் குறிக்கோள். அவர் முதலில் கொடி அசைத்து தொடங்கி வைத்திருப்பது உலகை சுற்றி வர கோவாவில் இருந்து புறப்பட்ட ஒரு மகளிர் கப்பல். இந்தியா – பாகிஸ்தான் தொடர் விரிசல், காஷ்மீர் சிக்கல், சீனா எல்லை விவகாரம் குறிப்பாக டோக்லாம் சர்ச்சை என்று புகைந்து கொண்டிருக்கிற சமயத்தில் அமைதிக்கான சமாதானக் கொடியை சாமர்த்தியமாக பறக்கவிடுவாரா என்பது தான் நிர்மலா சீதாராமன் மீது இருக்கும் பலத்த எதிர்பார்ப்பு. தனக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பிற்கேற்ப தன்னை நிருபிக்க வேண்டிய கட்டாயமும், பாதுகாப்பு துறையில் பெண்களால் சாதிக்க முடியும் என்பன உள்ளிட்ட இரட்டை சவால் நிர்மலா சீதாராமனுக்கு உள்ளது. இன்னும் கூடுதலாக அவர் மீதான ஊடக பார்வையும் எதிர்பார்ப்பும் கூடுதலாக உள்ளது. இந்த கட்டுரையை முடிக்கும் தருணத்தில் நாடாளுமன்றத்தின் மூன்று முக்கிய உயர் மட்ட அமைச்சரவை குழுக்களான பாதுகாப்பு அமைச்சரவைக்கான குழு, பொருளாதார அமைச்சரவைக்கான குழு, பொருளாதாரம் மற்றும் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு என மூன்று குழுக்களிலும் நிர்மலா சீதாராமன் இடம்பெறுகிறார். அதிகாரத்தின் உச்சத்திற்கு செல்லும் நிர்மலா சீதாராமனின் கையில் உள்ள அதிகார தோட்டா யாரை நோக்கி பாயப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அரசியல் பழகுவோம்...

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment