/tamil-ie/media/media_files/uploads/2017/06/Get-involved-in-Politics-Meira_Kumar.jpg)
சுகிதா
குடியரசுத் தலைவர் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்திற்கு எதிராக காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் முன்னாள் மக்களவை சபாநாயகர் மீராகுமாரை வேட்பாளராக களமிறக்கி இருக்கிறார்கள். இரண்டாவது முறையாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2009 ல் ஆட்சியை பிடித்த போது முதல் பெண் சபாநாயகர் என்ற வரலாற்று பெருமைகளோடு மீரா குமார் சபாநாயகராக நியமிக்கப்பட்டார் .
உண்மையாகவே இரண்டாவது முறை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்த போது கடும் சவால்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இயல்பாகவே காத்திருந்தன. ஆனால் அதை எல்லாம் தாண்டி 2010 ம் ஆண்டு 2 ஜி பிரச்சினை நாடாளுமன்றத்தை உளுக்கியது. அப்போது சபாநாயகராக இரட்டை சவாலோடு மீரா குமார் அவையை வழிநடத்தும் பொறுப்பில் இருந்தார். நிலக்கரி ஊழல், காம்ல்வெல்த் ஊழல் என்று அடுத்தடுத்த அவையை கொந்தளிக்க வைத்தனர் எதிர்கட்சிகள். அப்போதெல்லாம் நிதனமாக குரலை கூட அவர் உயர்த்தி பேசாமல் பொறுமையாக நன்றி சொல்லி அந்த உரையாடலை முடித்து வைப்பார் . அந்த மீரா குமாருக்கு எதிராக தான் தற்போதைய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அன்றைய எதிர்கட்சி தலைவராக நாடாளுமன்றத்தில் பேசிய போதுள்ள வீடியோவை வெளியிட்டு, பாருங்கள் எதிர்கட்சி குடியரசுத்தலைவர் வேட்பாளர் மீரா குமார் சபாநாயகராக இருக்கும்போதே பாரபட்சமாக நடந்துக் கொண்டிருக்கிறார் என்று குடியரசுத் தலைவர் தேர்தல் பிரச்சாரத்திற்கு அச்சாரமிட்டிருக்கிறார்.
முதல் பெண் குடியரசு தலைவர் என்ற பெருமையோடு களமிறக்கப்பட்ட பிரதீபா பாட்டில் அதிகம் ஊர் சுற்றுகிறார் , உறவினர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்கிறார் என்று குற்றச்சாட்டுகளை தாண்டி மரண தண்டனை கருணை மனுக்களை அதிகளவில் நிராகரித்தவர் என்றும் விமர்சனம் வைக்கப்பட்டது. அவர் அப்படி செய்ததை நியாயப்படுத்தாவிட்டாலும், இப்படியான விமர்சனங்கள் ஏன் ஆண்கள் அதிகார முறைகேடுகளில் ஈடுபடும் போது வருவதில்லை என்பதும் சமூகத்தின் பொது மதிப்பீட்டின் இலக்கணமாக உள்ளது .
நேருவின் தங்கையும் இந்திய அமைச்சரவையில் பொறுப்பேற்ற முதல் பெண் அமைச்சருமான விஜயலட்சுமி பண்டிட், இவர் ஐ.நா பொதுசபையின் முதல் தலைவராகவும் நியமிக்கப்பட்டவர். நேருவின் மகள் என்ற அடிப்டையில் அரியணை ஏறிய இந்திரா காந்தி தொடங்கி, இந்திராவின் மருமகள் என்ற அடிப்டையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி என்று அடுத்தடுத்து அரசியல் பின்புலத்தை வைத்து நேரு வீட்டு பெண்களால் அரசியலுக்கு வர முடிந்தது. இப்படி வட இந்தியாவில் பல பெண்கள், அரசியல் தலைவர்களின் வாரிசுகள் அரசியலுக்கு வந்துள்ளார்கள். 33 சதவித இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறாமல் இருப்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று. அரசியலில் இருப்பவர்கள் அவர்கள் வீட்டு பெண்களை அரசியலுக்கு எளிதாக கொண்டு வந்து விடுகிறார்கள்.
பாவம் சாமான்ய பெண்கள் அரசிலுக்கு வருவதும் சட்டமன்ற, நாடாளுமன்றத்திற்குள் அடி எடுத்துவைப்பதும் தான் இங்கு மிகப் பெரும் போராட்டம். வீட்டிலிருந்து நேரே புறப்பட்டு தனது எம்பி சீட்டில் உட்காரும் இந்த பெண்களுக்கு மத்தியில் கட்சியில் சேர்ந்து, போராட்ட களத்தில் நின்று, போராட்ட களத்திற்கு ஆள் கூட்டி வந்து, அரசியல் நிகழ்வுகள் முடியும் வரை அழைத்து வந்தவர்களுக்கு தேவையானதை செய்து கொடுத்து, ஒரு உறுப்பினர் அட்டை வாங்க மாதக் கணக்காக கட்சி அலுவலகங்களுக்கு நடந்து , “ஊரில் இவ அரசியல் கட்சி கூட்டத்துக்கு போயிட்டு ராத்திரி லேட்டா தான் வந்தா” என்று இரட்டை அர்த்த வசனங்களை கேட்டு, வீட்டில் பூகம்பம் வெடித்து, தேர்தலில் வார்டு உறுப்பினர், கவுன்சிலர்,சேர்மன், மேயர் அந்த பெண் இருக்கும் தொகுதி பெண் தொகுதி ஒதுக்கீட்டில் வரும்பட்சத்தில் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் என்று அவர்கள் கடக்கும் பாதையை பற்றி வாசிக்கும் போதே மூச்சிறைக்கிறதே. அப்போது அவர்கள் எப்பாடு பட வேண்டும்? என்று யூகிக்க முடிகிறதா?
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்ற அவைக்குள்ளயே கிழித்தெறிந்த முலாய்மசிங்கின் மருமகள் அதாவது அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியின்றி 2012 இடைதேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனவர். அதே போன்று மகளிர் மசோதவை, இட ஒதுக்கீட்டை காரணம் காண்பித்து எதிர்த்த லாலு பிரசாத் மனைவி ராப்ரி தேவி பிகார் முதலமைச்சராக இருந்தார் . உண்மையாக இட ஒதுக்கீடு தான் மகளிர் மசோதாவில் பிரச்சினை என்றால் இவர்களுக்கு வாய்ப்பு கிடைத்த போது இட ஒதுக்கீடு அடிப்படையில், மூப்பு அடிப்படையில் அவர்கள் கட்சி பெண்களுக்கு வாய்ப்பளித்திருக்கலாம். ஆனால் அவர்கள் வீட்ட இல்லதரசிகளுக்கு ஏன் அந்த பதவியை மிக எளிதாக கொடுத்து அழகு பார்த்தார்கள் என்பதில் இருந்து இவர்களுடைய மகளிர் மசோதா எதிர்ப்பை புரிந்துக் கொள்ள முடியும்.
சரத்பவாரின் மகள் சுப்ரியாசூலே, திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, பிரமோத் மகாஜன் மகள் பூனம் மகாஜன் , சந்தோஷ் மோகன் தேவின் மகள் சுஷ்மிதா தேவ், சங்மாவின் மகள் அகதா சங்மா, கோபிநாத் முண்டேவின் மகள் பங்கஜ் முண்டே, விஜயராஜேதேவ் சிந்தியாவின் மகள் வசுந்திர ராஜேசிந்தியா, உமாசங்கர் தீக்சித்தின் மகள் ஷீலா தீக்சித் , முப்தி முகமது சயிதின் மகள் மெகபூபா முப்தி, பிரகாஷ்சிங் பாதலின் மருமகள் ஹர்சிம்ரத்கவுர் பாதல், எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேத்தி திவ்யா ஸ்பந்தனா என்று நாடாளுமன்றம், சட்டமன்றத்திற்குள்ளே இந்திய ஒன்றியத்தின் முதுபெறும் அரசியல்வாதிகளின் பெண் வாரிசுகள் வரிசைகட்டி பதவியில் இருக்கிறார்கள். இதில் சிலர் தேர்தலில் தோல்வியுற்று உள்ளே செல்ல முடியாதவர்களும் அவர்களுக்கு தேர்தலில் டிக்கட் கொடுக்கப்பட்டது. அரசியல் தலைவர்களின் உறவினர் என்ற அடிப்படையிலானது தான் என்பதும் அடங்கும். இப்போது கூட குடியரசு தலைவர் வேட்பாளர் மீரா குமாரின் சாதனைகளை சொல்வதை விட முன்னாள் தலைவர் ஜெகஜீவன் ராமின் மகள் என்பது தான் முதல் தகுதியாக முன்வைக்கப்படுகிறது. இப்படி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து குடியரசுத்தலைவர் வேட்பாளர் நியமனம் வரை பெண்களுக்கு குடும்ப ஆண்களின் அரசியல் நிழலில் கிடைக்கும் பதவிகள் தான் அதிகம். அப்படி பெண்கள் அவர்களுடைய அதிகாரத்தை முழுவதுமாக பயன்படுத்த முடியுமா என்பதும் நிழல் அதிகாரம் இத்தகைய பெண்கள் வீட்டு ஆண்கள் கைகளிலேயே இருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
இப்படியான இந்திய அரசியல் சூழலில் அரசியல் பின்புலமின்றி மாயாவதி பகுஜன்சமாஜ் என்ற கட்சியின் தலைவராக இருப்பதும், உத்திர பிரதேச முதலமைச்சராக இருந்ததும், மமதா பானர்ஜி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக இருப்பதும், தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையிலிருந்து 7 முறை சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்மாள் போன்றவர்கள் இந்திய பெண்கள் அரசியல் வரலாற்றின் மைல்கற்கள். எம்.ஜி.ஆருக்கு பிறகு அதிமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் நிரந்திர முதலமைச்சராகவும், மறையும் வரை நிரந்திர அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் ஜெயலலிதா இருந்ததெல்லாம் அரசியலில் அவ்வளவு எளிதான ஒன்றல்ல.
தற்போதைய சட்டமன்றத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை விடுத்து 19 பெண் சட்டமன்ற உறுப்பினர்களில் அதிமுகவில் இருந்து 14 பேர், திமுகவில் 4 பேர், காங்கிரசில் ஒன்று என்று பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள. இதில் பெண் அமைச்சர்கள் நான்கு பேர் இருக்கிறார்கள். சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி உள்ளிட்டோர் அமைச்சரவையில் உள்ளனர் .
தமிழகத்தில் இப்படி என்றால் மத்தியில் 7 பெண் அமைச்சர்களை கொண்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சிறுபான்மை துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா, ஜவுளி துறை அமைச்சர் ஸ்மிரிதி ராணி, தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி, நீர்வளம் மற்றும் கங்கை தூய்மை துறை அமைச்சர் உமா பாரதி, உணவு பதப்படுத்துதல் துறை ஹர்சிம்ரத் கவுர் பாதல் என்று இதுவரை இந்திய அமைச்சரவையில் இல்லாதளவிற்கு அதிக பெண் அமைச்சர்களை கொண்ட அமைச்சரவை என்ற பெருமையை தாங்கியுள்ளது. எல்லாம் சரி தான். இதில் சொந்த முடிவு எடுக்கும் இடத்தில் எத்தனை பெண் அமைச்சர்களுக்கு மத்தியிலும் - மாநிலத்திலும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது? இந்த பெண் அமைச்சர்கள் பெண்கள் உரிமை சார்ந்து நாடாளுமன்றத்துக்குள்ளும், சட்டமன்றத்துக்குள்ளும் வைத்த விவாதங்கள், அந்த விவாதங்கள் மூலம் பெற்ற மகளிர் திட்டங்கள், மீட்டெடுத்த பெண்ணுரிமைகள் என்று கேட்டால் அதன் சதவிதம் மிக மிக குறைவு.
குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி தன் பதவி காலம் முடிவடைய உள்ள நிலையில் குடியரசு மாளிகையில் நடைபெறும் இப்தார் விருந்தில் சிறுபான்மைதுறை அமைச்சர் என்ற முறையில் கூட நஜ்மா ஹெப்துல்லா கலந்து கொள்ளவில்லை. ஸ்மரிதி ராணி மனித வள மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த காலம் முழுவதும் சர்ச்சை ராணியாக வலம் வந்ததும் இவர்களிடம் உள்ள அதிகாரங்கள் வெறும் அலங்காரங்கள் என்பதை உணர்த்த போதுமானது. அந்த காலத்தில் இருந்ததை போன்று இன்றைய பெண்கள் பிரதிநிதிகளில் முத்துலட்சுமி ரெட்டிகளை காண முடிவதில்லை.
தமிழக சட்டமன்றத்துக்குள் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினராக காலடி எடுத்த வைத்தவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. 1925 ம் ஆண்டு சட்டசபை துணை தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பதவியை முதலில் அலங்கரிக்கும் பெண்ணாக டாக்டர் சரோஜினி அவர்களே இருந்தார். குழந்தை திருமணம் ஒழிப்பு, பர்தா முறை ஒழிப்பு, கணவரை பெண்களே தேர்ந்தெடுக்கும் முறை, இளம் விதவைகள் மறுமணம் செய்யும் முறை ஆகியவற்றை இந்திய பெண்கள் உரிமைகளாக்க வழிவகை செய்திடுவேன் என்று 1926ம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொண்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சூழுரைத்துவிட்டு வந்தார். வந்ததும் சட்டமாக்கும் முயற்சியையும் மேற்கொண்டார். 1930 ல் தேவதாசி ஒழிப்பு முறை சட்டத்தை முத்துலட்சுமி ரெட்டி சட்டமன்றத்தில் முன்மொழிந்தார். அப்போது காங்கிரஸ் உறுப்பினர் சத்தியமூர்த்தி,தேவதாசி பணி செய்யும் பெண்களுக்கு உயர்வு கிட்டும் என்றார் . அப்படி என்றால் உங்கள் வீட்டு பெண்களையும் தேவதாசி முறைக்கு அனுப்புங்கள் என்று டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பதிலடி கொடுத்தார். இன்றைக்கு இப்படி பேசும் பெண் பிரதிநிதிகளை சட்டம் இயற்றக் கூடிய இடங்களில் சட்டமன்றம் - நாடாளுமன்றம் இரு இடங்களிலுமே பார்க்க முடியவில்லை. இன்று சரத்யாதவ் போன்றவர்கள் பெண்களின் நிறம் குறித்து நாடாளுமன்றத்துக்குள் கேலி பேசிவிட்டு அதற்கு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்னிப்பு கேட்க சொன்னால் கூட கேட்க மாட்டேன் என்று அடம்பிடிக்கும் நிலை தான் உள்ளது.
தான் மருத்துவராக இருந்தும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தங்கை சுந்தராம்பாளை காப்பாற்ற முடியாமல் போனதால் டாக்டர்முத்துலட்சுமி ரெட்டியின் பெரு முயற்சியால் கொண்டு வரப்பட்டது தான் சென்னை அடையார் புற்றுநோய் மருத்துவமனை. அங்கு பணிபுரிபவர்களுக்கே அது தெரியாது. அவர் இருந்த லாட்டிஸ் பிரிட்ஜ் தெரு இன்று டாக்டர் முத்துலட்சுமி தெரு என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பெண் பிரதிநிதிகள் கட்சிரீதியாக பிரிந்திருக்கிறார்கள். பெண்ணுரிமை பிரச்சினைக்களுக்கு குரல் கொடுக்க முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் இது தான். ஏதாவது ஒரு நிகழ்விற்காகவாவது கட்சி, அதிகாரம் அனைத்தையும் விடுத்து பெண் என்ற அடிப்படையில் ஒற்றை குரலில் நின்றிருக்கிறார்களா என்றால் இல்லை . நிர்பயா சம்பவத்தின் போது டெல்லி முதலமைச்சராக இருந்த ஷீலா தீக்சித்தின் வார்த்தைகளில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை என்பதை தாண்டி அவருடைய அதிகாரத்திற்கும் இடைஞ்சல் இல்லாமல் பார்த்துக் கொள்வதில் கவனம் செலுத்தினார் . அதே நேரத்தில் இங்கு நடைபெற்ற புனிதா சம்பவம் தொடங்கி பல பாதிக்கப்பட்ட பெண்களுக்கு என்ன செய்தார் முதல்வராக ஜெயலலிதா என்பதை விட பெண்ணாக கூட அவருடைய அதிகார இடத்தில் இருந்து குரல் கொடுத்தாரா என்று கேள்வி எழும் . எதிர்கட்சிகள் சட்டமன்றத்தில் இந்த பிரச்சினையையும் சட்டம் ஒழுங்கு பிர்ச்சினையாக மட்டுமே எழுப்புவார்கள். அப்போதெல்லாம் தயாராக தன் வசம் வைத்துள்ள திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு இப்படி இருந்தது என்று பட்டியலை வாசித்து விட்டு என் தலைமையிலான ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று அவருக்கு அவரே பாராட்டிக் கொள்வார் .
இதே போன்று தான் அடக்குமுறையை அவிழ்த்துவிட்ட இந்திரா காந்தி, ஆடம்பரமான அரசியலைக் கொண்ட ஜெயலலிதா, பிடிவாதத்தின் உச்சமான மமதா, அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்திய மாயாவதி என்று அதிகாரத்தில் இருந்த, இருக்கும் பெண்கள் மீது வைக்கப்படம் விமர்சனங்களை கடந்து அதில் இருக்கும் தற்காப்பையும் கவனிக்க வேண்டும் . இன்று அமைச்சர்கள் தொடங்கி செய்தி தொடர்பாளர்கள் வரை அதிமுகவில் பேசுவதை கேட்டால் அன்று ஜெயலலிதா ஏன் இரும்பு பெண்மணி வேடமணிந்துக் கொண்டார் என்பது புரியும். ஒரு ஆணிடம் பெண் தனக்கான உரிமைகள் குறித்த புரிதலை ஏற்படுத்தவே இங்கே வழி இல்லாத போது ஒரு பெண்ணின் கட்டளைக்கு ஒரு ஆண் எப்படி அடிபணிவார் அல்லது அந்த கட்டளையை நிறைவேற்றுவார் என்பதெல்லாம் இங்கே நினைத்து பார்க்க முடியாத ஒன்று. அதனால் தான் அதிகாரத்துக்கு போகும் பெண்கள் உச்சபட்ச அடக்குமுறைகளை கையாள வேண்டிய இடத்திற்கு தள்ளப்படுகிறார்கள். ஒன்று பணிந்து போவது அல்லது அடக்கி ஆள்வது என்ற இரண்டில் ஒரு நிலைபாட்டை எடுக்கவே பெண்களின் அதிகாரம் நிர்பந்திக்கப்படுகிறது . எதார்த்த பெண்கள் அரசியலுக்கு வருவதே கடும் சவாலான காலகட்டத்தில் நடிகையாக அம்முவாக வலம் வந்தவர் ஜெயலலிதாவாக மாறி அரசியலுக்கு வந்ததும் எதிர்கொண்ட சவால்கள் என்ன? ஹேமாமாலினி,ஜெயா பச்சன்,ஜெயப்பிரதா, ஷபனா ஆஸ்மி,கிரன் கர், ரேகா, ஸ்மிரிதி ராணி என நாடாளுமன்றத்திற்குள்ளே இருக்கும் நடிகைகள் ஆகட்டும் ரோஜா போன்று சட்டமன்றத்துக்குள் இருக்கும் நடிகைகள் ஆகட்டும் குஷ்பு , நக்மா, நமீதா போன்று கட்சியின் இன்றைய செய்தி தொடர்பாளர்களாகட்டும் நடிகை என்ற ஒற்றை தகுதி பெண்கள் அரசியலுக்கு வர போது மானதா ?
பழுகுவோம்...
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.