Advertisment

அரசியல் பழகுவோம் 3 : அம்மு அம்மாவான கதை

தனக்கென்று யாரும் இல்லை என்பதை ஜெயலலிதா ’மக்களால் நான் மக்களுக்காக நான் ’என்று சொன்னார் .

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jayalaitha - finger print case - chennai highcourt

ஜெயலலிதா

சுகிதா

Advertisment

நடிகைகள் மீதான ஓர் ஈர்ப்பை நமது சமூகம் எப்போதும் கொண்டிருக்கிறது. திரைப்படங்களில் நடிகர்களை அவர்களுடைய கதாப்பாத்திரங்கள் வழியாக அடையாளம் காண்பது வழக்கமான ஒன்று. ஆனால் நடிகைகளை ஒரு போதும் அவர்களது கதாபாத்திரங்களுக்காக நினைவில் வைத்திருப்பதில்லை . நடிகை என்ற ஒன்றே பெரும் அடையாளத்திற்கு போதுமான தகுதியாக உள்ளது . திரைதுறை மீதான மதிப்பிடல் நமது சமூகத்தில் இப்படியாகவே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பல பில்லியன் டாலர்களை கொட்டி படம் எடுக்கும் பிராமாண்டம் காட்டும் ஹாலிவுட்டை விட இங்கே தான் நடிகைகளுக்கு கோவில் கட்டுவது தொடங்கி முதலமைச்சராக்கவும், நாடாளுமன்ற உறுப்பினராக்கவும் ரசிகர்கள் இருக்கிறார்கள் .

நடிகைகள் கழிப்றையோ, நகை கடையோ திறந்து வைக்க எந்த ஊருக்கு வந்தாலும் கூட்டம் கூடுகிறதென்றால் ஒன்று தான் காரணமாக இருக்க முடியும். திறமை, புகழ் அனைத்தையும் தாண்டி நடிகை என்ற ஒற்றை அடையாளம் போதுமானது.

நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ஜெயலலிதா, 'நதியை தேடிவந்த கடல்' என்ற படத்துடன் தனது திரைப்பட வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, எம்.ஜி.ஆரால் அரசியலுக்குள் நுழைந்தார். அதிமுக என்ற கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக பிறப்பால் பார்ப்பனரான ஜெயலலிதாவை எம்ஜிஆர் அறிவித்த போது அண்ணா பெயரிலான கட்சியின் திராவிட இயக்க கொள்கைக்கு எப்படி பொருந்துவார் என்ற கேள்வி கேட்கப்படவில்லை. நடிகை நாட்டை ஆள்வதா? அரசியலுக்கா என்று தான் விமர்சனம் வைத்தார்கள். திரைதுறையினராலும் எம்ஜிஆராலும் அம்முவாக அறியப்பட்டவர், 28 படங்களில் எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்தவர், நன்றாக ஆங்கிலம் பேசுபவர். இதை எல்லாம் தாண்டி ஆதிக்க சாதியில் பிறந்தவர் இப்படியான தகுதிகள் ஜெயலலிதா அரசியலுக்குள் நுழைய போதுமானதாக இருந்தது . 1984 ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தடுக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் தேசிய அரசியலில் இருந்து தனது அரசியல் அதிகார பயணத்தை தொடங்கினார்.

jayalalitha with mgr ஜெயலலிதாவிடம் செங்கோலை கொடுக்கும் எம்.ஜி.ஆர்

ஜெயலலிதாவின் முக்கியமான அரசியல் நிகழ்வுகளில் அதிமுக தொண்டர்கள் பேனர் வைக்க அதிகளவில் பயன்படுத்தும் ஒரு புகைப்படம் உண்டு. அது எம்ஜிஆரும் ,ஜெயலலிதாவும் செங்கோலை தூக்கி பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படம். அது வெறும் புகைப்படம் அல்ல 1986 ம் ஆண்டு ஆறடி உயர செங்கோலை மதுரை மாநாட்டில் ஜெயலலிதா எம்ஜிஆருக்கு கொடுத்ததும் அதனை பிறகு அவர் திரும்ப ஜெயலலிதாவிற்கே கொடுத்ததும் அதிமுகவின் எதிர்காலம் ஜெயலலிதாதான் என்பதற்கான குறியீடு. அது தான் உட்கட்சி பூசல் தொடங்கி தமிழகத்தின் பிரதான எதிர்கட்சிகள் வரை ஜெயலலிதாவை அயிரம் எதிர்ப்புகளை தாண்டி அரசியலில் திடமாக காலூன்ற வைத்தது. 1987 ம் ஆண்டு எம்ஜிஆரின் மறைவுக்கு பிறகு அவரது மனைவி ஜானகி அம்மாள் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவர் தான் தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதல் பெண் முதலமைச்சர். அத்தகைய பெருமை மிகு பதவியில் அவர் அமர்ந்த போது அவரால் அந்த பொறுப்பை பயன்படுத்தி எதையும் செய்ய முடியவில்லை. அவர் அரசியலுக்குள் அன்று நுழைய எம்ஜிஆரின் மனைவி என்ற ஒரு தகுதி போதுமானதாக இருந்தது. எம்ஜிஆர் என்ற பிம்பம், அதிமுக உட்கட்சி பிளவு இவை எல்லாம் தாண்டி, ஜெ-ஜா என இரண்டு பெண்கள் ஒருவரை ஒருவர் எதிர்த்து நிற்கும் அரசியல் ஆட்டத்தை 1989 ம் ஆண்டு தமிழகம் முதன் முதலாக கண்டது .

நடிகை என்ற செல்வாக்கில் மக்களின் தேர்வு ஜெயலலிதாவாக இருந்ததால் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்தின் எதிர்கட்சி தலைவரானார். தமிழக சட்டமன்றத்தின் முதல் பெண் எதிர்கட்சி தலைவர் ஜெயலலிதா தான். பின்பு அதிமுக என்ற கட்சிக்கு பொதுசெயலாளராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றிலிருந்து அவர் இறக்கும் வரை 27 ஆண்டுகளாக நிரந்தர பொதுச் செயலாளர் என்ற அடைமொழியோடு மட்டுமல்ல அப்படியாகவே அதிமுகவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜெயலலிதா.

சுயமரியாதை திருமணம், சொத்துரிமை என்று பெண்ணுரிமைக்கு சட்டம் இயற்றிய திமுகவால் இன்று வரை இந்த இரண்டு இடங்களின் பக்கம் கூட எட்டிப்பார்க்க திமுகவில் உள்ள பெண்களுக்கு வாய்ப்பளிக்கப் படவில்லை.

ஜெயலலிதா 1991 தேர்தலில் வெற்றி பெற்று முதன் முறையாக முதலமைச்சார் ஆனார். அவர் முதலமைச்சராக இருந்த காலகட்டங்களில் கொண்டு வந்த தொட்டில் குழந்தை திட்டம் தொடங்கி அம்மா உணவகம் வரை பெண்கள் சார்ந்து கொண்டு வந்த சில திட்டங்கள் குறிப்பிட்டாலும், உள்ளாட்சி தேர்தலில் 50 % இட ஒதுக்கீடு அறிவித்தவர் அவர் ஆட்சி காலத்தில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற அழுத்தம் கொடுக்காமல் இருந்தது உள்ளிட்டவை ஆட்சி அதிகாரத்தில் இருந்த நாட்களில் இன்னும் அதிகமாக பெண்களுக்கு செய்திருக்க முடியும் ஜெயலலிதா செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. சாதரண பெண் அரசியலுக்கு வரும் போது எதிர்கொள்ளும் அரசியல் சவால்ளை, நெருக்கடிகளை ஜெயலலிதா சந்திக்கவில்லை. அவருக்கு இருந்தது எல்லாம் உயர் மட்ட அரசியல் அழுத்தங்கள் தான். ஜெயலலிதா சிறை சென்று திரும்பும் போது விமான நிலையம் தொடங்கி போய்ஸ் இல்லம் வரை சாலைகளின் இருபுறமும் நின்று பூக்களை தூவி வரவேற்று, 'தங்கத் தாரைகையே வருக வருக' என்ற பாடுவதெல்லாம் ஹைடெக் டிராமா தான் . ஆனால் ஜெயலலிதாவை அதிமுகவினர் அவருக்கு கொடுத்த பட்டம் போல் தங்கத்தாரகையாக தான் கொண்டாடினர்.

சுனாமி, சென்னை பெருவெள்ளம் இயற்கை - செயற்கை பேரிடர்களில் மெத்தனமாக கையாண்டது, யாரும் எளிதில் சந்திக்க முடியாத அளவிற்கு தன்னை சுற்றி இரும்பு கோட்டை அமைத்துக் கொண்டது. நான் – என் தலைமையிலான அரசு என்று எப்போதும் குறிப்பிடுவது, 110 வதியின் கீழ் அறிவிப்புகள், வளர்ப்பு மகன் ஆடம்பர திருமணம், மகாமக குளியல், சொத்து குவிப்பு வழக்கு ,எதிர் விமர்சனம் வைக்கும் பத்திரிகைக்கள் மீது வழக்கு, எதிர்கட்சியினர் மீது வழக்கு என்று ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அவர் மீதுள்ள எதிர்மறை விமர்சனங்கள் பட்டியல் மிக நீளமாக உண்டு. முன்னால் முதலமைச்சரான திமுக தலைவர் கலைஞரை கைது செய்தது, காஞ்சி சங்கராச்சாரியாரை கைது செய்தது, ஆடு- மாடு பலியிட தடை விதித்தது, தேர்தல் கூட்டணியை உடைத்து அல்லது தனியாக தேர்தலில் களம் கண்டு இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெயரோடும் பெருமையோடும் இன்று அதிமுகவினரை தலைநகர் டெல்லியில் செல்வாக்கோடு அமர வைத்தது என ஜெயலலிதாவின் சில துணிச்சலான முடிவுகளை வியப்போடு மக்கள் பார்த்தார்கள் .

jayalalitha ops பொதுக் கூட்டத்தில் ஜெ. காலில் விழுந்த ஓபிஎஸ்.

” அந்த பொம்பள கட்ஸ் யாருக்கு வரும். துணிச்சலான பொம்பளையா” என்று எத்தனை ஆண்கள் தமிழகம் முழுவதும் முதலமைச்சரே ஆனாலும் பெண் என்பதற்காக ஒருமையில் பேசியாவது ஆண் சமூகமானது ஜெயலலிதாவை பாராட்டி இருக்கிறது . இப்படியான பாரட்டுக்களை அவர் மட்டுமே பெற்றுக் கொண்டாரே தவிர மற்ற பெண்களுக்கு குறைந்தபட்ச மரியாதை கிடைப்பதை கூட உறுதிசெய்யவில்லை .

ஜெயலலிதாவின் அரசியல் ஆளுமை கூட கூட சொந்த கட்சி கூட்டங்களில் வைக்கப்படும் பேனர்கள் , அறிக்கைகள் அனைத்திலும் ஜெயலலிதா என்ற பெயர் இருக்கும் இடமெல்லாம் அம்மா என்று மாற்றப்பட்டது . பிறகு அரசு குறிப்புகளில் கூட “ஹானரபில் சீஃப் மினிஸ்டர் ஆஃப் தமிழ்நாடு அம்மா ஜெ.ஜெயலலிதா ” என்று குறிப்பிடப்பட்டது. அதிமுகவினர் அம்மா என்று அழைக்க வேண்டும் என்பது விதியான பிறகு அமைச்சர்கள் சட்டமன்ற விவாதத்தில் தொடங்கி, நாடாளுமன்றத்திலும் அரசு விழாக்களிலும் பெயரை சொல்லாமல் அம்மா என்றே கூப்பிட்டதும், ஜெயலலிதா சென்ற விமானத்தை நோக்கி கும்பிடு போட்டதும், நெடுஞ்சாண் கிடையாக காலில் விழுந்ததும் ஆண் ஆதிக்கத்தை எல்லாம் தாண்டி பதவியை தக்கவைப்பது என்று மட்டுமே பார்த்துவிட கூடியதல்ல. மானுடவியலுக்கு எதிரான இத்தகைய கோட்பாட்டை தொடர்ந்து கட்டமைத்துக் கொண்டே வருவதன் மூலம் ஜெயலலிதா தன்னுடைய எதிரிகளிடம் தன் பிம்பத்தை உயர்த்தி பிடித்தார் . அந்த பிம்பம் தான் மாநில அரசியலில் இருந்து பிரதமர் வேட்பாளர், மூன்றாவது அணி பேச்சுவார்த்தை என்பது வரை கொண்டு போய் சேர்த்தது.

ஜெயலலிதாவை அம்மா என்று சொந்த கட்சியினர், அமைச்சர்கள் கூப்பிடலாம். ஆனால் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களும் அப்படி அழைத்தது வேடிக்கை என்றாலும் அரசியலிலும், ஆட்சி அதிகாரத்திலும் எத்தகைய ஆளுமை செலுத்தினார் ஜெயலலிதா என்பதற்கு சான்று. ஒரு காலகட்டத்தில் கூட்டணி கட்சிகளும் எதிர்கட்சியினருமே அம்மா என்றே தெரிந்தோ தெரியாமலோ அழைக்கும் சூழல் உருவானது . போராட்டங்கள் நிறைந்த என் வாழ்க்கையில் விருதுகள், பட்டங்கள் என பலவற்றை பெற்றிருந்தாலும் எல்லோரும் என்னை ”அம்மா ” என்று அழைப்பதை தான் பெரும் பேராக கருதுகிறேன் என்று ஜெயலலிதாவே குறிப்பிட்டுள்ளார் .

Jayalalitha_MGR_Janaki_760x400 எம்.ஜி.ஆர்., ஜானகியுடன் ஜெயலலிதா

ஜெயலலிதாவின் சொந்த வாழ்க்கையில் திரைப்படம் தொடங்கி அவரது மரணம் வரை பல மர்மங்கள் உண்டு . அவர் அவரது அரசியல் பொது வாழ்க்கை தவிர சொந்த வாழ்க்கை குறித்து எங்கும் பேசியதில்லை. தனக்கென்று யாரும் இல்லை என்பதை ஜெயலலிதா ’மக்களால் நான் மக்களுக்காக நான் ’என்று சொன்னார் . எம்ஜிஆருக்கு பிறகு அனைத்து முடிவுகளையும் தனித்தே எடுத்தார் . அதற்கான விளைவுகளையும் தனித்தே எதிர்கொண்டார். அரசியலில் பல போராட்டங்களை கடந்தே அரசியலில் அவருக்கான இடத்தை அடைந்தார். ஆட்சி அதிகாரம், கட்சி அதிகாரம் இரண்டிலும் அவர் அடுத்தவர்களுக்கு வழி கூட விட்டதில்லை. தனித்து தான் மட்டுமே நின்றார். நோயுற்று மரணிக்கும் வரை கர்ஜனையோடே ஆட்சி அதிகாரத்தில் இருந்தார். இன்று இத்தனை கோஷ்டியாக இருக்கும் அதிமுகவை ஜெயலலிதா கட்சிக்குள் தன்னை யாரும் எதிர்த்து களம் அமைக்க கூட சந்தர்ப்பம் அளிக்காமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது எளிதான காரியமில்லை . அதிரடி அதிகார அரசியலுக்கு இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலத்தை குறிப்பிடுபவர்களுக்கு அவருக்கு பிறகு அதை போன்று அதிரடி அரசியல் அதிகார உத்தரவுகளுக்கு இந்திய அரசியலில் மற்றொரு பெண்ணாக ஜெயலலிதாவை கை காண்பிப்பர் .

சரி தவறுக்கு அப்பாற்பட்டு இப்படியான அரசியல் ஆளுமையாக ஒரு பெண் வர இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் தமிழக அரசியலில் என்பது பெரும் கேள்வி? இப்படி தான் திரைப்படங்களில் அம்முவாக இருந்த ஜெயலலிதா அரசியலில் அம்மாவானார் .

ஜெயலலிதாவாவது அரசியல் மேடைகளில் கொள்கை பரப்பு செயலாளராக பேசி, நாடாளுமன்ற உறுப்பினராகி பிறகு தான் முதலமைச்சாரானார். ஆனால் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவோ, அதிமுக என்னும் கட்சியின் பொதுச் செயலாளராக கையெழுத்திட்டு விட்டு வந்து தான் முதல் மேடை பேச்சையே பேசினார் . அப்போது தான் அவர் குரலை அதிமுக தொண்டர்கள் உட்பட பத்திரிகையாளர்கள் வரை கேட்டார்கள் .

jayalalitha - mgr death எம்.ஜி.ஆர் இறுதி ஊர்வலத்தின் போது ஜெயலலிதா

அதிமுகவில் அடுத்தும் ஒரு பெண் முதலமைச்சர் தான் என்று அச்சாரமிட்ட ச சிகலாவின் நேரடி அரசியல் பிரவேசத்தில் நான்காண்டு சிறை தண்டனை விதித்து ஸ்பீடு பிரேக் போட்டது சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு. சசிகலா தற்போது சிறையில் இருப்பது, தேர்தலில் போட்டியிடும் தகுதி இழப்பு என பல எதிர்மறைகள் அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு எதிராக இருந்தாலும் அவருக்கான அரசியல் களம் இருப்பதற்கான கூறுகளை தொடர்ந்து சின்னம்மா என்று யாராவது எங்காவது அதிமுகவிலிருந்து பேசி பேசி உயிர்ப்புடன் வைக்க முயல்கிறார்கள். ஆனால் காலம் தான் சசிகலாவின் அரசியல் குறித்து பதில் சொல்ல இருக்கிறது. இந்த உயிர்ப்பு குரல்கள் தொடருமா அல்லது நின்றுவிடுமா என்பதில் தான் இருக்கிறது இத்தனை ஆண்டுகள் ஜெயலலிதாவுடன் கூட இருந்ததை தகுதியாக சொல்லி அரசியலுக்குள் நுழைய எத்தணிக்கும் சசிகலாவின் அரசியல் களத்துக்கான சவால். ஜெயலலிதா கையாண்ட அரசியல் வித்தைகளும், யுக்திகளும் இனி வரும் பெண்களுக்கு அகப்படுமா என்பது மிகப் பெரும் கேள்வி. ஜெயலலிதா அரசியலுக்கு வரும்போது நடிகை என கேலி பேசியவர்கள் அவரது இறுதி அஞ்சலியில் ஜெயலலிதாவின் அரசியல் ஆளுமையை பிரமிப்போடு பகிர்ந்துக் கொண்டார்கள்.

இந்தியா முழுவதும் இருந்து நடிகை என்ற அடையாளத்தோடு சட்டமன்றத்துக்குள்ளும், நாடாளுமன்றத்துக்குள்ளும் சென்றவர்கள் இத்தனை நாட்கள் இந்திய பெண்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள் . இதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தொகுதிக்கு செய்தது என்ன ? நடிகை என்ற செல்வாக்கை பயன்படுத்தி மாநிலங்களவை உறுப்பினர்களாக ஆளும் அரசுகளால் நியமிக்கப்பட்டவர்கள் செயல்பாடுகள் என்ன என்பதை வரும் வாரங்களில் பார்க்கலாம்.

பழகிப்பார்ப்போம்...

Sugitha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment