Advertisment

அரசியல் பழகுவோம் 4 : குஷ்பு புறக்கணிக்கப்படுவது ஏன்?

தமிழகத்தில் குஷ்புவுக்கு கோவில் கட்டிய போது, 'நடிகைக்கு கோவிலா' என்று அரசியலில் அது பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. ஆனால் அரசியலில் புறக்கணிக்கப்படுவது ஏன்?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kushboo - Congress - Ragul Gandhi

சுகிதா

Advertisment

தமிழகத்தில் குஷ்புவுக்கு கோவில் கட்டிய போது, 'நடிகைக்கு கோவிலா' என்று அரசியலில் அது பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. 90 களில் தமிழ்சினிமாவின் தேவதையாக, அன்றைய இளைஞர்களின் கவர்ச்சி கன்னியாக குஷ்பு வலம் வந்ததால் கோவில் மட்டுமல்ல தெரு ஓர ஆயாக்கடை இட்லிக்கும் ”குஷ்பு இட்லி” என்று பெயர் வைக்கப்பட்டு குஷ்பு ஒரு நடிகை என்பதை தாண்டி தமிழ் சினிமாவின் பிராண்டாக மாற்றினார்கள்.

நடிகைக்கு கோவிலா என்ற விமர்சனம் அடங்குவதற்குள் அவர் திருமணத்துக்கு முந்தைய பாதுகாப்பான உடலுறவு குறித்து கருத்தை சொல்ல கலாச்சார காவலர்களே கட்டிய கோவிலை இடிக்கவும் செய்தார்கள். வடநாட்டு கலாச்சாரத்தை பார்த்து வளர்ந்த ஒருவருடைய பார்வை பாலியல் சார்ந்தும் உடலுறவு சார்ந்தும் எத்தகையது என்று யோசிப்பதற்கு முன்னே ஏதோ தமிழகத்தில் குஷ்பு பிறந்தது போன்றும் தமிழ் கலாச்சாரத்துக்கு கேடு உண்டாக்கி விட்டதாகவும் கோவில் கட்டி கும்பிட்ட ஊரில் குஷ்புவை தூற்றியதும், துடைப்பத்தோடு அவர் வீட்டு வாசலில் பெண்கள் நின்றதும் அரங்கேறியது.

 

அவர்கள் குஷ்புவை வடக்கிலிருந்து வந்தவர் என்றெல்லாம் பார்க்கவில்லை. அவரது இயற்பெயர் நக்கத்கான் என்பதெல்லாம் கூட இன்று வரை பலருக்கு தெரியாது. இப்படி ரசிகர்களாலும், குஷ்புவுக்கே உரிய தடாலடி சர்ச்சைக்குரிய கருத்துகளாலும் குஷ்பு என்றால் தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்றாகி போனார்.

jayabrada ஜெயபிரதா

குஷ்பு பாதுகாப்பான பாலியல் உறவு குறித்து சொன்ன கருத்துக்கு பாமகவினர் போராட்டம் செய்ய அவரது வீட்டை முற்றுகையிட்டனர். வீட்டின் மீது கல்வீசப்பட்டது. அப்போது குஷ்புவின் இரண்டாவது மகள் அவந்திகாவுக்கு 105 டிகிரி காய்ச்சல் வீட்டை விட்டு வெளியே வரவோ அல்லது வீட்டிற்குள் யாரும் செல்லவோ அனுமதி இல்லாத ஒரு சூழலில் வீட்டுக்காவலில் இருப்பதை போன்று மகளை மருத்துவரிடம் அழைத்து செல்ல முடியாமல் மடியில் படுக்க வைத்துக் கொண்டிருந்ததாக பின்பு ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். நம் மக்கள் அப்படி தான், எதற்கு ஒருவரை கொண்டாடுகிறோம் என்பதும் ஏன் ஒருவரை வெறுக்கிறோம் என்பதும் புரியாத புதிர். இது அவரவர் சொந்த வாழ்வு தொடங்கி, சினிமா, அரசியல் என அனைத்திற்கும் பொருந்தும் .

1989ல் வருஷம் 16 திரைப்படத்தில் நடிக்க வந்தது தொடங்கி இன்று வரை பெரியத் திரை, சின்னத் திரை, சினிமா தயாரிப்பு, சீரியல், ரியாலிட்டி ஷோக்கள் என தொடர்ந்து குஷ்பு மக்களின் பார்வையில் இருந்து வருகிறார். வேறு எந்த நடிகையும் இத்தனை ஆண்டுகள் இத்தனை துறைகளை தொடர்ந்து இருந்தார்களா, இனி இருப்பார்களா என்பதும் கேள்வி தான்.

இது மட்டுமல்லாது சமூகவலைதளங்களில் ஹாட் டாபிக், வைரல், டிரெண்டிங்கில் குஷ்புவின் பதிவுகளும் அடக்கம் . சமீபத்தில் குஷ்புவுக்கும், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கும் நடந்த டிவிட்டர் மோதல், தன்னை இழிவாக பேசிய ஒருவரின் குடும்பத்தையே வம்புக்கு இழுத்த குஷ்புவின் பதிவு, மோடி, பாஜக கொள்கைகளை உடனுக்குடன் விமர்சிக்கும் குஷ்புவின் பதிவுகள் என்று ரகரகமாக பிரிக்கலாம். இது இல்லாமல் அவர் சினிமா நண்பர்களுடன், குடும்பத்தினருடன் செல்லும் சுற்றுலா புகைப்படங்கள் அப்லோடு செய்வதும் வழக்கம். இப்படி தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு மேலாக மக்களோடு ஏதோ ஒரு வகையில் தன்னை இணைத்துக் கொண்டிருப்பது குஷ்புவிற்கே உரித்தான ஒன்று. அதுதான் குஷ்புவின் கூடுதல் பலம்.

திமுகவில் இருந்து வெளியேறி காங்கிரசில் இருந்தாலும் சன் தொலைகாட்சியில் ஒரு நிகழ்ச்சிக்கு நெறியாளராக உள்ளார். அவரது கணவர் சுந்தர் சியின் தயாரிப்பான அரண்மனை 2 படத்தின் தொலைக்காட்சி உரிமம் சன் தொலைக்காட்சிக்குதான் கொடுக்கப்பட்டது. இப்படி அரசியல் வேறு, திரைப்படம் சார்ந்த தொழில் வேறு என்பதிலும் மிகத் தெளிவாக குஷ்பு இருக்கிறார் .

மகளிர் தினத்தன்று ஒரு தொலைக்காட்சியில் பேசுவதற்காக சிறப்பு விருந்தினராக குஷ்புவை அழைத்தார்கள். அதற்கு இன்று ஒரு நாள் மட்டும் பெண்கள் குறித்து பேசுவது சடங்கு போன்ற ஒன்று. அதில் எனக்கு உடன்பாடில்லை. இதே நிகழ்ச்சியை சாதாரண ஒரு நாளில் பெண்களின் உரிமைக்காக பேச அழையுங்கள் அப்போது வருகிறேன் என்று தவிர்த்துவிட்டார். இப்படி தனக்கு மனதில் பட்டதை தடாலடியாக பேசும் பழக்கம் தெரிந்து தான் குஷ்புவிடம் இன்றும் மீடியாக்கள் சர்ச்சையான நிகழ்வுகள் நடைபெறும் போது கருத்து கேட்பதையும் அல்லது குஷ்பு டிவிட்டரில் என்ன கருத்து கூறியுள்ளார் என்று பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். இந்த இடத்தை, இந்த ஆளுமையை குஷ்பு தன்னுடைய சொந்த உழைப்பால் அவருடைய இருத்தலை தொடர்ந்து உணர்த்திக் கொண்டே இருக்கிறார் .

jaya-bachan-jpg_042030 ஜெயாபச்சன்

ஆனால் அவருக்கு இது வரை அரசியல் வாய்ப்பு மட்டும் சரியாக அமையவில்லை . 2010 ல் திமுகவில் இணைந்த குஷ்பு 2011 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்காக பிரச்சாரம் செய்பவராக மட்டுமே இருந்தார். அடுத்த திமுக தலைவர் யார் என்பது குறித்து கருத்து சொல்ல திமுகவினரே அவர் வீட்டில் கல் எரிந்தனர் . பிறகு திமுகவிலிருந்து விலகி 2014 ல் காங்கிரசில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் என்ற பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தாலும் 2014 நாடாளுமன்ற தேர்தல், 2016 சட்டமன்ற தேர்தல் என இரண்டு தேர்தலிலும் குஷ்புவுக்கு சீட் கொடுக்கப்படவில்லை.

வேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்பு ஊடகங்களுக்கு தீனி போட இந்த தொகுதி குஷ்புவிற்கு, கூட்டணி கட்சிகள் குஷ்புவுக்கு சீட் கொடுக்க எதிர்ப்பு என்று ஏதாவது ஒரு தொகுதியில் நிழல் வேட்பாளராக குஷ்பு அந்த நாள் முழுதும் பேசப்படுவார் .பிறகு இறுதி பட்டியலில் அவர் பெயர் இருக்காது . எல்லாவற்றுக்கும் கருத்து கூறும் குஷ்பு இது குறித்து மட்டும் கருத்து கூறியதே இல்லை. மீண்டும் பிரச்சாரம் செய்துவிட்டு தேர்தல் முடிந்தவுடன் மொரிசியஸ், சிட்னி என்று சினிமா நண்பர்களுடன் பறக்க ஆரம்பித்து விடுவார்.

அரசியலில் ஒருவர் காலூன்ற சினிமா பிரபலம் , சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுதுகிறார் என்ற காரணங்கள் ஒரு போதும் பலனளிக்காது . தேர்தல் அரசியல், ஓட்டு வங்கி அரசியல், கட்சிக்கும் அவர்களுக்குமான பந்தம், கட்சிக்காக அவர் செய்த பணிகள், கொள்கை ரீதியான அவர்களது நிலைப்பாடு அனைத்தையும் உள்ளடக்கியது ஒருவருடைய அரசியல் களம். திமுகவில் இருந்த போது குஷ்பு திமுக நடத்திய போராட்டம் ஒன்று காலில் ஏற்பட்ட காயத்தோடு தடி கொண்டு நடந்து வந்து கலந்துக் கொண்டார். இப்படி அரசியலில் தன் இருத்தலை உணர்த்த வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் பயன்படுத்த தவறியதே இல்லை. இருந்தாலும் தேர்தல் என்று வரும்போது வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இல்லாததற்கு காரணம் அறிய முடியவில்லை. உறுப்பினர் அட்டை கூட வாங்காமல் நாடாளுமன்ற நியமன உறுப்பினர்களாகி மாநிலங்களவைக்கு எத்தனை நடிகர், நடிகைகள், பிரபலங்கள் சென்றுள்ளார்கள்.

முதல் நாள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பார்த்து விட்டு மறுநாள் வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்த கருணாஸ், மாநிலங்களவைக்கு திமுகவால் அனுப்பி வைக்கப்பட்ட சரத் குமார் என இவர்கள் எல்லாம் கட்சி பணி செய்து விட்டு கட்சியில் மூத்தவர்களுக்கு வழிவிட்டு தான் வந்தார்களா என்றால் இல்லை. ஆனால் குஷ்புவுக்கு ஏன் சீட் கொடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்த போது இந்த காரணத்தை தான் முன்வைத்தார்கள்.

publive-image ஷப்னா ஆஸ்மி

நியாயமான இந்த காரணங்கள் எல்லோருக்கும் நியாயமாக இருந்தால் சரி என்று ஏற்றுக் கொள்ளலாம் . ஆனால் இவ்வளவு பேரும் புகழும் தனக்கான இடத்தை தக்கவைத்தும் பெண் என்ற காரணத்தால் குஷ்பு தொடர்ந்து தேர்தல் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டாரோ என்ற யூகத்தை மறுப்பதற்கும் இல்லை. இன்னொருபுறம் தேர்தல் களத்தில் தொகுதி பங்கீட்டில் மதத்திற்கும், சாதிக்கும் பெரும் பங்குண்டு. தமிழகத்தின் இந்த அரசியல் கூறுக்குள் மும்பையில் இஸ்லாமிய மதத்தில் பிறந்து இந்துவான சுந்தர் சி யை திருமணம் செய்துக் கொண்ட குஷ்புவை எந்த பட்டியலுக்குள் அடக்குவது என்ற குழப்பமா என்றும் கேள்வி எழுகிறது.

ஆனால் மற்ற நடிகைகளுக்கு குஷ்புக்கு நேர்ந்தது போன்றெல்லாம் கிடையாது . பொறுப்புக்கு வந்த பிறகு தான் அரசியலில் பாலபாடமே கற்றார்கள். நடிகை ரேகாவிற்கு நியமன உறுப்பினர் அடிப்படையில் காங்கிரஸ் 2012 ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக்கியது. ரேகா அவரது பதவி காலத்தில் வெறும் 5 % நாட்கள் மட்டுமே நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றார். அதுவும் கூட்டத்தொடரில் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. அவருக்கு எதற்காக அந்த பதவி கொடுக்கப்பட்டது என்பது அப்போது பெரும் விவாதம் ஆனது. நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் வருகை பதிவின் தேசிய சராசரி மக்களவைக்கு 82 % மாநிலங்களவைக்கு 79 % . அதனால் ரேகா நாடாளுமன்றத்துக்கு வரவில்லை என்பதை எதிர்கட்சிகள் கடுமையாக காங்கிரசை சாட பயன்படுத்திக் கொண்டனர்.

மற்றொரு நடிகையும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஷபனா ஆஸ்மி நாடாளுமன்ற உறுப்பினர் பதவி என்பது மாடல் அல்ல என்று காட்டமாகவே விமர்சித்தார். பாஜகவில் இருந்த மற்றொரு நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான கிரன் கர் 85% வருகையை பதிவு செய்திருந்தார். கிரன்கர் தேர்தலில் சண்டிகரில் போட்டியிட்டு முன்னாள் ரயில்வே அமைச்சராக இருந்த காங்கிரஸ் உறுப்பினர் பவன்குமார் பன்சாலை 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். நாடாளுமன்றத்திற்கு விடுப்பு எடுக்காமல் சென்றவர் தொகுதி பக்கம் எட்டிப் பார்க்கவில்லை என்ற குற்றச்சாட்டும், 24 மணிநேர குடிநீர் வினியோகம், சண்டிகர் ஸ்மார்ட்சிட்டியாக மாற்றுவேன் என தேர்தலின் போது சண்டிகர் மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் மத்திய அரசு வெளியிட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான தேர்வு பட்டியலில் சண்டிகர் இல்லை என்றதும் கடுமையான விமர்சனத்துக்கு ஆளானார் .

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு முயற்சிக்காமல் தவற விட்டுவிட்டார் என்பதோடு பட்டியலில் பெயர் இல்லை என்றதும் சம்மந்தப்பட்ட துறைக்கு அழுத்தம் கூடக் கொடுக்காமல் எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்ததற்கு வாக்களித்த மக்கள் கண்டனம் தெரிவித்தார்கள் .

rekha-sachin-story_647_033117081321 சச்சினுடன் நடிகை ரேகா

பிரதமரின் சிறப்பு திட்டமான கிராமம் ஒன்றை எம்பிக்கள் தத்தெடுக்கும் திட்டத்தில் சாராங்பூர் கிராமத்தை தத்தெடுத்தவர், அங்கு செல்லாதது மட்டுமல்ல. அங்கு நடைபெற்ற நலதிட்ட விழாவுக்கு கூட செல்லவில்லை . ஆனால் திரைப்பட நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தவறாமல் ஆஜராகிறார் என்பதும் இவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. கடும் விமர்சனத்திற்கு ஆளான பிறகு தற்போது குடிநீர் வினியோகம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி குறைந்த செல்வாக்கை சொந்த தொகுதியில் மீட்க போராடிக் கொண்டிருக்கிறார் கிரன்கர்.

நடிகை ஜெயப்பிரதா தெலுங்கு தேசம் கட்சிக்காக 1994 முதல் 1996 வரை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் . தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணி தலைவராகவும் பொறுப்பில் இருந்தார். சந்திரபாபு நாயுடுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியில் இருந்து பிரிந்து சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். 2004 ம் ஆண்டு ராம்பூர் தொகுதியில் 85 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றவர், 2009 ம் ஆண்டு தேர்தலிலும் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் . ஆசம்கான் எம்.பி ஜெயப்பிரதாவின் படங்களை ஆபாசமாக சித்தரித்து தொகுதியில் வினியோகித்ததாக குற்றச்சாட்டை முன்வைத்தார் . ஆனால் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரது குற்றச்சாட்டு உண்மையா என்று கூட பரிசீலிக்க தயாராக இல்லை. இது போன்று பெண்களுக்கு கட்சியில் என்ன முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டதே.

பதவிகள் கொடுக்கவும், தேர்தல் பிரச்சாரங்களில் மக்களை ஈர்க்க நடிகைகள் கட்சிக்கு தேவை. ஆனால் அவர்களுக்கு கட்சி எத்தகைய பாதுகாப்பை வழங்குகிறது என்பது தான் முக்கியமான கேள்வி. ஆசம் கான் இருக்கும் கட்சியில் இருக்க மாட்டேன் என்று சமாஜ்வாதி கட்சியிலிருந்து ஜெயப்பிரதா வெளியேறினார் .

சமாஜ்வாதி கட்சியை தவிர வேறு எந்த கட்சியில் வேண்டும் என்றாலும் சேரத் தயார் என்று வெளிப்படையாக அவர் சொன்னார். அப்போது தான் சமாஜ்வாதி கட்சியின் முன்னால் பொதுசெயலாளரும் ஜெயப்ரதாவின் நண்பருமான அமர்சிங் 2011 ல் ராஷ்டிரிய லோக் மஞ்ச் என்ற கட்சியை தொடங்கினார். 2012 ல் நடைபெற்ற தேரத்லில் இந்த கட்சி ஒரு சீட் கூட வெற்றி பெற வில்லை . பிறகு ராஷ்டிரிய லோக் தளம் கட்சியில் ஜெயப்ரதா இணைந்தார் . 2014 ல் பொது தேர்தலில் உத்திர பிரதேசத்தில் பிஜ்நூர் தொகுதியில் ராஷ்டிரிய லோக் தளம் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜெயப்ரதா தோல்வியை தழுவினார் . பாஜக அரசின் பணமதிப்பிழப்பை சிலாகித்தவர் உத்திர பிரதேசத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை, குண்டர் ராஜ்ஜியம் நடக்கிறது என்று வெளிப்படையாக அன்றைய அகிலேஷ் யாதவின் அரசை கண்டித்து உத்திர பிரதேச சட்டப் பேரவை தேர்தலில் பிரச்சாரம் செய்தார். தற்போது மலையாள சினிமாக்களில் மீண்டும் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜெயப்பிரதா .

நாடாளுமன்ற உறுப்பினரான ஜெயா பச்சனை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மனைவி என்று யாராவது அரசியல் மேடைகளில் அடையாளப்படுத்தினால் கடும் கோபம் வருமாம் . அது ஏன்?

பழகிப் பார்ப்போம்.

Sugitha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment