சுகிதா
இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் மகன் ராஜிவ் காந்தியை கேம்ப்ரட்ஜ் பல்கலைகழகத்தின் கிரேக்க உணவகத்தில் சந்தித்த போது இந்தியா என்னும் மாபெரும் பன்முக பண்பாட்டை கொண்ட தேசத்தை ஆளப்போகும் வாய்ப்பு கிட்டும் என்று கனவிலும் சோனியா காந்தி நினைத்திருக்க மாட்டார். இத்தாலியில் பிறந்த சோனியாவின் இயற்பெயர் எட்விகி அண்டோனியா அல்பினா மையினோ என்று இன்னும் காங்கிரஸ்காரர்கள் சிலருக்கு தெரியாது.1968 ல் சோனியா – ராஜிவ் திருமணம் அதன் பிறகு ராகுல், பிரியங்கா என்று இரண்டு குழந்தைகள், நேரு என்ற இந்தியாவின் முதல் பிரதமரின் பேரன், தன்னை ஈன்றெடுத்த தாயும் இந்தியாவின் மூன்றாவது பிரதமருமான இந்திராவின் மகன் என பிரதமர் குடும்ப வாரிசாக இருந்தாலும் ராஜிவ் ஒரு விமானியாக பணியாற்ற சோனியா குழந்தை, குடும்பம் என்று சாதரண வட்டத்துக்குள் வாழ்ந்து வந்தார்.
மாமியார் இந்திரா காந்தியின் மரணம், பாதுகாவலர்களால் கொல்லப்பட்ட விவகாரம் என்று உச்சகட்ட அரசியல் பரபரப்பும் குடும்பமே திக்கற்று நின்ற நேரத்தில் 1982 ல் ராஜிவ் காந்தி பிரதமர் என்று வாழ்க்கை அடுத்தடுத்த கட்டங்களை எட்டிய போது குடும்பம் மட்டுமல்லாது நாட்டின் பெரும் இழப்பை ஈடு செய்ய ராஜூவின் தோள் கொடுதது நின்றார் சோனியா. அது தான் அவரது முதல் அரசியல் பிரவேசத்துக்கு அச்சாரமிட்டது.
சோனியாவின் முதல் அரசியல் பிரவேசம் 1984ம் ஆண்டு தனது கணவருக்காக அமேதி தொகுதியில் பிரச்சாரத்தில் இறங்கினார். தனது கணவரின் தம்பி சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா காந்திக்கு எதிராக தனது கணவருக்கு வாக்கு சேகரித்தார் சோனியா.
1991 ல் ராஜூவ் காந்தி திடீர் மறைவு சோனியாவிற்கு மேலும் பேரிடியாய் இறங்கியது. நரசிம்மராவ் ராஜிவ் மரணத்திற்கு பிறகு பிரதமரானார். சோனியாவோ1996 வரை அரசியல் எதிலும் பெரிய அளவில் கவனம் செலுத்தாமல் ஒதுங்கி இருந்தார். இந்திராவின் மரணத்தின் சுவடுகள் மறையாத ஒரு கால கட்டத்தில் ராஜிவின் மரணம் குடும்பத்தின் அடுத்தடுத்து ஒரே மாதிரியான இழப்புகள் தந்ததன் வலியோ என்னவோ சோனியா மவுனமாக அரசியலை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். இரு தலைவர்களின் அகால மரணம் காங்கிரஸ் என்னும் பேரியக்கத்தை சற்று அசைத்து தான் பார்த்தது. இந்த சூழ்நிலையில் மூத்த தலைவர்கள் காங்கிரசை விட்டு வெளியேற காங்கிரஸ் கேப்டன் இல்லாத கப்பலாக தத்தளிக்கும் போது, சோனியா காங்கிரஸ் கட்சியை வழிநடத்தும் பொறுப்பிற்கு தள்ளப்பட்டார். 1997 ல் அடிப்படை உறுப்பினர் பதவி பெற்ற கையோடு 1998ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவர்,1999 ல் வாஜ்பாய் பிரதமர் - சோனியா காந்தி எதிர்கட்சிதலைவர் என்று அடுத்தடுத்து நாடாளுமன்ற தேர்தல்களில் வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்ததோடு பொறுப்புகளும், அதிகாரத்தின் படிகட்டுகளும் சோனியாவை உயர்த்திக் கொண்டே சென்றன. 15 கூட்டணி கட்சிகளின் ஏகோபித்த வரவேற்போடு பிரதமர் ஆவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அயல் நாட்டு பிறப்புரிமை பெற்ற சோனியா காந்தி இந்தியாவை ஆண்டால் நான் மொட்டை அடித்துக் கொள்வேன் என்று கூறினார் பெல்லாரி தொகுதியில் சோனியாவிடம் தோல்வியை சந்தித்த சுஷ்மா சுவராஜ் .சோனியா பிரதமர் ஆக தடை இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் சர்ச்சைகள் எழ சோனியா பிரதமர் கனவை தூர வைத்து விட்டு ஒதுங்கி வழிவிட்டு நின்றார். அதே சோனியா தான் கடந்தாண்டு கேரளாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது, பிரதமர் மோடி இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் என்று சோனியாவை பழைய கதையை பேசி வம்புக்கிழுத்தார். ஆர்எஸ்எஸ் காரர்களும், பாஜக வினரும் இதையே பேச , திருச்சூர் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஆக்ரோஷமாக பேசினார் சோனியா. 48 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் வசிக்கும் நான் இந்திய குடிமகள் தான். 93 வயது எனது தாயார் இத்தாலியில் இருந்தாலும் என் மாமியார் இந்திராவின் கொள்கையை உள்வாங்கி அரசியல் செய்து வரும் என்னுள் இந்திய ரத்தம் தான் ஓடுகிறது. எனது மாமியார் இந்திரா மற்றும் எனது கணவரின் சாம்பல் கரைக்கப்பட்ட இந்த மண்ணில் தான் என் சாம்பலும் கரைக்கப்படும் என்று உணர்வுபூர்வமாக பேசினார். சோனியாவிற்கு இந்த பக்குவத்தை அவருடையஅரசியல் அனுபவம் கற்றுக் கொடுத்திருக்கிறது.
2004ல் மிகச் சிறந்த பொருளாதார நிபுணராக விளங்கிய மன்மோகன்சிங்கை பிரதமராக தேர்வு செய்தது, இழந்த கட்சியின் செல்வாக்கை மீட்டெடுத்து மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றியது என்று சோனியாவின் அடுத்தடுத்த நகர்வுகள் அவரது அரசியலை சர்வதேச அளவில் பேச வைத்தது. போர்ப்ஸ் பத்திரிகையின் உலகின் சக்தி வாய்ந்த பெண் பட்டியலில் இவருக்கு 3 வது இடம்,செல்வாக்கு மிகுந்த நபர்கள் பட்டியல் என முன்னணி பட்டியல் எல்லாவற்றிலும் சோனியாவின் பெயர் உலகளவில் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டே இருந்தது.
இத்தாலியில் பிறந்திருந்தாலும் நேரு குடும்பத்தின் பாரம்பர்யத்தை குடும்ப வாழ்க்கையில் பின்பற்றிய சோனியா அரசியல் கொள்கையிலும் இந்தியாவின் பன்முகத் தன்மையை கட்டிக் காப்பதிலும், மதசார்பின்மை நிலைப்பாட்டிலும் தீர்க்கமான முடிவுகளை பல்வேறு இக்கட்டான கட்டங்களில் எடுத்துள்ளார். அதனால் தான் தற்போது கூட நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்குகள் அடிப்படையில் தோல்வியை தழுவுவோம் என்று அறிந்தும் இந்த தேர்தலில் மதசார்பின்மைக்கு விடபட்ட சவால் என்பதால் தேர்தலில் நிற்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்று சோனியா குறிப்பிட்டார். பல்வேறு சமரசங்களை சம காலத்தில் மாற்றி அமைத்த காங்கிரஸ் கட்சி அல்லது சோனியா காந்தி இந்த ஒரு விஷயத்தில் தொடர்ந்து நிற்பது சோனியா மீதான நம்பிக்கை கீற்றாகவே பார்க்கப்படுகிறது. கூட்டணி தலைவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படும் போதெல்லாம் அதனை முறையாக கையாண்டு பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணிக்குள் பிளவு ஏற்படாமல் தடுத்து நிறுத்துவது என்பதை பல முறை சோனியா செய்திருக்கிறார். சமீபத்தில் கூட நித்திஷ், லாலு முரண்பட்ட குடியரசுத் தலைவர் ஆதரவு என தொடங்கி பீகார் அரசு ஆட்டம் காணும் போது இருவரிடம் பேசி சமரசம் செய்ய முயற்சித்தார். காங்கிரசின் ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்த அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை கைவிட தானே நேரில் சென்று அவரின் கோரிக்கைகளை ஏற்று வாக்குறுதி அளித்த து சோனியாவின் அரசியல் பண்பின், அனுபவ முதுமையின் நரை மின்னுகிறது.
அதே நேரத்தில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவை திறந்து விட்டதில் இத்தாலிய மனநிலை தான் சோனியாவிற்கு அதிகம் இருந்தது என்ற விமர்சனத்தில் உண்மை இல்லாமல் இல்லை. அதே போன்று தொடர்ந்து மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற அவர் எடுத்த முயற்சிகள் தோல்வியுற்றதும் கூட்டணி கட்சி தலைவர்களையே சமாதானப்படுத்துவதில் சோனியா தோல்வி கண்டதும் இந்திய நாடாளுமன்றமத்தின் வரலாறு. அதனால் தான் தன் தோல்வியை ஒப்புக் கொள்ளும் வண்ணம் கடந்தாண்டு மகளிர் தினத்தன்று நாடாளுமன்ற்த்தில் சோனியா பேசும் போது மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக நிறைவேற்றுங்கள் என்று கோரிக்கை வைத்தார்.
தகவல் அறியும் உரிமை சட்டம், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் உள்ளிட்டவை சோனியாவின் மிக முக்கிய முடிவில் எடுக்கப்பட்டு காங்கிரசிற்கு திருப்புமுனையாக அமைந்தது. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத்திட்டம், பெண்களுக்கு பேருதவியான திட்டம் என்று பெருவாரியாக பாராட்டை பெற்றது. விவசாயம் பொய்த்த தருணத்தில் விவசாய கூலிகளாக இருந்த பெண்களுக்கு மற்றுமொரு வேலை வாய்ப்பை உருவாக்கி தந்துக் கொண்டிருந்த நேரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சாதனையாக மெட்ரோ நகரங்களில் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் வானாளாவிய கட்டிடங்களுக்குள் உருவாகின. இதற்கு கிடைத்த வெற்றி 2009 ல் மீண்டும் மன்மோகன் சிங்கே பிரதமர் வேட்பாளர் என்ற போதும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இது வரை சோனியாவின் பார்மூலா சிறப்பாக கைக் கொடுத்தது . இதன் பிறகு ஊழல் மேல் ஊழலாக வெளிவந்தன. நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் என எதிர்கட்சிகள் கூட்டத்தொடரை துவம்சம் பண்ணிய நிலையில் மவுனமாக அமர்ந்து சோனியா வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார். எப்போதும் ஒரே மாதிரி முகத்தோற்றத்தோடு தான் அவர் அவையில் இருப்பார். 1998 ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நீண்டநாட்கள் அந்த பதவியில் இருப்பது சோனியா மட்டும் தான். 2004 இந்தியா ஒளிரட்டும் என்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரச்சாரத்திற்கு பதிலடி தந்த விதம், ஆம் ஆத்மி என்று பிரச்சாரத்தை சோனியா முன்னெடுத்தார்.
ராணி சிங் எழுதிய சோனியா காந்தியின் சுயசரிதை நூல் குறிப்பாக சோனியா, ராஜிவ் காந்தியின் காதல் குறித்தும் அதிகம் பேசும் நூல் ,Sonia Gandhi an extraordinary life an Indian dynasty, நூருல் அஸ்லாம் எழுதிய Sonia Gandhi : tryst with India சோனியாவின் அரசியல் ஆளுமை மற்றும் சாதனைகள் குறித்த நூல், ரஷித் கித்வாலின் Sonia : A biography என்று சோனியாவின் அரசியல் சாகசங்களை புதிர்களை உள்ளடக்கிய சுயசரிதை நூல் என சோனியா காந்தி குறித்து பல நூல்கள் வந்திருந்தாலும் Indira Gandhi :selected sayings என்று சோனியா இந்திராவின் மேற்கொள்களை தொகுத்து எழுதிய நூல், two alone two together என்று நேருவும் இந்திராவும் பேசிக் கொண்டதனை தந்தை மகள் உறவை தாண்டி அரசியலில் மையம் கொண்டுள்ள இருவரின் ஆழ்ந்த உள்வாங்கலை மையப்படுத்திய நூல் என்று இரண்டு நூல்களை சோனியாவே எழுதிஉள்ளார். சோனியா காந்தியின் இலக்கிய ஆற்றலுக்கு எடுத்துக் காட்டு இந்த நூல்.
சோனியாமீதான கடுமையான விமர்சனத்தோடு, சோனியாவின் மற்றுமொரு சுயசரிதையை உள்ளடக்கிய The red sari என்ற நூலை விற்க தடை வரை போனார்கள் காங்கிரஸ்காரர்கள். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஜாவியர் மோரா எழுதியிந்த நூல் பல நாடுகளில் மிகுந்த வரவேற்பை பெற்றது. ஆனால் இந்தியாவில் வெளியிடப்படாமல் இருந்தது. 2015 ல் அந்த நூல் இந்தியாவில் வெளிவந்தது. சோனியாவின் மீதான குற்றச்சாட்டுகளில் முதன்மையானது போபர்ஸ் ஊழல் முறைகேட்டில் சோனியாவின் இத்தாலி நண்பர் ஓட்டேவியாவிற்கு ஊழலில் தொடர்பிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு. அதே போன்று ராஜிவ் கொலையில் விடுதலை புலிகள் தலையிடுவதை காரணமாக வைத்து ஈழத்தில் தொப்புள் கொடி உறவுகளை சிங்கள அரசு வதைத்து கொன்று குவித்த போது அதிகாரமிருந்தும் கள்ள மவுனம் காத்தார் சோனியா. கூட்டணி கட்சியான திமுக மிரட்ட கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த பிரணப் முகர்ஜி வரும் வேலையில் சிபிஐயும் திமுக தலைமை அலுவலகத்தில் சோதனை போட்டது. சிங்கள ராணுவத்திற்கு தளவாட ங்கள் அனுப்புவது, ராணுவ பயிற்சி அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அவ்வப்போது சுட்டிக் காண்பிக்கப்பட்டாலும் இந்த முறை சோனியாவிற்கு கிடைத்த அவப் பெயர் இன்னும் நூற்றாண்டு கடந்தாலும் தமிழ் அரசியல் வரலாற்றில் துரோகத்தின் நிழலாக சோனியாவை பார்க்கிறார்கள்
இந்திரா காந்தியின் ஆடை அலங்காரத் தோற்றத்தின் சாயலை கொண்டிருந்தாலும் இத்தாலி பெண் என்று அன்னியப்படாமல் இந்திய கைத்தறி புடவையில் இந்திய மண் சார்ந்த பெண்ணாகவே சோனியா இருப்பார் என்பதால் உலகின் மிக அழகாக எளிமையாக ஸ்டைலாக ஆடை அணியும் 50 பேரில் சோனியாவும் ஒருவர் என கார்டியன் பத்திரிக்கை ஆய்வு மூலம் கவுரவித்தது. பெரும்பாலும் கதர், பருத்தியில் நெய்த சேலையை சோனியா அணிவார். கண்களுக்கு உருத்தாத வண்ணமாகத்தான் தேர்வு செய்திருப்பார். அவருக்கு ஆடைகளை வடிவமைத்துக் கொடுப்பது நீருக் குமார் என்ற ஆடைவடிவமைப்பாளர்.
சோனியா காந்தியின் மகளான பிரியங்கா காந்திக்கும் தனது பாட்டி சாயலில் சிகை அலங்காரம் அம்மா மற்றும் பாட்டி கலவையில் ஆடை அணியும் பழக்கம் உடையவர். தேர்தலின் போது பிரியங்கா காந்தி அம்மா சோனியா காந்திக்கும் அண்ணன் ராகுல் காந்திக்கும் ரேபரேலி மற்றும் அமேதி தொகுதியில் பிரச்சாரம் செய்தார். அம்மாவின் பிரச்சார திட்ட மேலாளராகவும் இருந்தார். அதை தாண்டி தனிப்பட்ட முறையில் இன்னும் அவர் அரசியலில் களம் காணவில்லை என்றே சொல்லலாம். பிரியங்கா தான் பிரதமர் வேட்பாளர், உத்திர பிரதசே முதல்வர் வேட்பாளர் என்று காங்கிரஸ் கட்சிகாரர்களும், ஊடகங்களும் தான் பேசிக் கொண்டே இருப்பார்கள். கட்சியின் தலைவராக- அம்மாவாக சோனியாவோ, துணை தலைவராக- அண்ணன் ராகுலோ இது குறித்து வாய் திறந்தததே இல்லை . பிரியங்கா ராஜூவ் கொலை வழக்கில் தொடர்புடைய சிறை தண்டனை பெற்று வரும் நளினியை தமிழகத்தில் சந்தித்தது தான் அரசியலில் பிரியங்காவின் இடம் குறித்த விவாதத்தின் அடித்தளம். அவரது கணவர் வதேரா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடங்கி நில அபகரிப்பு வரை அனைத்து முறைகேடுகளிலும் பிரியங்கா பெயரும் சேர்த்தே பேசப்படும். இது தான் இதுவரை பிரியங்கா தனிப்பட்ட முறையில் சம்பாதித்தது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கை ஆளும் பாஜக சோனியா மற்றும் ராகுலுக்கு செக் வைப்பதற்கான துருப்புச் சீட்டாக பார்க்கிறது. ஆனால் சோனியா சொல்கிறார், ’நான் இந்திராவின் மருமகள். எதற்கும் அஞ்சமாட்டேன். வழக்கை சட்ட ரீதியாக சந்திப்பேன்’ என்று அதிரடி காட்டி இருக்கிறார்.
125 ஆண்டுகளுக்கு மேல் உள்ள ஒரு கட்சியின் தலைவரான சோனியா காந்தி இன்றும் இத்தனை ஆண்டு கால அனுபவத்திற்கு பிறகும் மாமியார் இந்திரா காந்தியை துணிச்சலுக்கான துணையாக இழுக்கிறார் என்றால் அப்படி என்ன செய்தார் இந்திரா காந்தி.
அடுத்த வாரம் பார்க்கலாம் .
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.