அரசியல் பழகுவோம் 7 : பெண்கள் அரசியல் வாரிசாக முடியாதா?

வீட்டு பெண்களுக்கு அரசியல் பயிற்சி கொடுக்கவில்லை. பெண்கள் அரசியல் வாரிசுகளாக முடியாதா என்ற கேள்வியை எழுப்புகிறார், சுகிதா.

By: August 1, 2017, 1:09:45 PM

சுகிதா

ஒரு பெண்மணியாக உங்களால் இந்தியாவை ஆள முடியுமா ? பத்திரிக்கையாளரின் இந்த கேள்விக்கு, ”I am no woman but human” என்று பதிலளித்தார் இந்திரா காந்தி. சுதந்திர இந்தியாவில் நேருவுக்கு பிறகு பிரதமராக பொறுப்பேற்ற லால் பகதூர் சாஸ்திரி அமைச்சரவையில் இந்திரா ஒலிப்பரப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அதனாலேயே என்னவோ தொடர்ந்து அகில இந்திய வானொலியை மேம்படுத்துதல், தொலைகாட்சி சேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்தல் என மக்களோடு தன்னை தொடர்ந்து தொடர்பு படுத்திக் கொள்வதில் கவனமாக இருந்தார். அதனால் நாடுகளை கடந்து அவருக்கு பத்திரிகைகளின் ஆதரவு என்றும் இருந்தது.1966 ல் பிரதமராக இந்திரா தேர்வு செய்யப்பட்ட போது பிரச்சினைகள் உள்ள இந்தியா இப்போது உறுதியான ஒரு பெண்ணின் கையில் என்று அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிக்கை தலையங்கம் தீட்டியது. 1969 ல் 14 மிகப் பெரிய வங்கிகளை தேசிய மயமாக்கியதும், ரூபாயின் மதிப்பை குறைத்ததும் இந்திராவின் சாதனைகளில் மிக முக்கியமானது . இதனை செய்ய துணிச்சலை தாண்டி பொருளாதாரம் சார்ந்து ஆழமான பார்வை இருந்தால் மட்டுமே முடியும் . தொடர் வாசிப்புகளும், அவர் கற்றல் முறையும் அவருக்கு இத்தகைய பக்குவத்தை தந்திருந்நது. அதனால் தான் சொன்னார், ‘கல்வி கற்பதும் கற்பிப்பதும் மிகவும் முக்கியம். அந்த கல்வி சிறந்த மனிதனை உருவாக்க உதவினால் மட்டுமே அதனால் பயன்’ என்றும் குறிப்பிட்டார் இந்திரா.

இன்று அரசியலுக்கு வந்துள்ள பெண்கள் வர உள்ள பெண்கள் முதலில் வாசிப்பு திறனை வளர்ப்பது அடிப்படை தேவைகளில் ஒன்று.

இந்திரா பிரியதர்ஷினி காந்தி பெரும்பாலானோருக்கு ”இரும்பு பெண்மணி” என்றே அறியப்பட்டதற்கு அவரது அரசியல் ஆளுமையே காரணம். இன்றும் அந்த பட்டம் அவருக்கு பொருத்தமானதாக இருக்கும். அதற்கு அவர் வளர்ந்த சூழல் ஒரு காரணமாக சொல்லலாம். குடும்பத்தில் தாத்தா மோதிலால் நேரு, தந்தை ஜவகர்லால் நேரு என எல்லோரும் விடுதலை போராட்ட காலங்களில் எப்போதும் சிறைக்கு செல்வதும்,போராட்டங்களில் பங்கேற்பதையும் பார்த்து வளர்ந்தார். இந்திராவின் பிறந்தநாளுக்கு அவரது தந்தை நேரு சிறையிலிருந்த கடிதம் எழுதினார். சிறையிலிருந்து உனக்கு என்ன பரிசு கொடுத்து அனுப்புவது என்னுடைய வார்த்தைகள் உனக்கு வாழ்வியலை கற்றுத்தரும் என்று எழுதினார்.

சோனியா காந்தி

இப்படி வளர்ந்த இந்திராவால் அரசியலை கற்பதற்கு பொறுப்பிற்கு வந்தவுடன் நாட்கள் தேவைப்படவில்லை. தானாகவே வந்தது. அப்படி இருந்தும் இந்திராவின் ஆரம்ப கால அரசியலை ”பொம்மை போன்று இருக்கிறார்” என்று விமர்சினம் செய்தவர்களும் உண்டு. வழக்கமாக பெண்கள் அரசியலில் ஒன்றும் செய்ய தெரியாதவர்கள் என பொது மன நிலையின் வெளிப்பாடு இந்திராவை பொம்மை என்றும் வர்ணிக்க வைத்தது. ஆனால் இந்திராவின் விஸ்வரூபமானது சில துணிச்சலான முடிவுகளை தனக்கு மட்டும் சரி என்று பட்டதை எல்லாம் செய்ததன் மூலம் அரசியலில் தனக்கான இடத்தை நிறுவிக் கொள்ள உதவியது. ஆயிரம் விமர்சினங்கள் வந்த போதும் தனக்கான முடிவை மாற்றிக் கொள்ளாமல் இருந்ததுதான் இந்திராவின் அரசியல் வியூகமாக இருந்தது.

இன்று அரசியலுக்கு வரும் பெண்களுக்கு குறிப்பாக அரசியல் தலைவர்களின் வீடுகளில் இருந்துவரும் பெண்களுக்கே போராட்டங்களில் பங்கேற்பது, அரசியல் அறிதல் போன்றவற்றிற்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. தலைவர்கள் தங்கள் பிள்ளைகளை குறைந்தபட்சம் தற்போது நடக்கும் அடையாள போராட்டங்களுக்கு கூட அழைத்து வருவதில்லை. பிறகு எப்படி பெண்களுக்கு அரசியல் புலப்படும். முன்பு அரசியலை கற்க இயக்கங்கள் உதவின. போராட்டங்கள் இயக்கங்கள் நடத்தும் தெரு கூத்து, நாடகங்கள் உதவின. ஆனால் இன்று இதற்கான வாய்ப்புகள் இல்லை. இன்று அரசியல் முறையும் மாறிவிட்டது. ஓட்டு அரசியல், சாதி அரசியல் என்று தேர்தல் களத்துக்கு ஒரு அரசியல் செய்ய வேண்டி உள்ளது. பொது கூட்டத்துக்கும், போராட்டத்திற்கும் செல்லும் கட்சிகாரர்கள் எத்தனை பேர் வீடு திரும்பியதும் அது குறித்து அவர்கள் வீட்டு பெண்களிடம் பேசி இருக்கிறார்கள். பெண்களிடம் அரசியல் பேச ஆண்கள் ஒரு போதும் வரும்புவதே இல்லை. அவர்கள் பெண்களுக்கு அரசியல் தெரியாது என்று காரணம் கூறி எளிதில் கடந்துவிடலாம். ஆனால் இப்போது அரசியல் தொழிலாக பார்க்கப்படுகிறது. இந்த தொழிலுக்கு ஆண்கள் மட்டுமே தயார்படுத்தப்படுகிறார்கள். பெண்களுக்கு தேர்தல் இட ஒதுக்கீடு தாண்டி அரசியலில் நுழைய வாய்ப்பில்லை. ஆனால் நான் அரசியலை அடிப்படை அம்சமாக தான் பார்க்கிறேன். ஒரு தொழிலாகவோ, போட்டிக்குரிய விஷயமாகவோ பார்ப்பதில்லை என்றார் இந்திரா.

மன்னர்கள் மானியத்தை நிறுத்தியது, பத்திரிக்கை தணிக்கை முறையை ஒழித்தது, மூப்பு அடிப்படையில் நீதிபதி நியமனம் இவை அனைத்தும் சமூக நீதி தளத்தில் இந்திராவின் செயல்கள் பேசப்பட்டுக் கொண்டிருந்த போது 20 அம்ச திட்டங்களான பெண் கல்வி மேம்பாடு, அறிவியல் மற்றும் ஆராய்ச்சியில் வளர்ச்சி என்று தொலைநோக்கு திட்டங்களும் கைகொடுத்தன. இந்திரா அடிதளமிட்ட பல திட்டங்கள் இன்று மெறுகேறி பல பயன்களை நாட்டுக்கு தந்துக் கொண்டிருக்கிறது. இப்படி சாதனை பக்கங்களை கொண்ட இந்திராவின் அரசியலில் ஜனநாயகத்தை படுகுளியல் தள்ளிய கருப்பு பக்கங்களும் உண்டு.

1976 அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார் இந்திரா. அப்போது ”இந்தியா என்றால் இந்திரா” என்று தான் உலகளவில் பார்க்கப்பட்டது. இதை தான் தற்போது காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி நக்கலாக சொல்கிறார். இந்த நெருக்கடி நிலை இந்திராவிற்கு அடுத்து வந்த தேர்தலில் சரிவை தந்தது. அதற்கடுத்த 1980 தேர்தலில் வெங்காய அரசியலை மிக நுட்பமாக இந்திரா கையாண்டார். வெங்காய விலை உயர்வை நாட்டு மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வெங்காய மாலை போட்டு பிரச்சாரம் செய்த இந்திரா வெற்றி மாலையாக அதனை மாற்றினார். இப்போது இந்த யுக்தியை காங்கிரஸ் பெண்கள் கூட செய்வதில்லை. தக்காளி விலை 120 ரூபாய் விற்கும் போதும் அரசியல் கட்சியில் உள்ள பெண்கள் கூட போராட வரவில்லை.

இந்திரா பிரதமர் ஆன பிறகு தான் சுற்றுச்சூழல் அமைச்சகம் உருவானது. சூழலியல் மீது பெண்களுக்கே உரிய அத்தனை பிரியங்களையும் இந்திரா கொண்டிருந்தார். வன பாதுகாப்பு சட்டம், வன உயிரியல் பாதுகாப்பு சட்டம், தண்ணீர் மாசுகட்டுப்பாட்டு வாரியம், உட்பட பல்வேறு சூழலியல் சார்ந்த சட்டங்களை கொண்டு வந்தார். தாகூரின் இலக்கியங்களுக்கு ரசிகையான இந்திரா தாகூரை ”சூழலியல்வாதி ”என்று குறிப்பிடுகிறார். இந்திரா சிறுவயதில் மரத்தின் மீது அமர்ந்து புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை கொண்டிருந்திருக்கிறார். காஷ்மீருக்கு பைன் மரங்களின் அழகை காண அடிக்கடி செல்ல ஆசைப்படுவார்.

மேனகா காந்தி

1977 ம் ஆண்டு தேர்தல் தோல்விக்கு பிறகு பீகாரில் உள்ள பெல்சி கிராமத்தில் நிலத் தகராறில் சாதி இந்துக்களால் தலித்துகள் கொல்லப்பட்டதை அறிந்து மழை கால இரவில் அங்கே செல்ல விரும்பினார் இந்திரா. அப்போது போக்குவரத்து செல்ல முடியாத நிலை இருந்ததால் அந்த கிராமத்திற்கு யானை மீது சவாரி செய்து ஆற்றைக் கடந்து சென்றார். வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் சபாரி பயணங்களை பெரிதும் விரும்பினார். அதனால் தான் இக்கட்டான சூழலில் யானை மீது அச்சமின்றி அவரால் சவாரி செய்ய முடிந்தது. ஆனால் தற்போதைய சோனியா தலைமை யிலான காங்கிரஸ் அரசோ சூழலை ஒழிப்பதில் முழு முனைப்போடு இருந்ததும் தனது இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது சுழலுக்கு எதிராக செயல்பட்டதற்கு உதாரணம் சொல்ல தேவையில்லை.

இந்திராவின் முதல் அமைச்சரவையில் சுஷிலா நயார் சுகாதார துறை அமைச்சர். அதன் பிறகு இரண்டாவது முறையாக பிரதமர் ஆன போது 4 பெண்கள் இணை அமைச்சர்களாக இந்திராவின் அமைச்சரவையில் இருந்தனர். 3 வது முறையாக இந்திரா அமைச்சரவையில் 2 பெண்கள் இணை அமைச்சர்கள். இந்திரா தனக்கு கிடைத்த அதிகாரத்தில் பெண்களுக்கென்று பிரத்யேக அதிகாரப் பகிர்விற்கோ, முன்னுரிமைக்கோ எல்லாம் தயாராக இல்லை. தற்போது பாஜகவின் மோடி அமைச்சரவையில் 7 பெண் அமைச்சர்கள் இருக்கிறார்கள். அதிலும் சுஸ்மா சுவராஜ் 1977 முதல் பாஜக அமைச்சரவையில் இருக்கிறார். இந்திய அமைச்சரவை வரலாற்றில் யாருக்கும் இல்லாத சிறப்பு சுஷ்மாவிற்கு உண்டு. வெளியுறவு துறை அமைச்சராக முதன் முதலில் ஒரு பெண் இருப்பது சுதந்திர இந்திய வரலாற்றில் சுஷ்மா சுவராஜ் தான். பாஜகவின் முதல் பெண் முதலமைச்சர், பொது செயலாளர், எதிர்கட்சித் தலைவர் இப்படி பாஜகவின் வரலாற்றில் பல முதல் பெண்மணி என்ற வரலாற்றிற்கு சொந்தகாரர். சுஷ்மாவின் தந்தை ஆர்எஸ்எஸ்காரர். அதனடிப்படையிலேயே சுஷ்மாவிற்கு முன்னுரிமை கிடைத்தது. இந்திரா தனக்கு பிறகு எந்த பெண்ணையாவது இப்படி பல கட்டங்களில் தலைவர்களாக உருவாக்கினாரா என்றால் இல்லை.

கனிமொழி

அவ்வளவு ஏன்? மருமகள் மேனகா காந்தியை அரசியலுக்கு கொண்டு வர இந்திரா விரும்பியதாகவும் ஆனால் சோனியா அதற்கான வாய்ப்பை கொடுக்காமல் சாமர்த்தியமாக கையாண்டு ராஜிவை சுற்றியே காங்கிரஸ் என்பதில் தெளிவாக இருந்தார் என இந்திராவின் மருத்துவர் மாத்தூர் தனது நூலில் குறிப்பிடுகிறார். சஞ்சய்காந்தி விமான விபத்தில் இறந்த போது மேனகா கையில் வருண் காந்தி 100 நாள் குழந்தை. அதனாலயோ என்னவோ மேனகா மீது சஞ்சயின் மறைவிற்கு பிறகு இந்திரா கூடுதல் பிரியம் காண்பித்தார்.

3 ஆண்டுகள் அமைதியாக இருந்த மேனகா காந்தி சஞ்சயின் நினைவாக சஞ்சய் விசார் மஞ்ச் என்ற அமைப்பை தொடங்குகிறார். ஒரு கால கட்டத்தில் ராஜிவை எதிர்த்து அரசியல் செய்ய முற்பட்டு ’சஞ்சய் விசார் மஞ்ச்’ அமைப்பில் கூடுதல் கவனம் செலுத்துகிறார் . பொது கூட்டத்தில் லக்நவ்வில் பேச இருந்த மேனகாவிற்கு வெளிநாட்டில் இருந்து பேச வேண்டாம் என இந்திரா தகவல் அனுப்பியும் மேனகா அந்த கூட்டத்தில் பேசினார். பின்பு மேனகா காந்தி “ராஷ்டிரிய சஞ்சய் மஞ்ச்” என்ற கட்சி தொடங்கி ஆந்திரா சட்டப்பேரவை தேர்தலில் 5 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களை கைப்பற்றினார். காங்கிரசால் ஏன் மேனகா காந்தியை தக்க வைக்க முடியவில்லை.

குடும்ப சண்டை மட்டுமே காரணமா அல்லது மேனகாவின் தகுதியையும் திறமையும் காங்கிரசில் இருந்தால் வெளிக் கொணர முடியாமல் போயிருக்கும் என்பதால் மேனகா தனி கட்சி தொடங்கினாரா என்பதும் கவனிக்க கூடியதே. இது மேனகா காந்திக்கும் மட்டுமல்ல அரசியலில் ஒரு குடும்பம் பல தலைமுறைகளாக இருந்தாலும் அந்த குடும்பத்தின் அரசியல் வாரிசாக ஆண் மட்டுமே வர முன்னுரிமை உண்டு. பெண்களுக்கு வெகு குறைவாகவே இந்த வாய்ப்பு கிடைக்கிறது. வாரிசு அரசியல் சரி தவறு என்பதை தாண்டி இங்கேயும் பெண்களுக்கான இடம் என்னவாக இருக்கிறது என்பதே கேள்வி? உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 % இல்லாமல் போயிருந்தால் இப்போதிருக்க கூடிய பெண்கள் கூட அரசியலுக்கு வந்திருக்க மாட்டார்கள்.

காங்கிரசின் முதுபெரும் தலைவரான குமரி ஆனந்தனின் மகளான தமிழிசை சவுந்திரராஜன் ஏன் பாஜகவிற்கு வந்தார் ? தன் வீட்டு பெண்களையே காங்கிரசின் கொள்கை ஈர்க்கவில்லையா? இந்தியாவிற்கு விடுதலை வாங்கி தந்த இயக்கத்தின் முக்கியத்துவத்தை காங்கிரஸ்காரர்களின் வீட்டு பெண்களே அறியவில்லையா. அன்றும் இன்றும் காங்கிரசின் பிரச்சினை மேல்மட்ட அரசியல் செய்துவிட்டு இயக்கத்தின் வேரை கண்டுக் கொள்ளாமல் விட்டது தான். அதை தான் இந்திரா தொடங்கி சோனியா வரை அனைவரும் செய்திருக்கிறார்கள் .

தமிழிசை

புளூ ஸ்டார் ஆப்ரேசன், பஞ்சாப்பை பிரித்தல், பொற்கோவில் கலவரத்தை அடக்க ராணுவத்தை அனுப்பியது என இந்திரா சீக்கியர்களின் கோபத்துக்கு ஆளானதும் சீக்கிய பாதுகாவலர்களாலே 31 குண்டுகள் துளைக்க இந்திரா படுகொலை செய்யப்பட்டதும் இந்திரா கூறியது போன்றே இந்தியாவின் ரத்த வரலாறு தான். இந்திரா கடைசியாக ஒரிசாவில் பேசிய கூட்டத்தில் இவ்வாறாக பேசினார் “I am alive today;I may not be there tomorrow.i shall continue to serve till my last breath and when I die every drop of my blood will strengthen india and keep a united india alive.

இந்திரா காந்தி கொல்லப்பட்டதும் சீக்கியர்கள் ரேஷன் கார்டு வீதம் தேடி பிடித்து கொல்லப்பட்டதும் இந்திரா குறிப்பிட்டது போன்று காங்கிரஸ் கட்சி இந்தியாவில் எழுதிய இரத்த வரலாறு தான். ”பழுத்த மரம் விழுந்தால் நிலம் அதிரத்தான் செய்யும் ” என்று இந்திராவின் மறைவின் போது ராஜிவ் காந்தி பேசினார். இன்று அரை நூற்றாண்டு இந்திய வரலாற்றை எழுதிய பழுத்த மரமான காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் விழுந்துக் கொண்டிருக்கிறது. அதிர்வலைகள் கேட்டும் கேட்காதது போன்று சோனியா இருக்கிறார். இப்போதும் கூட உலகின் கடந்த நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க பெண் என்ற டைம்ஸ் இதழின் ஆய்வில் இந்திராவின் பெயரே இடம்பெற்றுள்ளது . இன்றும் பாஜக எதிர் விமர்சனம் செய்ய இந்திராவின் அரசியலை இழுக்கிறார்கள்.

ராஜிவ் வரலாறும், சோனியா தலைமையிலான காங்கிரஸ் வரலாறும் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்பது போன்று தான் எதிர்கட்சிகள் கையாள்கின்றன. இன்றும் காங்கிரசை விமர்சிக்க இந்திரா அரசியல் தான் தேவைப்படுகிறது. காங்கிரசிற்கு வாரிசு அரசியலில் இந்திரா என்றால் தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கான பெண் அரசியல்வாதியாக கனிமொழி இருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி அவரது தந்தையும் இந்திய அரசியலில் அசைக்க முடியா சக்தியுமான திமுக தலைவர் கருணாநிதியின் பயிற்சி பட்டறையில் இருந்த அரசியல் கற்று வந்தவர். அவரது அரசியல் பிரவேசம் எப்படியானதாக இருக்கிறது?

அரசியல் பழகுவோம்…

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in by following us on Twitter and Facebook

Web Title:Get involved in politics can women be a political heir

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X