Advertisment

அரசியல் பழகுவோம் 15 : கவனம் ஈர்க்கும் விஜயதரணி

மருத்துவ குடும்பத்தில் பிறந்த விஜயதரணி, மருத்துவம் படிக்க இடம் கிடைக்காமல் தற்கொலைக்கு முயன்று, தாயார் அறிவுரையின் படி சட்டம் படித்து அரசியலுக்கு வந்தவர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vijayatharani

சுகிதா

Advertisment

சுதந்திர இந்தியாவில் அதிக காலங்கள் தேசத்தை ஆண்ட கட்சி காங்கிரஸ். பிரதமராக இந்திராவை தேர்வு செய்ததன் பின்னால் நேருவின் வாரிசு அரசியல் என்பதை தாண்டி முதல் பெண் பிரதமர் என்ற பெருமை தாங்கி நிற்கிறது. இத்தகைய பெருமையில் அடுத்தடுத்து வந்து பெண் தலைவர்களை அந்த கட்சி எப்படி வளர்த்திருக்கிறது என்றும் பார்க்க வேண்டி உள்ளது. தேசிய நீரோட்டத்தில் காங்கிரஸ் பெண்கள் பலர் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்கள். வெகு சிலர் தான் அனைத்து மாநிலத்திலும் வெளியே தெரிந்தவர்கள்.

தமிழகத்தில் ஒரு காலத்தில் செல்வாக்கு செலுத்திய காங்கிரஸ் இன்று வேண்டும் என்றால் செல்வாக்கு குறைந்து போயிருக்கலாம். ஆனால் முழுவதுமாக இல்லாமல் போய்விட வில்லை. இன்னும் கைக்கு தான் வாக்களிப்பேன் என்று இருப்பவர்கள் இருக்கிறார்கள். அது தான் கடந்த தேர்தலில் காங்கிரஸ் மீதான ஈழ எதிர்ப்பு, ஊழல் எதிர்ப்பை தாண்டி 8 பேரை சட்டமன்றத்திற்கு மக்கள் அனுப்பி வைத்ததற்கு சான்று. அந்த 8 பேரில் 2 வது முறையாக காங்கிரஸ் பிரதிநிதியாக சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி சட்டமன்றத்திற்கு சென்றிருக்கிறார்.

மாநிலத்தின் கடை கோடி மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கொறடாவாக உள்ளார். 1987ல் சென்னை சட்டக் கல்லூரியில் படித்த போது மாணவர் காங்கிரசில் சேர்ந்து பணியாற்றியவர் விஜயதரணி. பின்னர் நளினி சிதம்பரத்திடம் ஜூனியராக சட்ட வழக்காடும் முறையின் நுணுக்கம் கற்று, இன்று முண்ணனி வழக்கறிஞராகவும் உள்ளார்.

கம்யூனிஸ்ட் கோட்டையாக இருந்த விளவங்கோட்டை இப்போது விஜயதரணி இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதன் மூலம் காங்கிரஸ் வசப்படுத்தி இருக்கிறார். பொதுவாக இந்த தொகுதி 21 மலைகிராமங்களை கொண்டுள்ளது. பிரதான தொழிலான முந்திரி தொழிற்சாலை உள்ளது. முன்பளவிற்கு தற்போது முந்திரி ஏற்றுமதி இல்லாமல் உள்ளது. இதனால் விஜயதரணி மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது. குறிப்பாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியின் உறுப்பினர் என்ற பார்வையில் திட்டங்கள் கொண்டு வருவார் என்று உறுதியாக அந்த தொகுதி மக்கள் நம்பினர்.

சட்டமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் தடாலடியாக பேசுபவர். ஊடகங்களின் விவாதங்களில் கடுமையாக பேசுவார். அப்போது அவரது பேச்சில் ஒரு அனல் பறக்கும். வழக்கறிஞர் என்பதால் எதிராளியை பேச விடாமல் குறுக்கே பேசுவதிலும் வல்லவர். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் மீதான இலங்கை பிரச்சினை மற்றும் ஊழல் பிரச்சினை என்று தமிழகம் காங்கிரஸ் எதிர்ப்பில் இருந்த நேரத்தில் விவாதங்களில் கடுமையாக காங்கிரஸ் நிலைப்பாட்டை ஆதரித்து இவர் பேசிய போது இவர் கடுமையான விமர்சனத்துக்கு ஆளானார். அதுவும் ஒரு பெண் என்பதால் இன்னும் கேவலமாக அவர் மீது விமர்சினங்கள் வைக்கப்பட்டன. ஆனால் அதனை எல்லாம் மிக எளிதாக கடந்து போனார் விஜயதரணி. பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு அவர் பக்குவப்பட்டு அந்த விமர்சனத்தை கடந்திருக்கிலாம். ஆனால் பெண்கள் எத்தகைய பொறுப்புகளுக்கு வந்தாலும் இத்தகைய மூன்றாம் தர கீழ்த்தரமான விமர்சனங்களை எதிர்கொள்வது என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது.

எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு தொடர்வதால் அரசுக்கு தேவையில்லாமல் பணம், நேரம் விரயம் ஏற்படுகிறது. எனவே, அவதூறு வழக்கு தொடர்வதை அரசு தவிர்க்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் பேசியவர். பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதாவையும் அரசையும் விமர்சித்ததற்காக விஜயதரணி மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்தார். ஆனால் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ விஜயதரணியோ, ஜெயலலிதா மீது அவதூறு வழக்கு ஒன்றை பதிவு செய்தார். அதற்கு முன்பாக அவர் ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையில் ”சாட்டை” என்ற பெயரில் விஜயதரணியை தரக்குறைவாக விமர்சித்து வந்த கட்டுரைக்காக தான் இந்த அவதூறு வழக்கு. இப்படி ஜெயலலிதாவையே கடுமையாக எதிர்த்தவர்.

2016 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட கிராமத்தில் சாலை பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. தார்சாலை தரமற்று போடப்படுகிறது என்பதை நிருபிக்க புதியசாலையை ஆட்கள் வைத்து கூட்டி அள்ளி காண்பித்தார். தார் ஒட்டாமல் ஒரே நாளில் இந்த சாலைகள் பயனில்லாமல் போகும் என்றும் சாலை ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றிருக்கிறது என்றும் குற்றம்சாட்டினார். உட்கட்சி பூசல்களை தாண்டி தொடர்ந்து எல்லா பிரச்சினைகளுக்கும் குரல் கொடுப்பவர். காங்கிரஸ் தலைமையோடு சண்டை போடுபவர் இன்னொரு பக்கம் அதிருப்தி எம்.எல் ஏக்கள் ஜெயலலிதாவை தொகுதி நலன் சார்ந்து சந்தித்துக் கொண்டிருந்த தருணத்தில் விஜயதரணி தொகுதி நலனுக்காக ஜெயலலிதாவை சந்திக்க அரசியல் வதந்திகள் பற்றிக் கொண்டது.விஜயதரணி அதிமுகவில் இணைய உள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறினார்கள்.இப்படி தன்னை சுற்றி எப்போதும் பரபரப்பு அரசியலை வைத்திருப்பவர்.

தொகுதி மேம்பாட்டு நிதி, நாடாளுமன்ற உறுப்பினர் நிதி என்று மத்திய மாநில நிதிகளை கொண்டு வந்து விளவங்கோட்டில் இணைப்பு பாலம் கட்டியது, எம்.எல்.ஏ அலுவலகத்தில் வேலைவாய்ப்பு கோரி வரும் மனுக்களை பரிசீலித்து வேலைவாய்ப்பை உருவாக்குவது என்று தொகுதி நலனில் அக்கறை காண்பித்தல், 13 ஆதரவற்ற குழத்தைகளுக்கு கல்வி உதவி என்று தொகுதி நலனில் களத்தில் செய்தவை இவை. விலைவாசி உயர்விற்கு வெங்காய மாலையோடு ஜெயலலிதா அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தவர். ஒரு கால கட்டத்தில் கட்சியில் மாநில தலைமையோடு ஏற்பட்ட மோதலில் மத்தியில் கட்சி தலைமைக்கு புகார் அளித்த போதாது என்று காவல்நிலையத்தில் புகார் அளித்தவர். இப்படி பல போராட்டங்களை கட்சிக்குள்ளும் வெளியேயும் நடத்தும் விஜயதரணியின் அரசியல் வீச்சு கடந்த 10 ஆண்டுகளில் வியக்க வைக்கும் ஒன்று.

பிபிசி-யின் 100 பெண்கள் தொடரில், தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் இடம் பெற்றனர். அதில் ஒருவர் விஜயதரணி. உரிமைப் போராளிகள் என்று பி.பி.சி. நிறுவனம் அடையாளம் கண்டு மரியாதை செய்தது. விஜயதரணி  பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரது அம்மா மகிளா காங்கிரஸ் தலைவராக இருந்தவர். தாய் தந்தை இருவருமே மருத்துவர்கள். அதனால் சிறு வயதில் இருந்தே மருத்துவர் ஆகும் கனவு இருந்தது. அது கிடைக்காமல் போன போது தற்கொலை எண்ணம் வந்ததாகவும் விஜயதரணியின் தாயார் தான் அதனை மாற்றி சட்டம் படிக்க வைத்ததாகவும் அனிதா தற்கொலையின் போது பகிர்ந்துக் கொண்டார்.

தடாலடி அரசியலுக்கு பழகிப் போன விஜயதரணியின் தொகுதியில் தான் டாஸ்மாக்கிற்காக போராடி சசிபெருமாள் உயிர் நீத்தார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் விஜயதரணி சென்ற போது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் டீன் டேபிளில் அந்த மலர் வளையத்தை வைத்து விட்டு வந்தார் விஜயதரணி. இறந்த போன நபருக்கு வாங்கி சென்ற மலர் வளையத்தை மருத்துவமனை உயர் அதிகாரம் கொண்ட டீன் டேபிளில் வைத்து தன் எதிர்ப்பை பதிய வைப்பது கவன ஈர்ப்பில் விஜயதரணியின் அரசியல் யுக்தி என்பது அவரை தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு தெரியும்.

எப்போதும் அரசியல் அனல் தன்னை சுற்றி வீச வைப்பது என்பது தங்களது செயல்பாடுகளின் மூலம் பெண்களுக்கு அவசியம் தேவை. டாஸ்மாக் போராட்டத்தில் தொகுதியில் முதல் ஆளாக நின்றவர். நள்ளிரவோடு கடை திறக்க முயன்ற காவல்துறையினரோடு அவர் நடத்திய வாக்குவாதம் வீடியோ வைரல் ஆனதும் தொடர்ந்து தன்னுடைய செயல்பாடுகளை மக்கள் முன்னே ஊடகங்கள் வாயிலாக, சமூக வலைதளங்கள் வாயிலாக வைப்பதை, விஜயதரணி சரியாக பயன்படுத்துவார் என்பது புலப்படும்.

இது தான் தொடர்ந்து விஜயதரணியை அரசியல் அரங்கில் நிற்க வைக்கிறது. திமுகவில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வசந்தி ஸ்டான்லி, ஹெலன் டேவிட்சன், தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா, கீதா ஜீவன் உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, வளர்மதி, தற்போதைய அமைச்சர் வளர்மதி, மற்றும் சரோஜா, நாடாளுமன்ற உறுப்பினர் பிரசிலா பாண்டியன் உள்ளிட்டோர் பெயரளவில் தங்களை வெளிக் காண்பித்திருக்கிறார்கள். தற்போதைய சட்டமன்றத்தில் அதிமுகவில் இருந்து 15 பேர், திமுகவில் 4 பேர், காங்கிரசில் விஜயதரணி என்று 20 பேர் சட்டமன்ற உறுப்பினர்கள். ஆனால் இதில் பல பேர் இன்னும் பார்வைக்கே வரவில்லை பிறகெங்கே அடையாளப்படுத்துவது.

ஆனால் காங்கிரஸ் போன்ற கட்சியில் தேசிய தலைமை, மாநில தலைமை என இரட்டை சவாலை சமாளிக்கும் விஜயதரணியை தெரியாமல் யாரும் இருக்க முடியாது. அதற்கு காரணம் அவர் தன்னை தனித்துவமாக தொடர்ந்து வளர்த்துக் கொண்டார். அடிக்கடி விஜயதரணி தன்னுடைய அரசியல் அதிகாரம் குறித்து சொல்லும் ஒன்று அதிகாரம் என்பது பணமோ ஊழலோ அல்ல. அது ஏழை மக்களுக்கு ஒரு தேவையை பூர்த்தி செய்துவிட்டு அவர்கள் முகத்தை பார்க்கும் போது வரும் மகிழ்ச்சி. அது தான் என்னை அரசியல் வாழ்க்கையில் தொடர்ந்து இயங்க வைக்கிறது. எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் எதிர்கொள்ள வைக்கிறது என்பார்.

ஆரம்ப காலகட்டங்களில் வழக்கறிஞராக பல பிரச்சினைகளை சந்தித்ததுண்டு. பிறகு அதை கடந்து வந்துவிட்டேன். ஆனால் இன்றும் தொடர்ந்து பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டே இருப்பது அரசியலில் தான். இதை அறிந்து உணர்ந்தால் மட்டுமே இங்கே பெண்கள் தனித்து நிற்க முடியும். ஆண்களுக்கு அரசியலில் கட்சி என்ற ஒன்று போதுமானது. ஆனால் பெண்களுக்கு கட்சியை தாண்டி மக்களோடு தொடர்புடையவர்களாக இருக்க வேண்டும். பிறகு அவர்களின் நம்பிக்கையை பெற வேண்டும். இது விஜயதரணிக்கானது மட்டுமல்ல பெண் அரசியல் தலைவர்கள் அனைவரும் சந்திக்கும் சவால் இது. அப்போது தான் கட்சியே கூட பெண் தலைவர்களை திரும்பிப் பார்க்கும். அதே போன்று மக்கள் ஆதரவு இல்லை என்றால் கட்சியே எவ்வளவு உச்சத்தில் ஒரு பெண் அரசியல் தலைவரை வைத்தாலும் அவரால் வெற்றி பெறுவது கடினம். அதனால் அதிகாரத்தை மக்களோடு பகிர்ந்தால் மட்டுமே பெண்களுக்கு அரசியல் எதிர்காலம் இருக்கும் என்று தன் அனுபவத்தில் இருந்து விஜயதாரணி பல முறை பகிர்ந்திருக்கிறார்.

கட்சி அலுவலகத்திற்கு பெண் தலைவர்கள் வந்தால் ஆண்கள் பார்க்கும் பார்வையே ஏன் இவர்கள் இங்கே வருகிறார்கள் என்ற பார்வை தான் பெரும்பாலான கட்சிகளில் உண்டு. ஆனால் வெட்கபட்டால், அசிங்கப்பட்டால் பெண்கள் அரசியலுக்கு வரும் தகுதியே இழந்துவிடுவார்கள். இதனுடன் தான் இந்த பயணத்தை தொடங்க வேண்டும். ஆண்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதனை கடந்துதான் பெண்கள் அரசியலில் நிற்க வேண்டி உள்ளது. தங்களது இருத்தலை செயல்பாட்டின் மூலம் உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டி உள்ளது. இதை தான் ஜெயலலிதாவிடம் இருந்தும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடமிருந்தும் விஜயதரணி ரோல் மாடலாக எடுத்துக் கொண்டதாக சொல்கிறார்.

உள்ளாட்சிகளில் 33 சதவித பெண்கள் இட ஒதுக்கீட்டில் வந்த பெண்கள் பலர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி இருக்கறார்கள். ஆனால் அவர்கள் வெளியே தெரிவதில்லை. சில பெண்களால் மட்டும் தான் இந்த 33 சதவிதத்தில் சுயமாக முடிவெடுத்து தனக்கான அதிகாரத்தை பயன்படுத்த முடிகிறது. பெரும்பாலான வீடுகளில் அப்பா, கணவர், சகோதரர் என உறவு முறையில் உள்ள ஆண்களிடமே அந்த அதிகாரம் உள்ளது. கையெழுத்து போடும் இடத்தில் மட்டும் அந்த பெண் தனக்கான பொறுப்பை செய்ய வேண்டிய நிலை தான் உள்ளது. இது குறித்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான பஞ்சாயத்து ராஜ் அமைப்பே பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.

நகரங்களில் ஓரளவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் தனது பொறுப்பை செய்வதற்கான புறச் சூழல் உள்ளது. ஆனால் கிராமப் புறங்களில் அப்படி இல்லை. கூட்டம், அலுவலக பணி, நிர்வாகம் தொடர்பான தாமதத்தை கூட கேள்வி எழுப்புவது தொடங்கி எல்லா பிரச்சினைகளிலும் குடும்பத்தினர் தான் முதல் ஆளாக அந்த பெண்ணை இழிவுப்படுத்தும் இடத்திலும், ஒடுக்கும் இடத்திலும் இருக்கிறார்கள். பெரும்பாலான பெண்களுக்கு வெளியில் கிடைக்கும் முக்கியத்துவம் வீட்டில் கிடைப்பதில்லை. இப்படி உள்ளாட்சி அமைப்புகளுக்குள்ளே ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கும் பெண்களுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினராக விஜயதரணியின் அரசியல் பிரவேசம் ஒரு முன் மாதிரியாக உள்ளது.

இந்த கட்டுரையை முடிக்கும் தருணத்தில் ஜெர்மனி நாடாளுமன்ற தேர்தலில் சான்சிலராக ஏஞ்சலா மெர்கல் நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். உலகளவிலும் பெண்களின் அரசியல் நகர்வு சற்று கவனம் ஈர்க்கிறது.

அரசியல் பழகுவோம்...

Sugitha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment