scorecardresearch

அரசியல் பழகுவோம் 9 : பெண் அறம் சார்ந்து நின்றால்..?

மத்திய அமைச்சர்களாக இருந்த ஜெயந்தி நடராஜன், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் கட்சி கொள்கையைத் தாண்டி அறம் சார்ந்து நின்ற போது நடந்தது என்ன?

அரசியல் பழகுவோம் 9 : பெண் அறம் சார்ந்து நின்றால்..?

சுகிதா

தமிழகத்தில் இருந்து மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்த இரண்டு பெண்கள் முக்கியமான அரசியல் ஆளுமை மிக்கவர்கள். ஒன்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜன். மற்றொருவர் சமூக நலத்துறை இணை அமைச்சராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன். முதலாமாவர் காங்கிரஸ். இரண்டாமவர் திமுக. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் மன்மோகன் சிங் தலைமையிலான அரசில் இவர்கள் இருவரும் அங்கம் வகித்தவர்கள்.

ஜெயந்தி நடராஜனின் தாத்தா பக்தவச்சலம் 1963 முதல் 1967 வரை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர். சுதந்திர போராட்ட வீரர். காங்கிரசில் முக்கிய பங்காற்றியவர். அதன் தொடர்ச்சியாக ஜெயந்தி நடராஜனுக்கும் வீட்டிலிருந்து அரசியல் ஆர்வம் தொடங்கி இருக்கலாம். 4 முறை மாநிலங்களவைக்கு தேர்நெதடுக்கப்பட்ட ஜெயந்தி நடராஜன் தன் தாத்தாவின் தமிழக அரசியலின் வேரை தொடாமல் டெல்லியோடு அரசியலில் ஒதுங்கி விட்டது ஏன் என்ற கேள்வி உள்ளது? மத்திய அமைச்சராக இருந்த போதும், காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த போதும் தமிழகத்தில் அவருக்கான இடத்தை வளர்த்துக் கொள்ளவே இல்லை.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையில் 2011 லிருந்து 2013 ம் ஆண்டு வரை அனுமதிகள் வழங்க தாமதப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் காங்கிரஸ் கட்சி மத்திய அமைச்சரவையிலிருந்து இவரை நீக்கியது. அதனுடன் காங்கிரசை விட்டு ஜெயந்திநடராஜன் வெளியேறினார். தன் மீதான குற்றச்சாட்டுகளை சட்டபடி சந்திக்க தயார் என்ற சவாலோடு தான் வெளியேறினார். சிலர் அவரை சோனியா காந்தியை பார்க்க சொன்னார்கள். ராகுல் மீதான கசப்பில் அதற்கு மறுத்த ஜெயந்தி நடராஜன் தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. 2014 தேர்தலுக்கு முன்பு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழகம் வந்தார். அப்போது ஜெயந்தி நடராஜன் பாஜகவில் இணையப் போகிறார். அவருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இது தான் என ஊடகங்கள் ஆருடம் சொன்ன போதும் மவுனமாக இருந்தார். 90 களின் மத்தியில் காங்கிரசில் இருந்து வெளியேறி மூப்பனார் ஆரம்பித்த தமிழ் மாநில காங்கிரசில் இணைந்தது போன்று, வாசன் ஆரம்பித்த தமிழ் மாநில காங்கிரசில் இணைய இருப்பதாக தகவல் மட்டும் தான் வந்தது.

காங்கிரஸ் கட்சிக்குள், அமைச்சரவைக்குள் எழுதப்பட்ட கடிதம் ஊடகங்களுக்கு கசிந்தது எப்படி என்ற கேள்வி தான் ஜெயந்தி நடராஜனுக்கு அமைச்சர் பதவியில் சிக்கலை உண்டாக்கியது. அப்போது அவர் ஒரு வார்த்தை சொன்னார்.  ’என் துறை சார்ந்து எடுக்கப்பட்ட முடிவுகள் எல்லாம் எனக்கு மேலே இருந்தவர்கள் ஆலோசனையில் தான் எடுக்கப்பட்டது’ என்றார். மத்திய அமைச்சரவையில் அவருக்கு மேலே பிரதமர் தான் இருக்கிறார். சுற்றுச்சூழலை பாதுக்காக்கும் நோக்கில் இந்திரா காந்தி, ராஜூவ் காந்தி வழியில் பணியாற்றியதாக அவர் குறிப்பிட்டார். சுற்றுச்சூழலுக்கென்ற தனி அமைச்சகம் தொடங்கிய இந்திரா காந்தியின் வழியில் என்றால் சரியாகத் தானே ஜெயந்தி நடராஜன் பணியாற்றி இருக்கிறார்.

பெரும் முதலீடு கொண்ட திட்டங்களுக்கு அனுமதி மறுத்தது குறித்து பேசிய ஜெயந்தி நடராஜன் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் அனுமதி வழங்க மறுத்ததற்காக அமைச்சரவையில் பல எதிரப்புகளை எதிர்கொண்டதாக குறிப்பிட்டார். நான் சட்டத்திற்கு புறம்பாக ஒன்றும் செய்யவில்லை அப்படி சட்டத்திற்கு புறம்பாக நான் செய்தது நிருபணமானால் தூக்கில் போடுங்கள் என்று ஆவேசமாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசினார். இன்று வரை அவர் மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்கு வழக்கு கூட இல்லை.
காங்கிரஸ் 2014 ம் ஆண்டு தேர்தலில் படுதோல்வி அடைந்து பாஜக ஆட்சி பொறுப்பேற்ற போது மோடி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குறிப்பிட்டது, ”கடந்தாட்சியை போன்று வேகத்தடை எல்லாம் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் இருக்காது .தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உடனுக்குடன் அனுமதி வழங்கப்படும்” என்றார்.

2012 க்கு பிறகு மிகப் பெரிய அவப்பெயரை சுற்றுச்சூழல் துறையில் காங்கிரஸ் சம்பாதித்திருந்த காலகட்டம் . கூடங்குளம், நியுட்ரினோ, நிலக்கரி சுரங்கம் என சூழலுக்கு எதிரான பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்ட நேரத்தில் காங்கிரஸ் மீது இப்படியான குற்றச்சாட்டுகள் என்றால் அது முரணாகத் தான் தெரியும். ஆனால் வேகத்தடை போட்டு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் தாமதப்படுத்தினார் என்று மறைமுகமாக ஜெயந்தி நடராஜனை தான் பிரகாஷ் ஜவடேகர் சொன்னார். அதுமட்டுமா ”மேக் இன் இந்தியா ” திட்டத்தை அறிமுகப்படுத்தும் போது பிரதமர் மோடியும் இதனை குறிப்பிட்டார். ஏற்கனவே மக்கள் எதிர்ப்பு திட்டங்கள் பல காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது என்றாலும் அதனை விட கொடியதாக தான் இருந்திருக்கும் ஜெயந்தி நடராஜன் மறுத்த திட்டங்கள்.

மக்கள் பக்கம் நின்றதற்காக 30 ஆண்டுகள் காங்கிரசில் இருந்த ஒருவர் மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுகிறார் என்பது பாலினம் தாண்டி பன்னாட்டு நிறுவனங்களின் அழுத்தங்கள் எத்தகையது என்பதை உணர்த்துகிறது. ஜெயந்தி நடாரஜனின் சொந்த பணியை தாண்டி அவரது தாத்தா மூத்த காங்கிரஸ் உறுப்பினர். அந்த மரபில் வந்தவர்களுக்கே இந்த கதி தான். ஒரு வேலை ஜெயந்தி நடராஜன் காங்கிரசில் ஒரு கோஷ்டி அமைத்து அதில் சில சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைத்துக் கொண்டு அழுத்தம் கொடுத்திருந்தால் வேறு மாதிரி அரசியலை கையாண்டிருக்க முடியும் . ஆனால் எத்தனை ஆண்டு அனுபவம் என்றாலும் அரசியல் கட்சிகளில் பெண்களின் இடம் என்பது தனி நபர் சார்ந்தே இருக்கிறது. அவர்களுக்காக கட்சிக்குள் துணைக்கு கூட யாரும் நிற்பதில்லை பிறகெங்கே குழுக்கள் எல்லாம் அமைப்பது.

மத்திய அமைச்சராக இருந்தால் கூட தனக்கு மேலே இருப்பவர்களின் ஆலோசனையில் தான் இங்கே முடிவுகள் எடுக்கப்படுகிறது என்பதும் அதிலும் பெண்ணாக இருந்தால் மேலே இருப்பவர்களின் அதிகாரமும் அழுத்தங்களும் கூடுதலாக இருக்கும் என்பதும் ஜெயந்தி நடராஜன் விவகாரத்தில் தெளிவாக புலப்பட்டது. பெண்கள் எத்தகைய அதிகாரங்களில் இருந்தாலும் சார்பு நிலை என்பது அதிகார அடுக்குகளுக்குள் ஒழிந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. சில நேரங்களில் இப்படி பழிகடாக்கப்படுவதும் அரங்கேறுகிறது. அதிகாரத்தின் அனைத்து எல்லை கோடுகளிலும் பெண்களின் அரசியல் என்பது நிச்சயமற்ற ஒன்றாகவே உள்ளது.

அதே போன்று ஜெயந்தி நடராஜன், இந்திய வணிக தொழில் கூட்டமைப்பின் பரிந்துரையில் 2013 ம் ஆண்டு எம்பிக்கள் குழு ஒன்று இலங்கை செல்ல இருந்தது. அப்போது ஈழ மக்களை வருத்தத்திற்குள்ளாக்கும் இந்த பயணத்தை ரத்து செய்யுங்கள் என்று கேட்கப்பட்டது. பங்கேற்க இருந்த எம்பிக்களுக்கு தன் சொந்த விருப்பத்தில் தனிதனியாக கடிதம் ஒன்றை எழுதினார். இசைப்பிரியா படுகொலை நிருபிக்கப்பட்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் ஒரு முறை குறிப்பிட்டார். காங்கிரசில் இருந்தாலும் ஈழ விவகாரத்தில் ஜெயந்தி நடராஜன் மனசாட்சியோடு நடந்த கொண்ட தருணங்கள் இவை. ஆனால் இப்படியான தனி நபர் விருப்பங்கள் அவருடைய சொந்த கருத்து என்று எளிதில் கடந்து கட்சியின் பெரும்பான்மையாளர்கள் அதிகாரத்தின் பக்கம் நிற்பார்கள்.

திமுகவின் சுப்புலட்சுமி ஜெதீசன் மத்திய சமூக நலத்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்தவர். பெரியார் மண்ணாண ஈரோட்டு பெண்மணி என்பதாலயே பெண்ணுரிமை சார்ந்த கருத்துகள் அவரிடம் உண்டு. காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவர் சுப்புலட்சுமி . அவரது கணவர் ஜெகதீசன் திராவடர் இயக்க குடும்ப பின்னணி. திருமணத்திற்கு பிறகு சுப்புலட்சுமியும் திராவிட இயக்க சிந்தனைகளுக்குள் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

அரசியலில் அதிமுகவில் இணைந்து 1977 ம் ஆண்டு மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் ஆனவர் கைத்தறி துறைக்கு அமைச்சராகவும் ஆனார். முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினரானவர் அமைச்சராகவும் ஆனதற்கு அவரது வாசிப்பின் பால் கொண்டிருந்த தனித்துவம் காரணமாக இருந்திருக்கலாம். பிறகு 1980 களில் அதிமுகவில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்தார் .

தமிழக அரசியல் வரலாற்றில் தடா சட்டத்தில் 1992 ம் ஆண்டு சுப்புலட்சுமி ஜெகதீசனை கைது செய்தது ஜெயலலிதா அரசு. கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் பிறகு நிரபராதி என விடுதலை ஆனார். 1996 ம் ஆண்டு இவர் போட்டியிட்ட மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி வினோத வரலாற்றை பெற்றது . திமுகவிற்குள் இவரை தோற்கடிக்க முடிவு செய்து 1030 சுயேட்சை வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டார்கள். மொடக்குறிச்சியில் விவசாயப் பிரச்சினை தீவிரமாக இருந்த சமயம் அத்தனை சுயேட்சை வேட்பாளர்களையும் தாண்டிபோட்டியிட்ட 1033 பேரில் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் பெற்ற வெற்றியானது அவரது அரசியல் பணியில் மைல்கல். அதன் பிறகு சமூக நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். திருச்செங்கோடு நாடாளுமன்றத் தொகுதிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மத்திய சமூக நலத்துறை இணை அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.

பெற்றோர்களை கவனிக்க மறுக்கும் பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறை தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் வதிக்கப்படும் என்று அறிவித்தார். சமூக நீதி தளத்தில் முதியோர்களை பாதுகாக்க மாவட்டந்தோறும் முதியோர் இல்லம் கொண்டு வந்ததும் இவரே. அதிகாரிகள் மக்களுக்கும் அரசுக்கும் பாலமாக இருக்க வேண்டும் என்று அவர் மத்திய அமைச்சராக இருக்கும் போது பேசினார். அவர் பேசியதை அவர் பக்கத்தில் இருந்த அதிகாரிகள் ரசித்திருக்க மாட்டார்கள் .

திமுக என்னும் பேரியக்கித்தின் முதல் கட்ட நிர்வாகிகளில் ஒருவர் என்று சொல்லும்படி கழக துணை பொதுச் செயலாளர் பொறுப்பு , தொப்புள் கொடி உறவுகளின் உரிமை மீட்பு அமைப்பான டெசோ உறுப்பினராகவும் இருக்கிறார் . டெசோ மாநாட்டில் தமிழினத்தை அழிக்க மொழியை அழிக்கும் வேலையை இலங்கை அரசு செய்தது என்று குற்றம்சாட்டினார் .
மதச்சார்பின்மை, நீட் தேர்வு, விவசாய பிரச்சினை, மாநில உரிமை , சமூக நீதி என எவை குறித்தும் மோடி அரசின் மீதான விமர்சனத்தை தைரியமாக முன் வைப்பவர் சுப்புலட்சுமி ஜெகதீசன் . இப்படி தன் கருத்தை எல்லா இடத்திலும் வெளிப்படையாக பேசியவர்.

ஓ.பன்னீர் செல்வத்தின் தர்ம யுத்த பிரவேசத்தின் போது நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவளிக்கும் என்று பேசியது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் சொன்னதால் சர்ச்சையாக வில்லை. அதற்கு மறுப்பு தெரிவித்து எதிர்கட்சிதலைவர் ஸ்டாலின் பேசியது தான் சர்ச்சையை ஏற்படுத்தியது. கூடவே கட்சியில் இது போன்ற கருத்துகளை சொல்லக் கூடாது என்று கண்டிப்புக்கும் உள்ளாக்கப்பட்டார் . ஏதோ போகிற போக்கில் இப்படி ஆன கருத்தை சுப்புலட்சுமி ஜெகதீசன் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. பத்திரிகையாளர்களை அழைத்து அவர் அந்த கருத்தை சொன்ன போது அது ஒரு அரசியல் கணக்கோடு தான் சொல்லி இருப்பார். ஆனால் அவர் கருத்து சரி தவறை தாண்டி அவரை சொல்ல வைத்தது எது என்பதும் அதனை ஸ்டாலின் மறுத்ததற்கு பின்னணி என்ன என்பதை ஆராய்வதோடு சுப்புலட்சுமி பலிகடாவாக்கப்பட்டார் என்பது தான் அந்த சம்பவம் உணர்த்தும் நியதி. இந்த சம்பவத்திற்கு பிறகு சுப்புலட்சுமி ஜெகதீசன் எதற்கும் இப்போதெல்லாம் அவர் கருத்து சொல்வதே இல்லை.

அரசியலில் பெண்கள் எப்போதாவது எடுக்கும் இது போன்ற தனித்துவமான அடையாளங்களுக்கு கட்சி எந்தளவிற்கு துணையாக இருக்கிறது என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. அல்லது கட்சி கோட்பாட்டை மீறி அறம் சார்ந்தோ, ஜெயந்தி நடராஜன் போன்று சட்டத்தின்பால் நின்றால் அவர்கள் பலிகடாவாக்கப்படுவார்கள். இதன் மூலம் அவர்களது அரசியல் எதிர்காலம் கேள்விக் குறியாக்கப்படும். ஆனால் குறிப்பாக பாஜக மற்றும் அதற்கு இசைவான அதிமுகவில் உள்ள ஆண்கள் ஏன் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகாக்களை நாணயம் குறைவாக பேசி இருந்தாலும் அது அவருடைய சொந்த கருத்து என்ற நிலைப்பாட்டோடு கடந்து போய்விட முடியும். அங்கே கட்சி மேலிடம் நடவடிக்கை, கண்டிப்பு எல்லாம் இல்லை.

அரசியலில் ஒரு ஆண் வளர்ந்தால் சாதுர்யம், ராஜதந்திரம் என்றும் பெண் வளர்ச்சியை தவறான வழியில் முன்னேறினாள் என்பதும் காலம்காலமாக சொல்லக் கூடிய ஒன்று தான். அப்படி தமிழக அரசியலில் தற்போதிருக்கும் பெண் ஆளுமைகள் பெண் என்பதற்காக எதிர்கொண்ட சவால்கள் என்ன அடுத்த வாரம் பார்க்கலாம்.

அரசியல் பழகுவோம்

Stay updated with the latest news headlines and all the latest Opinion news download Indian Express Tamil App.

Web Title: Get involved in politics if the girl depends on the charity