Advertisment

அரசியல் பழகுவோம் 8 : அரசியலுக்கு நன்மதிப்பு மட்டும் போதுமா?

அரசியலில் நன்மதிப்பு மட்டும் போதுமானதா? என்பதை கனிமொழி எம்.பி அவருக்குள் கேள்வி கேட்க வேண்டியதும் அவசியம் என்கிறார், சுகிதா

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kanimozhi, கனிமொழி

kanimozhi, கனிமொழி

சுகிதா

Advertisment

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் இளைய மகள் கனிமொழி கருணாநிதி. வணிகவியல் படித்த இவருக்கு இதழியல்,பத்திரிகைதுறை மீதான ஆர்வம் இயல்பகாவே வந்தது. ”கருவரை வாசனை ” என்று அப்பாவைப் போன்று கவிதை, கட்டுரை எழுதியவருக்கு அரசியல் அப்பாவைப் போன்று இயல்பில் வந்ததா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். போராட்டத்தை உறவுகளிடம் இருந்து தொடங்கிய கனிமொழி தன் இருத்தலை உணர்த்தவே அதிகாரம் தேவைப்பட்டது. அப்படிதான் அரசியலுக்குள் நுழைகிறார். தீவிர பத்திரிகை பணி, நண்பர்களுடன் இலக்கிய கூட்டம், நண்பர்கள் கல்லூரிகளில் நடத்தும் நாடகங்களுக்கு செல்வது என்றிருந்தவர் திடிரென மாநிலங்களவை உறுப்பினராகிறார்.

சுபமங்களா இதழில் கவிதை ஒன்று கனிமொழி கருணாநிதி என்று பெயர் தாங்கி வருகிறது. அது கவிதையே இல்லை என்று ஜெயமோகன் ஒரு பதிவு எழுதுகிறார். கூடவே அப்பாவின் பெயரில் அடையாளம் தேடுகிறார் கனிமொழி என்று விமர்சனம் வேறு. கனிமொழி கருணாநிதி என்பது அவரது பள்ளி சான்றிதழ்களில் உள்ள அதிகாரப்பூர்வ பெயர் தான் . கனிமொழி தன் பெயரை எழுதுவதற்கே விமர்சனங்களை எதிர்கொண்டவர். பிறப்பில் இருந்து குடும்ப சூழல் போராட்டம், இயக்கம், கொள்கை என்று அரசியலை சுற்றித் தான் அவருக்கு இயல்பு வாழ்க்கையே இருந்தது.

வழக்கமாக அரசியல் தலைவர்கள் வீட்டில் ஆண்கள் வாரிசாக இருக்கும் போது பெண்களுக்கு வாய்ப்பு குறைவாகத் தான் கிடைக்கும். அதை மீறி பெண் வாரிசுகள் தங்களை அரசியலில் ஈடுபடுத்த தனி திறன்களை கையாள வேண்டியது எல்லா கால கட்டங்களிலும் அவசியமான ஒன்று. வாரிசு அரசியலை மக்கள் விமர்சிக்கும் அதே நேரம் தேர்தல் அரசியலில் தெளிவாக அரசியல் வாரிசுகளை வெற்றிபெற வைப்பதிலும் மக்கள் வல்லவர்கள் . நேருவுக்கு இந்திரா பிறக்காமல் ஆண் குழந்தை பிறந்திருந்தால் இந்திரா காந்தி பிரதமர் ஆகியிருக்க முடியுமா என்பது கேள்வி குறிதான். இப்போது கூட பிரியங்கா தீவிர அரசியலுக்கு வராமல் இருப்பதற்கு ராகுல் காந்தி ஒரு வகையில் காரணமாக இருக்கிறார்.

இப்படியான சவால்களும், ராஜதந்திரங்களும், சாதுர்யங்களும் குடும்ப வாரிசுகள் அரசியலுக்குள் நுழையும் போது அதிகாரப் போட்டியாக மாறுவது வெகு இயல்பு. இவை அனைத்தையும் விட கூடுதலாக இரட்டை சவாலோடு அரசியல் பயணத்தில் களமிறங்கியவர் கனிமொழி. அரசியலில் பெண் உருவத்தில் ஆணாக இருந்தால் தான் பெண்களே அரசியலில் வெற்றி பெற முடியும் என்று சொல்வதுண்டு. இதை தான் இந்திரா தொடங்கி ஜெயலலிதா, மம்தா, மாயாவதி செய்தார்கள், செய்கிறார்கள்.

கனிமொழியின் அரசியல் இதிலிருந்து மாறுபடுகிறது. நேரடி அரசியலுக்கு அவர் வந்து பத்தாண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் மாநிலங்களவை உறுப்பினர், திராவிட முன்னேற்ற கழகத்தின் மகளிர் அணி செயலாளர் என்பதை தாண்டி அதிகார அரசியலுக்குள் அவர் நுழையவில்லை. திமுகவின் போராட்ட களங்களில் முன் நிற்கிறார் கனிமொழி. மகளிரணி தாண்டி அவருக்கு கொடுக்கப்படும் கழகத்தின் பொறுப்புகள் என்ன என்பது பல கேள்விகளை எழுப்புகிறது. மறைந்த துணை பொதுசெயலாளர் சற்குண பாண்டியன் பொறுப்பு இவருக்கு கொடுக்கப்பட போகிறது என்று கூறப்பட்டது. ஸ்டாலின் செயல் தலைவரானால் அவரிடம் இருந்த பொருளாளர் பதவி கனிமொழிக்கு கொடுக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இரண்டுமே கனிமொழியை தேடி வரவில்லை.

திமுக போன்ற பாலின சமத்துவம் அடிப்படையில் சற்குண பாண்டியனுக்கு கொடுக்கப்பட்ட முதல் கட்ட தலைவர்கள் பட்டியலில் கனிமொழிக்கு இடமில்லாமல் போனதற்கு காரணம் அவர் அரசியல் வாரிசு என்பது தானா? இல்லை வேறு காரணமா? அப்படி பார்த்தால் அவர் அரசியலில் விசிட்டிங் கார்டு பெறுவதற்கு வேண்டுமானால் அவரது தந்தை அரசியல் உதவி இருக்கலாம். அதன் பிறகு அவருடைய 10 ஆண்டுகால அரசியல் பயணத்தில் வாரிசு என்பதற்காக பெற்றதை விட இழந்தது அதிகம். அது அமைச்சர் பதவி தொடங்கி கட்சி பதவி வரை அடங்கும். அடிப்படை உறுப்பினர் அட்டை இல்லாமல் பொதுக்குழு கூடி பொது செயலாளர் ஆகும் காலத்தில் 10 ஆண்டு காலமாக தீவிர அரசியலில் இருந்தும் பெற்றதை விட இழந்தது அதிகம்.

அப்பா மிகப் பெரிய அரசியல்வாதி, 5 முறை முதலமைச்சர், மத்தியில் ஆட்சிக்கு வருபவர்களுக்கு சவால் விட்டவர் என்ற பிம்பங்களை தாண்டி சட்டம் கடமையை செய்ய கனிமொழி 2 ஜி அலைகற்றை விவகாரத்தில் சிறை சென்றார். ஆனால் நீரா ராடியாவால் சிறை தண்டனை, விசாரணையிலிருந்து தப்ப முடிகிறது. அரசியல் சதுரங்க விளையாட்டிற்கு பரிட்சயப்படாத கனிமொழியால் அதனை ஈடுகொடுக்க முடியவில்லை. டெல்லி லாபியின் வீச்சை கனிமொழி உணர்ந்த காலம். ஆண்கள் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கும் போது அதனை ஊழலாக மட்டும் பார்க்கும் சமூகம் பெண்கள் செய்யும் போது ஒழுக்கம் சார்ந்தும் கேள்வி எழுப்புவது ஏற்றுக் கொள்ளமுடியாத ஒன்று. கனிமொழி ஊழல் செய்தாரா என்பதை தாண்டி அவர் மீது ஒழுக்கம் சார்ந்து ஊடகங்கள் தொடங்கி சமூகத்தில் அனைவரும் வரிந்துக் கட்டிக் கொண்டு எதை பிரச்சினை ஆக்கினார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. பெண்களின் ஒழுக்கம் சார்ந்து தொடர்ந்து பொது வெளிக்கு வரும்போதெல்லாம் தாக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இதை தான் கருணாநிதியின் மகளாக இருந்தும் கனிமொழியும் சந்தித்தார்.

கனிமொழிக்கே அரசியலில் இந்த நிலை என்னும் போது சாமன்ய வீட்டு பெண்கள் அரசியலுக்கு வருவது என்பதும் அவர்கள் ஒழுக்கம் சார்ந்து சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். அப்படி என்றால் ஊழல் செய்யும் பெண்கள் குறித்து கூட விமர்சனங்களே வைக்கக் கூடாதா என்று கேள்வி எழலாம். ஊழல் செய்தால் அந்த ஊழல் குறித்து மட்டும் விமர்சனம் எழுந்தால் சரி, அது பொது அறச்சீற்றத்தின் பால் வருவது. மாறாக இங்கே பாலினம் சார்ந்து தான் வருகிறது. பாலின தடைகளையும் பாகுபாடுகளையும் தாண்டி அரசியலில் பெண்கள் முன்னேறுவது என்பது எத்தனை நாகரிக மாற்றங்களை கண்டாலும் எட்டாகனி தான்.

நீதிமன்றத்தையும், சட்டத்தின் மாண்புகளையும் மதித்து நடக்கும் நன்னடத்தை கொண்டிருப்பதாலும், அலுவலக ரீதியாக பயணம் அமைந்திருப்பதால் வெளிநாடு செல்ல அனுமதி வழங்குகிறோம் என்று கனிமொழிக்கு சமீபத்தில் நீதிமன்றம் நன்னடத்தை அடிப்படையில் ருவாண்டா செல்ல அனுமதி வழங்கியது. அரசியலில் நன்மதிப்பு மட்டும் போதுமானதா? என்பதை கனிமொழி அவருக்குள் கேள்வி கேட்க வேண்டியதும் அவசியம்.

2ஜி வழக்கில் கனிமொழி கைதான மறுநாள் தேசிய நாளிதழ் ஒன்று திகாரில் கனிமொழியின் சிறை அறை எப்படி இருக்கும் என்று படம் வரைந்து பாகம் குறித்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்து நாளேட்டின் தொழில் சங்க தலைவராக சமீபத்தில் கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட்டார். தான் பணியாற்றிய நிறுவனத்தின் தொழிற்சங்க தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தொழிற்சங்க தலைவர் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்படுவது, பார்ப்பனர்கள் நிறுவனத்தில் சூத்திரர் தலைமையில் தொழிற் சங்கம் என்பதை எல்லாம் தாண்டி அந்த பொறுப்புக்கு கனிமொழி போட்டி போட்டதற்கு காரணம் சக போட்டி தேசிய நாளிதழுக்கு பதில் கணக்கு தீர்க்க வேண்டும் என்று கனிமொழி நினைத்தாரோ என்னவோ. திமுக தலைவர்கள் என்.வி.என் சோமு, ராமஜெயம் உள்ளிட்டோர் இந்த பொறுப்பை ஏற்கனவே பெற்றிருந்தாலும் பெண்ணாக கனிமொழி தான் இந்த பொறுப்பிற்கு முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருடைய பத்திரிகை அனுபவம், பத்திரிகையாளர்களுடன் நல்ல நட்பு அவருக்கு இந்த பொறுப்பை பெற்றுத் தந்துள்ளது.

தமிழக அரசியலில் இருந்து தான் கனிமொழி, ஜெயலலிதா என இரண்டு பெண்கள் சிறை சென்றுள்ளார்கள். குஜராத்தின் முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி குஜராத் கலவர வழக்கில் சிறை சென்றுள்ளார். மற்ற மாநிலங்களில் இது வரை அப்படி முக்கிய பெண் தலைவர்கள் சிறை செல்லவில்லை. அப்படி என்றால் மற்ற மாநில பெண் அரசியல் தலைவர்கள் ஊழல் செய்யவில்லையா? சோனியா மீது டெக்கான் ஹெரால்டு குற்றச்சாட்டு, மம்தா பானர்ஜி மீது சாரதா சிட்பண்டஸ் குற்றச்சாட்டு, மாயாவதி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த தாஜ் ஓட்டல் வழக்கு, ஷீலா தீட்சித்தின் காமன்வெல்த் ஊழல், பங்கஜம் முண்டேவின் கடலைமிட்டாய் ஊழல் வழக்கு, சுஷ்மா சுவராஜ் மீது சுரங்க ஊழலில் ரெட்டி சகோதரர்களுக்கு உதவியது, லலித் மோடிக்கு உதவிய குற்றச்சாட்டு என்று மற்ற மாநில அரசியல் பெண் தலைவர்கள் மீது குற்றச்சாட்டுகளோடே நிற்கின்றன வழக்குகள்.

நீட் தேர்வு, சமூக நீதி கொள்கைகள், மாநில உரிமை சார் பிரச்சினைகள், மொழிக் கொள்கை, விவசாய பிரச்சினை, பெண்கள் உரிமை என்று நாடாளுமன்ற உறுப்பினராக கனிமொழியின் விவாதங்கள் அனைத்தும் முக்கியமானவை. அவரது உரைகள், விவாதங்கள், கேள்விகள் ஒடுக்கப்பட்டோரின் பக்கம் நிற்பதை உணர்த்தக் கூடியது. ஜிஎஸ்டி மூலம் புதிய இந்தியா பிறந்திருக்கிறது என்று பேசிக் கொண்டிருந்த தருணத்தில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் பொருட்களுக்கு 5% முதல் 12% வரை ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டிருப்பதை நுட்பமாக கவனித்து அவர்களுக்காக குரல் கொடுத்தார். பழைய இந்தியாவில் சுங்க வரி உள்ளிட்டவை மாற்றுத்திறனாளிகளுக்கு நீக்கப்பட்டதையும் குறிப்பிட்டார்.

மாற்றுத்திறனாளிகளுக்காக குரல் கொடுப்பவர் என்பதை போன்று கடந்த திமுக ஆட்சியில் நலிந்து வரும் நாட்டுப்புற கலைஞர்களை மேல் தூக்கிவிட சங்கமம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தது கனிமொழிக்கு தனித்துவ அடையாளத்தை கொடுத்தது. ஒவ்வொரு அரசியல் தலைவரும் சொல்லிக் கொள்ளும் படி ஒரு பிரச்சனையில் தொடர்ந்து ஒற்றை நிலைப்பாடோடிருக்க முயல்வதுண்டு. அந்த வகையில் கனிமொழி பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றுவதில் கூடுதல் கவனமாக இருக்கிறார். சமீபத்தில் தனது கட்சி நிர்வாகிகளோடு தலைநகர் டெல்லியில் திமுக மகளிரணி நடத்திய போராட்டம் கனிமொழிக்கு தேசிய அளவில் கவனம் ஈர்த்து தந்தது. அவரது தோழியும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மகள் சுப்ரியா சூலே, காங்கிரஸ் உறுப்பினர் ரேணுகா சவுத்ரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜா உள்ளிட்டோர் இணைந்து டெல்லியில் பேரணி நடத்தியதோடு விரைந்து 33 சதவித மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற கோரிக்கை வைத்தனர். மகளிர் மசோதாவிற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் யோகி ஆதித்யநாத் உத்திர பிரதேச முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட சூழலில் இந்த பேரணியை கனிமொழி நடத்தியது தேசிய ஊடகங்களால் பெரிதும் விவாதிக்கப்பட்டது.

1996 ம் ஆண்டு தொடங்கி நாடாளுமன்றத்தில் விவாதம் எழுவதும் அடங்குவதுமாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா உள்ளது. 2008ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ரேணுகாசவுத்ரி, அம்பிகா சோனி, கனிமொழி, சுப்ரியா சூலே உட்பட பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கைகளை கோர்த்து பாதுகாப்பு அளித்து சட்டத்துறை அமைச்சர் பரத்வாஜை மகளிர் மசோதாவை தாக்கல் செய்ய வைத்தனர். குடியரசு துணை தலைவரும், மாநிலங்களவை சபாநாயகருமான ஹமித் அன்சாரியை தாக்க மசோதாவிற்கு எதிரான உறுப்பினர்கள் முயற்சித்ததும் ஐக்கிய ஜனதா தளம் சரத்யாதவ், சமாஜ்வாதி கட்சி முலாயம்சிங் யாதவ் அனைவரும் மசோதாவை கிழித்து எறிந்ததும் நாடாளுமன்றத்தின் மறக்க முடியா ஜனநாயக பேரிழிவுகள். நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைத்த நாள் முதல் கனிமொழி 33 சதவித மகளிர் இட ஒதுக்கீட்டிற்கு குரல் கொடுத்து வருகிறார். நில அபகரிப்பு மற்றும் இழப்பீடு மசோதாவிற்கு அவசர சட்டம் மூன்றாவது முறையாக மோடி அரசு கொண்டு வந்த போது அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஒரு மித்த கருத்தை எட்ட முயற்சி செய்தனர். அந்த கூட்டத்தில் பங்கேற்று விட்டு வெளியே வந்த கனிமொழி, வழக்கமாக நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவாதிக்க கூடிய மசோதாக்கள் பட்டியலிடப்படும் . அதில் பெயரளவிற்காகவாவது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இடம் பெறும். ஆனால் தற்போதைய அரசு நில அபகரிப்பு மசோதாவை நிறைவேற்றினால் போதும் என்று நினைக்கிறது. மகளிர் மசோதாக்களை பற்றி பெயரளவிற்கு கூட கவலை படாதது வருத்தமளிக்கிறது என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். பெண்ணுக்கு சொத்துரிமை, நல திட்டங்கள் திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டாலும் பெண்களுக்கான ஒதுக்கீடுகள், பெண் வேட்பாளர் நிறுத்துதல் உள்ளிட்டவற்றில் திமுக கட்சிக்குள் அவர் உட்பட அவரால் எந்தளவிற்கு குரல் கொடுத்து பெற முடிந்தது என்பதும் விமர்சனத்துக்கு உட்பட்டதே.

பிரதமர் மோடியின் தத்தெடுப்பு திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவெங்கடேசவரபுரம் கிராமத்தை கனிமொழி தத்தெடுத்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் பாலம் கட்ட, பள்ளி கட்ட, மருத்துவமனை கட்ட உதவுகிறார். தேசிய மயமாக்கப்பட்ட வங்கியை கொண்டு வருகிறார். இதெல்லாம் தாண்டி அவருக்கு அரசியலுக்கு தேவையான அடிப்படை அம்சங்களை அவர் உருவாக்கிக் கொள்ளவில்லை என்ற விமர்சனத்தில் உண்மை இல்லாமல் இல்லை. தமிழகத்தில் அரசியலில் பெண்களின் பங்கு மிக குறைவாகத் தான் உள்ளது. அந்த சூழ்நிலையில் கூட இத்தனை ஆண்டுகளில் கனிமொழி தனக்கான ஒரு இடத்தை உருவாக்க முடியவில்லை. அவரால் அரசியல் ரீதியான கருத்துக்களையோ, எதிர்வினைகளையோ சுதந்திரமாக எடுத்து வைக்க முடியவில்லை. திமுக போன்ற பேரியக்கத்தில் இருந்து அவர் முழு உரிமையோடு அரசியலை கையாள்கிறார் என்று சொல்ல முடியவில்லை. டெல்லி பக்கம் இப்போதைக்கு போதும் தமிழகத்தை அண்ணன் பார்த்துக் கொள்வார் என்று தான் ஒதுங்கி இருக்கிறார். அதனால் தான் அண்ணன் ஸ்டாலின், தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்று பொது கூட்டங்களில் பேசுகிறார். தனக்கு தமிழக அரசியலில் என்ன இடம் என்பதை கனிமொழி பரீசிலிக்க வேண்டியதும் அவசியம். ஜெயலலிதாவிடம் பிடித்தது அவருடைய துணிவு என்று குறிப்பிடும் கனிமொழி, ஜெயலலிதா இல்லாத தமிழக பெண் அரசியல் களத்தில் கூட இப்போது கனிமொழியால் களமாட முடியாமல் தடுப்பது எது? கனிமொழியை போன்று தமிழக அரசியலில் சாதிப்பதற்கு இப்போதிருக்கும் சூழ்நிலையில் அடுத்த கட்ட பெண் தலைவர்கள் யார் யார் இருக்கிறார்கள்.

அரசியல் பழகுவோம்...

Mk Stalin Dmk Sugitha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment