Advertisment

அரசியல் பழகுவோம் 14 : ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்குரல்

காட்டன் புடவை, ஒரு சில்வர் டிபன் பாக்சில் வீட்டில் சமைத்த சோறு, குழம்பு, பொறியலுடன் பேருந்தில் ஏறி சட்டமன்ற வாசலில் இறங்கும் எளிமையை வியக்கத்தான் வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Balabharathi

சுகிதா

Advertisment

ஒடுக்கப்பட்டவர்களுக்கான போராட்ட குரலாய் களத்திலும் அவர்களுக்கான பிரதிநிதித்துவ குரலாய் சட்டமன்றத்திற்குள்ளேயும் உரிமைக்குரல் எழுப்புபவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி. உலக மயமாக்கல் எதிர்ப்பு, பன்னாட்டு நிறுவனங்கள் என்பது கூடாது. சமமான வளர்ச்சி, பாலின சமத்துவம், சாதி ஒழிப்பு, தீண்டாமை வன்கொடுமை, மனித உரிமை மீறல் உள்ளிட்ட எல்லாவற்றிலும் பாலபாரதியின் பேச்சும் மூச்சும் கலந்திருக்கும். மாதர் சங்கம், விவசாய சங்கங்கள், அங்கன்வாடி என்று எங்கெல்லாம் பிரச்சினையோ அங்கெல்லாம் போராட்டம் என்று தினம் ஒரு போராட்டக் களத்தில் நிற்பவர் பாலபாரதி.

காட்டன் புடவை, ஒரு சில்வர் டிபன் பாக்சில் வீட்டில் சமைத்த சோறு, குழம்பு, பொறியலுடன் பேருந்தில் ஏறி சட்டமன்ற வாசலில் இறங்கும் எளிமையை பார்த்து வியக்கத்தான் வேண்டும். ஆடிக் கார்களுக்கு மத்தியில் அவ்வளவு ஏன் கம்யூனிஸ்ட்டுகளின் டாடா சுமோக்கள் அளவிற்கு கூட இல்லாமல் சென்னை மாநகர பேருந்தில் ரப்பர் செருப்பு கால்களுடன் சட்டமன்றத்திற்கு சென்ற ஒரே எம்.எல்.ஏ இவர் தான். தொடர்ந்து 15 ஆண்டுகாலம் அதாவது மூன்று முறை எம்.எல் ஏ. பதவி இருந்தும் இதுவரை தனது அத்தியாவசிய தேவையை தாண்டி எந்த சலுகைகளையும் அரசு செலவில் பெற்றதில்லை.

திண்டுக்கல் அருகே கதிரணம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். சிறு வயதில் இருந்தே வாசிப்பின் மீதான காதலும், பொதுவுடைமை கொள்கைகள் மீதான ஈர்ப்பும் அவரை அரசில் களத்திற்கு கொண்டு வந்தது. பாலபாரதி அங்கன்வாடி ஆசிரியராக மாதம் 130 ரூபாய்க்கு பணியாற்றியவர். ஊதிய உயர்வு கோரி அவர் நடத்திய போராட்டம் அவரை முழு நேர கட்சி பணிக்கு அங்கன்வாடி வேலையை ராஜினாமா செய்துவிட்டு வரச் சொல்லி கட்சியின் அழைப்பின் பேரில் அரசியலுக்கு வர காரணமாய் அமைந்தது. அதன் பின்னர் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினராக 2001,2006 மற்றும் 2011 ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவருடைய சட்டமன்ற உரைகள் பெரும்பாலும் அடிப்படை உரிமைகளுக்காக போராடும் சாமான்யர்களுக்கானதாய் இருக்கும்.

சாமான்ய குரலில் தரவுகளோடு, கள ஆய்வுகளோடு தான் பேச வந்த தலைப்பை செவ்வனே பேசுவதில் பாலபாரதியின் பேச்சுக்கே ஈடு கொடுக்க யாராலும் முடியாது. உதவியாளர்கள் சொல்வதையும், வந்த கோரிக்கை மனுவையும், அதிகாரிகளிடம் பெற்ற செவி வழி தகவலையும் முன்வைத்தெல்லாம் அவர் சட்டமன்றத்தில் எந்த கோரிக்கையும் வைக்க மாட்டார். முதல் ஆளாக போராட்ட களத்தில் நின்றுக் கொண்டிருப்பார், தண்ணீர் வரவில்லை என்றால் அந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்து அதனை சட்டமன்றத்தில் பேசி அது ஆட்சியாளர்களால் நடைமுறைக்கு வந்த உடன் அதற்கு நன்றி தெரிவிக்கும் போது, இந்த பிரச்சினை என் தொகுதியில் இருந்தது இதற்காக நான் சட்டமன்றத்தில் பேசினேன். இப்போது அதற்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது என்று ஒரு போதும் நான், என் தொகுதியில் என்னால் இது ஆனது என்று அவர் பேசியதில்லை.

பிரச்சினைக்கு தீர்வு கிடைத்ததும் அந்த பிர்ச்சினைக்கு குரல் கொடுத்தவர்கள் தொடங்கி களத்தில் போராடியவர்கள் வரை அனைவருக்கும் நன்றி சொல்லுபவர் பாலபாரதி. இது தான் அவர் மீதான நம்பிக்கையை எல்லோரிடமும் கொண்டு போய் சேர்த்தது. அதுவும் நான் என் தலைமையிலான அரசு என்று சட்டமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் முதல்வராக ஜெயலலிதா பேசிக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான அரசில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது தான் பாலபாரதி வார்த்தைகள் இப்படியானதாக இருந்தன.

எதையும் வெளிப்படையாக விமர்சிப்பவர் பாலபாரதி. என்னதான் தொழில்வளர்ச்சி என நியாயப்படுத்தினாலும் விவசாயிகளின் உணர்வைக் கூடுதலான அக்கறையோடு அணுகியிருக்க வேண்டிய இடதுமுன்னணி அரசு அந்த நுட்பமான இடத்தைக் கவனிக்கத் தவறி அடி சறுக்கிய யானையாக விழ நேர்ந்தது என்று மேற்குவங்கத்தில் இடதுசாரிகள் தோல்வியுற்றதை விமர்ச்சிக்கிறார். தான் சார்ந்துள்ள கட்சியை வீழ்த்தி வெற்றி பெற்ற மம்தாவின் சாதுர்யத்தை பாராட்டுகிறார். இன்னொரு புறம் மம்தா பெண்களுக்கான உரிமையை பெற்றுத் தரவில்லை என குற்றம் சும்த்துகிறார்.

தனது சொந்தக் கட்சியின் தேர்தல் கூட்டணி நிலைபாட்டை கடந்த தேர்தலில் பாலபாரதி முதல் ஆளாக விமர்சித்தவர். மக்கள் நல கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விஜயகாந்துடன் கூட்டணி என்றதும் ”நல்லதொரு வீணை செய்து” என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு முதன் முதலாக விவாதத்தையும், விமர்சனத்தையும் தொடங்கி வைத்தவர். அவருக்கு இந்த முறை தேர்தலில் நிற்க சீட் தராத போது, காரணமாக கூட்டணியை கட்சியை விமர்சித்ததால் தான் கிடைக்கவில்லையோ என்று பேசப்பட்ட நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தவரும் அவர் தான். கட்சியின் கொள்கைப்படி இரண்டு முறை தான் ஒருவர் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட முடியும். ஆனால் பாலபாரதி தனது தொகுதி மக்களிடம் பெற்றுள்ள செல்வாக்கு அடிப்படையில் மூன்றாவது முறையாக கட்சி விதிகளை தளர்த்தி அவருக்கு வழங்கப்பட்டதை நினைவு கூறி அதனால் இந்த முறை தானும் கட்சி தோழர்களும் சேர்ந்து எடுத்த முடிவு என்று அவரே பதிவிட்ட பிறகு தான் அந்த விவாதம் அடங்கியது. தனது செயல்பாட்டு மூலம் தேசிய அளவிலான ஒரு கட்சி ஒரு சட்டமன்ற உறுப்பினருக்காக தனது கொள்கையை தளர்த்திக் கொள்கிறதென்றால் பாலபாரதியின் சட்டமன்ற உறுப்பினர் செயல்பாட்டிற்கும், மக்கள் பணிக்கும் இவற்றை எல்லாம் தாண்டி ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றதை வேறு எந்த உதாரணத்திலும் விளக்கி விட முடியாது.

இப்படியான சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வரலாற்றை படைத்த ஒருவரை தான் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, ’அந்த பொம்பளையை சட்டமன்றத்தில் பார்த்ததில்லை’ என்று கூறினார். நீட்டை ஆதரிக்கும் கிருஷ்ணசாமியை தோலுரிக்க தனது மகளுக்கு அன்றைய முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் சிபாரிசு வாங்கினார் என்பதை சுட்டிக் காண்பித்தார் பாலபாரதி அதில் கோபம் கொண்டு தான் பொம்பளை என்று சொன்னதோடு, அவதூறாக பேசினார் என்று பாலபாரதியின் வீட்டின் முன்பு போராட்டம் அறிவித்தார். ’வர்ர்லாம்…. வர்ர்லாம் வா’ என்று கிருஷ்ணசாமியை சமூக வலைதளம் மூலம் போராட்ட களத்திற்கு அழைத்தவர், ’டாக்டர் என்று தான் எண்ணினேன் இவ்வளவு பெரிய நோயுடைய நோயாளியாக இருப்பார் என்று கிருஷண்சாமியை நினைக்கவில்லை’ என்று பகடியோடு பாலபாரதி கடந்துவிட்டார்.

ஆனால் இந்த கட்டுரைக்கான மைய கேள்வி இங்கு தான் தொடங்குகிறது. 3 முறை தொகுதி மக்களுக்காக எளிய முறையில் பணியாற்றி, போராட்டக் களத்தில் மக்களோடு மக்களாக தோள் கொடுத்து நின்று அவர்களுக்கான உரிமைகளை பெற்று தந்தவர் பாலபாரதி. முன்னாள் எம்.எல். ஏ என்று பாராமல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக இருந்தவர். மாநில் குழு உறுப்பினராக, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயலாளராக, தமிழக பழங்குடியின மக்கள் சங்கத்தின் மாநில துணை செயலாளாராக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினராகவும் இருப்பவர் இதை எல்லாம் தாண்டி பொது வாழ்வில், அரசியல் வாழ்வில் இத்தனை ஆண்டு காலம் இருந்து வருபவரை பார்த்து, ’அந்த பொம்பளை’ என்று கூறுவது இது பாலபாரதியை அவமானப்படுத்தவோ அல்லது நாகரிகமற்று கிருஷ்ணசாமி பேசுகிறார் என்றோ எடுத்துக் கொள்ள முடியாது. தெரிந்தே பெண் என்பதாலயே, ஒரு பெண் அரசியல் தலைவரால் என்ன செய்துவிட முடியும் என்று ஆணாதிக்க மன நிலையில் இருந்து கிருஷ்ணசாமி இதனை பேசியிருக்கிறார். அதனால் தான் அடுத்த நாள் அதனை மன்னிக்கவோ, மறுக்கவோ இல்லாமல் நியாயப்படுத்துகிறார். இது தான் அரசியலுக்கு பொதுவாழ்விற்கு வரும் பெண்களை ஆண்கள் பார்க்கும் மனநிலை.

பாலபாரதியின் இத்தனை அடையாளங்களையும், அனுபவங்களையும் கொண்ட ஒரு ஆண் இருந்திருந்தால் இந்நேரம் இப்படி கிருஷ்ணசாமி பேசவோ வீட்டின் முன்னால் போராட்டம் செய்வேன் என்று மிரட்டவும் மாட்டார். பெண்கள் எத்தகைய அரசியல் ஆளுமையாக இருந்தாலும் அவர்கள் மீதான மதிப்பீட்டை இப்படித்தான் வைத்திருக்கிறது இந்த சமூகம். சாமான்ய பெண்களுக்கு என்ன மதிப்பீடு அதே தான். இன்னும் சொல்லப்போனால் பொது வாழ்க்கைக்கு வரும் பெண்கள் மீது பாலியல் அவதூறுகளை எளிதாக வீசும் இந்த சமூகம் இதனை பாலபாரதியே ஒரு முறை ஒப்புக் கொண்டிருக்கிறார். கட்சி கூட்டங்கள், வேலைகள் முடிந்து வீடு திரும்ப இரவு தாமதாகும் போது பேருந்தில் கண்டக்டர் தொடங்கி ஊர் காரர்கள் மிக மோசமாக பேசியதை எதிர்கொண்டவர், அதற்காக வருத்தப்படாமல் அவர்களுக்காக வருத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக்குள் நுழைபவர்களை முதலில் ஈர்ப்பவை அங்குள்ள படங்கள்தான். செவ்வக வடிவத்தில் அமைந்த அந்தப் பேரவையின் சுவர்களில் காந்தி, அம்பேத்கர், பெரியார், அண்ணா, காயிதேமில்லத், எம்.ஜி.ஆர். உள்ளிட்ட பல முன்னாள் தலைவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் அந்த வரிசையில் ஒரு பெண் தலைவர் படம்கூட இடம்பெறவில்லை.

2004-2005-களின் கூட்டத் தொடர்களில் டாக்டர் முத்துலட்சுமி அவர்களின் சிறப்புகளை நினைவுகூர்ந்து அவர் படம் சட்டமன்றத்தில் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையையும் பாலபாரதி முன்வைத்தார். அப்போது முதலமைச்சராக இருந்தவரும் ஒரு பெண் என்பதால் அவரிடம் கோரிக்கை சுலபமாக நிறைவேறிவிடும் என்றும் காத்திருந்ததாகவும், ஆனால் அரசுத் தரப்பில் பரிசீலிப்பதாகக்கூட தெரிவிக்கவில்லை. இது எனக்கு அதிர்ச்சியாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது என்று பாலபாரதி ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார். இங்கே ஒரு பெண்ணுக்கு மரியாதை செய்ய வரலாற்றில் நினைவு கூற மற்றொரு பெண் கோரிக்கை வைக்கிறார். அதனை ஒரு பெண் முதலமைச்சர் தனக்கான அதிகாரத்தில் நிராகரிக்கிறார். புதிய சட்டப்பேரவை வளாகத்தில் டாக்டர் முத்துலட்சுமி படத்தை பார்த்து மகிழ்ச்சியுற்றதாகவும் ஆனால் ஆட்சி மாற்றத்தில் அந்த கட்டிடம் என்ன ஆனது என்பதை ஊரறியும் என்று பாலபாரதி வருத்தமாக குறிப்பிட்டுள்ளார்.

பெண்களுக்காக சட்டம் இயற்றியவரின் படம் வைக்க கூட சட்டமன்றத்தில் வாய்ப்பில்லாத போது வாய்ப்பு கிடைத்த பெண்கள் அதிகாரத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதும் கவனிக்கப்படக் கூடிய ஒன்று. ஜெயலலிதா டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் படத்தை வைக்காமல் போனதற்கு தமிழக சட்டமன்ற பெண்கள் வரலாறு அவரிடம் இருந்து தொடங்க வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ? அதிகாரப் பகிர்வில் பெண்கள் திட்டமிட்டே ஒதுக்கப்படுகிற ஆணாதிக்க மனநிலையை விமர்சிக்கும் போது இதனையும் விமர்சித்து தான் ஆக வேண்டும்.

நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துப் பெண் எம்.பி.க்கள், அனைத்து மாநில பெண் எம்.எல்.ஏ.க்களுக்கான மாநாடு 2016ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து கலந்து கொண்ட 19 பெண் எம்.எல்.ஏ.க்களில் பாலபாரதியும் ஒருவர். பெண்களுக்கான இட ஒதுக்கீடு அரசியல் சட்டம் நிறைவேற்றப்படாமல் பெண்களின் அரசியல் பங்கேற்பை உறுதி செய்ய முடியாது. இது குறித்து அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செய்தியாக வெளியானதோடு நின்றுவிட்டது. பெண் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமை வகித்த அந்த மாநாட்டின் தீர்மானம் இதுவரையிலான நாடாளுமன்றக் கூட்டத் தொடர்களில் விவாதிக்கப்படவே இல்லை. பின் எதற்காக இவ்வளவு செலவு செய்து மாநாடு நடத்துனீர்கள் என்ற கேள்வியை பாலபாரதி முன்வைக்கிறார்? இந்த கேள்வியை அவர் தொடர்ந்து காங்கிரஸ், பாஜக இரு தரப்பிலும் வைக்கிறார்.

”எண்ணங்கள் முதல் வண்ணங்கள் வரை வரலாற்றின் நெடுகிலும் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் ஒழிப்போம்” என்று அவர் எழுதும் பதிவுகள், கட்டுரைகள், கவிதைகளில் அரசியல் நெடியும், பெண்ணுரிமைக் குரலும் கூடுதலாக இருக்கும். ஆண்களை அவர்கள் செய்த பணியைவைத்து அடையாளப்படுத்துவதும், வரலாற்று ஆவணமாக்குவதும் பெண்களை இன்னாரின் மகள், சகோதரி, மனைவி, தாய் இப்படி மட்டுமே அடையாளப்படுத்தவதையும் கடுமையாக விமர்சிப்பவர் பாலபாரதி. அவரைப் போன்று தேசிய கட்சிகளில் உள்ள பெண்கள் மாநில அளவில் செய்யும் அரசியல் பணிகளுக்கு எந்தளவிற்கு அங்கீகாரம் கிடைக்கிறது என்ற கேள்விக்கான விடையை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான விஜயதரணி வழியாக அடுத்த வாரம் பார்க்கலாம்.

அரசியல் பழகுவோம்...

Mla Balabharathi Sugitha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment