அரசியல் பழகுவோம் 10 : சசிகலாவுக்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு

சுகிதா

அதிமுக பொது செயலாளராக இருந்த சசிகலா நீக்கம் என்ற பிரேக்கிங் செய்தி தான் இந்த கட்டுரையை எழுத ஆரம்பிக்கும் போது காட்சி ஊடகங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது .

சசிகலாவிற்கு தமிழக அரசியலில் என்ன பங்கு இருக்கிறது. அவருக்கும் தமிழக அரசியலுக்கும் என்ன தொடர்பு என்று பல கேள்விகள் உள்ளது. ஜெயலலிதாவின் உற்ற தோழியாக 33 ஆண்டுகள் இருந்தது தான் சசிகலாவுக்கும் தமிழக அரசியலுக்கும் ஒரே தொடர்பு. அதிமுகவை பொருத்த வரையில் ஜெயலலிதா அம்மா, சசிகலா சின்னம்மா என்பது அவர்கள் கட்சிக்குள் வகுத்துக் கொண்ட பாசப் பெயர்கள். ஆனால் சசிகலாவிற்கு சின்னம்மா என்ற பெயர் இருப்பது ஜெயலலிதா மரணத்திற்கு பிறகே தெரிய வந்தது.

ஜெயலலிதாவின் ஆளுமையை கண்டு வியப்பவர்களின் எண்ணம் எதார்த்தத்தில் என்னவாக இருந்திருக்கும்? ஒரு பெண்ணாக அதுவும் தன்னந்தனியே எப்படி சமாளிக்கிறார் என்பது தானே? வழக்கமாக ஆண்கள் காலில் விழவே ஆண்கள் யோசிக்கும் நேரத்தில் ஜெயலலிதா காலில் நெடுஞ்சாண் கிடையாக அதிமுக மூத்த தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை விழுகிறார்களே என்பது வியப்பின் முதல் புள்ளி. எப்படி ஜெயலலிதாவிற்கு எதிராக கோஷ்டி சேராமல் பயந்து பம்மி முன்னாள் முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் வரை இருக்கிறார்கள். சிறை செல்ல வேண்டிய நிலைக்கு ஜெயலலிதா தள்ளப்பட்ட போதும் அந்த இரண்டு முறையும், பன்னீர் செல்வத்திடம் தானே பொறுப்பை கொடுத்துச் சென்றார். அப்போது கிடைத்த இடைவெளியில் ஜெயலலிதாவிற்கு எதிராக செயல்படாமல் ஓ.பன்னீர் செல்வம் எப்படி அமைதியாக இருந்தார்? என்று பல கேள்விகள் அப்போது எழுந்த்துண்டு. அந்த கேள்விக்கான விடை ஜெயலலிதா மீதான பயம், ஜெயலலிதாவின் அரசியல் ஆளுமை, இரும்பு பெண்மணி ஜெயலலிதா என்றெல்லாம் அவருக்கான அரசியல் தகுதியை கூட்டச் செய்தது .

jayalalitha - aiadmk merger - aiadmk general Secretary

ஜெயலலிதா காலில் விழுந்த கட்சி பிரமுகர்

காங்கிரசோ, பாஜகவோ இரு கட்சிகளில் ஆட்சியில் எது இருந்தாலும் டெல்லியை ஜெயலலிதா எதிர்த்தார். பெரு வெள்ளம் வந்தாலும் வீட்டிற்குள் சலனமின்றி இருந்தார். தமிழகத்தின் தலையாய பிரச்சினையாக இருந்தாலும் தன் பொறுப்புக்கு எந்த தள்ளாட்டமும் இல்லை என்ற கோணத்திலேயே அணுகுவார் . பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளரை லேடியா – மோடியா என்பார். பிறகு பிரதமருக்கு வீட்டில் விருந்து வைப்பார். இப்படி இரு முனை அரசியலை ஒரே நேரத்தில் கையாண்டார்.

இப்படியான சமயத்தில் கூட அதிமுகவில் உட்கட்சி எதிர்ப்பு, முரண், மோதல்கள், பூசல்கள் எதுவும் வந்ததில்லை. முதல்வராகவே இருந்தாலும் பன்னீர் செல்வம் தொடங்கி கடை கோடி தொண்டர் வரை அம்மா என்ற வார்த்தையை தவிர வேறு வார்த்தை பேசியதில்லை. இப்படி ஒரு கட்டுக்கோப்பான கட்சி தான் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பல அணிகள் பல குளறுபடிகள் என மாறியது. அம்மாவின் ஆணைக்கிணங்க மழை பெய்கிறது என்று அதிகாரிகளை கூட சொல்ல வைத்த கட்சியை தாண்டிய அம்மா பாசமானது, புரட்சி தலைவி அம்மா என்று கிளிப் பிள்ளை போல பேசியவர்கள் எல்லாம் 420 என்றும், குரங்கு, பிண்டம் என்று தரக்குறைவான வார்த்தைகளை அவர்களுக்குள்ளேயே மாறி மாறி வீசிக் கொண்டார்கள். இதற்கு ஒரே காரணம் சசிகலாவின் நேரடி அரசியல் பிரவேசம்.

விபத்தில் அரசியலுக்குள் வருவது, தலைமை பொறுப்புக்கு வருவது ஒன்றும் அரசியலில் புதிதல்ல. மாட்டுத் தீவண ஊழலில் பீகாரின் முதல்வராக ராஷ்டிரிய ஜனதா தள தலைவராக இருந்த லாலு பிரசாத் யாதவ் சிறைக்கு செல்லும் போது அவரது மனைவி ராப்ரி தேவி முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு அரசியல் குறித்தோ, முதலமைச்சர் பொறுப்பு குறித்தோ ’அ’ வன்னா கூட தெரியாது. ஆனால் பீகார் மக்கள், அவரது கட்சி அவரை ஏற்றுக் கொண்டது. காஷ்மீரில் முகமது முப்தி சையது மரணம் அவரது மகள் மெகபூபா முப்தியை முதலமைச்சராக்கியது. இப்போது கூட பனாமா ஊழல் குற்றச்சாட்டில் பதவி இழந்த பாகிஸ்தானின் நவாஸ் ஷெரிப்பின் மனைவி, நவாசின் தொகுதியில் இடைதேர்தலில் போட்டியிடுகிறார். வெற்றி பெற்று வந்தால் பிரதமர் பதவியை ஏற்பார் என்ற தகவல்கள் வருகின்றன. இவ்வளவு ஏன் அதிமுகவில் எம்.ஜி.ஆர் மறைவின் போது ஜானகி முதல்வர் பொறுப்பை ஏற்றார். பிறகு ஜெயலலிதாவிற்கும், ஜானகிக்கும் வெளிப்படையாக அதிகார யுத்தம் நடைபெற்றது. அதில் தேர்தலில் பெரும்பான்மையை நிருபித்து கட்சி தலைமை பதவியையும் கட்சியையும் கைப்பற்றியவர் ஜெயலலிதா. ஜெயலலிதா எம்ஜிஆரால் கொள்கை பரப்பு செயலாளாராக அறிவிக்கப்பட்டவர். ஆனால் சசிகலாவை ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாகவோ, கட்சியில் பொறுப்பாளராகவோ ஜெயலலிதா அறிவிக்கவில்லை. தன் தோழியாக மட்டுமே வைத்திருந்தார். இது தான் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு பிரச்சினை ஆனது. இது தான் விவாதங்களில் பேசும் சசிகலாவை பன்னீர் செல்வம் அணியை சேர்ந்தவர்கள் ஜெயலலிதாவின் ’வேலைக்காரி’ என்றெல்லாம் பேச வைத்தது

aiadmk merger - sasikala - jeyalalitha

ஜெயலலிதா செல்லும் ஹெலிகாப்ட்டருக்கு வணக்கம் வைக்கும் ஓபிஎஸ்

கட்சி பொறுப்புகள், ஆட்சிபொறுப்புகள், அமைச்சரவை துறை சார் ஓதுக்கீடுகளில் சசிகலாவின் தலையீடு இருப்பதாக விமர்சனங்கள் பல முறை ஜெயலலிதா இருந்த போது எழுந்துள்ளது. ஜெயலலிதாவிடம் காரியம் சாதிக்க நினைத்தவர்கள் சசிகலாவை திருப்திப்படுத்தினால் சாதித்துக் கொள்ளலாம் என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஜெயலலிதா முதல்வரான போது சபாநயாயகர் இருக்கையில் சசிகலாவை அமர வைத்தது, வளர்ப்பு மகன் திருமண சர்ச்சை, மகாமக குளியல் சர்ச்சை, சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்ற போதெல்லாம் கூடவே சசிகலாவும் சிறை சென்றது என்று ஜெயலலிதாவின் அரசியல் சர்ச்சை பக்கங்களில் எல்லாவற்றிலும் சசிகலாவிற்கு இடமுண்டு. ஆனால் கட்சியில் ஆட்சியில் ஏன் பிரச்சார மேடைகளில் கூட சசிகலாவை ஜெயலலிதா தன் அருகில் அமர்த்தியது இல்லை. பிசினஸ் பார்ட்னராக மட்டுமே சசிகலாவை வைத்துக் கொண்ட ஜெயலலிதா அரசியல் பார்ட்னராக ஒரு போதும் வைத்துக் கொள்ளவில்லை .

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு சசிகலாவை பொதுக் குழு கூடித் தேர்ந்தெடுக்கிறார்கள் . தேர்வு செய்த அடுத்த நொடி ஜெயலலிதாவின் பதாகைகள் மீது மற்றொரு பதாகை ஒட்டப்படுகிறது. அதில் ஜெயலலிதா சசிகலா இருவரும் இருக்கிறார்கள். பேனர் கலாச்சாரத்தில் ஊரித் திளைத்த அதிமுக, பேனர் முறைகேடாக வைத்தற்காக பல வழக்குகளை சந்தித்த அக்கட்சி ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது ஒரு முறை கூட அப்படி இருவர் படத்தையும் ஒரே அளவிற்கு இல்லை சிறியதாக கூட கட்சி பேனரில் சசிகலா படம் போட்டதில்லை. முதல் முறையாக அந்த பிரமாண்ட பேனர் வைக்கப்பட்ட விதம் பல செய்திகளை உணர்த்தியது. கட்சியில் இடை நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் மன்னிப்பு கடிதம் கொடுக்கப்பட்டு கட்சிக்குள்ளும் போயஸ் இல்லத்திற்கும் வந்த சசிகலாவிற்கு அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து பொது செயலாளர் பதவி என்றதும் தமிழக அரசியலில் மூக்கில் மேல் கை வைக்காதவர்கள் இல்லை.

பொது செயலாளர் பதவியோடு ஜெயலலிதாவின் கொண்டை தொடங்கி பொட்டு வரை தன் உருவத்தை மாற்றிக் கொள்கிறார் சசிகலா. அதிமுகவின் அதிகாரப் பூர்வ சின்னம்மாவாகிறார் சசிகலா. எங்கள் சின்னம்மாவால் தான் அந்த கட்சியை காப்பாற்ற முடியும் என்று, அன்றும் முதல் ஜால்ரா ஓ.பன்னீர் செல்வத்திடம் தான் தொடங்கியது. பிறகு அம்மா குரல் ஒலித்த இடமெல்லாம் சின்னம்மா குரல். ஆனால் அந்த சின்னம்மாவின் குரலை பொது செயலாளர் பதவி ஏற்ற பிறகு ஆற்றிய சிறப்புரையின் போது தான் முதன் முதலாக தமிழகமே கேட்டது.

திடிரென ஒரு நாள் ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார். கட்சியும், ஆட்சியும் ஒருவர் கையில் இருக்க வேண்டும் என்று தொண்டர்கள் நினைப்பதாக கூறுகிறார். அதனால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி அதிமுகவின் சட்டமன்ற தலைவராக சசிகலாவை தேர்வு செய்கிறார்கள். இதையடுத்து ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் சசிகலா. இந்த இடைப்பட்ட நேரத்தில் ஜெயலலிதா சமாதியில் ஓபிஎஸ் தனது தர்ம யுத்தத்தை சசிகலாவுக்கு எதிராக தொடங்குகிறார். தான் சசிகலாவால் மிரட்டப்பட்டு முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறுகிறார். அன்று நள்ளிரவு சசிகலாவின் முதல் பத்திரிகையாளர் சந்திப்பு போயஸ்கார்டன் வாசலில் நிகழ்கிறது.

ஓ.பன்னீர்செல்வம் திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு நாடகமாடுகிறார் என்கிறார். சட்டமன்றத்தில் திமுகவை பார்த்து சிரிக்கிறார் என்று அவர் பேச விவாதங்கள் தொடங்கி டீக்கடை வரை சிரிப்பாய் சிரித்தது அவரது கருத்து. ஓ.பன்னிர் செல்வத்திடம் இருந்து காப்பாற்ற அதிமுக எம்.எல்.ஏக்களை கூவத்தூரில் தங்க வைத்தார். இந்த நிலையில் தான் உச்சநீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. பெங்களூர் சிறைக்கு செல்வதற்கு முன்பு ஆட்சியை காப்பாற்ற நம்பகத்தன்மையானவர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் சட்டமன்ற தலைவராக்க தேர்வு செய்துவிட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குங்கள் என்று கூறிவிட்டு சிறைக்கு செல்கிறார். சிறைக்கு செல்வதற்கு முன்னால் ஜெயலலிதா சமாதியில் சபதம் ஏற்றுச் செல்கிறார் .

வீடியோ கடை நடத்தி வீடியோ கேசட் கொடுக்க போன இடத்தில் ஜெயலலிதாவுடன் நட்பாகி இன்று இந்திய அரசியலில் அதே வீடியோவால் தனது அரசியல் பிரவேசத்துக்கு தலைவலி உண்டாகும் என்று சசிகலா நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். ஜெயலலிதாவோடு சிறைக்கு சென்ற போது வெளிவராத வீடியோக்கள் எல்லாம் இப்போது மட்டும் வெளியாவது ஏன்? சிறைக்கு வெளியே வந்ததாக வெளியான வீடியோவிற்கு முன்னால் அவர் சிறைசென்ற மாலை அவரை செல்லுக்கு அழைத்துச்செல்லும் வீடியோ வந்தது. அந்த வீடியோவை எடுத்தது யார்? அந்த வீடியோவை வெளியிட்டவர்கள் யார் ? என்பது விடை தெரிந்த கேள்வி தான்.

சசிகலா ஆட்சிஅமைக்க உரிமை கோரும் போது சென்னை பக்கம் வர மறுத்த பொறுப்பு ஆளுநர் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வராக பொறுப்பேற்க பன்னீர் செல்வமும் செல்வதற்கு முன்பே சென்னை வந்து இவர்கள் வருகைக்காக ராஜ்பவனில் காத்திருக்கிறார்.

இங்கே பெண் என்பதற்காக சசிகலாவை ஆட்சியில் அமர்த்தவில்லை என்பது பொருளல்ல. சசிகலா பெண் என்பதல்ல பிரச்சினை அவருடைய அரசியல் பிரவேசம் தான் பாஜகவிற்கு பிரச்சினை. ஜெயலலிதாவின் பூத உடல் அருகே கண்ணீருடனும் குடும்பம் சூழ நின்ற சசிகலா அருகே சென்று தலையில் கை வைத்து ஆறுதல் சொன்னவர் இந்தியாவின் பிரதமர். அந்த காட்சியை பார்த்தவர்கள் சசிகலாவிற்கு எதிர்கால அரசியல் சிறப்பாக உள்ளது என்று நினைத்திருப்பார்கள். ஏன் சசிகலாவே அந்த ஆசியில் தான் தப்புக் கணக்குப் போட்டிவிட்டாரோ என்னவோ. அப்படி என்றால் சசிகலாவை எதிர்த்து இப்போது அரசியல் செய்கிறவர்கள் யார் என்பதை அவர் உணர்ந்திருப்பார். அதிமுக என்ற கட்சியும், அவர்கள் சொல்லும் ஒன்றரை கோடி தொண்டர்கள் என்பதையும் சசிகலா உணர்வதும் இந்த தருணத்தில் அவசியம் . அதை வைத்து தான் சசிகலாவிற்கு ஆசி வழங்கப்பட்டது.

ஜெயலலிதாவின் காலில் விழுந்ததை ரசித்த பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சசிகலா காலில் பன்னீரோ, எடப்பாடியோ விழுவதை ரசிக்கவில்லை . ஜெயலலிதாவை பிடித்தவர்களுக்கு சசிகலாவை பிடிக்கத் தானே வேண்டும் ஏன் பிடிக்கவில்லை. சசிகலா பின்னால் ஒருபெரும் குடும்ப கூட்டம் இருக்கிறது. சசிகலாவிற்கு இடம் கொடுத்தால் அவர்கள் எல்லோருக்கும் இடம் கொடுக்க வேண்டும். நான் பாப்பாத்தி தான் என்று சொல்லி ஆட்சியிலும் கட்சியிலும் உட்கார்ந்து தான் சேர்த்த சொத்திற்காக சிறை சென்ற ஜெயலலிதாவிற்கு மண் சோறு சாப்பிட்டு, அழகு குத்தியவர்கள் சசிகலாவிற்கு நாளை அப்படி ஆதர்ஷமாக இருந்துவிடக் கூடாது. ஜெயலலிதா புனிதப் படுத்தப்பட்டார். அப்படியான ஒரு நிலமை நாளை சசிகலாவிற்கு வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தது பாஜக. அதிமுகவில் யார் தலைமை பொறுப்பேற்றாலும் ஓபிஎஸ் போன்றவர்கள் காலில் விழுந்து தன் பதவியை தக்க வைத்து அவர்களை ஆளுமை மிக்கவர்களாக மாற்றிவிடுவார்கள்.

இப்படியான ஒரு பலவீனம் அந்த கட்சிக்கு இருப்பது தெரிந்துதான் நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தும் இடியாப்ப சிக்கலில் நிற்கிறது. அதிமுகவினர் கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக சொல்ல முடியாமலும் இன்னொரு புறம் கட்சியின் உயிர்நாடியாக இருந்த இரட்டை இலை சின்னத்தை முடக்கவும் காரணமாக இருந்தது, சசிகலாவின் அவசர அரசியல் பிரவேசம். அரசியலை நிதானமாக ஆட முடியாது தான். ஆனால் சசிகலா சற்று ஜெட் வேகத்தில் ஆடி விட்டார். கட்சி, ஆட்சி என்று இரண்டையும் கைப்பற்ற நினைத்தார். தான் மட்டுமே ஜெயலலிதா முன்னால் கட்சியில் மன்னிப்பு கடிதம் கேட்டு சேர்ந்தார். ஆனால் சிறை செல்லும் போது ஜெயலலிதா ஒதுக்கி வைத்த சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரனுக்கு கட்சியின் துணை பொது செயலாளராக நியமனம் செய்து கட்சியை பார்த்துக் கொள்ளச்சொன்னார் .

டிசம்பரில் அதிமுக பொதுசெயலாளராக பொறுப்பேற்று, ஜனவரியில் அதிமுகவின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டு, பிப்ரவரியில் சிறை சென்று, ஜூன் மாதம் கூவத்தூரில் பேரம் பேசப்படதாக ஒரு வீடியோ வெளியானது. ஜூலையில் சிறையில் ஆடம்பரமாக இருக்கிறார் என்று வீடியோ வெளியானது. ஆகஸ்ட்டில் கடைக்கு போக வெளியே வந்தார் என்ற பெயரில் ஒரு வீடியோ வெளியாகி சசிகலாவின் அடுத்தடுத்த நகர்வுகள் அதிரடிக்கும் சர்ச்சைக்கும் பஞ்சமில்லாமல் இருக்கிறது. இத்தனை பேர் அதிமுகவை கைப்பற்ற துடித்தது, ஓபிஎஸ்சும், ஈபிஎஸ்சும் டெல்லிக்கு அடிக்கடி பயணம் செய்தது, டெல்லி சென்ற போதெல்லாம் பிரதமரை சந்தித்தது எல்லாவற்றிற்கும் பின்னால் சசிகலா எதிர்ப்பு என்பது அவரது அரசியல் பயணத்தில் அவர் உற்று நோக்க வேண்டியது.

கட்சி, ஆட்சி இரண்டிலும் சசிகலாவிற்கு இப்போது எந்த செல்வாக்கும் இல்லை. சிறையில் இருப்பதால் இரண்டையும் கைப்பற்றுவதும் எளிதல்ல. சசிகலா உண்மையாக அரசியலில் கால் ஊன்ற வேண்டும் என்றால் இனிதான் அவருக்கு உண்மையான சவால் காத்திருக்கிறது . அதுவும் ஜெயலலிதாவை விட கூடுதல் சவால் உள்ளது. சிறையில் இருந்துக் கொண்டே ஓபிஎஸ்சுக்கும், ஈபிஎஸ்சுக்கும் கொடுக்கப்போகும் குடைச்சல், தான் இன்றி இரட்டை இலை மீட்பு சாத்தியமில்லை என்ற சட்டப் போராட்டத்தை கையிலெடுப்பது , அதிமுகவை கைப்பற்றுவது இப்படி பல சவால்கள் காத்திருக்கின்றன. என்ன செய்யப் போகிறார் சசிகலா.

அரசியல் பழகுவோம்…

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close