Advertisment

அரசியல் பழகுவோம் 11 : பிரேமலதாவிடம் உள்ள யுக்தி என்ன?

தன் கட்சியில் பெண் உறுப்பினர்களுக்கு என்ன மாதிரியான முன்னுரிமை வழங்குகிறார் என்று அடுக்கடுக்கான கேள்விகள் திருமதி பிரேமலதா விஜயகாந்திடம் இருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
alliance live updates

alliance live updates

சுகிதா

Advertisment

பெண் தலைவர்கள் அரசியல் பகை, குடும்ப விருப்பு – வெறுப்பு, துரோகம், ஆண்களின் அலட்சியம் அனைத்தையும் எதிர்கொண்டு தான் அரசியலில் காலூன்ற முடியும். ஆனால் இவை தாண்டி அவர்களை வளர்த்தெடுக்க ஊடகங்களின் பங்கு முக்கியமானதாக இன்று இருக்கிறது. இதனை சரியாக பயன்படுத்திக் கொள்வதும் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் முக்கியமானதாக உள்ளது. ஊடகங்களுக்கும் அவர்களை சுற்றித் தான் செய்திகள் உற்பத்தியாகின்றன. அதனால் இந்த பந்தத்தை பிரிக்க முடியாது. ஆனால் பத்திரிக்கையாளகளையே சந்திக்க மாட்டேன் என்று ஒரு கட்சி முடிவெடுப்பது தனிப்பட்ட விவகாரமாக பார்த்தாலும் ஊடகங்களை எதிர்கொள்ளாமல், தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல், தன் மீதான எதிர்கேள்விகளை எதிர்கொள்ளாமல், ஊடகங்களை புறகணிப்பது ஊடகங்களுக்கு பெரிய இழப்பு இல்லை என்றாலும் ஊடகங்களை புறக்கணிக்கும் தலைவர்களுக்கு இழப்புண்டு.

ஒரு அரசியல் தலைவர் இல்லை என்றால் மற்றொருவர் என்று பத்திரிகையாளர்கள் சென்று விடுவார்கள். ஆனால் அரசியல் கட்சிகளுக்கு, அரசியல் தலைவர்களுக்கு குறிப்பாக பெண் அரசியல் தலைவர்களுக்கு ஊடகங்கள் முக்கியம். ஏன் பெண் அரசியல் தலைவர்களுக்கு முக்கியம் என்றால் ஆண்கள் அரசியல் தலைவர்களாக தினமும் கட்சி பணிக்காக வெளியே செல்வது, கட்சி விழாக்களுக்கு தலைமை ஏற்பது என்று மக்களோடு தன்னை தொடர்ப்பு எல்லைக்குள் இருந்துக் கொண்டு அவர்களின் பார்வைபடும்படி இருப்பார்கள். ஆனால் பெண் தலைவர்களுக்கு இந்த வாய்ப்புகள் அரிதாகத் தான் கிடைக்கும் அதுவும் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அவர்கள் கட்சியில் உள்ள பெண் தலைவர்களை மேடையில் பார்க்க முடிகிறது என்றால் மார்ச் 8 பெண்கள் தினம் கொண்டாடும் போது மட்டும் தான். மற்ற விழாக்களில் பெண்களின் முக்கியத்துவம் என்பது இரண்டாமிடத்திற்கு கட்சியின் முதன்மை திட்டங்களால் பின்னுக்கு தள்ளப்பட்டுவிடும்.

அரசியல் கட்சிகளின் இயல்பே இப்படி இருக்கும் போது ஒரு கட்சி தன்னை அரசியல் ஆட்டத்தில் நிலை நிறுத்திக் கொள்ள, கவனத்தை திருப்ப கண்டிப்பாக ஊடகங்களின் உதவியும் தேவை. ஆனால் திமுக – அதிமுக என்ற அரை நூற்றாண்டு அரசியல் இலக்கணத்தை கட்சி தொடங்கிய சில ஆண்டுகளிலயே உடைத்து திமுகவை புறம்தள்ளி எதிர்கட்சியாக 27 எம்.எல்.ஏக்களுடன் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து சட்டமன்றத்துக்குள்ளேயும் வெளியேயும் அரசியல் செய்த தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் விஜயகாந்த். அவரை தொடர்ந்து அவரது மனைவி கட்சியில் அண்ணி என்றழைக்கப்படும் பிரேமலதா விஜயகாந்த் ஊடகங்கள் என்றாலோ, பத்திரிகை என்றாலோ பிரேக்கிங் நியுஸ் கால கட்டத்திலும் தள்ளி நிற்பது அரசியலுக்கு உகந்த தா என்பதை அவர்களே பரிசீலிக்க வேண்டிய ஒன்று.

பிரேமலதா விஜயகாந்தை திருமணம் செய்த போது கூட பின்னாளில் ஒரு அரசியல் தலைவராக வருவோம் என்று நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார். ஆனால் காலம் அடித்து வந்த அரசியல் நீரோடையில் இன்று நீந்திக் கொண்டிருக்கிறார் என்பதை விட கொஞ்சம் தூரம் நீந்தி விட்டு கரையில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் . அரசியலில் ஒரு நாள் ஓய்வெடுத்தாலே மக்கள் மறந்து விடுவார்கள். பிரேமலதாவோ தேர்தல் பிரச்சாரங்களிலும், தேர்தல் பொது கூட்ட மேடைகளில் மட்டும் பேசி பார்ட் டைம் அரசியல் செய்துக் கொண்டிருக்கிறார்.

விஜயகாந்தின் ரசிகர் மன்றங்கள், அவருக்கு இருந்து திரைப்புகழ் அவர் மனதில்பட்டதை தடாலடியாக பேசும் போது கூடிய கூட்டத்திற்கு நிகராக தேமுதிகவின் மகளிர் அணி தலைவியான பிரேமலதாவிற்கும் கூட்டம் கூடியதும் கர்ஜிக்கும் குரலிலான அவருடைய பேச்சுக்கள் 2014 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சி தலைவர்களை வியந்து பார்க்க வைத்ததும் பிரேமலதாவின் அரசியல் கிராப்பில் நல்ல தொடக்கம் தான். மோடி காப்பாற்றுவார் உங்களை என்று தெருவுக்கு தெரு பிராச்சார வேனில் நின்று நம்பிக்கையை கொடுத்தவர் பாஜகவினரைவிட பிரேமலதா தான் அதிகம் .

அந்த பேச்சு தான் 2011 தொடங்கி 2015 வரை 5 ஆண்டுகள் எதிர்கட்சியாக இருந்தும் ஒரு போராட்டத்தை கூட நடத்தாமல், சட்டமன்றத்திலும் ஆக்கப்பூர்வமாய் செயல்படாமல் இருந்த தேமுதிக மீது 2016 சட்டமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு உயிரோட்டமாய் வித்திட்டது. 2016 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தேமுதிகவின் முதல் தேர்தல் பிரச்சார பொது கூட்டத்தில் கூட்டணிக்கு கொக்கிப் போட்டு பேசியவர் பிரேமலதா. உச்சபட்ச குரல் வளத்தில் கத்தி கத்தி தொண்டர்களை தேர்தல் மனநிலைக்கு தயார் படுத்தினார் . அதெல்லாம் சரி தான். மக்கள் நல கூட்டணியில் இணைந்து பிரச்சாரம் என்றதும் சில தொகுதிகளுக்கு மட்டும் பிரச்சாரம் செய்துக் கொண்டு ஒதுங்கிக் கொண்டார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு பாஜகவினராகவே மாறி ஓட்டுக் கேட்ட பிரேமலதா, 2016 சட்டமன்ற தேர்தலில் கூட்டணிகட்சிகளுக்கிடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாமல் போனதற்கு இவர் தனித்து விளங்கியதும் காரணம்.

இவர் பிரச்சாரம் செய்த கடைசி இரண்டு தேர்தல்களிலும் தோல்வியை அந்த கட்சி தழுவிய பிறகு இவர் அரசியலை மூட்டைக் கட்டி வைத்துவிட்டார். விஜயகாந்திடம் அவ்வப்போது ஒரு அறிக்கை வரும். அதை தாண்டி அந்த கட்சிக்கு என்று சொல்லிக் கொள்ளும்படியாக அரசியல் களத்தில் இன்றைக்கு இடமில்லை. தினமும் விவாதங்களில் அனைத்து கட்சியினருக்கும் ஒரு இடமுண்டு. சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் கட்சியின் பங்கு என்ன என்பது குறித்து அறிந்து கொள்ள விவாதங்கள் ஒரு வழிகாட்டுதலாக உள்ளது. ஆனால் இவ்வளவு ஊடக பரப்பரப்பிலும் பிரேமலா என்ன சொல்லப் போகிறார் ? விஜயகாந்த் என்ன சொல்லப் போகிறார் என்று ஊடகங்கள் காத்துக் கிடைப்பதில்லை. விஜயகாந்திற்கு உடல்நிலை சரியில்லை என்ற நிலையில் கட்சியையும் வீட்டு நிர்வாகத்தையும் பார்க்கும் பொறுப்பு பிரேமலதாவிடம் அதிகமாக உள்ளது. ஆனால் இந்த காரணத்தை அரசியலில் சொல்ல முடியுமா? விடுமுறை கடிதம் கொடுத்துவிட்டு எல்லாம் அரசியல் செய்ய முடியாது.

ஊடகங்களை நம்பவில்லை என்றால் சமூக வலைதளங்கள் உள்ளன. அதன் மூலம் மக்கள் கருத்துகளை அறியவும், மக்களுக்கு தாங்கள் கருத்து சொல்லவும் பயன்படுத்தலாம். ஆனால் பிரேமலதா விஜயகாந்திற்கு அப்படி சமூக வலைதளங்களில் அக்கவுண்ட் இருப்பதாகவும் தெரியவில்லை. இப்படி மக்களோடு தொடர்பு கொள்ளாமல் கூட்டணிக்கும் மட்டும் எங்கள் கட்சியை பயன்படுத்துங்கள் என்று வெளிப்படையாக சொல்வது போன்று ஒரு கட்சி இருப்பது கேப்டன் இருந்தும் கப்பல் இல்லாமல் போகும் நிலைக்கு தள்ளப்படுவிம் என்பதை அவர்கள் உணர்ந்தபாடில்லை. ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்து விவாதங்கள் வரும் போது இயல்பாகவே விஜயகாந்தின் அரசியலை மதிப்பீடு செய்வதுண்டு.

அதற்காகவோ அல்லது அந்த இரண்டு நடிகர்கள் மட்டுமல்ல எங்கள் கேப்டனும் இன்னும் அரசியல் கப்பல் ஓட்டிக் கொண்டு தான் இருக்கிறார் என்று நிருபிக்க நெடுவாசலுக்கோ, கதிராமங்கலத்துக்கோ விஜயகாந்துடன் விஜயம் செய்கிறார் பிரேமலதா. பிறகு மீண்டும் இப்படியான பேச்சுவார்த்தை வரும் வரை அரசியலுக்கு விடுமுறை விட்டு விடுகிறார். தமிழகத்தில் பொது கூட்டங்களில் ஜெயலலிதாவிற்கு பிறகு நரம்பு புடைக்க ஒரு பெண் அரசியல் தலைவரின் பேச்சு கவனிக்கப்பட்ட வகையில் பிரேமலதாவின் பேச்சுக்கு ஒரு தனி இடம் இருந்தது. ஆனால் அவர் தேமுதிகவின் தலைமை கழக பேச்சாளரா? பேச்சு நன்றாக இருந்தது என்று சொல்லிவிட்டு போவதற்கு ஒரு கட்சியை வழிநடத்தும் பொறுப்பு அவரிடம் உள்ளது. அவர் என்ன அரசியல் செய்திருக்கிறார்.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு தமிழகம் முழுவதும் நடக்கும் கூத்துகளை கண்டும் காணாதது போன்று எப்படி ஒரு அரசியல் கட்சியால் இருக்க முடியும். எதை கண்டு அஞ்சுகிறார் பிரேமலதா? திமுகவும், அதிமுகவும் ஊழல் செய்து விட்டது என்று தேர்தல் மேடைக்கு மேடை முழங்கிய பிரேமலதாவிற்கு தமிழக அரசியல் நிலவரம் குறித்து கருத்து சொல்ல எது தடுக்கிறது. மடியில் கனமில்லாத அவர் ஏன் இப்படி அமைதியாக இருக்கிறார். இப்படி பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளது. ஆனால் யாருக்கும் விடை தெரியாது. தேமுதிக தொண்டர்கள் தேர்தல் நேரத்தில் மாற்று கட்சியை நோக்கி படை எடுத்த போது இந்த கட்சியின் கடைசி தொண்டன் இருக்கும் வரை கட்சி இருக்கும் என்று சொன்னவர் பிரேமலதா. கடைசி தொண்டனுக்கு கட்சியின் வளர்ச்சி என்று எதை காண்பிக்க போகிறார் ? கூட்டணி எப்படி பேசப் போகிறார்.

விஜயகாந்தை அரசியலில் முன்னிருத்தி பின்னால் இருந்து இயங்கியவர் பிரேமலதா. இப்போது அவரது உடல்நலம் இவரை முன்னால் இயங்க வேண்டிய கட்டாயத்திற்கு வித்திட்டிருக்கிறது. ஆனால் அதனை அவர் சரியாக பயன்படுத்துகிறாரா? குறைந்தபட்சம் அவரது கட்சியில் உள்ள பெண்களுக்காவது அவரின் அரசியல் பயணம் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதெல்லாம் பிரேமலதாவிடம் நாம் கேட்கும் கேள்வி என்பதை விட அவருக்கு அவரே கேட்டுக் கொள்ள கூடிய கேள்வி.

தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கிறதோ அந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று சொல்லப்பட்ட 2016 தேர்தல் முந்தைய கருத்து கணிப்புகளும், மோடியே பிரேமலதாவை பாராட்டி விட்டார் பாஜகவின் கண்ணசைவில் விரைவில் நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன உறுப்பினர் ஆகிறார் பிரேமலதா, அவ்வளவு ஏன் தேசிய மகளிர் ஆணைய தலைவி பொறுப்பு கொடுக்கப்பட போகிறது என்றெல்லாம் பேசப்பட்டன. ஆனால் இன்று பாஜவும் சீண்டவில்லை மற்ற கட்சிகளும் சீண்டவில்லை. ஏன்? அவர்கள் ஊடகங்களை ஒதுக்கி வைத்தார்கள். அரசியல் தலைவர்கள் அவர்களை ஒதுக்கி வைத்து விட்டனர்.

குறைந்தபட்சம் பெண்கள் பிரச்சினைக்கு கூட பிரேமலதா குரல் கொடுக்கவில்லை. விபத்தில் அரசியலில் நுழைந்தேன் என்று எல்லோரும் சொல்வது போன்ற கதையை பிரேமலதா சொன்னார் என்றால் அதனை யாரும் ஏற்க மாட்டார்கள். ஏன்னெனில் அவர் ஒன்றும் ஏதோ ஒரு அரசியல் கட்சியில் வாய்ப்புகள் கிடைக்காமல் அரசியலில் பின்னுக்கு தள்ளப்ட்டு அதனால் அரசியலில் அவரால் வளர முடியவில்லை என்று தர்க்கத்திற்கு கூட சொல்ல முடியாது. காரணம், அவர் கணவர் நிறுவிய கட்சியில் தான் அவர் மகளிரணி தலைவியாக இருக்கிறார். அவரை எதிர்த்து, அவருக்கு வாய்ப்பளிக்காமல் யார் அவரது அரசியல் வாழ்க்கைக்கு குழிப்பறித்துவிடப் போகிறார்கள்.

தேர்தல் மேடைகளில் பிரதானமாக இவருக்கு தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அப்படி இருக்கும் போது மற்ற அரசியல் பெண்கள் படும் இயல்பான அரசியல் குறுக்கீடுகள், நெருக்கடிகளை இவர் சந்தித்திருக்கும் வாய்ப்பும் இல்லை. தனி ஆளாக களமாட களம் இருந்தும் எதிரியை தேர்வு கூடசெய்யாமல் அமைதியாக இருக்கிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்தை எதிர்த்தவர்கள் யாரும் வாழ்ந்ததில்லை என்பவர் அரசியலில் தனக்கு யார் எதிரி என்பதை அவர் தேர்வு செய்துவிட்டாரா? அவரது தொண்டர்களுக்கு அதனை சொல்லி விட்டாரா? தன் கட்சியில் பெண் உறுப்பினர்களுக்கு என்ன மாதிரியான முன்னுரிமை வழங்குகிறார் என்று அடுக்கடுக்கான கேள்விகள் திருமதி பிரேமலதா விஜயகாந்திடம் இருக்கிறது. ஆனால் பதில் சொல்ல தான் அவரை காணவில்லை.

இதற்கு நேர் மாறாக பாஜக ஆட்சிபொறுப்பேற்ற இந்த 3 ஆண்டுகளில் விமான நிலைய பேட்டியால் மட்டுமே தீவிர அரசியல் இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன். எங்கெல்லாம் பத்திரிகையாளர்க்ள கூடுகிறார்களோ அங்கெல்லாம் சரியாக எதிர்கட்சியை வம்பிழுத்து பேட்டிக் கொடுப்பார். பிறகு டிவிட்டரில் பல கிண்டல் பதிவுகளை சுடச்சுட இட்டு நிரப்புவார். தன்னை சுற்றி ஒரு அரசியல் நெருப்பு கனன்று கொண்டே இருக்கும்படி தமிழிசை சவுந்திரராஜன் பார்த்துக் கொள்வார். இது என்னவோ பிரேமலாதவிடம் இல்லை. தேமுதிக என்னும் அரசியல் கப்பலை கரை ஏற்ற கேப்டனின் மனைவியாக,பெண் அரசியல் ஆளுமையாக பிரேமலதாவிடம் உள்ள அரசியல் யுக்தி தான் என்ன?

அரசியல் பழகுவோம்...

Sugitha Premalatha Vijayakanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment