சுகிதா
எத்தனை கூட்டத்திலும் பளிச்சென தெரியும் வண்ணம் உடுத்தும் உடை, மைக் இல்லாமலே உச்சத்தில் ஒலிக்கும் கம்பீரக் குரல் பாஜக மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜனுடையது. டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் குமரி ஆனந்தனின் மகள். 1999ல் பாஜகவில் இணைந்து 2014ம் ஆண்டு பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டவர். தமிழக பாஜக வரலாற்றில் இத்தனை ஆண்டு காலம் ஒருவர் தொடர்ந்து மாநில தலைவராக இருப்பதே சாதனை தான். அதுவும் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் இரண்டிலும் படு தோல்வியை தழுவிய பிறகும் பாஜகவிற்கு மாநில தலைவராக ஆயிரம் கோஷ்டி சண்டைகளை தாண்டி தமிழிசை நிற்கிறார் என்பதே அவர் அரசியல் பயணத்தில் சாதனை தான். இன்னும் கூடுதலாக இந்த கட்டுரை தொடரின் மையப்புள்ளியில் இருந்து பார்த்தால் பெண் அரசியல் தலைவராக அவர் நிற்பதும் கூடுதல் சிறப்பாக பார்க்க வேண்டி இருக்கிறது.
15 ஆண்டுகளாக பாஜகவில் தீவிரமாக பணியாற்றி வரும் இவர், அக்கட்சியில் மாவட்ட, மாநில மருத்துவ அணிச் செயலாளர், மருத்துவ அணியின் தேசிய ஒருங்கிணைப்பாளர், மாநிலப் பொதுச்செயலாளர், மாநில துணைத் தலைவர், தேசியச் செயலாளர் போன்ற பல பொறுப்புகளை வகித்துள்ளார். பெண் சக்தி இயக்கம் என்ற அமைப்பை நிறுவி அதன் தலைவராகவும், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தலைவராக உள்ள பொற்றாமரை இலக்கிய அமைப்பின் செயலாளராகவும் இருந்து வரும் தமிழிசை. 2006, 2011 சட்டசபை தேர்தல்களிலும், 2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
ஏழை வீட்டில் சாப்பிடும் பாஜகவின் திட்டம் தொடங்கி குளம் வெட்டுவது என எல்லாவற்றிற்கும் முதல் ஆளாக ஆஜராகிறார். தன்னுடைய பிறந்தநாளை ஏழை மக்களுடன் கொண்டாட வேண்டும் என்று இந்தாண்டு கொண்டாடினார். அப்போது மத்திய அரசு சேவைகளை எளிதில் கிடைக்கும் வண்ணம் இ-சேவை மையம் ஒன்றையும், இரண்டு தண்ணீர் தொட்டிகளையும் திறந்து வைத்தார்.
2009ம் ஆண்டு முதல் 2014 வரை ஊடக விவாதங்களில் பாஜக பிரதிநிதியாக பங்கேற்று அழகு தமிழில் ஆவேசத்தோடு பாஜக கருத்துகளை,கொள்கைகளை கொண்டு சேர்த்தார். அதற்கு பரிசாகத் தான் இவருக்கு மாநில தலைவர் பொறுப்பே கொடுக்கப்பட்டது. ஊடகங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ள தெரிந்தவர். இதன் மூலம் தான் தன்னுடைய அரசியல் இருப்பை கட்டி அமைத்தார். ஊடகங்களோடு எப்போதும் நல்ல நட்புறவோடு இருப்பார். ஏர்போர்ட் தொடங்கி எங்கு சென்றாலும் ஊடகங்களுக்கு ஏதாவது சர்ச்சை கருத்தை சொல்லி தீனி போடுவார். இதன் மூலம் தொடர்ந்து அவர் தமிழகத்துக்கு எதிராக மத்திய அரசை காப்பாற்றும் நோக்கில் சொல்லப்பட்ட கருத்துகள் பல நாட்களில் விவாதப் பொருளாக மாறியதுண்டு. 2015ம் ஆண்டு கருணாநிதி பாஜகவை பார்த்து பயப்படுகிறார், கடந்தாண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஜெயலலிதாவை தேர்தல் நேரத்தில் தொடர்பு எல்லையில் இருப்பவர், நடிகர் ரஜினிகாந்த் தனிகட்சி தொடங்கினால் அவரால் செயல்பட முடியாது, கமலுக்கு திடீர் அரசியல் மோகம், நாடு காவி மயமாக இருப்பது தப்பில்லை பாவி மயமாகத்தான் இருக்க கூடாது.
இப்படி கருணாநிதி தொடங்கி கமலஹாசன் வரை அரசியலில் எல்லோரையும் தாக்கி பேசுவதிலும், அடுக்குமொழியில் அதிரடி கருத்துகளை வைப்பதாலயேயும் ஊடகங்கள் மீண்டும் மீண்டும் இவர் முன்னால் மைக்கை நீட்டுகின்றன. இப்படி பேசித் தான் தன் கட்சியில் உள்ள கோஷ்டி மோதலில் தன் பொறுப்பை யாரும் பறித்துக் கொள்ளாமல் பாதுகாத்துக் கொண்டார். தன்னுடைய அரசியல் கிராப்பை உயர்த்திக் கொண்டார். இவை வாக்காக நாளை அவருக்கு மாறுமா என்பது தெரியாது. தமிழகத்தின் அரசியல் தலைவர்களில் மிக முக்கியமானவராக, தமிழகத்தின் பெண் ஆளுமைகளில் இதுவரை திராவிடம் பேசி வளர்ந்தவர்கள் தான் உண்டு. அதற்கு நேர் எதிர் கருத்து சொல்லி மளமளவென வளர்ந்து நின்று கவனிக்கதக்கவராக மாறி இருக்கிறார் என்பதை அனைவரும் ஒப்பக் கொள்ளத்தான் வேண்டும்.
சமூக வலைதளங்களிலும் எப்போதும் எதிர்கருத்துகளை கூறி சர்ச்சை பேச்சுகளில் தான் இருக்கும்படி பார்த்துக் கொள்வார். காங்கிரஸ் உறுப்பினர் குஷ்புவிற்கும் இவருக்கும் சமூக வலைதளங்களில் குழாயடி சண்டையை விட மோசமாக சண்டை நடந்தது எல்லாம் உண்டு. மீம்ஸ்களில் அதிகம் கிண்டல் செய்யப்பட்ட பெண் அரசியல் தலைவர் தமிழிசையாகத்தான் இருக்கும். ஆனால் அதை தனது அரசியலுக்கு தேவையாக நெகட்டிவ் பப்பிளிசிட்டியையும் பார்க்கிறார் என்பதற்கு பல உதராணங்களை சொல்ல முடியும்.
அரசியல் நாகரிகம் என்ற பெயரில் ஸ்டாலின் தொடங்கி எதிர்கட்சிகள் தலைவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்துகளை முதலில் சொல்லுவார். இன்னொரு புறம் கழகம் இல்லா தமிழகம் அமைப்போம் என்பார். திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்பார். இப்படி அவர் பேசுவதாலோ என்னவோ சில நேரங்களில் அவர்கள் கட்சிகளிலயே அவர் கருத்துக்கும் மற்றொருவர் கருத்துக்கும் அதிக முரண் இருக்கும். தமிழகத்தின் மிக முக்கிய மத்திய அரசின் பிரதிநிதி குரலாக மாற வேண்டியவர் தமிழகத்துக்கு அப்பால் டெல்லியில் இருக்கும் நிர்மலா சீத்தாராமன் குரலுக்கு செவிமெடுப்பவர்கள் கூட இவர் குரலுக்கு எடுக்காமல் போனதை யார் கவனிக்கிறார்களோ இல்லையோ, தமிழிசை உணர வேண்டியது அவசியம்.
மற்றொன்று பாஜகவின் டெல்லி தலைமை தமிழிசையை செய்திதொடர்பாளர் அளவிற்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டு மற்ற திடமான பாஜகவிற்கு டோக்கன் செய்யக் கூடிய விஷயங்களை டெல்லியில் இருப்பவர்கள் தான் செய்ய வேண்டும் என்று நினைப்பதில் புவிசார் அரசியலோடு சமூக நீதி அரசியலும் இருக்கிறது. அப்படி என்றால் தமிழிசையும் அதற்கு பலிகடாக்கப்பட்டிருக்கிறார்.
இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு, மாட்டுக்கறி அரசியல், பகுத்தறிவாளர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம், முத்துகிருஷண்ன் உள்ளிட்ட மாணவர்கள் தற்கொலை சம்பவம், சுவாதி கொலை, நெடுவாசல், கதிராமங்கலம், பணமதிப்பிழப்பு, விவசாயிகள் பிரச்சினை, காவேரி பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினை, ஜெயலலிதாவின் மர்ம மரணம், கமல், ரஜினி அரசியல் பிரவேசம், ஜல்லிக்கட்டு போராட்டம், நீட் விவகாரம், அனிதா தற்கொலை என தமிழகத்தை உலுக்கிய அத்தனை பிரச்சினைகளுக்கும் தனக்கே உரிய அரசியல் தடுப்பாட்டத்தை சிறப்பாக ஆடுவார் தமிழிசை. தமிழகமே கொந்தளிக்கும் போது கூட பாஜக கொள்கைகள், மோடி புகழ் பரப்புவதில் கண்ணும் கருத்துமாய் இருக்கும் தமிழிசைக்கு சில நேரங்களில் தாய் மண் தமிழகம் என்பது மறந்து போய் டெல்லியை மனதில் வைத்து பேசுவது தான் தமிழகத்தில் அவர் மீது வைக்கப்படும் மிக முக்கிய குற்றச்சாட்டு .
”இலங்கை பயணத்தின்போது அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் திரு. ரவி கருணாநாயகே அவர்களை சந்தித்து நம் மீனவர் பிரச்சனைகளை எடுத்துரைக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதை கனிவுடன் பரிசீலித்து பிடிபட்ட படகுகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் என்ற நல்ல செய்தியை தமிழக மீனவ சகோதரர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் “. இது இலங்கை சென்று திரும்பிய தமிழிசை சவுந்திரராஜன் பத்திரையாளர்களுக்கு கொடுத்த அறிக்கை. தமிழகத்திற்கும் இலங்கைக்கும் தொப்புள் கொடி உறவு என்பது தமிழிசை தெரியாமல் இருக்கிறாரா என்ன? அவ்வளவு ஏன் அவர்கள் பிரதானமாக எதிர்க்கும் காங்கிரஸை எதிர்த்து அரசியலுக்கு கூட ஈழம் சென்று திரும்பியவரின் அறிக்கையில் ஒரு வரிகூட ஈரமில்லாதது அவருடைய அரசியலையே கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.
பாஜக தமிழகத்தில் காலூன்றவதை தடுக்க யாராலும் முடியாது என்று அடிக்கடி கூறும் தமிழிசை, தமிழகத்தின் அரசியல் கூறுகள் என்ன? வரலாறு என்ன? மதம், சாதி கடந்து பகுத்தறிவுப் பேசும் மண்ணும் வேரும் இன்னும் உயிரோட்டத்தோடு இருக்கிறது என்பது தெரியாமல் இல்லை. ஆனாலும் தினமும் பாஜகவின் வளர்ச்சி குறித்து அவர் பேசுவது வியப்பு தான். அவருடைய தன்னம்பிக்கை, கட்சியின் தற்காப்பு என்று சொன்னாலும் அரசியலில் இந்த பாசிட்டிவ் நிலைப்பாடு மிக முக்கியம். திமுகவை வாய்க்கு வாய் சண்டைக்கு இழுப்பார். அதிமுகவை வேறு யாரும் விமர்சித்தாலும் அதிமுகவிற்கு முன்பு ஆஜராகி பதிலடி கொடுப்பார். டெல்லி கொடுக்கும் அசைன்மண்டுகளை தெளிவாக செய்யும் இந்த போக்கு தான் அவரை இன்னும் தலைவர் பதவியில் வைத்திருக்கிறது. இல்லை என்றால் தேர்தல் தோல்வியை காரணம் காண்பித்து அவர் பொறுப்பை பறித்திருப்பார்கள். தமிழகத்தில் தேர்தல் வெற்றியை தாண்டி சில பார்மூலாக்களை எளிதாக பாஜக செய்துக் கொண்டிருக்கிறது.
தன்னை பதவி ஏற்பு விழாவிற்கு ஜெயலலிதா அழைக்கவில்லை என்று குற்றம் சுமத்திய தமிழிசை தான் இப்போது தலைமை செயலகத்தில் தான் நினைத்த நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பார்த்து வருகிறார். இன்னொரு பக்கம் மதுவிற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து கோட்டை நோக்கி பேரணி செல்கிறார். அவர் வீடு இருக்கும் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பருப்பு, உளுந்து வினியோகம் நிறுத்தப்பட்டதை கண்டித்து பருப்பு பாக்கெட்டோடு போராட்டம் செய்கிறார். ஆனால் மத்தியஅரசு மானியத்தை நிறுத்தும் போது இலவசங்களை கொடுத்து திராவிட கட்சிகள் இந்த மக்களை இவ்வளவுநாட்கள் ஏமாற்றி விட்டது. நாங்கள் இருப்பவரிடம் வாங்கி இல்லாதவர்களுக்கு கொடுக்கிறோம் என்கிறார்.
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி கொண்டு வந்த போது தெருவில் நின்று திண்டாடினார்கள் மக்கள். ஆனால் புது இந்தியா பிறந்துள்ளது என்று பிரதமர் மோடி குறித்து பெருமிதமாக தமிழிசை கூறினார். இப்படி முன்னுக்கு பின்னான அரசியலை கையிலெடுத்ததால் தேசிய நீரோட்டத்தில் மண்ணின் வேரை விட்டுவிட்டார் என்பது அரசியல் திறனாய்வாளர்களின் பார்வை.
ராம்நாத் கோவிந்த், வெங்கையா நாயுடு போன்ற எளிய மனிதர்கள் குடியரசு தலைவர், துணை குடியரசுதலைவர் என இந்தியாவின் உயரிய பதவிகளுக்கு வந்திருக்கிறார்கள் என்று புகழ்பாடும் தமிழிசை சசிகலா முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவது தமிழகத்திற்கு நல்லதா? என்று கேட்கிறார். ஒரு பெண்ணாக மற்றொரு பெண் அரசியலை எப்படி இவர் குறைவாக மதிப்பிடுகிறார். தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனைக்கு சென்று பிறந்திருக்கும் பெண் குழந்தைகளுக்கு பரிசு வழங்கியவருக்கு பெண்கள் அரசியலுக்கு வருவது குறித்து சகப் பெண்ணாக அவருக்கு என்ன பார்வை இருக்கிறது என்று இதுவரை அவரிடம் பார்க்க முடியவில்லை.
இதை எல்லாம் விட உச்சம் தமிழகத்தின் பிரத்யேக கட்டமைப்பில் டாக்டருக்கு படித்து சிறந்த மருத்துவராக பெயரெடுத்தவர் இன்று நீட் மட்டும் தான் சிறந்த மருத்துவரை தமிழகத்தில் உருவாக்க முடியும் என்று அதிரடியாக ஆணித்தரமாக பேசுவது தான் அவரது வாழ்வியல் முரணாக பார்க்கப்பட்டது. அனிதாவின் தற்கொலை தமிழகத்தை உலுக்கிப் போட அதற்கு வருத்தத்தை பதிவுசெய்துவிட்டு எதிர்கட்சிகளை வசைபாடி, இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று எச்சரிக்கை விடுத்தார்.
ஒரு பெண்ணாக, ஒரு மருத்துவராக ,ஒரு மனிதநேயமிக்கவராக அவருக்கு கண்டிப்பாக அனிதாவின் தற்கொலை வலித்திருக்கும். ஆனால் அதை பதிவு செய்வதோடு எதிர்கட்சிகளோடு அரசியல் செய்ய அவர் காட்டிய முனைப்பு அரசியல் சதுரங்கத்தில் அவரது இடத்தை தக்க வைப்பதற்கான பதற்றம் தான் தெரிந்தது. பாஜகவிற்கு எதிரான கருத்துகளை சொல்பவர்களை எல்லாம் எதிரிகளாக பார்ப்பது அரசியலுக்கு உகந்ததா என்பதை டாக்டர் தமிழிசை அவர்கள் கட்சியினருக்கு பாடம் எடுக்க வேண்டியதும் அவசியம். ஜல்லிகட்டுக்கு சட்டம் நிறைவேற்றியபோது எதிர்ப்பு காலத்தை முடித்துக் கொண்டு எதிர்காலம் நோக்கி திரும்புவோம் வாருங்கள் என்று அழைத்தார் தமிழிசை. இப்போது தமிழகத்தை எதிர்ப்பு பார்வையோடு பார்க்காமல் தமிழக மக்களுக்கான ஆளுமை மிக்க பெண் தலைவராக காலூன்ற தமிழிசையை தமிழகத்துக்கு இசைவான அரசியல் பாதைக்கு அழைக்கிறார்கள் மக்கள்.
அயிரம் விமர்சனங்களை பாஜக மீது முன் வைத்தாலும் முதன் முறையாக வெளியுறவுத் துறை அமைச்சராக சுஷ்மா சுவராஜை நியமித்து வரலாற்றில் இடம்பிடித்தது. அதோடு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் 7 பெண்அமைச்சர்கள் என்று பெருமை பட்ட தருணத்தில் பாதுகாப்புதுறைக்கு நிர்மலா சீத்தாராமனை நியமித்து பெண்களின் அரசியல் பாதைக்கு மேலும் வலுசேர்த்திருக்கிறது. இது குறித்து அடுத்த வாரம் பார்க்கலாம்.
அரசியல் பழகுவோம்…