தவறு ஓரிடம்; தண்டனை வேறிடம்

கல்வி என்பது, ரசித்து, ருசித்து படிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு மனஅழுத்தம் தரக்கூடியதாக இருக்கக் கூடாது.

இரா.குமார்

என் உறவுக்காரப் பெண். பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். எந்த பதற்றமும் அழுத்தமும் இல்லாமல், இயல்பாக தேர்வுக்கு தீவிரமாகப் படித்தார். படிப்பில் ஆர்வம் மிக்க பெண். பதற்றம் இல்லாமல் தேர்வு எழுதினார். தேர்வு முடிவுகள் வந்தன. யாருமே எதிர்பார்க்கவில்லை; இன்ப அதிர்ச்சி. மாநில அளவில் மூன்றாமிடம் பெற்று தேர்ச்சி பெற்றர். 500 க்கு 496 மதிபெண்கள். எல்லாரும் கொண்டாடினார்கள். பரிசுகளும் பாராட்டும் குவிந்தன.

அதே பள்ளியில் பிளஸ் 2 சேர்ந்து படித்தார். தேர்வு முடிவு வந்தது மாநில அளவில் அல்ல, மாவட்ட அளவில்கூட மூன்றாம் இடம் பெறவில்லை. என்ன ஆச்சு அந்தப் பெண்ணுக்கு? பிளஸ்2 தேர்வு என்பதால், பத்தாம் வகுப்புத் தேர்வுக்குப் படித்ததைவிட அதிகம் கவனமாகத்தான் படித்தார். அதிகம் கடினமாக உழைத்தார். ஆனாலும் மதிப்பெண் குறைந்துவிட்டது.

அந்தப் பெண்ணிடம் கேட்டேன்: ”பத்தாம் வகுப்பில் ரேங்க் வராமல் இருந்திருந்தால், பிளஸ் 2 தேர்வில் இன்னும் அதிக மதிப்பெண் எடுத்திருப்பாய் அல்லவா?”

“ஆமாம் மாமா” என்றார்.

பத்தாம் வகுப்பில் மாநில அளவில் 3ம் இடம் பெற்றதால், பிளஸ் 2 தேர்விலும் மாநில அளவில் ரேங்க் பெறுவார் என்று, சுற்றி இருப்பவர்கள் பெரும் எதிர்பார்ப்பை உண்டு பண்ணிவிட்டனர். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டுமே என்ற பதற்றம், அவரை அறியாமலே அவருக்குள் ஒரு மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த மன அழுத்தம்தான் பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் குறையக் காரணம்.

கல்வி என்பது, ரசித்து, ருசித்து படிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு மனஅழுத்தம் தரக்கூடியதாக இருக்கக் கூடாது. துரதிர்ஷ்ட வசமாக, நமது கல்வி முறை அப்படித்தான் உள்ளது.

மகனோ மகளோ பத்தாம் வகுப்பு வந்துவிட்டாலே அப்பா, அம்மாவுக்குப் பதற்றம் தொற்றிக்கொள்கிறது. “இந்த வருஷம் அரசுத் தேர்வுடா… நல்லா மார்க் வாங்குனாத்தான், நல்ல ஸ்கூல்ல பிளஸ்2 க்கு இடம் கிடைக்கும்” என்று தம் பிள்ளைகளை நெருக்குகின்றனர்.

விளையாடவோ, பாட்டு கேட்கவோ, பொழுது போக்கு அம்சங்களை அனுபவிக்கவோ பிள்ளைகளை விடுவதில்லை. சதா நேரமும், “படி, படி” என்று பிள்ளைகளைப் படுத்தி எடுக்கின்றனர். பத்தாம் வகுப்பு வந்துவிட்டால், எல்லா சுதந்திரத்தையும் இழந்துவிட்டு, புத்தகப் புழுவாக மாற வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகின்றனர் மாணவ, மாணவிகள்.

யப்பாடா… பத்தாம் வகுப்பு தேர்வு ஒருவழியாக முடிந்தது என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள் குழந்தைகள். பிளஸ் 1ல் அரசுத் தேர்வு இல்லை என்பதால் இவர்களை பெற்றோர்கள் அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை.

அந்த ஒரு வருடம் கொஞ்சம் ரிலாக்சாக இருப்பார்கள். பிளஸ் 2 போய்விட்டால், மீண்டும் நெருக்கடி, படி, படி… என்று படுத்தி, புத்தகப் புழுவாக்கிவிடுவார்கள் பெற்றோர்கள். வீட்டில் கேபிள் கனெக்‌ஷன் கூட துண்டிக்கப்பட்டுவிடும். டிவி பார்த்து, மகனின் நேரம் வீணாகிவிடக்கூடாதே… சதா நேரம் அவன் படிக்க வேண்டும். அதற்காக வீட்டில் மற்ற எல்லாரும்கூட டிவி பார்ப்பதை தியாகம் செய்வார்கள். மாணவ மாணவிகளுக்கு பெரும் மன அழுத்தம்.

நல்ல இன்ஜினியரிங் கல்லூரியில் சேர வேண்டும். வளாக நேர்காணலில் வேலை கிடைக்க வேண்டும். இதற்கு அதிக மதிப்பெண் தேவை. ஆக, மதிப்பெண் என்ற இலக்கை நோக்கி ஓடும் குதிரைகள் ஆக்கப்படுகிறார்கள் மாணவர்கள். குதிரைகளை சவுக்கால் அடித்து வேகமாகச் செலுத்தும் ஜாக்கிகளைப் போல மாறிவிடுகின்றனர் பெற்றோர். பாவம் பிள்ளைகள்.

மதிப்பெண் ஒன்றே குறிக்கொள் ஆகிப்போனதா? இதைக் காசாக்க பல பள்ளிகள் முடிவு செய்தன. அவர்கள் பள்ளியில் மாணவர்களைச் சேர்த்துவிட்டால் போதும். எப்படியாவது அதிக மதிப்பெண் எடுக்க வைத்துவிடுவார்கள். பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை மட்டுமேதான் தங்கள் பள்ளியில் இவர்கள் சேர்க்கின்றனர் என்பது வேறு விஷயம்.

பிளஸ் 2 தேர்வில் மாணவர்களை அதிக மதிப்பெண் வாங்க வைத்து, அதை காட்டி, கல்வி வியாபாரத்தை மிக லாபகரமானதாக்குவது மட்டுமே இந்தப் பள்ளிகளின் குறிக்கோள். இதற்காக, பிளஸ் 1 வகுப்பிலேயே பிளஸ் 2 பாடத்தை நடத்தத் தொடங்கிவிடுகின்றனர். பிளஸ் 2 வில் பாடம் நடத்தமாட்டார்கள். வருடம் முழுவதும் தேர்வு. படி, தேர்வு எழுது, படி; தேர்வு எழுது இதேதான்.

அரசுத் தேர்வு இல்லை என்பதால், பிளஸ் 1 பாடத்தை இந்தப் பள்ளிகள் நடத்துவதில்லை. இதை மாற்ற என்ன செய்யலாம்? சுலபமான வழி, பிளஸ் 1 க்கும் அரசுத் தேர்வு என்று அறிவித்துவிட்டது அரசு. மேலோட்டமாகப் பார்த்தால் அரசு அறிவிப்பு நல்லதுதானே என்று தோன்றும். ஆனால், இதன் விளைவு பரிதாபகரமானது.

பத்தாம் வகுப்பு படிக்கும் ஓராண்டு முழுவதும், படிப்பு, படிப்பு என்று மன அழுத்தத்திலேயே இருக்கின்றனர் பிள்ளைகள். பிளஸ் 2 வில் கேட்க வேண்டாம். உச்சகட்ட நெருக்கடி, மன அழுத்தம் பிள்ளைகளுக்கு. இடையிலே ஓராண்டுகாலம் பிளஸ் 1ல் கொஞ்சம் ரிலாக்சாக இருந்தனர். இப்போது அதுவும் போச்சு.

பிளஸ் 1க்கும் அரசுத் தேர்வு என்பதால், “படி…படி…என்று நள்ளிரவு வரை பிள்ளைகளைப் படிக்கச் சொல்லி பூஸ்ட் போட்டுக்கொடுத்துவிட்டு அருகிலேயே அமர்ந்திருப்பார் அம்மா. ஆக பத்தாம் வகுப்பு தொடங்கி 12ம் வகுப்பு முடியும் வரை, தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு புத்தகப் புழுக்களாக ஆக்கப்படுவார்கள் பிள்ளைகள். மூன்று ஆண்டுகளுக்கு அவர்களின் உலகம் புத்தகம்தான். மன அழுத்தம்தான். நினைத்துப் பாருங்கள், மூன்று ஆண்டுகள் தொடர்ந்து மன அழுத்தத்திலேயே வாழ்ந்தால் பிள்ளைகள் என்னாவார்கள்?

பிள்ஸ் 1 பாடம் நடத்தாதது பள்ளிகள் செய்த தவறு அவர்களைத் திருத்தத் துப்பில்லாத அரசும் அதிகாரிகளும், பிள்ளைகள் மீது தேர்வைத் திணித்திருக்கிறார்கள். தேர்வு அடிப்படையிலான பாடத்திட்டமே மாற்றப்பட் வேண்டும் என்ற கருத்து ஏற்பட்டுள்ள நிலையில் இன்னொரு தேர்வைத் தேவையின்றித் திணித்துள்ளது அரசு. தவறு செய்தது பள்ளிகள். தண்டனை மாணவர்களுக்கா?

(கட்டுரையாளர் இரா.குமார், தமிழ் இலக்கியத்தில் எம்பில் பட்டம் பெற்றவர். பத்திரிகை துறையில் 34 ஆண்டுகள் பணியாற்றி வருகிறார். இதுவரையில் பத்து நூல்கள் எழுதியுள்ளார். என்.எல்.சி நிறுவனம் சிறந்த எழுத்தாளர் விருதை பெற்றுள்ளார். சிறந்த பேச்சாளர், தர்மபுரம் இளைய சன்னிதானம் குமாரசாமி தம்பிரானிடம் இறைத் தமிழ் வேந்தர் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.)

Get the latest Tamil news and Opinion news here. You can also read all the Opinion news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Go wrong punishment

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com