Advertisment

ரியல் எஸ்டேட் வணிகத்தில் தீண்டாமைக்கு விதை: கிராமம் தோறும் சூழும் அபாயம்

இந்த வீட்டுமனைகளை எல்லோரும் வாங்கிவிட முடியாது, உங்களிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் கூட... நீங்கள் வீட்டுமனை விற்பவரிடம் அணுகி,  பேசும்போது, அவர்  நீங்கள் என்ன சாதி என்று நோட்டம் பார்ப்பார். நீங்கள் எஸ்சி, எஸ்டி சமூகங்களைச் சார்ந்தவராக இருந்தால் உங்களுக்கு வீட்டுமனை இல்லை.

author-image
WebDesk
New Update
Gowthama Siddharthan writes on casteism and Untouchablity in Real Estate Business, Gowthama Siddharthan writes, casteism and Untouchablity in Real Estate Busines, ரியல் எஸ்டேட் வணிகத்தில் தீண்டாமைக்கு விதை, கிராமம் தோறும் சூழும் அபாயம், Gowthama Siddharthan, castism and Untouchablity in Real Estate Business of Tamil Nadu

ரியல் எஸ்டேட் வணிகத்தில் தீண்டாமைக்கு விதை: கிராமம் தோறும் சூழும் அபாயம்

எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன்

Advertisment

தோழர்களே, அடிப்படையில் நான் ஒரு நவீன எழுத்தாளன். மாற்றுச் சிந்தனைகள் கொண்ட சமூக மாற்றம் குறித்து ஓயாமல் சிந்தித்துக் கொண்டிருக்கும் கலைஞன். 2000 ஆண்டு தமிழ் மொழியின் மரபில் துளிர்த்து, அந்த மரபில் கெட்டி தட்டிப்போன சமூக அழுக்குகளை களைந்தெறிய என் எழுத்துக் களத்தில் செயல்பட்டுக் கொண்டிருப்பவன்.

கடந்த 10 வருடங்களாக என் மனதை ஓயாமல் சித்திரவதை செய்து கொண்டிருந்த சமூக அவலத்தை, இனிமேலும் ஏற்றுக்கொள்ளாது, தாதா சாகேப் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளில் வெளியிடுகிறேன். சிந்தனைச் சிற்பி டாக்டர் அம்பேத்கர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய மகத்தான மேதை. அந்த சட்டவியல் மேதையின் பிறந்தநாளில் இதை வெளியிடுவதுதான் அந்த விஷயத்திற்கான கவித்துவ நீதியாக இருக்கும் என்ற தகிப்பில் இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இப்பொழுது நம் நிலம் முழுக்க ரியல் எஸ்டேட் என்னும் நில வாணிபம் பெரியளவில் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.  இத்தனை நாளும் நகரத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த இந்த வணிகம், இப்பொழுது கிராமப்புறங்களில் அசுரத்தனமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. ஓகே. இது வணிகம்! இதற்குள் நான் நுழையவில்லை. 

ஆனால், இதற்குள் இருக்கும் சாதி ரீதியிலான தீண்டாமை மிக மிகக் கொடூரமானது. விரிவாகப் பார்க்கலாம். 

Gowthama Siddharthan writes on casteism and Untouchablity in Real Estate Business, Gowthama Siddharthan writes, casteism and Untouchablity in Real Estate Busines, ரியல் எஸ்டேட் வணிகத்தில் தீண்டாமைக்கு விதை, கிராமம் தோறும் சூழும் அபாயம், Gowthama Siddharthan, castism and Untouchablity in Real Estate Business of Tamil Nadu

எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன்

கிராமங்களில் ஏற்கனவே, சாதி என்னும் படிமம் பெருமளவில் இறுகிப் போயிருக்கிறது என்பதை கடந்த காலங்களில் மட்டுமல்ல, இன்றளவிலும் நாம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம், அனுபவித்துக் கொண்டுதானிருக்கிறோம். 

வெறுமனே, பார்ப்பனர் என்னும் பிராமண சமூகம்தான் சாதிக் கொடுமைகளையும், சாதி ரீதியிலான ஒடுக்குதல்களையும்  நிகழ்த்திக் கொண்டிருக்கிறது என்று தொடர்ந்து சொல்லிச் சொல்லி பிற ஆதிக்க சாதிகள், மற்ற ஒடுக்கப்பட்ட படிநிலைகளில் இருக்கும் சாதிகள் மீது நடத்திக் கொண்டு வரும் துன்பங்களையும் துயரங்களையும் கவனம் பெறாமலேயே செய்து கொண்டிருக்கின்றது ஆதிக்க சாதிகளின் கைப்பிடியில் பிதுங்கி நெளியும் தற்காலச் சூழல்.

அப்படியானால், பிராமணர்களின் சாதி ஆதிக்கம் இல்லையா? அவர்கள் எளிய சாதிகளின் மீது தொடுக்கும் சாதிக்  கொடுமைகள் இல்லையா? என்ற கேள்விகள் முக்கியமானவை. ஆம். அவை நிச்சயமாக 2000 ஆண்டு கொடுமையானவை. அவைகளை எதிர்த்துப் போராடவேண்டும் என்பதில் மாற்றுக கருத்து இல்லை. 

ஆனால், வெறுமனே அவைகளை மட்டுமே கணக்கில் கொண்டு, பிற சாதி இந்துக்கள், எளிய ஒடுக்கப்படும் சாதிகள் மீது நிகழ்த்தும் வன்முறைகளையும் பிரதானமாகக் கணக்கில் கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

அப்படியான பின்புலத்தில் நான் இங்கு  முன்வைப்பது மிக மிக நுட்பமான சாதித்தீண்டாமை. இதுவரை எந்த ஊடகங்களிலும் வெளிவராத நுண்ணரசியல்.

கிராமங்களில் உள்ள சிறு, குறு விவசாயிகளின் நிலத்தை பணத்தாசை காட்டி வாங்கி,  அந்நிலத்தை, வீட்டுமனைகளாகப் பிரித்து,  அரசிடம் DTCP அப்ரூவல் வாங்கி, வீட்டுமனை வாங்க விரும்பும் மக்களுக்கு விற்கும், வீட்டுமனை வியாபாரம் கனஜோராக நடந்து கொண்டிருக்கிறது  மிக அதிகபட்சமாக, இந்தத் தொழிலில் உயர்சாதியினர் தான் செயல்படுகிறார்கள். (அவர்களிடம்தான் ஆள், படை, அதிகாரம், பணபலம், அரசியல் செல்வாக்கு.. இத்யாதிகள் இருக்கின்றன.)

இந்த வீட்டுமனைக்கான  பரந்த நிலத்திற்கு, தங்கள் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, மாமன், மச்சினி, கொழுந்தியா.. என்று தங்களுக்கு விருப்பமான பெயர்களை வைத்துக் கொள்வார்கள். இதைப் பற்றியும் நான் பேசவரவில்லை.

நான் இங்கு பேச வருவது மிக முக்கியமான விஷயம்:

அதாவது,  இந்த வீட்டுமனைகளை எல்லோரும் வாங்கிவிட முடியாது, உங்களிடம் எவ்வளவு பணமிருந்தாலும் கூட, நீங்கள் வீட்டுமனை விற்பவரிடம் அணுகி,  பேசும்போது, அவர்  நீங்கள் என்ன சாதி என்று நோட்டம் பார்ப்பார். நீங்கள் பட்டியலினத்தவர் என்று தற்காலத்தில் அடையாளமிடப்படும் எஸ்சி, எஸ்டி சமூகங்களைச் சார்ந்தவராக இருந்தால் உங்களுக்கு வீட்டுமனை இல்லை.

“வீட்டுமனைகள் எல்லாம் ஏற்கனவே விற்பனையாகி விட்டன. அடுத்து இன்னும் ஒருமாதத்தில் இன்னொரு இடத்தில் வீட்டுமனை விற்பனை ஆரம்பிக்க இருக்கிறோம் அங்கு வாருங்கள்.. உங்களுக்குத் தருகிறோம்..” என்று நைச்சியமாகப் பேசி திருப்பி அனுப்பி விடுவார்கள். 

நீங்கள் பட்டியலினத்தவர் அல்லாது, புழங்குகிற சாதியைச் சேர்ந்தவர்களாக இருப்பின் உங்களுக்கு வீட்டுமனை உண்டு. (புழங்குகிற சாதி என்பது கிராமப்புற வழக்கில், உயர்சாதி இந்துக்களின் அடுத்த படிநிலையில் இருப்பவர்கள்.) மற்றபடி உயர்சாதியினர் எனில், உங்களுக்கு வீட்டுமனை, கன்ஃபார்ம்!

இது மிக மிக நுட்பமான, கொடூரமான தீண்டாமை! இதற்கு எதிராகத்தான் முற்போக்கு சிந்தனையாளர்களும், முற்போக்கு இயக்கங்களும் களமாடவேண்டும் என்று எதிர்நோக்குகிறேன்.

சரி இதை எப்படிக் களைவது? 

இந்த நிலத்தை வீட்டுமனைகளாகப் பிரித்து, சம்பந்தப்பட்ட கிராமப் பஞ்சாயத்து, நகராட்சி அலுவலகங்களில் DTCP அப்ரூவல்  வாங்கும் போது, 3 குறிப்பிட்ட  விதிகளை (ஷரத்து) இந்தப் பத்திரத்தில் இணைத்து, வீட்டுமனைகள் விற்கும் ரியல் எஸ்டேட் அதிபருடன் ஒப்புகை பெற வேண்டும்.  

ஷரத்து 1.  100 விழுக்காடு வீட்டு மனைகளில், குறிப்பிட்ட விழுக்காடு வீட்டுமனைகள்* பட்டியலின மக்களுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும்.

ஷரத்து 1A.  பட்டியலின மக்கள்* என்று குறிப்பிடப்படும் போது, அது இங்கு இஸ்லாமியர், கிறித்துவர் உள்ளிட்ட மாற்று மதத்தினரையும் குறிக்கும்.  

ஷரத்து 1B  அப்படி பட்டியலின மக்களுக்கு விற்கப்படும் மனை நிலம், அது சார்ந்த (அதாவது அந்த வரிசைக்கிரமத்தில் உள்ள) பிற மனை நிலத்தின் விலைக்கு சற்றும் மிகாமல் இருக்க வேண்டும்.  

ஷரத்து :1C  பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட மனைநிலத்தை வாங்க பட்டியலினத்து மக்கள் எவரும் வராத பட்சத்தில், அந்த மனை நிலங்களை சம்பந்தப்பட்ட கிராமப் பஞ்சாயத்து/நகராட்சிக்கு ஒப்படைத்துவிட வேண்டும். அவர்கள், இந்த விபரத்தை தங்கள்அறிவிப்புப் பலகையில் ஒட்டி விளம்பரம் செய்து, ரியல் எஸ்டேட் அதிபர் சொன்ன விலைக்கு, பட்டியலினத்து மக்களுக்கு விற்பனை செய்து தரலாம். 

ஷரத்து : 1D  சம்பந்தப்பட்ட  மனை நிலங்களை பெற்றுக்கொண்ட சம்பந்தப்பட்ட கிராமப் பஞ்சாயத்து/நகராட்சி, பெற்றுக்கொண்ட தேதியிலிருந்து, ஒரு வருடகாலத்தில் இந்த விற்பனை நிகழ வேண்டும்.     

ஷரத்து :2  இந்த நிலத்தை வாங்கிய பட்டியலினத்தவர், தங்களது அவசரப் பணத்தேவை கருதி, விற்பனை செய்ய நினைத்தால் மற்ற மனைக்காரர்கள் விற்பனை செய்வது போல, அவர் யாருக்கு வேண்டுமானாலும்   அவரது விருப்பம் போல விற்றுக் கொள்ளலாம். ஆனால், கட்டாயமாக வாங்கிய தேதியிலிருந்து 3 வருடங்கள் கழித்துத்தான் விற்பனை செய்ய முடியும்.

இதன் பிறகு அடுத்த 3 வது ஷரத்து மிக முக்கியமானது.

ஷரத்து : 3  இப்படி பட்டியலினத்தவருக்கு மனை நிலங்கள் பொதுவான மனை நிலங்களோடு ஒன்று கலந்திருக்க வேண்டும். மாறாக, பட்டியலினத்தவருக்கான மனை நிலங்களை ஒரு பகுதியாக ஒதுக்கியோ, பின்பகுதியில் தள்ளியோ, இதற்கென ஒரு  தெருவாக ஒதுக்கவோ கூடாது. அவை. பொதுவான மனை நிலங்களோடு ஒன்று கலந்திருக்க வேண்டும்.   

அப்படியல்லாது இந்த மக்களுக்கான மனை நிலங்களை தனி வரிசையாக ஒதுக்கும் பட்சத்தில், தற்போதுவரை சமூகவெளியில் நிகழ்ந்து கொண்டிருப்பது போல, ஒதுக்கப்பட்ட ஒரு காலனிப் பகுதி போலவோ, தீண்டாமையால் ஒதுக்கி வைக்கப்பட்ட தெரு போலவோதான் இருக்கும். ஆகவேதான்,  இந்த மனை நிலங்கள்  பொதுவான மனை நிலங்களோடு ஒன்று கலந்திருக்க வேண்டும்.  

ஒவ்வொரு முறையும் அரசியல்வாதிகள் ஓட்டுக்காக முன்வைக்கும் அரசு சமத்துவபுரத் திட்டங்கள் காலப்போக்கில் கரைந்து போய்விடுவது போல, இவை கரையாது.  ஏனெனில், இவை பலகோடி மதிப்பு மிக்க தனியார் வணிகத்தால் - ரியல் எஸ்டேட் வணிக சாம்ராஜ்யத்தால் உருவாக்கப்படுபவை.  ஆகவே, இந்த வகை வீட்டுமனைகள் எதிர்காலங்களில் இன்னும் பல்கிப்பெருகிக்கொண்டே இருக்கும். 

 ஆகவே, இந்தப் பார்வைக்கு முற்போக்கு எண்ணங்கள் கொண்ட வெகுஜனதளத்தில் செயல்படுகின்ற அரசியல்வாதிகள் ஆதரவு தரவேண்டும்.  பெண்ணியவாதிகள், தலித் ஆளுமைகள், முற்போக்கு இயக்கங்களின் தோழமைகள், மாற்றுச் சிந்தனையாளர்கள், களச்செயல்பாட்டாளர்கள், முற்போக்கு எழுத்தாளுமைகள், நுண்ணரசியல் ஆய்வாளர்கள், மாற்றுச் சிந்தனைகளின் செயல்பாட்டை ஆதரிக்கும் நண்பர்கள்.. என இதை முன்னெடுத்துச் செல்பவர்கள் நீங்கள்தான், நானல்ல. உங்கள் அனைவரது கரமும் இணைந்து கோர்க்கும்போது மட்டுமே இதுபோன்ற மாற்றுச் சிந்தனைக் கருத்துக்கள் வரலாறாகும்.

RERA Act-2016 (The Real Estate (Regulation and Development) Act, 2016) என்னும் மனை விற்பனை (ஒழுங்குபடுத்துதல், மேம்படுத்துதல்) சட்டம் 2016 -ன் படி த. நா. வீட்டு மனை ஒழுங்காற்று ஆணையத்தின் விதிகளில், சட்டரீதியாக மேற்சொன்ன இந்த உட்பிரிவுகளை ஏற்படுத்த அல்லது தனிச்சட்டம் கொண்டுவர அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.

இப்படியான செயல்பாடுகள் மூலம், தீண்டாமை அல்லது சாதியம் உடனே, முற்றாக ஒழிந்து போய்விடும் என்பதல்ல, அந்த சாதி அழித்தொழிப்புக்கான ஒரு மீச்சிறு காலடியே இந்த ஷரத்து.

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சாதியை அழித்தொழிப்பதற்கான வழியை தன் வாழ்நாள் முழுக்க  சிந்தித்தவர், அதற்காக ஒவ்வொரு கணமும்  செயல்பட்டவர். அந்தச் செயல்பாட்டின் தொலைநோக்குப்பார்வையால் அன்றைக்கு உருவாக்கிய அவருடைய அரசியலமைப்புச் சட்டம் இன்றைக்கு சாதிய ஒடுக்குமுறைகளுக்கான எதிர்ப்பாயுதமாக, அரணாக விளங்குகிறது.

அந்த மரபிலிருந்து உருவான சிறகு ஒன்று, அந்த அரசியலமைப்புச் சட்டத்தின் தீராத பக்கங்களில் சாதியத்தின் மரண வாதையை எழுதிச் சுழிக்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment