Advertisment

குஜராத் மாநிலங்களவை தேர்தல் : கட்டுப்பாடான ஜனநாயகம் தேவை

விரிவான விளக்கங்கள் கொண்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் 67 ஆண்டுகளில் 101 முறை திருத்தப்பட்டும் ஜனநாயக படுகொலைகள் தொடர்வது ஏன்?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
குஜராத் மாநிலங்களவை தேர்தல் : கட்டுப்பாடான ஜனநாயகம் தேவை

வழக்கறிஞர். கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

Advertisment

நேற்று நள்ளிரவில் குஜராத்தில் நடந்த கூத்தில் இந்திய ஜனநாயகம் கேள்விக்குறியாகிவிட்டது. நாடு விடுதலைப் பெற்று 70 ஆண்டுகளில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறும் நிகழ்வுகளும், ஆட்சி கவிழ்ப்புகளும் 1985 வரை நடந்தேறின. பிரிவு 356ஐ கொண்டு, உச்ச நீதிமன்றம் எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் தீர்ப்பு வழங்கும் வரை மத்திய அரசு விருப்பத்திற்கேற்றவாறு மாநில அரசுகளை கவிழ்த்தது. இப்படி ஜனநாயகத்திற்கு எதிரான கூத்துகள் நேற்றைய குஜராத் தேர்தல் வரை நடந்தேறியுள்ளது.

இதற்கு காரணமென்ன?

நம்முடைய ஜனநாயக அமைப்புகளில் கோளாறுகள் அதிகமாக உள்ளன. இதனால் தான் கிரிமினல்கள் எல்லாம் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகி அமைச்சர்களும் ஆகிவிடுகின்றனர். அவர்களின் குரலே சட்டமும் ஆகிவிடுகிறது. இப்படியான புரையோடிய நிலையில் தான் நம்முடைய இன்றைய ஜனநாயகம் இருக்கிறது.

உலகத்திலேயே அதிக பக்கங்களும், விரிவான விளக்கங்களும் கொண்ட நமது அரசியல் சாசனம், கடந்த 67 ஆண்டுகளில் 101 முறை திருத்தப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்க அரசியல் சாசனம் 240 வருடங்கள் ஆகியும் 30 பக்கங்கள் கொண்ட அந்த சாசனத்தில் வெறும் 20 முறை மட்டுமே திருத்தப்பட்டுள்ளது. அத்தோடு மத்தியில் ஆட்சியில் இருந்தவர்கள் ஜனநாயகத்தை புதைகுழியில் தள்ளி 356ஐ கொண்டு சுமார் 70 ஆண்டுகளில் 125 முறை மாநில அரசுகளை கலைத்துள்ளனர் எனில், நம்மிடையில் ஜனநாயக மக்கள் அரசியல் இல்லாமல் நேர்மையற்ற அமைப்போடு தான் இருக்கிறது என்பதை சற்று கூர்ந்து கவனித்தால் தெரியும். இதையெல்லாம் சீர்படுத்தாமல் ஜனநாயகம் என்று பேசிக்கொண்டு நாம் செய்யும் பெருந்தவறுகளை நியாயப்படுத்துகிறோம்.

இந்த கேடுகளின் கூறுகளை பார்த்தால்;

1. நேர்மையற்ற, தகுதியற்ற குற்றவாளிகள் ஆட்சி பீடத்திலும், அதிகாரத்திலும் வந்துவிடுகிறார்கள். தகுதியே தடை என்ற வகையில் நல்லவர்கள், ஆற்றலாளர்கள், களப்பணியாளர்கள் எவ்வளவு உழைத்தாலும் பொறுப்புக்கு மக்களும் அனுப்புவதில்லை. மக்கள் என்றைக்கு பணத்திற்கு வாக்களித்தார்களோ, அன்றைக்கே நம்முடைய ஜனநாயகம் புதைக்கப்பட்டுவிட்டது. இதை மாற்றாத வரையில் எந்த நம்பிக்கையோ நாட்டின் வளர்ச்சியோ இருக்கப் போவதில்லை.

2. நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தில் நேர்மையான, ஆரோக்கியமான அரசியலுக்கான நெறிமுறைகளை வகுக்க உரிய கடுமையான திருத்தங்களை கொண்டுவர வேண்டியிருக்கிறது.

இப்படி ஜனநாயகம் என்பது வேட்டைக் காடாக இல்லாமல் சமதர்ம பூக்காடாக அமைய வேண்டுமென்றால் வரம்புள்ள ஜனநாயகத்தை நிறுவினால் மட்டுமே நேர்மையான போக்கில் அரசுகள் அமையும். அதுவே மக்கள் நல அரசாக இருக்கும். ஐனநாயகம் கட்டுப்பாட்டுக்குள் இல்லையெனில் நாடு ஆபத்தை சந்திக்கும். நேற்றைக்கு குஜராத்தில் நடந்த கதை போல தான்.

சமீபத்தில் “Theories of Democracy” என்ற நூலை படித்தபோது மக்களாட்சியின் மாண்பும், அதன் வகைகளும், குடியாட்சியின் போக்கும் அதன் அணுகுமுறையும் விரிவாக ஆய்வுபூர்வமாக தெரிந்துகொள்ள முடிந்தது. குடியாட்சியில் எப்படி உரிமைகள் முக்கியமோ, குடிகளின் கடமைகளும் முக்கியம். நமது அரசியலமைப்புச் சட்டத்தில் மக்களின் பொறுப்புகளை சொல்கின்ற வகையில் “Directive Principles of State Policy” என்று இடம் பெற்றுள்ளது. கென்னடி சொன்னதைப்போல நாடென்ன உனக்கு செய்தது என்று நினைக்காமல் நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என்று நினைத்துப்பார் என்ற வகையில் கடமைகளை நேர்மையாக செய்ய வேண்டும். ஜனநாயகம் கிரேக்கத்தில் பிறந்து பல வடிவங்களாகி இன்றைக்கு நவீன அணுகுமுறையோடு பல சூழலில் புதிய பரிமாணங்கள் எடுத்துள்ளன. உலகம் வளர்ச்சி அடைய வேண்டும். அமைதியான உலகமாக இருக்க வேண்டும். ஆட்சி முறையில் நேர்மையான, லஞ்ச லாவண்யமற்ற மக்கள் நல அரசுகள் அமைய வேண்டும். அப்படியென்றால் ஒரு சில அவசியமான பொறுப்பான கண்டிப்பான ஆட்சிமுறை அவசியம். உரிமைகள் என்பது நாம் எடுத்துக்கொள்கின்ற காரணிகள் ஆகும். அதற்கும் சில அளவுகோல்கள் உண்டு. அந்த அளவுகோல்களோடு, நம்முடைய கடமைகளும், பொறுப்புகளும் நமக்கென்று சில வரையறைகளை வைத்துக்கொண்டு இருந்தால்தான் ஜனநாயகம் வெற்றி அடையும் என்று அறிவியல் பூர்வமாக இன்றைக்கு புதிய கோட்பாடுகளை சொல்லி வருகின்றனர். இது குறித்தான விரிவான பதிவுகளை Theories of Democracy யில் படிக்க முடிந்தது. நோய் வந்தால் கசப்பான மருந்துகளை எடுத்தால்தான் நலமாக முடியும்.

எனவே நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சில கட்டுப்பாடுகளும், ஒழுக்கங்களும் அவசியம். இவை யாவும் மக்களே கடைப்பிடிக்க வேண்டும். அரசு இந்த கட்டுப்பாடுகளை வரையறுக்கும் என்று இல்லாமல் நமக்கு நாமே வரையறுத்துக் கொண்டு நம் உரிமைகளைப் பெறுவது எதிர்கால குடியாட்சிக்கு மாண்பாக இருக்கும் என்று ஒரு சில புதிய சிந்தனையாளர்கள் வலியுறுத்துகின்றனர். இதை சுயநலமற்ற ஏற்றுக்கொண்ட ஜனநாயக கட்டுப்பாடுகள் என்று நாம் பொருள்கொள்ளலாம். இந்த சிந்தனைகள் எதிர்காலத்தில் உலக நாடுகளில் குடியாட்சியைப் பாதுகாக்க உதவும் என்று அரசியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். கடந்த கால மன்னர்கள் ஆட்சியில் வரம்புள்ள முடியாட்சி, வரம்பற்ற முடியாட்சி என்ற பிரிவினைகள் இருந்தது போல கட்டுப்பாடான ஜனநாயக குடியரசுகள் எதிர்காலத்தில் தோன்றும் என்று சொல்கின்றன.

குஜராத்தில் நேற்று நடந்த ஜனநாயகப் படுகொலை என்பதை போல காங்கிரசும் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் எத்தனையோ ஜனநாயகப் படுகொலைகளை செய்துள்ளது. இதைப் போல மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்கும் பேனாவை முறையாக பயன்படுத்தவில்லை என்று காரணம் சொல்லி ஜனநாயக நெறிகளை கபளீகரம் செய்தது. குஜராத் போல கடந்த 70 ஆண்டுகளில் இந்த கேடுகள் தொடர்கதையாக நடந்து வருகின்றன. இதை தடுக்க நியாயமான நிலைப்பாட்டை அரசியல் மனமாச்சரியங்களை கடந்து யாரும் சிந்திப்பது இல்லை. எனில் சுயநலம் என்ற போக்கில் தங்களுக்கேற்றவாறு மாற்றிக் கொள்ளும் தவறுகளுக்கு ஜனநாயகத்தை பலியிடுகின்றனர்.

தகுதியற்ற சிறைக்குச் செல்ல வேண்டிய குற்றவாளி எல்லாம் நாடாளுமன்றத்தில் அமர்ந்தால் இதை போன்ற அவலங்கள் தான் நடக்கும்.

குற்றவாளிகளான மக்கள் விரோதிகள் கொண்டாடப்படுகின்ற இந்த ஜனநாயக நாட்டில் குஜராத்தை போல இன்னொரு மாநிலத்தில் நாளை நடக்கும். அவ்வளவு தான். வேறென்ன சொல்வது…

(கட்டுரையாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மூத்த வழக்கறிஞர். கதைசொல்லி இதழின் இணை ஆசிரியர். நூலாசிரியர். திமுகவின் செய்தி தொடர்பாளர். தொடர்ப்புக்கு : rkkurunji@gmail.com)

K S Radhakrishnan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment