Advertisment

அடக்குமுறைக் கருவியா குண்டர் சட்டம்?

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை மே 17 இயக்கத்தினர் ஒவ்வொரு ஆண்டும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்தை எந்தத் தடையுமின்றி நடத்திவந்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
திருமுருகன் காந்தி மூன்றாவது முறையாக மீண்டும் இன்று கைது!

கண்ணன்

Advertisment

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் குண்டர் சட்த்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது எதிர்க்கட்சிகள் மற்றும அரசியல் செயற்பாட்டாளர்களின் மத்தியிலும் சமூக வலைதளங்களிலும் கடும் கண்டனங்களைப் பெற்றுள்ளது.

மே17ன் பின்னணி

மே 17, 2009 அன்று முள்ளிவாய்க்காலில் இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்குமான போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்தப் போரில் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் தமிழகத் தலைநகர் சென்னையில் உள்ள மெரீனா கடற்கரையில் முல்லிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம் மே 17 என்ற இயக்கத்தின் சார்பில் நடத்தப்படுகிறது.

தடையை மீறி நினைவேந்தல்

இந்த ஆண்டு மெரினாவில் நடைபெற்ற ஜல்லிகட்டுப் போராட்டத்தை அடுத்து அங்கு பொதுமக்கள் ஒன்றுகூடல்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. எனவே மே 17 இயக்கத்தின் முல்லிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கும் தடை விதித்தது சென்னை காவல்துறை. ஆனால் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, நிர்வாகிகள் டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் தடையை மீறி நினைவேந்தல் கூட்டத்தை நடத்த முயன்று கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ஜாமீன் மனு சென்னை முதன்மை நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. அதோடு இன்று அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

இதை விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் தமிழர் ஆதரவு அமைப்புகளும் கடுமையாக கண்டித்துள்ளன. சமூக வலைதளங்களிலும் கட்சி பேதங்களைக் கடந்து இந்த நடவடிக்கையைப் பலர் விமர்சித்துவருகின்றனர். திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற பதிவுகளையும் சமூக வலைதளங்களில் அதிகமாகக் காணக் கிடைக்கின்றன.

இதற்கா குண்டர் சட்டம்?

குண்டர் சட்டம் என்பது தொடர்ச்சியாக குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தண்டிப்பதற்கானதாக இருந்தது. ஆனால் ஆகஸ்ட் 2014ல் ஜெ.ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது குண்டர்சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கக்கூடிய குற்றங்களை ஒரு முறை செய்தாலே குண்டர் சட்டத்தில் கைது செய்யலாம் என்ற திருத்தம் அவற்றுள் ஒன்று. இந்தத் திருத்தம் அப்போதே எதிர்க்கட்சிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களால் எதிர்க்கப்பட்டது.

இப்போது மெழுகுவர்த்தி ஏந்தி இறந்தவர்களுக்கு மரியாதை செய்யும் நினைவேந்தல் நிகழ்வை தடையை மீறி நடத்த முயன்றவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதன் மூலம் போரில் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களை நினைவுகூர்வதே தமிழகத்தில் பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் செயல் என்று தமிழக அரசு கருதுவதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில்…

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, விடுதலைப் புலிகள் அமைப்பைக் காலம் முழுவதும் கடுமையாக எதிர்த்தவர் என்ற போதிலும், தன் கடைசி ஆண்டுகளில் இலங்கைத் தமிழர்கள் நல்வாழ்வில் தனக்கு மிகவும் அக்கறை இருப்பதாகக் காட்டிக்கொண்டார். அதற்கேற்றாற்போல் 2011-2016 ஆட்சிக் காலத்தில் அவரது செயல்பாடுகளும் அமைந்தன. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன் பேரறிவாளன் ஆகியோரை விடுதலை செய்து உத்தரவிட்டது, இலங்கை தலைநகரில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் அன்றைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பதை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது, இலங்கை மீது பொருளாதாரத் தடை கொண்டுவர வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் பேசியது என அவரது இலங்கைத் தமிழர் ஆதரவு நடவடிக்கைகளைப் பட்டியலிடலாம்.

அதேபோல் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை மே 17 இயக்கத்தினர் ஒவ்வொரு ஆண்டும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்தை எந்தத் தடையுமின்றி நடத்திவந்துள்ளனர். அதற்கு முன்பு திமுக ஆட்சியிலும் இந்த நினைவேந்தலுக்கு எந்த பிரச்சினையும் வந்ததில்லை.

இத்தனைக்கும் திமுக, அதிமுக இரண்டு கட்சித் தலைமகளையும் அவர்களது ஆட்சியும் கடுமையாக விமர்சித்துவந்தவர் திருமுருகன் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் பங்கு?

இப்போது ஜெயலலிதா மறைந்து கருணாநிதி அரசியலிலிருந்து விலகியிருக்கும் நிலையில் திருமுருகன் காந்தியும் அவருடைய தோழர்களும் கைது செய்யப்பட்டிருப்பது கவனத்துக்குரியது. இதற்குப் பின்னும் மத்திய பாஜக அரசின் உந்துதல் இருக்குமோ என்ற சந்தேகத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பிவருகின்றன. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், நாம தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான் ஆகியோர் இந்த விஷயத்தில் மத்திய அரசை நேரடியாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருமுருகன் காந்தி ஈழத் தமிழர்கள் விவகாரத்துக்காக மட்டும் குரல் கொடுப்பவர் அல்ல. தொடர்ந்து தமிழர் நலன் சார்ந்த அமைப்புகள் நடத்தும் கூடங்குளம் அணு உலைக்கெதிரான போராட்டம், நியூட்ரினோ, நெடுவாசல் எதிர்ப்புப் போராட்டங்கள் ஆகியவற்றில் தன்னை இணைத்துக்கொண்டவர். மத்தியில் ஆளும் முந்தைய காங்கிரஸ் அரசையும் தற்போதைய பாஜக அரசையும் பல விஷயங்களில் கடுமையாக விமர்சித்துவருபவர்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் அமைப்பான பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவை உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அரங்கங்களில் இந்தியாவில் நடந்துவரும் மனித உரிமைகள் மீதான அத்துமீறல்கள் குறித்து திருமுருகன் காந்தி ஆதாரங்களுடன் பேசினார். ஜல்லிக்கட்டு தொடர்பான வன்முறை குறித்து விசாரணை நடத்திவரும் நீதிபதி ராஜேஸ்வரன் ஆணையத்தில், அந்த வன்முறையைக் காவல் துறை திட்டமிட்டு நடத்தியதாக உரிய ஆதாரங்களைச் சமர்ப்பித்திருந்தார். இந்த நிலையில்தான், திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசுக்கு எதிராகச் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும் என்று அச்சுறுத்துவதற்காகவே இந்த விஷயத்தில் குண்டர் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று செயற்பாட்டாளர்கள் பலரும் கருதுகின்றனர். இந்த வாதத்தை முற்றிலும் நிராகரித்துவிட முடியாது.

ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்

அரசின் தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்த முயன்றதற்காகக் கைது செய்ததை யாரும் எதிர்க்கவில்லை. அவ்வாறு கைது செய்யப்படுவோம் என்று எதிர்பார்த்துதான் அவர்கள் அந்த முயற்சியை மேற்கொண்டிருப்பார்கள். ஆனால் இறந்துபோன இலங்கைத் தமிழர்களுக்கு அமைதியாக நினைவேந்தல் நிகழ்வை நடத்த முயன்றது சமூக அமைதிக்கு ஊறு விளைவுக்கும் செயல் என்ற வாதமும் அதன் அடிப்படையில் குண்டர் சட்டம் அவர்கள் மீது பாய்ந்திருப்பதும் ஏற்கத்தக்கதல்ல.

திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மீது மத்திய அரசு அலுவலகத்தைத் தாக்க முயன்றது உள்ளிட்ட 17 வழக்குகள் இருப்பதாகவும் அதனால்தான் அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அப்படியே இருந்தாலும் அவர்களைக் கைது செய்த நேரமும் கைதுக்குக் காரணமான நிகழ்வும் பிரச்சனைக்குரியதாகவும் சந்தேகங்களை எழுப்புவதாகவும் இருக்கின்றன.

இந்த சந்தேகங்களைத் தீர்ப்பதும் கைது செய்யப்பட்டவர்களது ஜனநாயக் உரிமைகளைப் பறிக்காமல் இருப்பதும் தமிழக அரசின் கடமை.

Thirumurugan Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment