இசைக்கு இன்று பிறந்த நாள்!

அரசியல், சினிமா, இலக்கியம் என பன்முகம் சாதனையாளரான கலைஞர் மீது, அவர் வைத்திருந்த அன்பையும் மரியாதையையும் பார்த்து பிரமித்துப் போனேன்.

ச.கோசல்ராம்

தமிழக மக்களை இசையால் வசமாக்கிய இளையராஜா. அவரோடு பழகக் கூடிய வாய்ப்பு எனக்குக் 2012ம் ஆண்டில் கிடைத்தது. அப்போது நான் பணியாற்றிய வார இதழில் அவரை தொடர் எழுத வைப்பது தொடர்பாக சந்திக்க சென்றேன். நண்பர் தேனி கண்ணன் தான் இந்த ஏற்பாட்டை செய்திருந்தார்.

இளையராஜாவைப் பற்றி நான் கேள்விப்பட்டதெல்லாம், அவர் ரொம்ப சென்சிட்டிவ். பட்டென்று கோபமடைந்துவிடுவார் என்பதுதான். ஆனால் அவரை சந்தித்த போதுதான் தெரிந்தது அவர் ஒரு குழந்தை மனசுக்காரர் என்று.

அந்த ஆண்டு அவருடைய இரண்டு புத்தகங்களை வெளியிட நான் பணியாற்றிய நிறுவனத்துக்கு வாய்ப்பு கிடைத்தது. அதற்கான வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுக்காகவும், தொடர்பாகவும் அவரை அடிக்கடி சந்திப்பேன்.

இரண்டு புத்தகங்களையும் அவருடைய பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி வெளியிடலாம் என்று தீர்மானித்தோம். அவரிடம் அதை சொன்னதும், ‘மிக்க மகிழ்ச்சி. நான் ஜூன் 3ம் தேதி என்னுடைய பிறந்த நாளை கொண்டாடுவதில்லை. ஜூன் 2ம் தேதிதான் கொண்டாடுவேன். அந்த நாளில் வேண்டுமானால் நிகழ்ச்சியை வைத்துக் கொள்ளலாம்’ என்றார்.

‘உங்களின் பிறந்த நாளில் வைத்தால்தானே சிறப்பாக இருக்கும்’

ilayaraja karunanidhi

இசைஞானி இளையராஜா, கருணாநிதியுடன்…

‘ஜூன் 3ம் தேதி கலைஞரின் பிறந்த நாள். அவர் தமிழுக்காற்றிய தொண்டில் சிறு பகுதியைக் கூட நான் செய்யவில்லை. அவர் பிறந்த நாளில் நானும் பிறந்தது பெருமை. ஜூன் 3ம் தேதி தலைவர் கலைஞரைத்தான் தமிழகம் வாழ்த்த வேண்டும்.’ என்று அவர் சொன்ன போது ஆச்சரியமாக இருந்தது.

அரசியல், சினிமா, இலக்கியம் என பன்முகம் சாதனையாளரான கலைஞர் மீது, அவர் வைத்திருந்த அன்பையும் மரியாதையையும் பார்த்து பிரமித்துப் போனேன். சினிமாவில் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல் பற்றிய பல நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். அவர்கள் மூவருக்குள்ளும் உள்ள நட்பும் அன்பும் பொறாமைப்பட வைக்கக் கூடியவை.

ஒருநாள் அவருடன் பேசிக் கொண்டே, கார் அருகே வந்துவிட்டோம். அங்கு நின்ற மரங்களில் ஒன்றை காண்பித்து, ’இது மணிரத்தினம் மரம்’ என்றார்.

’அவர் வைத்து வளர்த்ததா?’ என்று கேட்டதும் சிரித்துவிட்டார்.

’இல்லை… நான் இசைத்துறையில் மிகவும் பிஸியாக இருந்த போது, இந்த வழியாகத்தான் நடந்து செல்வேன். அப்போது என்னைப் பார்க்க, சினிமா இயக்குநர்கள் நிறைய பேர் ஆளுக்கு ஒரு மரத்தில் நிற்பார்கள். எனக்கு அவர்களை தெரியாது. எனது உதவியாளர்களும் சொன்னதில்லை. நான் நடந்து செல்லும் போது, என் பார்வையில் பட வேண்டும் என்று ஆளுக்கொரு மரத்தில் நிற்பார்கள். மணிரத்தினம் எப்போதும் இந்த மரத்தின் அடியில்தான் நிற்பாராம். அதனால் எனது உதவியாளர்கள் ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு இயக்குநர் பெயரை வைத்திருக்கிறார்கள்’ என்றார்.

Ilayaraja-Maniratnam-Rahman (1)

இளையராஜாவுடன் மணிரத்தினம், ஏ.ஆர்.ரகுமான்

இந்த விபரங்கள் கூட அவருக்கு அப்போது தெரியாதாம். அவர் படங்கள் குறைந்த பின்னர், அவர் உதவியாளர்கள் சொல்லித்தான் தெரியும் என்ற தகவலையும் சொன்னார். இன்று இயக்குநர் மணிரத்தினத்துக்கும் பிறந்த நாள்.

இளையராஜாவுக்கு அம்மா செண்டிமெண்ட் அதிகம். மணிரத்தினம் இயக்கத்தில் ரஜினி நடித்த தளபதி படத்தின் கதை நட்பை அடிப்படையாக கொண்டு நகரும். ஆனால் பின்னணி இசையில் அம்மா செண்டிமெண்ட் தூக்கலாக இருக்கும். இந்த படத்துக்கு பின்னர் இருவரும் இணைந்து படங்கள் தராமல் போனது, இசை ரசிகர்களுக்கு வருத்தம்தான்.

அவரோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பினால், ரமணர் படத்துக்கு அருகில் அழைத்துச் சென்றுவிடுவார். ஆன்மிகம் பற்றி மட்டுமல்ல, இலக்கியம், புகைப்படம் என எல்லா விஷயங்களையும் அலசுவார். அத்தனை விஷயங்களிலும் அவர் கரைத்துக் குடித்துள்ளார்.

தமிழர்களின் நாடி நரம்பெல்லாம் கலந்திருக்கும் இசைஞானி, இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து இசை பயணத்தை தொடர வாழ்த்துவோம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close