திராவிட ஜீவா
இந்தியாவை திரும்பிப் பார்க்க வைக்கிறது, இந்திக்கு எதிராக ஒவ்வொரு முறையும் தமிழகத்தில் உருவாகும் எழுச்சி! சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு நிகழ்வு ஒன்றில், ‘இந்தி தெரியாதவர்கள் வெளியே போகவும்’ என மத்திய அதிகாரி ஒருவர் அடாவடியாக பேசியதுதான் இப்போது கனல் தெறிக்க காரணம்.
ஏற்கனவே தேசியக் கல்விக் கொள்கை உள்பட மத்திய அரசின் திட்டங்கள் குறித்த கருத்துக்கேட்பு வரைவுகள் எதையும் அட்டவணையில் இடம் பெற்றுள்ள மொழிகளில் இந்திய ஒன்றிய அரசு வெளியிடவில்லை. அதற்கான எதிர்ப்பும் தமிழகத்தில் தான் ஓங்கி ஒலித்தது.
இந்தக் கோபத்தில்தான் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கடந்த வாரம், ‘தேசவிரோதிகளின் கூடாரமாக தமிழகம் இருக்கிறது’ என்று விமர்சித்தார். ஹெச். ராஜாவின், ‘ஆன்டி இன்டியன்’ ரக விமர்சனம் என்பதைத் தாண்டி, நட்டாவின் விமர்சனத்தில் நாம் கவலைப்பட எதுவுமில்லை.
அதேசமயம் தமிழகத்தில் கனன்று கொண்டிருக்கும் இந்தப் போர், பல்லாண்டுகளாக- இன்னும் உற்று நோக்கினால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்வதுதான். இது ஒரு பண்பாட்டுப் போர் என்பதை வரலாற்றை உள்வாங்கினால் அறியமுடியும்.
மனித இனம் குழுக்களாக வாழத்தொடங்கியபோது அவர்களின் தேவைகளுக்காக உணர்வுகளை வெளிப்படுத்த உருவானது மொழி. பின்னர் அதன் பரிணாம வளர்ச்சியான கலை, பண்பாடுகளின் அடையாளமாக மாறியது மொழி. அது மட்டுமல்ல, வாழ்வியல் நெறிமுறைகளின் தாக்கத்தை வரலாறாக பதியவைக்கும் உயரத்திற்கும் மொழி சென்றது. இந்த இலக்கையும், பெருமையையும் அனைத்து மொழிகளும் தொட்டிருக்க முடியாது. ஆனால் தமிழ் தொட்டது. இங்கே ஆரம்பித்த அரசியலே மொழியில் தொடங்கி மதம் வரை தொடர்கிறது.
உலக அளவில் ஹீப்ரு, பாரசீகம், இலத்தின் போன்ற மொழிகளைவிட தொன்மையானதாகவும் இலக்கியச் சிறப்புள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறப்பு மிகு மொழி தமிழ். பல்லாயிரம் ஆண்டுகளாக பல பிறமொழிகளின் கலப்பாலும் தாக்கத்தாலும் தாக்குதல்களாலும் தன்நிலை இழக்காத மொழி இது. இந்த மொழிப் பெருமையாலும் பண்பாட்டு பெருமையாலும் சுயமரியாதை உணர்வை கொண்டுள்ள இனமாக தமிழர்கள் இருப்பதும் மற்றவர்கள் தங்களை அந்நியப்படுத்திக் கொள்கிறார்கள். இது நாகரீக உலகில் தவிர்க்கமுடியாததே.
அதுவும் பல்வேறு இனம், மொழி, மதங்களை உள்ளடக்கிய இந்திய ஒன்றியக் கூட்டமைப்பில் ஜனநாயக ரீதியான கருத்து மோதல்கள் வருவது இயல்பே. ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பாகவே கலாச்சார, பண்பாட்டுப் போரை தமிழர்கள் நடத்தி வந்தனர். ஒன்றியக்கூட்டமைப்பில் இணைந்த பிறகு அதன் வேறொரு வடிவத்தை சந்திக்க நேரந்தது.
அதாவது பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பு என்றாலும் நமது பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களின் எச்சங்களின் தொடர்ச்சியால், "தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவனுக்கோர் குணமுண்டு " என்கிற வரலாறை மீண்டும் தொடங்கக்கூடிய சூழல் ஏற்பட்டது. தேசிய மொழியென்று எந்த மொழியும் இந்திய ஒன்றிய கூட்டமைப்பில் கிடையாது. அலுவல் மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் முறையே பிராந்திய மொழியும் ஆங்கிலமும் இருக்க வேண்டும் என்பதே ஏற்பாடு. அந்தச் சூழலில் ராஜாஜியின் இந்தி கட்டாயம் என்கிற அறிவிப்பால் தென்னகம் மிகப்பெரிய மொழிப்போருக்கு தயாரானது.
ஏன் இந்தியை கட்டாயமாக்குகிறார்கள் என்ற எந்த சிந்தனையும் எதிர்கேள்வியும் மற்ற பிராந்தியங்களில் இல்லை. தென்னகமும் குறிப்பாக தமிழர்கள் வாழும் பகுதியும் அப்படி இருக்கும் என நினைத்தவர்களுக்கு பேரிடியாக அமைந்தது தமிழகத்தின் எதிர்க்குரல். அதன் காரணகர்த்தா இன்றளவும் தமிழ்த்தேசிய வாதிகளால் பிறப்பால் கன்னடர் என்றும் மொழியால் தெலுங்கர் என்று இகழப்படும் தந்தை பெரியார்தான்.
பெரியார் ஏன் இந்தியை எதிர்த்தார்? காங்கிரஸ் கட்சியில் ராஜாஜியின் சமூகநீதி எதிர்ப்பால் கட்சியை விட்டு விலகிய பெரியார் பல்வேறு தேசிய இனங்களையும் மொழிகளையும் மதங்களையும் உள்ளடக்கிய நாட்டில் ஒரே மொழி, ஒரே இனம், ஒரே மதம் என்கிற வட்டத்திற்குள் அடைக்கும் அரசியலை தொலைநோக்குப் பார்வையுடன் பார்த்தார். பெரும்பான்மை மக்களை சிறும்பான்மை குழுக்கள் தங்களது ஆதிக்கத்துக்குள் கட்டுப்படவைக்கும் அரசியல் அதில் இருப்பதை பெரியார் உணர்ந்தார். இதன் மூலமாக பண்பாட்டுச் சிதைப்பை நிகழ்த்த நினைக்கிறார்கள் என்பதையும், அதற்கு இந்தியை ஆயுதமாக கையாளுகிறார்கள் என்பதையும் பெரியார் புரிந்தார்.
சீரும் சிறப்புமாக இருந்த மொழி காட்டுமிராண்டித்தனமாக சிதைக்கப்பட்டிருப்பதையும் பெரியார் உணர்ந்தார். திராவிட மொழிகளின் வேர் தமிழ் என்பதால், அதைத்தான் சிதைக்க முயல்கிறார்கள் என்பதையும் பெரியார் அறிந்தார். திராவிட மொழிகளின் வேரான தமிழை அழித்துவிட்டால் அதன் துணை மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகள் தானாகவே சிதைந்துவிடும் என்கிற சதி பெரியாருக்கு நன்றாகப் புரிந்தது. எனவேதான் பேச்சு வழக்கில்லாத இலக்கிய வரலாறுகள் இல்லாத உடல்மொழியான சமஸ்கிருதத்தின் பிள்ளையான ஹிந்துஸ்தானியை எதிர்த்தார்.
தேசத்தந்தையாக புகழப்படும் காந்திகூட தனது சொந்த மொழியான குஜராத்தியைவிட சமஸ்கிருதத்தில் பேசுவது உயர்வானது; கலாச்சாரத்தில் உயர்வடைய வைக்கும் என்று சென்னையில் பேசியது மிகப்பெரும் அரசியலே! இதை உணர்ந்தே பெரியார் தமிழைக் காக்க துணிந்தார்; எழுந்தார்; எழுச்சி நாயகனானார். 1937-ல் சென்னை ராஜதானி முதல்வராக இருந்த ராஜாஜி அனைத்து அரசு அலுவலகங்களிலும் பள்ளிகளிலும் இந்தி கட்டாயம் என்று அறிவித்தைத் தொடர்ந்து மூண்டது இந்தி எதிர்ப்பு கலகம்.
பெரியார் போராட்டங்களை அறிவித்தார். தொடர்ந்து பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், துண்டறிக்கை பிரசுரங்கள் அச்சிட்டார். மெல்ல சூடு பிடிக்க தொடங்கிய போர் உச்சகட்டத்தை எட்டியது. மாணவர்கள் தன்னெழுச்சியாக போராடத் தொடங்கினர். தமிழ் தேசியவாதிகளான மறைமலை அடிகளார், கிஆபெ விசுவநாதன், நீதிக்கட்சி பன்னீர்செல்வம், பி டி ராசன், திராவிட இயக்க தளபதிகளான அழகிரிசாமி, பொன்னம்பலனார், தில்லையாடி வள்ளியம்மை, மூவலுர் ராமாமிர்தம் அம்மையார், தருமாம்பாள், ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்விற்கு போராடிய சிவராஜ், அவரின் மனைவி மீனாம்பாள் சிவராஜ், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, கான் பகதூர் கலிபுல்லா, கல்லக்குடியில் மாணவனாக கருணாநிதி உள்ளிட்டோர் போராட்டங்களில் கலந்துகொண்டனர்.
இந்தி எதிர்ப்பை தமிழகம் தழுவிய போராட்டமாக பெரியார் மாற்றினார். தமிழகமே சாதி, மதங்களை கடந்து திரண்டு நின்றது. இந்தப் போராட்டத்தில் பெரியாரால் தமிழின தளபதியாக அடையாளம் காட்டப்படடவரே இன்றைய அரசியல் கட்சிகளின் மூலவரான அண்ணா. ‘1937ல் தொடங்கிய போராட்டங்கள் 1938 , 1939 என மூன்றாண்டுகளை கடந்து உயிர்ப்புடன் இருந்தது.
அழகிரிசாமி , அண்ணா உள்ளிட்டோரும், சிவராஜ், இரட்டைமலையார் போன்றவர்கள் மட்டுமல்ல மகளிரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கடைசியில் போராட்டத் தலைவரான பெரியாரும் 1939 டிசம்பரில் கைது செய்யப்பட்டார். அப்போது கலவரங்கள் வெடித்தன. கடைசியில் பணிந்தது சர்க்கார். இந்தி கட்டாயம் என்கிற உத்தரவை திரும்பப் பெற்றது 1940ல்!
மீண்டும் 1965-ல் இதே நிலை உருவானது. இம்முறை பெரியாரின் தளபதியான அண்ணா தனிப்பட்ட காரணங்களால் பிரிந்திருந்தாலும் அதே கொள்கையுடன் அரசியல் கட்சியாக வளர்ந்திருத்தார். அதனால் இரண்டாம் போராட்டம் திமுகவின் இளைஞர் போராட்டமாக மாறியது. மாணவர்கள் திமுகவை நோக்கி பயணப்பட்டனர். .இன்றளவும் மொழிப் போராட்டம் என்பது திராவிட இயக்கத்தின் பிரதான கொள்கையாக இருப்பதன் தொடக்கம் அதுதான்.
அதன் பின்னர் அண்ணா ஆட்சிக்கு வந்தார். பெரியாரை தேடிச்சென்றார். பெரியாருக்கு எதிராக, திராவிட இயக்கத்துக்கு எதிராக எந்த ராஜாஜி அரசியல் செய்தாரோ, இந்தி திணிப்பை ஆதரித்தாரோ... அவரே அண்ணாவின் அரசியல் ஆளுமைக்கு முன்பு பணிந்தார். இதற்கு முக்கிய காரணம், தமிழகத்தின் மொழியுணர்வும் அதை தட்டியெழுப்பிய திராவிட இயக்கத்தின் ஆதிக்கமுமே!
இன்றும் அந்த கனல், நீறு பூத்த நெருப்பாக இருப்பதற்கு திராவிட இயக்க அரசியலில் மொழிப் பிரச்சினை முக்கிய பங்காற்றுவதுதான். அதன் வெளிப்பாடே, இப்போதைய எதிர்வினை. ‘இந்தி தெரியாதவர்கள் வெளியே போகவும்’ என்று சொன்ன அதிகாரிக்கும், சட்டங்களின் வரைவு அறிக்கையை அட்டவணையில் இருக்கும் மொழிகளில் முக்கிய மொழியான தமிழில் வெளியிடாதவர்களுக்குமான எதிர்ப்பு இது. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டென்பது அறிவியல் விதிமட்டுமல்ல அரசியல் விதியும் கூட. அதைத்தான், ‘இந்தி தெரியாது போடா’ என வெளிப்படுத்துகிறார்கள், தமிழ் இளைஞர்கள். ‘விதைத்தவன் உறங்கலாம், ஆனால் விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை’ என்றார் பிடல் காஸ்ட்ரோ. பெரியார் விதைத்தவை, சாதாரண விதைகளா?
(கட்டுரையாளர் திராவிட ஜீவா, பெரியாரிய உணர்வாளர்; அரசியல்- சினிமா விமர்சகர்)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.