Tavleen Singh
வந்தே மாதரம் மற்றும் ஜெய் ஸ்ரீ ராம் என்று ஒவ்வொரு மூச்சிலும் கூக்குரலிடுபவர்கள் ராமரின் முடிசூட்டு விழாவுக்கு முன்னதான அயோத்தியின் சித்தரிப்பை அறிய ராமாயணத்தை மிகவும் கவனமாகப் படிக்க வேண்டும்.
டெல்லியில் கடந்த வாரம் மீண்டும் ஒருமுறை புல்டோசர்கள் உருண்டு சாதாரண மக்களின் வாழ்க்கையையும், கனவுகளையும் அழித்தன. ஒரு காலத்தில் எந்த மசூதி இந்துக் கோவிலாக இருந்தது என்பதில் மீண்டும் ஒருமுறை ஆவேசமான சண்டைகள் மூண்டிருக்கின்றன. வரலாற்றுத் தவறுகளில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என குதுப்மினார் மற்றும் தாஜ்மஹால் ஆகியவை இழுக்கப்பட்டன. இது ஒரு தற்போதைய நிகழ்வு பற்றிய கட்டுரை. எனவே இரண்டு நிகழ்வுகளுக்கும் ஒரு கருத்து சொல்ல வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. புல்டோசர்கள் விவகாரத்தில், சட்டவிரோத கட்டுமானத்தை அனுமதித்த ஊழல் அதிகாரிகளின் வீடுகளை புல்டோசர்கள் அடித்து நொறுக்கும் நாளுக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். தாஜ்மஹால் ஒரு இந்து நினைவுச்சின்னம் என்று இப்போது கூறும் தன்னைத்தானே உயர்த்திக்கொள்ளும் இந்துத்துவா இயக்கத்திடம் எனக்கு ஒரு கேள்வி உள்ளது: உலகின் மிகவும் பிரபலமான கல்லறையை இடிக்க புல்டோசர்கள் எப்போது வருகின்றன?
தீவிரமான விஷயங்களைப் பற்றி நான் அற்பமாக இருப்பதாக நினைக்கும் உங்களுக்கு, என்னிடம் ஒரு பதில் உள்ளது: போதும் இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது. வாரக்கணக்கில், மாதங்களாக இல்லாவிட்டாலும், இதுபோன்ற விஷயங்களைத் தவிர வேறு எதையும் நாம் பேசவில்லை என்று தோன்றுகிறது, எனவே புல்டோசர்கள் அல்லது பெரும்பான்மை வெறித்தனம் குறித்த மற்றொரு பகுதியை நான் உங்களிடம் விட்டுவிடப் போகிறேன். முடிவில்லாத, திரும்பத் திரும்ப நடக்கும் பிரைம் டைம் விவாதங்கள் மற்றும் அரசியல் பண்டிதர்களால் முடிவில்லாமல், அதிக எண்ணிக்கையில் மீண்டும் மீண்டும் நிகழும் சிந்தனைகளில் ஏற்கனவே சொல்லப்படவில்லை என்பதான விஷயங்களில் இன்னும் கொஞ்சம் சொல்லலாம் என நான் நினைக்கின்றேன்.
எனவே, இந்த வாரம் தலைப்புச் செய்திகளை உருவாக்காத அளவுக்கு பொருத்தமற்றதாகக் கருதப்படும் விஷயங்களைப் பற்றி பேச திட்டமிட்டுள்ளேன். நான் இதைச் செய்வதற்குக் காரணம், செய்தித்தாள்களின் உள் பக்கங்களில் எல்லாவற்றிலும் மிக முக்கியமான செய்தியாக 89% இந்தியக் குழந்தைகள் தங்களுடைய இரண்டு வயது பூர்த்தியாகும் முன்பே ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி முக்கியமானதாக தோன்றியது, மேலும். தேசிய குடும்ப நல ஆய்வானது (NHFS-5) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல் வந்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இது போன்ற ஆய்வு முடிவுகளில் இருந்து இப்போது ஓரளவு மட்டுமே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று ஆய்வு அறிக்கை முடிவில் கூறப்பட்டுள்ளது. இது மனவேதனைக்குரியது மற்றும் அவமானகரமானது. ஒரு குழந்தை வளர வேண்டிய தருணமான ஆரம்ப கால கட்டங்களில் அந்த குழந்தை ஊட்டச்சத்து குறைபாடுக்கு உட்பட்டால், அவர்கள் வளர்ச்சி குன்றியவர்களாகவும், உடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ தங்கள் முழுத் திறனையும் அடைய முடியாதவர்களாகவோ இருப்பார்கள். .
காங்கிரஸ் ஆட்சியின் பல வகையான அலட்சியங்களை சரிசெய்வதில் நரேந்திர மோடி அரசு ஏன் இவ்வளவு கவனம் செலுத்துகிறது என்று என்னை நானே கேட்டுக்கொண்டபோது, குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு விஷயத்தில் குஜராத் மற்றும் உத்தரபிரதேச மாநில ஆட்சியாளர்கள் மிக மோசமான தவறிழைப்பவர்களாக இருக்கின்றனர் என்பதை கவனித்தேன். ஒருபோதும் அவர் கவனம் செலுத்தாத ஒன்று இது என்பது தெளிவாக தெரிகிறது. அவரது சொந்த அரசாங்கத்தின் இந்த சமீபத்திய NFHS அறிக்கைக்குப் பிறகாவது, அவர் தனது முதல் பதவிக்காலத்தில் சுகாதாரத்தில் கவனம் செலுத்தியதைப் போல ஊட்டச்சத்துக் குறைபாடு விஷயத்திலும் கவனம் செலுத்துவார் என்று நாம் நம்பலாமா? தூய்மை இந்தியா இயக்கம் கிராமப்புற சுகாதாரத்தை ஈர்க்கக்கூடிய அளவில் எட்டியது, ஏனெனில் மோடி அந்த இயக்கத்தின் பின்னால் தனது முழு கவனத்தை செலுத்தினார். இந்தியாவின் குழந்தைகள் இனி ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய அதே போன்ற முழு கவனத்தை செலுத்தியிருந்தால் உலகின் மிக அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் கொண்ட மக்கள் தொகையை கொண்டிருக்கும் நாடு என்ற முழு பலனையும் நாம் ஒரு நாள் அறுவடை செய்ய முடியும்.
இந்த வாரம் நான் கவனத்தை ஈர்க்க விரும்பும் மற்ற ‘சிறிய’ விஷயங்களும் உள்ளன. நான் வேண்டுமென்றே சிறிய என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறேன், ஏனென்றால் மோடி உண்மையில் விரும்புவது பெரிய விஷயங்கள்தான் என்பதை வெளிகாட்டியுள்ளார். உலகிலேயே மிக உயரமான சிலை அவர் காலத்தில் வந்திருக்கிறது. ‘மிகப்பெரிய தடுப்பூசித் திட்டம்’ வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது, இவையெல்லாம் பிரதமர் பெருமைப்பட விரும்புகிற விஷயங்கள். இந்த கட்டுரையை எழுத நான் அமர்ந்த நாளில், நான் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை வாகனத்தில் கடந்து சென்றேன். உண்மையில் ஆய்வு செய்யும் வகையில் அருகில் செல்ல அனுமதிக்கப்படாததால், ஏற்கனவே அதன் அருகாமையில் உள்ள மற்ற எல்லா கட்டிடங்களை விடவும் அது உயர்ந்து நிற்கிறது என்று தெரிவிக்கலாம். இந்தியாவின் ஜனநாயக வரலாற்றின் களஞ்சியமான பழைய நாடாளுமன்றம், அதன் வலிமைமிக்க நிழலில் ஒரு எறும்புப் புற்றை ஒத்திருக்கிறது. நான் முக்கியமான விஷயத்தில் இருந்து விலகி விட்டேன்.
இந்த நேரத்தில் மிகவும் புறக்கணிக்கப்பட்ட மற்றும் மிகவும் கொடூரமான செய்தி என்னவென்றால், பதினேழு மாடி உயரத்தை விட அதிகமாக மலைபோல் குவிந்திருக்கும் குப்பை மலை தீயில் எரிந்து கொண்டிருக்கிறது என்பதுதான். இது டெல்லி நகரின் ஆபத்தான மாசுபட்ட காற்றில் மேலும் விஷ வாயுக்களை உமிழ்கிறது. நிலவுக்கு ஒரு மனிதனை அனுப்பி வைக்க வேண்டும் என்று நாம் கனவு கண்டு கொண்டிருக்கின்றோம். கழிவுகளை எவ்வாறு கையாள்வது என்பதை நாம் கற்றுக்கொள்ளத் தவறிவிட்டோம் என்பதை நினைவூட்டுகிறது. ஒவ்வொரு கிராமத்தின் விளிம்பிலும், அழுகும் குப்பைகளால் நிரம்பிய பள்ளங்களைக் காண்கிறோம், ஏறக்குறைய நமது சிறிய நகரங்கள் அனைத்தும் பிரதான பஜார்களைக் கொண்டுள்ளன, அவை உண்மையில் குப்பைக் கிடங்குகளாகும். இந்திய சுதந்திரத்தின் எழுபத்தைந்தாவது ஆண்டை நாம் மிகவும் பெருமையுடன் கொண்டாடும் நேரத்தில் இது வெட்கக்கேடானதாக இல்லையா?
வந்தே மாதரம் மற்றும் ஜெய் ஸ்ரீ ராம் என்று ஒவ்வொரு மூச்சிலும் கூக்குரலிடுபவர்கள் ராமரின் முடிசூட்டு விழாவுக்கு முன்னதான அயோத்தியின் சித்தரிப்பை அறிய ராமாயணத்தை மிகவும் கவனமாகப் படிக்க வேண்டும். மேலும், அவர்கள் அதைப் பற்றிச் சொல்லும்போது, சகோதரர்கள் நாடு கடத்தப்பட்டநிலையில் காட்டிற்குச் செல்ல பாரதம் அமைத்த சாலையையும் அவர்கள் கவனமாகக் கவனிக்க முடியும். சாலை அமைக்க பயன்படுத்தப்பட்ட முறைகள் இன்று இருப்பதைப் போலவே நவீனமாகவும், எந்த நவீன இந்திய நகரத்தையும் விடவும் அயோத்தி அழகாகவும் இருந்தது. இந்து மறுமலர்ச்சி மிகவும் நாகரீகமாக இருந்தாலும், தயவு செய்து இவற்றில் சிலவற்றைப் புதுப்பிக்க முடியுமா? பாரத மாதா அழுகும் குப்பையில் மூடப்படாமல் இருப்பதை உறுதி செய்ய நமக்கு நேரமில்லையா? எந்த ஒரு இந்தியக் குழந்தைக்கும் அவர்கள் முழுத் திறனுடன் வளரத் தேவையான அடிப்படை ஊட்டச்சத்துக்கள் இல்லை என்பதை உறுதி செய்வதை விட, இந்த ஆண்டில் நமது சுதந்திரத்தின் ஆற்றல் அமுததுக்கு ஒரு சிறந்த அஞ்சலி என்ன இருக்க முடியும்?
நான் ஒரு கேள்வியுடன் முடிக்கலாமா? தாஜ்மஹாலின் அடித்தளத்தில் உள்ள ‘இருபத்தி இரண்டு சீல் வைக்கப்பட்ட அறைகளில்’ இந்துத்துவா ஆர்வலர்கள் தலையிட அனுமதிக்கலாமா என்பது பற்றி விவாதிக்கத் தொடங்க மாட்டோம் என்று நீதிமன்றம் அறிவித்ததால் இப்போது என்ன நடக்கிறது? ஆக்ராவில் இந்துத்துவா துருப்புக்கள் கட்டவிழ்த்து விடப்படுமா, அவர்களின் முன்னோர்களின் ‘பாவங்களுக்காக’ முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கப்படுமா? சீரியஸ் ஆக, இப்போது என்ன நடக்கிறது?
தமிழில்; ரமணி