/tamil-ie/media/media_files/uploads/2017/05/ethiran-1.jpg)
பெருமாள்முருகன்
அரசு கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிபவன் நான். என் மாணவர்களில் தொண்ணூறு விழுக்காட்டினர் முதல் தலைமுறையாக உயர்கல்வி பயில வருபவர்கள். சிறுவயது முதலே உடல் உழைப்பில் ஈடுபட்டுக்கொண்டே பள்ளிப் படிப்பை முடித்தவர்கள். உயர்கல்விக்கு வந்த பிறகும் பகுதி நேரமாக உடல் உழைப்பு வேலைகளைச் செய்துகொண்டே படிக்கிறவர்கள். தமக்குரிய செலவைத் தாமே பார்த்துக்கொள்வது மட்டுமல்ல, பலர் தம் சம்பாத்தியத்தில் பெரும்பகுதியைக் குடும்பத்திற்குக் கொடுக்க வேண்டிய கடமை உள்ளவர்கள். பகலில் ஒருவேளை மட்டுமே உண்பவர்கள். ஆரோக்கிய உணவு என்பது அவர்களுக்குக் கனவே.
வருகைப் பதிவு, புத்தகம் வாங்குதல் உள்ளிட்ட நடைமுறையில் கடுமை காட்டினால் பலர் இடைநின்றுவிடுவார்கள். உழைத்துக்கொண்டே படிப்பதற்கேற்ற வகைப் படிப்புகளாக இலக்கியம், வரலாறு, பொருளியல் ஆகியவை கருதப்படுகின்றன. இளநிலைப் பட்டத்திற்கான மூன்று ஆண்டுகள் அவர்களுக்குக் கல்லூரியில் பயிலும் வாய்ப்புக் கிடைப்பது என்பது பெரும்பேறுதான். எழுபத்தைந்து விழுக்காட்டினர் இளநிலைக் கல்வியை முடித்தும் முடிக்காமலும் உடல் உழைப்பு வேலைக்கே சென்றுவிடுவர். இருபத்தைந்து விழுக்காட்டினர் மட்டுமே முதுநிலைக் கல்விக்குச் செல்பவர்கள். அதுவும் அரசு கல்லூரிகளில் முதுநிலைப் படிப்பு இருந்தால்தான்.
தமிழகப் பல்கலைக்கழகங்களுக்கு யாராவது சிலர் முதுகலைப் படிப்புக்குச் சென்றுவிட்டாலே அது பெரும்சாதனை. இந்நிலையில் அரசு கல்லூரியில் பயின்ற மாணவர் ஒருவர் இந்தியாவின் முன்னணிக் கல்வி நிறுவனமான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் காலடி எடுத்து வைத்திருந்தால்? அது அரசு கல்லூரி ஆசிரியர்களாகிய எங்களைப் பொருத்தவரையில் கொண்டாட்ட உச்சம். அந்த மாணவரை நினைவுகூர்ந்து காலகாலத்திற்கும் முன்னுதாரணமாக்கி மற்ற மாணவர்களுக்கு உத்வேகம் ஊட்டுவோம். இனி அது சாத்தியம்தானா?
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நவீன வரலாற்றுத் துறையில் முனைவர் பட்ட ஆய்வாளராக இருந்த ஜீ. முத்துகிருஷ்ணன் எங்கள் (சேலம்) மாவட்டத்துக்காரர். தமிழகத்தின் மிகப் பழமையான அரசு கல்லூரிகளில் ஒன்றாகிய சேலம் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை, முதுகலை வரலாறு படித்தவர். கோவை இராமகிருஷ்ணா கல்லூரியில் கல்வியியல் பட்டம் பெற்றவர். ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் எம்.பில். பட்டம் பெற்ற பிறகு புதுடில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அரிதின் முயன்று முனைவர் பட்ட ஆய்வுசெய்யத் தேர்வானார். ஜூலை 2016 முதல் அங்கு ஆய்வாளராக இருந்த அவர் திடுமென அவரது நண்பரின் அறையில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது.
முத்துகிருஷ்ணனின் குடும்பப் பின்னணி எங்கள் அரசு கல்லூரி மாணவர்களில் தொண்ணூறு சதவீதம் பேருக்கானதுதான். அவர் தந்தை இரவுக் காவலாளி. தாய் கூலி வேலை. மூன்று அக்காக்கள். ஒருவருக்குத் திருமணம் நடந்திருக்கிறது. இன்னொருவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கிறது. சேலம் நகரத்தின் ஒருபகுதியாகிய சாமிநாதபுரத்தில் வாசம்.
முத்துகிருஷ்ணன் எப்படிப் படித்தார்? பள்ளிக் காலத்திலிருந்தே உடல் உழைப்பு வேலைகளில் ஈடுபட்டுத் தம் தேவைக்குச் சம்பாதித்துக்கொண்டே படித்தார். அவர் செய்த முக்கியமான வேலை தேநீர் விற்பது. தேநீர் கடைக்காரர் முழுக்கேனில் தேநீர் நிரப்பிக் கொடுத்துவிடுவார். அதைத் தம் மிதிவண்டியில் கட்டி எடுத்துச் சென்று நகரத்தின் பல்வேறு இடங்களிலும் விற்பனை செய்யும் வேலை. ஒரு தேநீர் விற்றால் அவருக்கு ஒரு ரூபாய் கிடைக்கும். நாள் முழுக்க அலைந்து திரிந்து கிட்டத்தட்ட முந்நூறு, நானூறு ரூபாய் சம்பாதிக்கும் வேகம் அவருக்கு இருந்தது. உணவகங்களில் சர்வர் வேலை செய்வது உட்பட வேறு பல வேலைகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.
இப்படி வேலை செய்துகொண்டே படித்தாலும் அவரது வாசிப்பு ஆர்வம் பாடப் புத்தகங்களோடு நின்றுவிடவில்லை. கல்லூரி நூலகத்தில் அவருக்குத் தனிச் சலுகை இருந்தது. எப்போதும் வந்து எதை வேண்டுமானாலும் வாசிக்கலாம். 1960களில் தமிழ் வழி உயர்கல்வியை வளர்க்கும் பொருட்டு ஏராளமான நூல்களைத் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வாயிலாகத் தமிழக அரசு வெளியிட்டது. அவை இன்றைக்கும் கல்லூரி நூலகங்களில் கிடைக்கின்றன. அவ்விதம் வெளியான மிக அரிய வரலாற்று நூல்களை எல்லாம் முத்துகிருஷ்ணன் வாசித்திருக்கிறார். கல்லூரிக்கு மிக அருகிலேயே இருந்த மாவட்ட மைய நூலகமும் அவர் இருப்பிடம்.
வாசிப்பு ஆர்வம் உள்ள மாணவர்களைத் தட்டிக் கொடுத்து மேலேற்றும் ஆசிரியர்களும் இருப்பார்கள்; கேலி செய்து மட்டம் தட்டும் ஆசிரியர்களும் இருப்பார்கள். இருதரப்பையும் அவர் எதிர்கொண்டிருக்கிறார். வாசிப்பின் வழியாகவே அவருக்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் அறிமுகம் ஆகியிருக்கிறது. அங்கே சென்று கல்வி பயில வேண்டும் என்பது அவருக்குள் லட்சியமாகவே படிந்திருக்கிறது. ஓர் ஆசிரியர் அவரை அவமானத்திற்கு உள்ளாக்கிய சந்தர்ப்பம் ஒன்றில் ‘ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போய்ப் படிச்சு இந்தக் கல்லூரிக்கே பேராசிரியராக வருவேன்’ எனச் சபதமும் போட்டிருக்கிறார். வரலாற்றுப் பேராசிரியர் ஆவதுதான் அவரது குறிக்கோள்.
புதுடில்லி செல்லத் தடையாக இருக்கும் ஆங்கிலத்தைக் கைவசப்படுத்தக் கோவையில் தனிப்பயிற்சி நிறுவனம் ஒன்றில் சேர்ந்து பயின்றிருக்கிறார். ஆங்கிலத்தைப் பிரமாதமாகக் கைவசப்படுத்தியும் இருக்கிறார். அழகான ஆங்கிலத்தில் ஒருமணி நேரம்கூட உரையாற்றும் திறன் கொண்டிருந்தார் என்று அவர் நண்பர்கள் சொல்கிறார்கள். எம்.பில். பயிலப் புதுதில்லி செல்லும் முயற்சி பலிக்கவில்லை. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் அது சாத்தியமாகியிருக்கிறது. அப்பல்கலைக்கழகத்திற்கு நான் சென்றிருந்தபோது அங்கு பயிலும் தமிழக மாணவர்களைச் சந்தித்துப் பேசச் சிறுகூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது முத்துகிருஷ்ணனைச் சந்தித்தேன். சேலம் அரசு கல்லூரியில் பயின்று ஹைதராபாத் வரை ஒருவர் வந்திருப்பதை அறிந்து பாராட்டிப் பேசிவிட்டு வந்தேன்.
முத்துகிருஷ்ணன் ‘ரஜினிகிருஷ்’ என்று அழைக்கப்படுவதை விரும்பியவர். அப்பெயரிலேயே முகநூல் பக்கத்தையும் வைத்திருந்தார். அவர் வயது மாணவர்கள் பெரும்பாலும் அடுத்த தலைமுறை நடிகர்களின் ரசிகர்களாக மாறிவிட்டிருக்கும்போது அவர் எப்படி ரஜினி ரசிகராக இருந்தார்? தம் நிலையில் இருந்து மேலேற விரும்பும் பதின்வயது இளைஞர் ஒருவருக்கு ரஜினியின் திரைப்படங்கள் உத்வேகம் கொடுப்பதாக இருந்திருக்கும். பலவிதமான உடல் உழைப்பு வேலைகள் செய்து நேர்மையான முறையில் முன்னேற்றம் காணும் பாத்திரத்தில் ரஜினிகாந்த் பல படங்களில் நடித்திருக்கிறார். அது முத்துகிருஷ்ணனுக்கு உவப்பானதாக இருந்திருக்கலாம்.
ரொமிலா தாப்பர், ஆர்.எஸ்.சர்மா, டி.டி.கோசாம்பி முதலிய இந்திய வரலாற்று ஆசிரியர்களின் நூல்களை எல்லாம் தேடிப் படித்த அவர் ‘இந்திய ஜனநாயக வாலிபர் சங்க’த் தோழர்களோடு சேர்ந்து செயல்பட்டிருக்கிறார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தலித் மாணவர் அமைப்போடு நெருக்கம் கொண்டிருந்தார். அப்பல்கலைக்கழகத்தில் அவர் ஆய்வாளராகச் சேர்ந்ததை ‘வரலாற்றுத் தருணம்’ என்று குறிப்பிடுகிறார். நான்காண்டுகள் இடைவிடாமல் தேர்வெழுதி, நேர்முகத் தேர்வுக்குச் சென்ற பிறகு தேர்ச்சி பெற்ற அப்பயணத்தைப் பற்றி ‘எ ஜங்கெட் டு ஜேஎன்யூ’ என்னும் தலைப்பில் நூல் ஒன்றை எழுதப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் அவர் இறப்பு எனக்குள் பல கேள்விகளையும் பயங்களையும் உருவாக்குகிறது. இனிமேல் எந்த மாணவரையாவது பல்கலைக்கழகத்தை நோக்கி நகர்த்துவதற்கு முத்துகிருஷ்ணனை உதாரணமாக்கிப் பேச முடியுமா? ‘அவருக்கு நடந்தது எனக்கும் நடக்க வேண்டுமா?’ என எந்த மாணவராவது கேட்டால் நான் பதில் சொல்ல இயலுமா? அப்படிக் கேட்டுவிடும் வல்லமை கொண்டவர்கள்தான் எங்கள் மாணவர்கள்.
தமிழ் வழியில் பயில்பவருக்கு மேற்படிப்புக் கதவுகள் திறப்பது இத்தனை கடினமா? வடஇந்திய மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வுகளை இந்தியிலும் எழுதலாம், ஆங்கிலத்திலும் எழுதலாம் என்னும் வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் அதில் தேர்வெழுதி எளிதாகத் தேர்ச்சி பெற்றுவிடுகிறார்கள். எங்கள் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் பத்தாண்டுக்கும் மேலாக ஆங்கிலம் பயில்கிறார்கள். ஆனாலும் அம்மொழி ஏனோ கைவருவதில்லை. இந்தியை நாங்கள் பள்ளிகளில் படிப்பதில்லை. படித்தால் அதுவும் ஆங்கிலம் போலத்தான் எங்களைப் படுத்தும். இரண்டுமே எங்களுக்கு அந்நிய மொழிகள்தான். ஆம், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது தமிழ். ஆங்கிலம், இந்தி ஆகிய இரண்டுமே வேறு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. இரண்டுமே எங்கள் மொழிக்கு நெருக்கமானவை அல்ல.
ஆக நுழைவுத் தேர்வை எப்படியும் ஏதோ ஒரு அந்நிய மொழியில்தான் எழுத வேண்டும். ஒரே நாட்டில் ஏன் இந்தப் பாகுபாடு? நாட்டில் எங்கே சென்று படித்தாலும் எம் தாய்மொழியில் படிக்கலாம் என்னும் வாய்ப்பு ஏன் இன்னும் ஏற்படவில்லை? தம் சக்தி, ஆற்றல் ஆகிய அனைத்தையும் அந்நிய மொழி ஒன்றைக் கைவசப்படுத்தவே செலவிட வேண்டும் என்றால் அப்புறம் அறிவைப் பெறுவது எவ்விதம்?
இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் முன்னணி மாநிலம் தமிழ்நாடு. சமூக நீதிப் போராட்ட வரலாறு என்பது மிகப் பெரிது. இத்தனை நடந்தும் தமக்குரிய இடத்தை ஒருவர் பெற நெடும்பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்றால், நம் சமூகம் இன்னும் எந்த நிலையில் இருக்கிறது? கல்வியில் ஈடுபாடுள்ளவர்களை இயல்பாக மேல் நோக்கி நகர்த்தும் அமைப்பு முறை ஏன் இன்னும் இங்கே வரவில்லை? அடிப்படைக் கல்வியைப் பெறவே ஒருவர் தம் இளமைக் காலம் முழுவதையும் உடல் உழைப்பில் செலவிட வேண்டியிருக்கும் நிலைதான் சமூக நீதியா?
இந்தியக் குடிமகன் ஒருவன் தம் தலைநகரைச் சென்றடையும் பாதை இத்தனை கடினமானதா? ஒருவழியாக அடைந்தாலும் அங்கே இருக்கும் வரவேற்பு உயிரைப் போக்குவதுதானா? அம்பேத்கார் படத்தைத் தன் அறையில் ஒட்டி வைத்திருந்ததைக் கண்டு அதைக் கிழித்தெறியச் சொல்லி ஒருமுறை மிரட்டப்பட்டாராம் முத்துக்கிருஷ்ணன். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலேயே அம்பேத்காருக்கு இடமில்லை என்றால் இந்த நாட்டில் வேறு எங்கேதான் அவருக்கு இடம்?
வரலாற்றுத் தருணம்

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.