Nithya Pandian
Nehru-Gandhi dynasty members : வருகின்ற நாடாளுமன்ற தேர்தல்களில் அனைத்து பக்கத்திலும் திருப்பத்திலும் திருப்பங்கள் தான். எந்த பக்கம் திரும்பினாலும் அங்கு ஒரு ப்ரேக்கிங் நியூஸ் என்று ஓடிக் கொண்டிருக்கிறது தேர்தல் களம். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மீது மக்கள் தென்னகத்தினரின் நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. காங்கிரஸ் கட்சியின் சமீபத்திய வளர்ச்சியும், காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் ராகுல் காந்தியின் தலைமைப் பண்பும், எளிமையும், அனைவராலும் எளிதில் அணுகக் கூடிய சூழல்நிலையும் கூட முக்கிய பங்கு வகிக்கின்றன.
தோல்வி பயத்தால் தென்னிந்தியாவில் போட்டியிடுகிறார் ராகுல் என்று ஒரு சாரரும், தென்னிந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் பலத்தை அதிகரிக்க வேண்டும் என்ற ரீதியில் போட்டியிடுகிறார் என்று மறு சாராரும் தங்கள் மத்தியில் விவாதங்களை முன் வைக்கின்றனர். கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் அதிகாரப் பகிர்வு தொடர்பான பிரச்சனைகளில் அங்கு சிக்கிக் கொண்டுள்ளனர் கேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலாவும், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியும். இதனை சரி செய்யும் நோக்கில் இங்கு ராகுலின் தலையீடு இப்படியாக இருக்கிறது என்றும் சில கருத்துகள் வலுத்து வருகின்றன.
காங்கிரஸை காக்க தென்னிந்தியா வேண்டுமா? நீட், ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு நடவடிக்கை, என அனைத்து வகையிலும் நொருங்கிக் கொண்டிருக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, தனி நபர் வருமானம், முடங்கும் தொழிற்துறைகள், தொடர்ந்து அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றை சரி செய்து பொருளாதாரத்தில் ஒரு படி முன்னேறிட, தென்னிந்தியாவை காப்பாற்றிட காங்கிரஸ் வேண்டுமா ? இரண்டும் ஒன்றின் தேவையை நோக்கி வளர்ந்து வரும் மற்றொன்று.
ஆங்கிலத்தில் சொல்வோமே, டேரக்ட் ப்ரோபோஷ்னல் (direct proportional) அதைப் போன்று. காங்கிரஸாரின் வெற்றி வாய்ப்புகள் குறையும் போது, தென்னிந்தியாவின் வளர்ச்சியை அது எந்த வகையில் பாதிக்கும் என்பதை பாஜகவே முடிவு செய்யும்.
காங்கிரஸை என்றும் காத்திட்ட தென்னகம் :
காங்கிரஸ் கட்சியினரோ, அல்லது இதர கட்சி வேட்பாளர்களோ ஒரே நேரத்தில் இரண்டு தொகுதியில் போட்டியிடுவதும், தென்னிந்தியாவில் ஒரு தொகுதியை தேர்வு செய்து அதில் வெற்றி பெறுவதும் முதல் முறையில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சி கேரளத்தை தேர்வு செய்வது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்பு கர்நாடகா, ஆந்திரா என்று அந்த மாநிலங்களில் ஒரு தொகுதியை தேர்வு செய்து வெற்றி பெற்றுள்ளனர் நேரு - காந்தி குடும்பத்தினர்.
இந்திரா காந்தி
1977 வரை காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்பதை விட நேரு-காந்தி குடும்பத்தினரின் கோட்டையாகவே விளங்கியது உத்திரப் பிரதேசம். இந்திரா காந்தியின் விருப்பத் தொகுதியாக அன்று வரை இருந்தது ரேபரேலி. ஆனால் 1977ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ராஜ் நரேன் என்ற ஜனதா கட்சி உறுப்பினரிடம் படு தோல்வியை கண்டார் இந்திரா காந்தி. அவசரசட்டம் எனப்பட்ட எமெர்ஜென்சி முடிவுற்ற பின்னர் நடத்தப்பட்ட தேர்தல் அது.
ஆனால் அடுத்த ஆண்டு கர்நாடக மாநிலம் சிக்மகளூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.பி. சந்திர கௌடா பொறுப்பில் இருந்து விலக, இந்திரா காந்தி சிகமங்களூர் தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். டி.பி. சந்திர கௌடா பின்னாளில் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரே பரேலி என்ற தொகுதி கையில் இருந்தும், 1980ல் இன்றைய தெலுங்கானாவில் அமைந்திருக்கும் மேதக் தொகுதியில் போட்டியிட்டார் இந்திரா. ஜனதா கட்சி உறுப்பினர் எஸ்.ஜெய்பால் ரெட்டியை எதிர்த்து போட்டியிட்ட அவர், ரே பரேலியை விட்டுவிட்டு, தான் இறக்கும் இறுதி நாள் வரை மேதக் தொகுதியின் மக்களவை உறுப்பினராக பணியாற்றினார் இந்திரா காந்தி.
சோனியா காந்தி
1999ல் இந்திராவின் மருமகள் சோனியா காந்தி அரசியலில் நுழைந்த தருணம். குடும்பத் தொகுதியான அமேதியில் போட்டியிட முடியாத வண்ணம் பாஜக தலைமை அங்கு ஓங்கியிருந்தது. அதனால் தான் அவர் கர்நாடாகவில் பெல்லாரியில் போட்டியிட்டார். கடைசி நிமிடம் வரை சோனியா பெல்லாரியில் போட்டியிடுவதை ரகசியமாகவே வைத்திருந்து காங்கிரஸ்.
காரணம் , பாஜகவால் வலுவான எதிர் வேட்பாளரை நிறுத்த காலம் தரக்கூடாது என்பதற்காகவே. டெல்லியில் இருந்து ஹைத்ராபாத் வந்து, அங்கிருந்து தனி விமானத்தில் கர்நாடகா அடையும் போது பாஜகவிற்கு சோனியாவின் தொகுதி எதுவென தெரிந்ததெல்லாம் வேறு கதை.
ஆனாலும் இறுதி நேரத்தில் அவரை எதிர்த்து போட்டியிட்டவர், இன்றைய நம் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். வெறும் 56,000 வாக்குகள் வித்தியாசத்தில் சுஷ்மா ஸ்வராஜை வீழ்த்தி சோனியா அந்த தொகுதியில் வெற்றி பெற்றார். அந்த வெற்றி ஒன்றும் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடல்லை. காரணம் சுஷ்மா ஸ்வராஜின் விவேகம். குறுகிய காலக்கட்டத்திற்குள் வாக்கு சேகரிப்பதற்காகவே கன்னடம் கற்ற அவர், கன்னடர்கள் மத்தியில் கன்னட மொழியில் பேசியே வாக்கு சேகரித்தார். அன்றைய தேர்தல் முடிவுகள் இப்படியாகத்தான் இருந்தது. சோனியாவிற்கு பதிவான வாக்குகள் 4,14,650, சுஷ்மா ஸ்வராஜிற்கு பதிவான வாக்குகள் 3,58,550. வாக்கு வித்தியாசம் என்பது வெறும் 7% மட்டும் தான்.
ராகுல் காந்தி
2004ம் ஆண்டில் இருந்தே ராகுல் காந்தியின் கோட்டையாக அமேதி நிலவி வருகிறது. அதற்கு முன்போ, சஞ்சய் காந்தி, ராகுலின் தந்தை ராஜீவ் காந்தி, தாய் சோனியா காந்தி என்று ஒரு குடும்பமே அங்கு நின்று வெற்றிபெற்றுள்ளது. ஒரு குடும்பத்தையே கோட்டைக்கு அனுப்பியவர்கள் அமேதிவாசிகள் என்பதிலும் சந்தேகம் இல்லை.
அதனால் தான் ராகுலின் வயநாடு போட்டியை விமர்சிக்கும் வகையில், அங்கு அவரை எதிர்த்து நிற்கும் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி “அமேதி வாசிகளை ராகுல் வஞ்சித்துவிட்டார், துரோகம் செய்துவிட்டார், இம்மக்கள் அவரின் துரோகத்தை ஒரு போதும் மன்னிக்கமாட்டார்கள்” என்று கூறிவருகிறார்.
2004ம் ஆண்டில் அவர் 3,90,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2009ம் ஆண்டு தேர்தலில் வாக்கு வித்யாசம் 4,64,000 என்றிருந்தது. ஆனால் 2014 தேர்தலில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானியை வெறும் 1,07,000 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வென்றார்.
மேலும் அடிக்கடி அமேதி தொகுதி செல்வது. மக்களுடன் கலந்துரையாடுவது. அங்கு சமூக நலனில் சிறு பங்கினையாவது கால இடைவெளியில் செய்து முடிப்பது என்று துருதுருவென மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி செயல்பட்டு வருகிறார். அங்கு ராகுலின் வெற்றி என்பது ஏறுமுகமாக இல்லை என்பது கடந்த தேர்தல்களின் சரித்திரம் சொல்கிறாது. அதனால் வெற்றியை சாத்தியப்படுத்த இரண்டாவது தொகுதி தற்போது ராகுலுக்கு நிச்சயமான தேவையாக இருக்கிறது.
கேரளாவில் அவருக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சியான பாரத் தர்ம ஜனசேனா கட்சியின் தலைவர் துஷார் வெல்லப்பள்ளி போட்டியிடுகிறார். அதே தொகுதியில், சோலார் மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளியான சரிதா எஸ். நாயர், சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
இதற்கிடைப்பட்ட தருணங்களில், சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் காந்தி பேசியதாகட்டும், தேர்தல் அறிக்கையில் தென்னிந்தியாவின் வளர்ச்சிக்கான திட்டங்களை அறிவித்ததாகட்டும், காங்கிரஸ் தென்னிந்தியா மீது வைத்திருக்கும் நம்பிக்கையும், தொலை நோக்குப் பார்வையிலான திட்டங்களும் கொஞ்சம் நம்மை மூச்சுவிட வைக்கிறது. கருத்துக் கணிப்புகளும், மக்களின் எண்ண அலைகளும் வெவ்வேறாக இருந்தாலும், மே 23 இறுதி தீர்ப்பு நாளாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.