புனிதக் கோமியம், மேட் இன் சைனா

சீனப் பொருள்களை வாங்காதீர்கள் என்ற குரல் இங்கே அடிக்கடி கேட்கிறது. தேசபக்தியின் பெயரால் ஒலிக்கப்படும் இந்தக் கூக்குரலுக்குப் பின்னே இருப்பது இந்தியப் பெருநிறுவனங்கள்

சரவணன் சந்திரன்

கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் வளர்ச்சி பற்றிப் பெரிதாகப் பேசப்படுகிறது. எப்படிப்பட்ட வளர்ச்சி, அதற்குக் கொடுக்கும் விலை என்ன, இயற்கையின் மீதும் மனித வாழ்வின் மீதும் அது ஏற்படுத்தும் தொலைநோக்கிலான விளைவுகள் என்ன, வளர்ச்சியின் பெயரால் நசுக்கப்படும் உரிமைகளின் நிலை என்ன என்னும் கேள்விகள் ஒருபுறம் இருக்கட்டும். வளர்ச்சி என்பதையாவது இந்தியா முனைப்புடன் முன்னெடுத்து வருகிறதா என்னும் கேள்வியை எழுப்பிக் கொண்டால், நாம் போக வேண்டிய தூரம் அதிகம் எனப்துதான் யதார்த்தமான நிலவரம. சீனாவோடு ஒப்பிட்டால் இந்த யதார்த்தத்தை நன்கு புரிந்துகொள்ளலாம்.

இந்திய அரசும் அரசியலும் மாட்டைக் கட்டிக் கொண்டு அலைகிறது. பக்கத்தில் சீனாவில் நடப்பதென்ன? பொருள் தயாரிப்புத் துறையில் சீனாவை நம்மால் மிஞ்சவே முடியாது. சீனப் பொருட்கள் என முகத்தைச் சுளிக்கிறோம். ஆனால் பல்வேறு அம்சங்கலுக்கும் நாம் பயன்படுத்துவது சீனா பொருள்களைத்தான் என்பதே தெரியாமல் அவை நம் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டன.

நேர்மையிலும் தொழில் ஒழுக்கத்திலும் சீனர்களை அடித்துக் கொள்ள முடியாது. இந்தியர்கள் பத்துத் தவறுகளைச் செய்தால், சீனர்கள் மூன்று தவறுகளைச் செய்வார்கள். சீனர்களோடு நம்பிக்கையாய் வியாபாரம் செய்யலாம். இதையெல்லாம் பலர் இங்கே வெளியே சொல்வதில்லை. இந்தியர்கள்தான் வணிகத்தில் நேர்மையைத் தொலையக் கொடுத்து வருகிறோம். பல்வேறு நாடுகளிலும் சென்று வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களிடம் கேளுங்கள். விவரமாகச் சொல்வார்கள்.

சீனாவில் யீவு என்று ஒரு ஊர். திண்டுக்கல் மாதிரி பெரிய கிராமம். அந்த ஊரைச் சேர்ந்த நண்பன் ஒருத்தன் இருந்தான். அவன் கதை கதையாய்ச் சொல்லியிருக்கிறான். அந்தக் கிராமத்தில் குண்டூசி துவங்கி சகலமும் மொத்தத் தயாரிப்பு. இங்கே பூஜையறையில் உள்ள பிள்ளையார்கள் அங்கே கோடிக் கணக்கில் கொட்டிக் கிடப்பார்கள். உலகத்திற்கே கொசு அடிக்கிற பேட் அங்கிருந்துதான் போகிறது. போய் ஆர்டரைக் கொடுத்துவிட்டு வந்தால் பக்காவாக இங்கே அனுப்பி விடுவார்கள். சுத்தமான வியாபாரம். இங்கே சிறு வியாபாரிகளின் பிழைப்பு இதை வைத்துத்தான் ஓடுகிறது. பிள்ளையார், கொசு பேட், மொபைல் கவர் போல இன்னும் ஆயிரக்கணக்கான பொருள்களை நாம் சீனாவின் உற்பத்தி எனத் தெரிந்தும் தெரியாமலும் வாங்கிக்கொண்டிருக்கிறோம்.

சீனப் பொருள்களை வாங்காதீர்கள் என்ற குரல் இங்கே அடிக்கடி கேட்கிறது. தேசபக்தியின் பெயரால் ஒலிக்கப்படும் இந்தக் கூக்குரலுக்குப் பின்னே இருப்பது இந்தியப் பெருநிறுவனங்கள். ஆனால், ரயிலில் சைனா போனுக்கான சைனா கவர்கள் விற்பது பலரின் பிழைப்பாக இருக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான ஓரில் துல்லியத் தாக்குதல் பற்றி நாம் பேசுகிறொம். ஆனால், பொருளாதாரக் களத்தில் துல்லியமாகத் தாக்கிவிட்டது சீனா. சீனாவுடன் போட்டி போடச் சொன்னால், இவர்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். தேசபக்திக்கான குறியீடாகக் கட்டமைக்கப்படும் விநாயகரே அங்கேதான் மொத்தமாகத் தயாரிக்கப்படுகிறார் என்கிற விவரம் புரியாமல் இங்கே சீனப் பொருட்களை வாங்காதீர்கள் என காமெடி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

வியாபாரத்தை ஒரு காலத்தில் பாவமாக நினைத்த சீனா இப்போது அதையே ஆயுதமாகக் கையிலெடுக்கிறது. இந்தியா இந்த நேரத்தில் நோட்டை மாற்றித் பொருளாதர ஆட்டத்தை ஆடிக்கொண்டிருக்கிறது. சீனர்களுடைய பொருளாதரமும் பாதிக்கும். ஆனாலும் அசரடிக்கிறார்கள் பாருங்கள். அவர்கள்தான் உண்மையில் தேசமாகத் திரண்டிருக்கிறார்கள். அவர்களின் தேசியம் உழைப்பில் இருக்கிறது. இங்கே கோமியத்தில் இருக்கிறது. விரைவில் அதையும் பாட்டிலாக சைனாக்காரனே அனுப்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Opinion news in Tamil.

×Close
×Close