த. வளவன்
குருகுல முறையில் இளந்தலைமுறையினரை உருவாக்கிய பாரம்பரியம் கொண்ட நமது நாட்டில் சமணர்களின் சமத்துவ கல்வி முறை திருப்பு முனையாக அமைந்தது. பள்ளிகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை தோற்றுவிக்கப்பட்டன. வடக்கே நாலந்தா முதல் தெற்கே கழுகுமலை வரை புத்த, சமண சமயங்களின் தயவில் குழந்தைகளின் புத்தி கூர் தீட்டப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி கல்வி முறை அதிலும் சில மாற்றங்களை கொண்டுவந்தது. ஆனாலும், கல்வியை அறிவின் கருவியாக கருதிய மனோபாவம் தனியார் மற்றும் அரசு வேலைக்கான வழிமுறையாக மாற்றமடைந்தது. அதிலும் கடந்த சில பத்தாண்டுகளில் போட்டி, பொறாமை மலிந்ததாக கல்விக்களம் மாற்றியமைக்கப்பட்டது. பந்தயக்குதிரையாக பள்ளி மைதானத்தில் மாணவர்கள் பவனி வரத்தொடங்கிவிட்டனர்.
குழந்தை பருவத்திலேயே வீட்டுச் சூழலிலிருந்து பிடுங்கி நர்சரி எனும் நாற்றங்காலில் பதியனிடப்பட்ட குழந்தைகள் பாசம், பண்பு, பற்று கடந்த மன நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர். புறச் சூழ்நிலைகளும் மாணவர்களின் கவனத்தை வேறு வழிகளில் திருப்பியது. சாதி, அரசியல், சினிமா கருத்தாக்கங்களை உள்வாங்கி மென்மையான குணம் மருவி வன்மம் வளர்த்தது. இதற்கேற்ப ஆசிரியர்களின் ஆளுமை ஆட்டம் கண்டது.
பக்குவமடையாத பருவம்... பாரமான பாடத்திட்டம்.... ஒட்டுறவில்லாத ஆசிரியர்கள்.... உரிமை கொண்டாட முடியாத தனியார் பள்ளி.... என அந்நியப்-பட்ட சூழலில் இன்று பல மாணவர்களுக்கும் கல்வி கசப்பாகிவிட்டது. பள்ளிகளில் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை போதிக்காமல் அவர்களை மார்க் முட்டையிடும் கோழிகளாக மாற்றியதால் மாணவர்கள் இன்று வன்முறை மன-நிலைக்கு மாறி வருகிறார்கள்.
பக்குவமாக மாணவர்களை கையாள ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவிட்டது. இக்கால சூழலுக்கேற்ப கல்வி புகட்டுவது ஆசிரியர்களுக்கு கடினமானது. கண்டிப்பு என்பதற்கே கண்டனம் எழுந்தது. பணத்துக்கு கல்வி என்ற பரிவர்த்தனை பெற்றோர், ஆசிரியர், மாணவர்களை ஒன்றுக்கொன்று ஒட்டாத முக்கோண பரிமாணத்தில் கொண்டு விட்டது. இதன் விளைவாக கிடைத்த போலி சுதந்திரத்தை மாணவர்கள் தவறாக பயன்படுத்தினர். அவர்கள் கட்டுப்பாட்டிலிருந்து கட்டறுத்து வெகுதூரம் போய்விடாமல் ஆசிரியர்கள் இழுத்து நிறுத்த முயன்ற நிலையில் மோதல் வெடிக்கிறது.
கல்வி, கல்லாய் இருக்கும் ஒருவனை சிற்பமாய் செதுக்கும் உளி. சிற்பி சிற்றுளியால் மெல்ல மெல்ல செதுக்குவது போல் கல்வியை சிறுக சிறுக சிறார் மனதில் செலுத்த-வேண்டும். ஆனால், நாலுகால் பாய்ச்சலில் தாறுமாறாக ஓடும் பொருளாதார உலகம் சிட்டுகளாக பறக்க வேண்டிய பள்ளிக்குழந்தைகளை பந்தய குதிரைகளாக மாற்றிவிட்டது.
‘கல்விக்கு வயதில்லை, கற்பதற்கு அளவில்லை’ என்றாலும், ஐந்தாறு வயது வரை பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது நல்லதல்ல. வீட்டில் இயல்பாக அவர்கள் கற்க வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன என மனோதத்துவ மேதைகள் கூறுகின்றனர். ஆனால், இன்றைய அவசர உலகில் 3 வயதிலேயே பால்வாடிக்கு அனுப்பி வைத்து அவர்களின் பரவசத்தை பறித்தெடுத்து விடுகிறோம்.
சிறு வயதில் தொடங்கும் ‘நான் முந்தி, நீ முந்தி போட்டி’யை பெற்றோர்களும், ஆசிரியர்களும் பார்வையாளர்களாக இருந்து வாலிபம் கடக்கும் வரை ஊக்குவிக்கிறோம். இன்பமயமான இளம் பருவத்தை மிச்சசொச்சமின்றி முற்றிலும் கல்வி மூலம் சுரண்டிவிடுகிறோம்.
முன்பெல்லாம் பாடம் இலகுவாக இருந்தது. தாய்மொழிக்-கல்வி வேறு வரப்பிரசாதமாக அமைந்தது. ஆசிரியர், மாணவர் உறவும் அந்யோன்யமாக திகழ்ந்தது. ஆசிரியர் வீட்டுக்கு மாணவர் செல்வதும், மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஏதாவது செய்வதுமாக பாச பந்தம் விளைந்தது. ஆனால், தற்கால கல்வி முறை அந்த உறவுக்கு குந்தகம் விளைத்துவிட்டது. சாட்டை பிடித்த கையுடன் மிருகத்தை மிரட்டி விருப்பம்போல் விளையாடவைக்கும் சர்க்கஸ் பயிற்சியாளராக ஆசிரியர்களை மாணவர்கள் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.
பக்குவமடையாத பருவம், பாரமான பாடத்திட்டம், ஒட்டுறவில்லாத ஆசிரியர்கள், உரிமை கொண்டாட முடியாத தனியார் பள்ளி என அந்நியப்பட்ட சூழலில் கல்வி ஒருவனுக்கு கசப்பாகிறது.
கல்வி முறையிலும் குறை காண்கின்றனர் கல்வியாளர்கள். மாணவர்களை மனிதர்களாக பக்குவப் படுத்துவதாக இல்லாமல் வேலைக்காக தயார் செய்வதாக கல்வி முறை அமைந்துள்ளது. கால் நூற்றாண்டுக்கு முன்பு ஒன்றாம் வகுப்பு முதல் படித்துவந்த நல்லொழுக்க போதனை பாடமும், அதை நடத்தும் அன்பும் ஆலோசனையும் வழங்கும் ஆசிரியரும் இல்லாதது சூனியமாக தோன்றுகின்றது.
திணிக்கப்படும் உணவு செரிக்கப்படாமல் வெளியாவது போல் இயல்புக்கு மாறான குணங்கள் வெளிப்படுகின்றன. நாம் செபிக்கும் பாட மந்திரம் பிள்ளைகளுக்குள் இருக்கும் தேவதையை எழுப்பாமல் சாத்தானை உசுப்பி விடுகிறது.
ஒழுக்கமற்ற கல்வியால் பள்ளிப் பருவத்திலேயே வன்முறையாளர்களாக மாறி வருகின்றனர். சக மாணவியை ஆபாசமாக படம் பிடிப்பது, தோழனை கொலை செய்வது போன்ற இளம் பருவ குற்றங்களின் எண்ணிக்கை ஏகமாக அதிகரிக்கிறது. அதன் இறுதிக் கட்டமாக ஆசிரியை உயிரை பறித்த சம்பவம் அமைந்துவிட்டது.
பிள்ளைகளுக்கு நல்லது செய்வதாக எண்ணி அவர்களை மேட்டுக்குடி கலாசாலைக்கு பார்சல் செய்து அனுப்புவதும், பின்னர் கடமை முடிந்ததாக கருதி அவர்களை பற்றிய ஆராய்ச்சியே இன்றி தங்கள் போக்கில் வாழ்வதுமாக பெற்றோர் தவறிழைக்கின்றனர். நம்பி அனுப்பப்படும் மாணவர்களின் நல்லது கெட்டதுகளை ஆராய்ந்து அதற்கேற்ப நல்லாலோசனை நல்காமல் ‘படி அல்லது மடி’ என கெடுபிடி செய்யும் ஆசிரியர்களும் பிழை புரிகின்றனர்.
பெற்றோரின் விருப்பப்படி அல்லாமல் பிள்ளைகள் தகுதி படி கல்வியை தேர்ந்தெடுக்க வேண்டும். மனத்தடுமாற்றம், கற்றலில் குறைபாடு உள்ள குழந்தைகளை வலுக்கட்டாயமாக சி.பி.எஸ்.சி, மெட்ரிக். பள்ளிகளுக்கு அனுப்புவது தவறு. மற்ற மாணவர்களை ஒப்பிட்டு குற்றம், குறைகளை குத்தி பேசும் மனோபாவத்தை மாற்ற வேண்டும்.
முன்பெல்லாம் ஈ.எஸ்.எல்.சி., எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளில் ஐநூறுக்கு முன்னூறு, நானூறு எடுத்தாலே தலையில் வைத்து ஆடுவர். இப்போது 480, 490 என வந்தாலும் திருப்தி அடைவதில்லை. மாணவர்களை மார்க் முட்டையிடும் கோழிகளாக்கி விட்டோம் நாம். மதிப்பெண்களை வைத்து மதிப்பிடும் போக்கு மாறி, படிக்காத மாணவர்களின் பாடம் தவிர்த்த திறமைகளை கண்டறிந்து உற்சாகப்படுத்த வேண்டும்.
பணம் கறப்பதே குறியாக கொண்ட பள்ளிகளும், படிப்பால் மட்டுமே ஒருவன் வாழ முடியும் என்று வறட்டு நம்பிக்கை கொண்ட பெற்றோராலும், படித்தவனை மேலும், பாமரனை கீழும் வைக்கும் சமூகத்தாலும் இது முடியாது. கல்வி முறையை மறு சீரமைக்கும் கடமை அரசுக்கே உள்ளது.
முன்பெல்லாம் பைசா செலவில்லாமல் அரசு பள்ளியில் படித்ததால் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மீது அதிக ஒட்டுதல் இருந்தது. ஆசிரியர்கள் வீட்டுக்கு சென்று வேலை செய்து கொடுக்கும் அளவுக்கு உரிமை எடுத்தனர். அதேபோல் ஆசிரியர்களும் அவர்களை தன் பிள்ளைகளாக வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர்.
ஆனால், இப்போது கணக்கு வழக்கின்றி கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதால் ஆசிரியர்களையும் பள்ளி நிர்வாகத்தினரையும் மாணவர்கள் வெறும் வியாபாரிகளாக பார்ப்பதால் அவர்கள் மீது மரியாதையும் போய்விட்டது.
கசக்கி பிழிந்தெடுக்கும் தனியார் பள்ளிகள் மீதும் அவற்றின் ஆசிரியர்கள் மீதும் மாணவர்களுக்கு கசப்புணர்வு தோன்றுகிறது.
இதன் அதி தீவிர விளைவு சென்னையில் ஆசிரியை உமா மகேஸ்வரி, வல்லநாட்டில் பொறியியல் கல்லூரி முதல்வர் சுரேஷ் ஆகியோர் கொலையாக மாறி உக்கிரம் கொண்டது. இது இன்றோ, நேற்றோ திடீரென விளைந்த தீய விளைவல்ல. ராகிங், கேலி, பஸ்சில் இருக்கை பிடிக்கும் சண்டை, சாதி பெயரில் துவேசம் என படிப்படியாக மாணவர்கள் கடந்து வந்த படி நிலையின் உச்சம்.
பள்ளியில் சேர்த்ததோடு கடமை முடிந்தது என்ற பெற்றோரின் மனநிலை, பணம் பறிப்பதில் காட்டும் கடுமையை, கடமையில் செலுத்தாத பள்ளி, கல்லூரி நிர்வாகங்களின் செயல்பாடு, இளந்தலைமுறையை எப்படி வழிநடத்த வேண்டும் என உணராத தலைவர்கள், கலைப்படைப்பாளர்களின் கண்ணோட்டம் என அனைத்தும் இந்த கொடுமைக்கு முக்கிய காரணிகள்.
பள்ளிப்பருவத்தில் முன்பு இருந்த நல் ஒழுக்க கல்வி வகுப்பு இப்போது இல்லை. அதற்கென கருணையே வடிவான ஆசிரியர் ஒருவர் கனிவுடன் பாடம் நடத்துவார். மாணவர்களுக்கு அவர் ஆலோசகராகவும், வழிகாட்டியாகவும் இருப்பார்.
இன்று அந்த வழிகாட்டியை பெயர்த்தெடுத்து விட்டனர். ஊருக்குள் நிலவும் சாதி, மத பாகுபாடு, இளைஞர்களை பிடிக்க அலையும் கொள்கையற்ற அரசியல் தலையீடு ஆலோசிக்க தெரியாத வயதில் மாணவர்களை ஆக்கிரமித்து விடுகிறது.
எப்பாடு பட்டாயினும் படித்து முதல் மதிப்பெண் வாங்கிவிட வேண்டும் என்ற பெற்றோரின் நிர்பந்தம், மனநிலையறிந்து புகட்டப்படாத மனப்பாட கல்வி முறை, மாணவர்களின் அன்றாட நடவடிக்கைகளை கண்டுகொள்ளாத ஆசிரியர்களின் அக்கறையின்மை போன்றவை மாணவர்களை வன்முறையாளர்களாக்கும் வழிமுறைகளாக அமைகின்றன.
இந்த நிலையில், கடந்த ஆண்டு பாடத்துடன் நற்பண்புகள் என்ற பெயரில் பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்பை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது. முதல்கட்டமாக மாநில அளவில் 2 நாள் பயிற்சியும் நடத்தியது. ஆனால், இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
நல்லொழுக்க போதனையை விட நட்பு மூலம் கிடைக்கும் நல்வழியும், சிறந்த சுற்றுச் சூழலுமே மாணவர் நல்லவர்களாக வ:ளர உதவும். ஆனால், இன்றைய சமூக சூழலில், கல்வி சூழலும் கறை படிந்திருந்தால் இது சாத்தியமற்றுப் போகிறது.
பல கல்வி நிறுவனங்களின் சூழல் பயமுறுத்துவதாக இருக்கிறது. தேர்ச்சி விகிதம் குறையும் என்ற பயத்தில் நிர்வாகத்தின் வற்புறுத்தலில் மாணவர்களுக்கு பல வழிகளிலும் ஆசிரியர்கள் அழுத்தம் கொடுக்கின்றனர். நிரந்தரமற்ற பணியில் நிச்சயமற்ற ஊதியத்தில் வேலை செய்யும் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை பல தனியார் பள்ளி ஆசிரியர்கள் உணர்வதேயில்லை.
கற்றலிலும் கற்பித்தலிலும் உள்ள இந்த இடைவெளியை நிரப்ப அரசு பல்வேறு திட்டங்களை வகுத்தது. கல்வி சுற்றுலாவை கட்டாயமாக்கியது. நடமாடும் ஆலோசனை மையத்தை உருவாக்கப்போவதாக கூறி அதற்கான அடிப்படை வேலைகளை செய்தது. ஆனாலும் முனைப்பாக செயல்படுத்தாததால் அதில் வெறி பெறவில்லை.
எனவே, மீண்டும் பள்ளிகளில் நல்லொழுக்க போதனை வகுப்பையும் அதற்கென ஆசிரியர் பணியிடத்தையும் ஏற்படுத்தவேண்டும். பகுதிக்கொரு மனநல ஆலோசகரை நியமிக்க வேண்டும்.
பெற்றோர், ஆசிரியர் கழகங்களின் சம்பிரதாயமான செயல்பாட்டை தவிர்த்து, அவ்வப்போது மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை பேசித்தீர்க்க வேண்டும். கட்டண கொள்ளையை தடுத்தல், தனியார் கல்வி நிறுவனங்களில் காசு கறக்க நடத்தப்படும் வகை, வகையான கலாச்சார நிகழ்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்.
பெரும்பாலும் சுயநிதி கல்வி நிறுவனங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. மாணவர்களை பணத்துக்காக தாஜா செய்வதும், படிப்புக்காக கண்டிப்பதுமான இருவேறு நிலைப்பாடு அங்குள்ளது.
இது குறித்து கல்வியாளர்களிடம் பேசினோம், "மாணவர்களிடம் போலியான ஒழுக்கமுறையை காட்டுவதை தவிர்க்க வேண்டும். சாதி, அரசியல், சினிமா போன்ற வெளிச்சூழல் கெடுக்காதவாறு பெற்றோர் கண்காணிப்பதும், ஆசிரியர் பாடத்திட்டத்தை கடந்து அடிக்கடி ஆலோசனை கூறுவது அவசியம். மற்றபடி ஆசிரியர்களின் கடுமையான நடவடிக்கையை தடுத்து நிறுத்திய அரசாணைகளை திரும்ப பெற வேண்டியதில்லை. ஆசிரியர்களை பாதுகாக்க தனி சட்டங்களும் தேவையில்லை’ என்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.