சுசிலா ரவிந்திரநாத்
இது தமிழ்நாட்டிற்கு மறக்க முடியாத வருடம். தமிழகத்தின் வரலாறு, அரசியல் ஆகியவற்றைத் திசை மாற்றிய நீதிக்கட்சியை ஆரம்பித்து 101 வருடங்கள் ஆகிறது. தமிழகத்தை ஐம்பது ஆண்டுகளாக ஆண்டுகொண்டிருக்கும் திராவிடக் கட்சிகளுக்கு முன்னோடி நீதிக்கட்சியே ஆகும். தந்தை பெரியார் சமூகநீதிக்காக நீதிக்கட்சியிலிருந்து திராவிடர் கழகத்தை ஆரம்பித்தார். பெரியாரும், அவரின் தொண்டர்களும் தமிழகத்தில் நிலவி வந்த ஆதிக்க ஜாதியினரின் (பிராமணர்களின்) ஆதிக்கத்தை எல்லா மட்டங்களில் முடிவுக்குக் கொண்டு வரவும், ஜாதி அநீதிகளை வேரோடு சாய்க்கவும் அயராது போராடினார்கள்.
சுயமரியாதை இயக்கமாகத் துவங்கியது வலுவான அரசியல் அமைப்பாக உருவெடுத்தது. அண்ணா திராவிடர் கழகத்தை விட்டு 1949-ல் வெளியேறி திமுகவை ஆரம்பித்தார். சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்ட அக்கட்சி 1967-ல் காங்கிரஸ்
முழுமையான சமூக நீதி இன்னமும் சாத்தியப்படவில்லை என்றாலும், தமிழகத்தில் சமூக நீதி சிறப்பாகவே இருக்கிறது. இந்த மாநிலத்தில் சிறுபான்மையினர் அச்சத்தோடு வாழவில்லை. ஜாதி மோதல்கள் நடக்கின்றன என்றாலும் அவை குறிப்பிட்ட வட்டாரங்களோடு முடிந்து விடுகின்றன. தேர்தல் அரசியல் முடிவுகளை அவை பாதிப்பதில்லை. வரலாற்றில் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் இங்கே ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற்றுள்ளன.
அண்ணா ஆட்சியைக் கைப்பற்றிய இரண்டாண்டுகளுக்குள் மறைந்தார். அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்த திமுகத் தலைவர் மு.கருணாநிதி கட்சித்தலைவராக அன்று முதல் இன்றுவரை தொடர்கிறார். தமிழகத்தின் முதல்வராக ஐந்து முறை பதவி வகித்திருக்கிறார். அவருக்குச் சட்டசபையில் இது வைரவிழா ஆண்டு. அவர் ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என வடக்கின் ஆதிக்கத்தை, இந்தி திணிப்பை எதிர்க்கிற தலைவராகத் தன்னுடைய அரசியலை துவங்கினார். கடந்த இருபது வருடங்களில் அவர் தேசிய தலைவராக உருப்பெற்றார். வரும் ஜூன் 3 யோடு அவருக்கு 94 வயது ஆகிறது. அன்று தேசிய அளவில் எதிர்க்கட்சி கூட்டமைப்பை உருவாக்கும் திட்டங்கள் தீட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனினும், மூப்பின் காரணமாக ஏற்பட்டிருக்கும் உடல்நலக் குறைவால் அவரால் அந்த விழாவில் பங்குகொள்ள முடியாது.
கருணாநிதியிடம் இருந்து 1977-ல் ஆட்சியைக் கைப்பற்றிய அவரின் அரசியல் எதிரி எம்ஜிஆருக்கு இது நூற்றாண்டு. எம்ஜிஆருக்கு பின்னர் அவரின் அரசியல் முகமாக ஜெயலலிதா
புதுத் தில்லியில் இருந்து பல்லாயிரம் மைல்கள் தள்ளியிருக்கிறது தமிழகம். ஒரு காலத்தில் பிரிவினை பேசுகிற மாநிலமாகத் தமிழ்நாடு இருந்தது. இந்த மாநிலம் இந்தியாவில் தன்னிகரில்லா வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் ஒன்றாக எப்படி மாறியது? அதன் வளர்ச்சி விகிதங்கள் பெருமளவில் கொண்டாடப்படும் குஜராத்துக்குச் சவால் விடுகிறது. அது பல்வேறு துறைகளிலும், வளர்ச்சி குறியீடுகளில் ஜொலிக்கிறது. அன்மைக்காலத்துக்கு முன்பு வரை தெற்கை தாண்டி தமிழகத்தின் வளர்ச்சியை யாரும் சட்டை செய்யவில்லை. திரை நட்சத்திரங்கள் ஆளும் மாநிலம் என்று மட்டுமே தமிழகத்தைப் பற்றிய பார்வை நிலவி வந்தது.
திராவிட இயக்கம் வேர்விட ஆரம்பித்த காலத்திலேயே, திரைப்படங்கள், நாடகங்களின் மூலமே மக்களைச் சென்றடைய முடியும் என அண்ணா உணர்ந்து கொண்டார். அவர் நாடகங்கள், திரைப்படங்ள் ஆகியவற்றைச் சிறப்பான பிரச்சாரக் கருவிகளாகப் பயன்படுத்திக் கொண்டார். மத்திய அரசு வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தது. அண்ணா சினிமாவின் மூலம் பட்டிதொட்டிகளைச் சென்றடைய முடியும் என உணர்ந்து கொண்டார். இட ஒதுக்கீடு சமூகத்தின் வளர்ச்சிக்கு வழிகோலும் என்றும் அண்ணாவுக்குத் தெளிவான பார்வை இருந்தது. கடும் உணவுப்பஞ்சம், விலைவாசி ஏற்றம் நிலவி வந்த காலத்தில் அண்ணா ஆட்சிக்கு வந்தார்.ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி (4.5 கிலோ) எனத் தேர்தல் வாக்குறுதி தந்தார் அண்ணா. ஆட்சிக்கு வந்ததும் சொன்னபடியே பொது விநியோக முறையில் மூன்று படி அரிசி போடப்பட்டது. எனினும், நிதி பற்றாக்குறையால் அதைத் தொடர முடியவில்லை. அடுத்து ஆட்சிக்கு வந்த கருணாநிதி அடித்தட்டு மக்களுக்குப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தினார். இலவச கல்வி, மானிய விலை மின்சாரம், எண்ணற்ற நலத்திட்டங்கள் பலதரப்பு மக்களுக்குப் பயன் தந்தன. எம்ஜிஆர் ஆரம்பித்த அஇஅதிமுகக் கருணாநிதியை 1977-ல் தோற்கடித்தது. எம்ஜிஆர் துவங்கிய மதிய உணவுத் திட்டம் இன்றுவரை மெச்சப்படுகிறது. அவர் 69% இடஒதுக்கீட்டை கொண்டு வந்த பின்பு, தனியார் பொறியியல் கல்லூரிகளைத் துவங்க அனுமதி தந்தார்.
எம்ஜிஆரின் இந்த முடிவு ஒரு தலைமுறை இளைஞர்களுக்குப் பொறியியல் கல்லூரிகளைத் திறந்து விட்டது. தன்னுடைய ஆட்சியின் கடைசிச் சில ஆண்டுகளில் ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தினார். இலவச கலாசாரம் என்று எள்ளி நகையாடப்பட்ட திட்டங்கள் பலரை கொடும் வறுமையிலிருந்து மீட்டெடுத்தது. இலவசமாக மிக்சிக்கள், கிரைண்டர்கள் ஆகியவை பெண்கள் சமையல்கட்டிலேயே வெந்து கொண்டிருக்கும் நேரத்தை கணிசமாகக் குறைத்தது. இதனால் பெண்கள் வெளியே போய் வீட்டு வேலை செய்தாவது வருமானம் ஈட்ட வழிகோலியது. ஏழைகளுக்குக் கால்நடைகள் தரப்பட்டன. இது நிரந்தர வருமானத்துக்கு வித்திட்டது. தமிழகத்தில் பொது விநியோக முறை எனப்படும் ரேஷன் முறை மற்ற மாநிலங்களை விட மிகச்சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தின் நலத்திட்டங்களை மற்ற மாநிலங்கள் கடன் வாங்கிக்கொண்டன. மானிய விலை அரிசி திட்டம் 2013-ல் சத்தீஸ்கரில் மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடிக்க உதவியது.
திராவிடக் கட்சிகளின் ஆட்சி வெறும் நலத்திட்டங்கள் சார்ந்த ஒன்று அல்ல. அரசாங்கம் தொடர்ந்து கல்விக்கு உதவி அளித்து வருகிறது. பெண்கள் முன்னேற்றத்துக்குப் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் மூலம் தாராளமயமாக்கல் நிகழ்ந்த போது தமிழகம் வெளிநாட்டு முதலீட்டுக்கு தயாராக இருந்தது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம்(TIDC), மாநில தொழிற்சாலைகள் வளர்ச்சி கழகம் -தமிழ்நாடு (SIPCOT) ஆகியவை முறையே 1965, 1971-ல் துவங்கப்பட்டது. இவை அடுத்தடுத்த ஆட்சிகள் தொழில்வளர்ச்சியில் கவனம் செலுத்தியதற்குச் சான்று.
சிப்காட் 70கள், 80-களில் பல்வேறு தொழிற்சாலை எஸ்டேட்களைத் துவங்கியது. நில வங்கிகளை உருவாக்கி வெளிநாட்டு முதலீட்டளர்கள் கதவை தட்டியதும் வாய்ப்புகளை வாரிக்கொள்ள இவை உதவின. தமிழகத்தில் இந்தியாவின் எந்தப் பகுதியை விடவும் அதிகத் தொழிற்சாலைகள் உள்ளன.
அதே சமயம், திராவிடக் காட்சிகள் சிறப்பான ஆட்சியை வழங்கிவிடவில்லை. இத்தனை சாதனை வெளிச்சங்களை ஊழல் குற்றச்சாட்டுகள் மங்கவைத்தன. திமுகக் குடும்ப ஆட்சி, 2ஜி ஊழல் ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஜெயலலிதா காலத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டாலும், அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக இருந்தாலும் அணுக முடியாத முதல்வராக இருந்தார். இரும்புக்கரம் கொண்டு ஆண்ட அவர் காலத்தில் கருத்துச் சுதந்திரம் மிக மோசமாக நசுக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் ஊழல்மயமானவர் என அவரைத் தூற்றியது. ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் சிறைக்குள் தள்ளப்பட்டிருப்பார்.
தமிழகத்தின் கல்வித்தரம் வேகமாக வீழ்ந்து கொண்டிருக்கிறது. பல்வேறு பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. காலியிடங்களைக் கெஞ்சி கூத்தாடி நிரப்புகிறார்கள். எல்லா ஒடுக்கப்பட்ட சமூகங்களும் சம அளவில் வளர்ச்சி அடையவில்லை. இந்தியாவின் மிக நகர்மயமான மாநிலம் என்றாலும், பல நகரங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் கவலைக்கிடமாக உள்ளன. மிக மோசமான ஒரு பஞ்சத்தைத் தமிழகம் எதிர்கொண்டு இருக்கிறது. அதை எதிர்கொள்ளப் போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
இத்தனை சவால்கள் சாய்க்க பார்த்தாலும், 2016 வளர்ச்சி புள்ளிவிவரங்கள் இந்தியாவின் மிக வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் திகழ்வதை உறுதி செய்கிறது. இந்தியாவில் முதலீடு செய்ய உகந்த மூன்று மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் திகழ்கிறது. இந்தியாவில் மஹாராஷ்டிராவுக்கு அடுத்தப் படியாக அதிக உள்நாட்டு உற்பத்தி (GDP) உள்ள மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகம் பெற்றிருக்கும் முதலீடுகள் 2000-2011 காலத்தில் பெறப்பட்ட முதலீடுகளைப் போல இரு மடங்கு ஆகும். வறுமை ஒழிப்பை பொறுத்தவரை இந்திய சராசரியை விட அதிக அளவு வறுமை ஒழிப்பை சாதித்த எட்டு மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. தமிழகத்தின் தனி நபர் வருமானமான 1,43,547 ரூ (2015-16) இந்தியாவின் சராசரியை விட 70% கூடுதலாகும். இந்தியாவின் பெரிய மாநிலங்களில் தனிநபர் வருமானத்தில் தமிழகம் மூன்றாவது இடத்தைப் பெறுகிறது. மனித வள குறியீட்டில் பெரிய மாநிலங்களில் இரண்டாம் இடத்தைத் தமிழகம் பெறுகிறது. சமூக-பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தவரையில் இந்திய சராசரியை விடப் பல மடங்கு மேலான இடத்தில் தமிழகம் இருக்கிறது.
தமிழகம் தூங்கிக்கொண்டு இருக்கக் கூடாது. தன்னுடைய இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள அது கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். மற்ற மாநிலங்கள் மல்லு கட்டுகின்றன. ஆந்திரா, தெலங்கானா முதலீட்டாளர்களைத் தங்கள் பக்கம் ஈர்க்க போராடிக் கொண்டிருக்கின்றன. ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு தமிழகத்தில் அரசியல் கலகலத்துப் போயிருக்கிறது. தலைவர் சொல்லே மந்திரம் என்கிற அளவுக்கு மக்களை வசீகரித்த தலைவர்களின் காலம் மலையேறி விட்டதாகத் தோன்றுகிறது. மேலே சொன்ன இத்தனை சாதனைகளையும் நினைவுகூர வேண்டிய தருணத்தில் திராவிட இயக்கம் தன்னுடைய உற்சாகம், ஆடம்பர விழாக்கள் இன்றிப் பொலிவிழந்து கிடப்பது ஆச்சரியம் தரவில்லை.
தமிழில்: ரா.சி.சிவசாந்த்
(பைனான்ஸியல் எக்ஸ்பிரஸில் 29.05.17 அன்று வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.)