இந்தியா இது வரை தனது வெளிநாட்டு, பொருளாதார, உத்திக் கொள்கைகளை தனித்தனி களங்களாகக் கருதும் ஆடம்பரத்தைக் கொண்டிருந்தது. இந்தியா நிதி, வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கைகளை ஒருங்கிணைக்க வேண்டிய தேவை உள்ளது என்று சி.ராஜா மோகன் எழுதியுள்ளார்.
கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட மந்தநிலைக்குப் பிறகு, இந்தியா உயர் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும்போது, உலகில் அதன் புவிசார் அரசியல் முக்கியத்துவம் தொடர்ந்து உயரும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1991-92ல் இருந்த 270 பில்லியன் டாலராக இருந்ததில் இருந்து பலமடங்கு வளர்ந்துள்ளது. இன்று, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.1 டிரில்லியன் டாலர். சில மதிப்பீடுகளின்படி, இந்த பத்தாண்டின் முடிவில் 8 டிரில்லியன் டாலர்களைத் தாண்டக்கூடும்.
இந்தியா இப்போது உலகின் 6வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக உள்ளது. தற்போதைய கணிப்புகள் நடந்தால், இந்த பத்தாண்டுகளின் முடிவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும். 1991-92ல் சுமார் 38 பில்லியன் டாலராக இருந்த இந்தியாவின் மொத்த வர்த்தகம் இந்த ஆண்டு 1.3 டிரில்லியன் டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதமாகும். மேலும், இந்தியா முன்பைவிட உலகத்துடன் மிகவும் ஆழமாக பிணைக்கப்பட்டுள்ளது என்ற உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் இயக்கம் 3 முதல் 8 டிரில்லியன் வரை ஒரு ஒரு தொடர்ச்சியான செயல்முறையாக இருக்காது; உலகத்துடனான ஆழமான ஒருங்கிணைப்புக்கு மத்தியில் இந்தியாவின் நலன்களைப் பாதுகாப்பது எளிதாக இருக்காது. உலகமே ஒரு புவிசார்-பொருளாதார குழப்பத்தில் இருப்பதால் இந்த மாற்றத்தை ஒரு சவாலானதாக ஆக்குகிறது.
இந்தியாவை உயர் பொருளாதார சுற்றுப்பாதைக்கு உயர்த்துவது, கடந்த முப்பதாண்டுகளில் செய்த சீர்திருத்தத்தின் போது எடுக்கப்பட்ட அதன் அனுமானங்களை மறுசீரமைப்பதை உள்ளடக்கியது. ஏனெனில், ஏனெனில், சர்வதேச சூழலில், வேகமாக வளர்ந்து வரும் இந்தியா மாறத் தொடங்கியுள்ளது. கடந்த முப்பதாண்டுகளில் உலகமயமாக்கல் தவிர்க்க முடியாததாகவும், மீள முடியாததாகவும் கருதப்பட்டால், உலகப் பொருளாதார ஒழுங்கில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் சமாளிப்பதுதான் இந்தியாவின் பணியாக இருக்கும்.
முதலில், புவி பொருளாதாரத்தில் தற்போதைய சலசலப்பு பற்றி ஒரு வார்த்தை சொல்ல வேண்டும். எட்வர்ட் லுட்வாக், நன்கு அறியப்பட்ட அமெரிக்க உத்தியாளர். 1990-ல் பனிப்போரின் முடிவு மற்றும் பொருளாதார உலகமயமாக்கலின் ஒரு புதிய அலைக்கு மத்தியில் ஒரு செமினல் கட்டுரையில் புவிசார் பொருளாதாரம் பற்றிய யோசனை பற்றிய உலகளாவிய உரையாடலைத் தூண்டினார்.
லுட்வாக் - இந்த வாரம் இந்திய உத்தியாளர் மறைந்த கே சுப்ரமணியத்தின் மரபு பற்றி இந்திய உத்தி சமூகத்துடன் பேசுகிறார் - பனிப்போர் ஆண்டுகளில் ராணுவப் போட்டியின் ஆதிக்கத்திற்கு எதிராக, உலகளாவிய விவகாரங்களில் பொருளாதாரத்தின் புதிய முக்கியத்துவம் குறித்து வளர்ந்து வரும் ஒருமித்த கருத்தைப் பேசினார்.
கடந்த முப்பதாண்டுகளில் சீனாவின் விரைவான பொருளாதார எழுச்சி, அதன் வளர்ந்து வரும் பொருளாதார செல்வாக்கை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதில் பெய்ஜிங்கின் வெற்றி ஆகியவை புவிசார் பொருளாதாரத்தின் சிறந்த எடுத்துக்காட்டு என்று பரவலாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், லுட்வாக் உண்மையில் சர்வதேச அமைப்பில் அரசியலுக்குப் பதிலாக பொருளாதாரத்தைப் பற்றி பேசவில்லை. லுட்வாக் புவிசார் அரசியலுக்கும் புவிசார் பொருளாதாரத்திற்கும் இடையிலான உறவில் மிகவும் சக்திவாய்ந்த வாதத்தை முன்வைத்தார்.
பனிப்போருக்குப் பிந்தைய காலத்தில் சூழ்ந்திருந்த அதிகப்படியான நம்பிக்கைக்கு எதிராக லுட்வாக் எச்சரித்தார் - பொருளாதாரம் ஒன்றுக்கொன்று சார்ந்திருப்பது தேசியம் - அரசுகளுக்கு இடையேயான போட்டியை நீக்கும். பெர்லின் சுவரின் வீழ்ச்சி மற்றும் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு மத்தியில், எல்லையில்லாத உலகம் என்ற கருத்து, உலகெங்கிலும் நிரந்தர அமைதி, செழிப்பை ஊக்குவிக்கும் ஒரு சக்திவாய்ந்த சக்தியாக மாறியது. வணிக இலக்கணத்தில் மட்டும் இருந்தால், அரசுகளுக்கு இடையேயான மோதலின் தர்க்கம, உலகமயமாக்கல் யுகத்தில் நீடிக்க வாய்ப்புள்ளது என்று லுட்வாக் வாதிட்டார். தேசிய நலன் மீதான முக்கியத்துவம் புவிசார் அரசியல் களத்தைப் போலவே பொருளாதாரக் களத்திலும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று அவர் பரிந்துரைத்தார். உலகளாவிய நன்மைக்கான அனுமானிக்கப்பட்ட கட்டாயங்களைவிட, அரசுகள் தங்கள் எல்லைகளுக்குள் முக்கியமானவற்றை தொடர்ந்து செய்யும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
லுட்வாக், ராணுவ மோதல்களில் நிலவும் வெற்றி - தொல்வி சூழ்நிலைகள் புவிசார் அரசியலுக்கு பிரத்தியேகமானவை அல்ல. தவிர்க்க முடியாமல் மோதல்களைத் தூண்டும் பொருளாதாரக் களத்திலும் அவை உள்ளன. அவற்றில் சில ராணுவ மட்டத்தில் அதிகரிக்கக்கூடும். ஆனால், புவிசார் பொருளாதாரம் அரசியலை பொருளாதாரத்தால் மாற்றுவதற்கான ஒரு உருவகமாக உள்ளது. பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புக் கொள்கையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆவணம் ஒருசமீபத்திய உதாரணமாக உள்ளது.
பாகிஸ்தானின் உண்மையான சவால் என்பது புவிசார் அரசியலை புவிசார் பொருளாதாரத்துடன் மாற்றுவது அல்ல. பாகிஸ்தானுக்குத் தேவை என்னவென்றால், ஒரு வாடகை தேசியப் பாதுகாப்பு அரசில் இருந்து வளர்ச்சியடையும் அரசாக நீண்ட காலமாக மாறுவது. இது, நாட்டின் பொருளாதாரத்தின் மீது ராணுவம், நிலப்பிரபுத்துவம், ஒரு கிளெப்டோகிராடிக் உயரடுக்கின் மேலாதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதைக் கோருகிறது. பாகிஸ்தான் அரசை மறுசீரமைப்பது இறுதியில் பொருளாதாரப் பணி என்பதைவிட அரசியல் பணியாக இருக்கிறது.
பொருளாதாரம் ஒன்றுக்கொன்று சார்ந்திருத்தல் மற்றும் உலகமயமாக்கல் பற்றிய மாயைகளுக்கு எதிரான லுட்வாக்கின் எச்சரிக்கை சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்க-சீனா உறவுகளில் ஏற்பட்ட பெரிய மாற்றங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த நாற்பதாண்டுகளாக சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பொருளாதாரம் ஒன்றோடொன்று சார்ந்திருப்பதன் வியத்தகு விரிவாக்கம் - இதை சிலர் "சிமெரிக்கா" என்று அழைக்கிறார்கள்- மேலும் புவிசார் அரசியலும் சித்தாந்தமும் இனி ஒரு பொருட்டல்ல என்ற ஆய்வறிக்கைக்கு முக்கிய சான்றாகும்.
முதலாளித்துவ அமெரிக்காவும் கம்யூனிச சீனாவும் அத்தகைய ஒரு விரிவான பொருளாதார கூட்டுறவை உருவாக்கும். அவற்றின் வணிக உயரடுக்கு மற்றும் சிவில் சமூகங்களுக்கு இடையேயான பெரிய இணைப்பால் வலுப்படுத்தப்படும். ‘சிமெரிக்கா’ பொருளாதார உலகமயமாக்கலின் நற்பண்புகளை அடிக்கோடிட்டுக் காட்டும் திறமையான பொருளாதார இணைப்பாகக் கருதப்பட்டது. அந்த தொன்மைக் கதைகள் இப்போது அமெரிக்கா மற்றும் சீனாவின் வளர்ச்சிகளால் துண்டிக்கப்படுகிறது.
இன்று இரு நாடுகளிலும் பொருளாதார தேசியவாதம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. அமெரிக்காவில், அதிபர் ஜோ பைடன் தனக்கு முன்னர் அதிபராக இருந்த டொனால்ட் டிரம்பின் ‘முதலில் அமெரிக்கா’ பொருளாதாரக் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வந்தார். அமெரிக்காவை மறுதொடக்கம் செய்வதற்கான முயற்சியை அதிக நோக்கத்துடன் செய்வதன் மூலம் அவர் ஒரு படி மேலே சென்றுவிட்டார். சீனாவுடன் மிகவும் திறம்பட போட்டியிடுவதற்கு உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை திறன்களை அமெரிக்கா வலுப்படுத்தி வருகிறது.
சீனாவுடனான பழைய பொருளாதார ஈடுபாட்டை மீட்டெடுக்க அமெரிக்க நிதி மூலதனம் மற்றும் பிற ஆர்வமுள்ள குழுக்களின் வலுவான அழுத்தங்களை பைடன் எதிர்க்கிறார். உலகமயமாக்கலில் இருந்து பின்வாங்குவது அமெரிக்கா மட்டும் அல்ல. சீனாவும் ‘இரட்டை சுழற்சி’ என்ற பொருளாதார உத்தியை ஏற்றுக்கொண்டது. இது உள்நாட்டு திறன்களை வலுப்படுத்துதல் மற்றும் வெளிப்புற காரணிகளின் வெளிப்பாட்டைக் குறைப்பதில் கவனம் செலுத்துகிறது.
சீனாவின் கேள்வி, தாராளமான வர்த்தகம் குறித்த இந்தியாவின் சமீபத்திய கொள்கைகளையும் வடிவமைத்துள்ளது. 2019ம் ஆண்டின் இறுதியில், சீனாவை மையமாகக் கொண்ட பிராந்திய பொருளாதார அமைப்பில் சேருவதற்கான செலவுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று கூறி, பிராந்திய விரிவான பொருளாதார கூட்டுறவில் இருந்து (RCEP) இந்தியா வெளியேறியது.
ஆசியப் பொருளாதார ஒருங்கிணைப்புக்குப் பின்வாங்கும் இந்தியாவின் முடிவிற்குப் பரவலான விமர்சனங்கள் இருந்தாலும், சீனாவின் மேலாதிக்கப் பொருளாதார நிலை குறித்து டெல்லியின் கவலைகளைப் பகிர்ந்துகொள்பவர்களும் உள்ளனர். சீனாவின் எழுச்சியும் ஆசியாவின் வீழ்ச்சியும் என்ற சமீபத்திய புத்தகத்தில், சீனாவின் வளர்ச்சியால் ஆசியாவிற்குக் கிடைக்கும் குறுகிய காலப் பலன்கள் தற்காலிகமானதாக இருக்கலாம் என்றும், பொருளாதாரம், தொழில்துறை, நிதி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்து சீனாவைச் சார்ந்திருக்கும் நீண்ட காலச் செலவுகளால் அது மறைந்துவிடும் என்றும் வில்லியம் பிராட்டன் வாதிடுகிறார்.
பிராந்திய விரிவான பொருளாதார கூட்டை கைவிட்ட பிறகு, டெல்லி ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளுடன் தாராள வர்த்தக ஒப்பந்தங்களை நோக்கித் திரும்பியுள்ளது. பொருளாதாரத்தை நிரப்பும் நாடுகளுடன் இந்தியாவின் ஈடுபாட்டை ஆழப்படுத்தும் செயல்முறையின் தொடக்கமாக இது பார்க்கப்பட வேண்டும். ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுடனான வர்த்தக தாராளமயமாக்கல் கடினமானது. ஆனால், அடுத்த படிகள் முக்கியமானது.
அமெரிக்கா மற்றும் சீனாவைப் போலவே, இந்தியாவும் பொருளாதாரத் திறன் மற்றும் உலகமயமாக்கல் என்ற பெயரில் உள்நாட்டு உற்பத்தியை மற்ற நாடுகளுக்கு வெறுமனே கைவிட முடியாது என்று இந்தியாவும் வாதிடுகிறது. ‘ஆத்மநிர்பர் பாரத்’ என்ற முழக்கத்தின் கீழ், மொபைல் போன்கள் முதல் ஆயுதங்கள் வரை - உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க இந்தியா இப்போது பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்த்தக ஏற்பாடுகள் மற்றும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான கொள்கைகள், பொருளாதார பாதுகாப்புவாதம் மற்றும் உலகமயமாக்கல் ஆகியவற்றுக்கு ஆபத்தான மீட்சியாக உள்நாட்டில் பல விமர்சனங்களை எழுப்பியுள்ளன. அந்த வாதங்கள் தொடர வேண்டும் என்றாலும், அவை சர்வதேச பொருளாதார ஒழுங்கின் கட்டமைப்பு மாற்றங்களுடன் மிகவும் நெருக்கமாக தொடர்புடையதாக இருக்க வேண்டும்.
இந்தியா இப்போது வரை, தனது வெளிநாட்டு, பொருளாதார, உத்திக் கொள்கைகளை வெவ்வேறு செயல்திட்டங்களுடன் வெவ்வேறு அதிகாரத்துவங்களால் பின்பற்றப்படும் தனித்தனி களங்களாகக் கருதும் ஆடம்பரத்தைக் கொண்டிருந்தது. தற்போதைய உலகளாவிய புவிசார் பொருளாதார குழப்பத்திற்கு ஏற்ப டெல்லி தனது நிதி, வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை ஒருங்கிணைக்க சிறந்த வழிகளைக் கண்டறிய வேண்டும் என்று கோருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, உள்நாட்டு திறன்களை உருவாக்குதல், புவிசார் பொருளாதார கூட்டுறவை வளர்த்தல், ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளுடன் புவிசார் அரசியல் கூட்டணிகளை உருவாக்குதல் போன்றவற்றின் கட்டாயங்களுக்கு பதிலளிக்கக்கூடிய ஒரு உத்தி இந்தியாவுக்குத் தேவையாக இருக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.