அபுஷலே ஷாரீப்
தேசிய கல்விக் கொள்கை வரைவு மாநிலங்களின் பங்கை புறக்கணிக்கிறது; தனியார் துறையின் பங்கை பரிசீலனை செய்ய தவறிவிட்டது. ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பீடு செய்கிறது.
தேசிய கல்விக்கொள்கை வரைவு 2019 , அவசியம் படிக்க வேண்டிய ஒரு ஆவணம். இந்தியாவின் மக்கள் தொகை திறனுக்கான பலனை அறுவடை செய்வதற்கான முடிவுகளை கொண்டுள்ளது. துரிதப்படுத்தப்பட்ட பொருளாதார வளர்ச்சி என்பது இளைஞர் தொழிலாளர் சக்தி மூலம் மதிப்பு கூட்டப்படுவதை பொறுத்துள்ளது. அதனை கல்வி உள்பட மனித வளர்ச்சியில் பொருத்தமான முதலீடுகள் மூலமாக மட்டுமே அடைய முடியும். வறுமையையும் ஏற்றத்தாழ்வுகளையும் குறைப்பதற்கு கல்வி ஒரு சக்திவாய்ந்த கருவி; அது உலக பொருளாதாரத்தில் போட்டியின் தன்மையை மேம்படுத்துகிறது. அதனால், அனைவருக்கும் தரமான கல்வியை உறுதி செய்வதே இந்தியாவின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு மையமாக இருக்கும் என்று உலக வங்கி தெரிவிக்கிறது.
இந்த தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019, அனைவருக்கும் தரமான கல்வி மலிவாக கிடைப்பது அவசியம் என்பதை மிகவும் ஆவலுடன் முன்வைக்கிறது என்றாலும் கூட அது நமக்கு ஒரு பார்வையை அளிக்கிறது. 4 பாகங்கள், 23 அத்தியாயங்கள், ஒரு பின்னிணைப்பு உள்பட 477 பக்கங்களைக்கொண்ட ஒரு விரிவான வரைவு அது. இருப்பினும், அதில் பல பிரச்னைகள் குறிப்பிடப்படவே இல்லை. இந்த வரைவில் பரிசீலிக்க வேண்டிய 5 பிரச்னைகளை நான் விவாதிக்க உள்ளேன். ஒன்று கல்விக்கு நிதியளித்தல், இரண்டு தனியார் மயமாக்கல், மூன்று தொழில்நுட்பம் இது சமப்படுத்தவும் தரத்தை மேம்படுத்தவும், நான்கு ஆங்கிலவழி கற்பித்தல், ஐந்து மக்களுக்கு கல்வி கற்பித்தலில் அரசின் பொறுப்பு. இதில், நான்காவது தலைப்பு மட்டும் தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019-ல் விவாதிக்கப்பட்டிருக்கிறது. அதுவும்கூட பெரும்பாலும் ஆங்கிலத்தின் பங்கையும் முக்கியத்துவத்தையும் குறைத்து மதிப்பிடுவதாக இருக்கிறது.
இந்தியாவில் கல்விநிலையை பொருத்தவரை இந்த அறிக்கை, தனியார் நலன் ஊக்குவிப்பது தொடர்பாக பல்கலைக்கழக அளவிலான கொள்கையில் கவனம் செலுத்துவதற்கு மாறாக, பொது நலனை உருவாக்கும் தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளி கல்வியில் பொதுத்துறை முதலீடுகளின் அனுகூலங்களை விவாதிக்கும் வாய்ப்பை தவறவிட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கை 2019, அரசின் ஆண்டு வருவாயில் 20 சதவீதம் அளவுக்கு கல்வி மூதலீடுகளில் குறிவைக்கிறது. ஆனால், அது இந்தத் துறைக்கு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட செலவினங்கள் ஒதுக்கப்பட்ட அளவுக்கு (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம்) இந்தியா ஏன் ஒதுக்கத் தவறியது என்பதை மறுபரிசீலனை செய்யவும் மறந்துவிடுகிறது. தற்போது மத்திய, மாநில அரசுகள் இரண்டுமே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதம் தொகையை மட்டுமே ஒதுக்கீடு செய்கிறது. இந்த அறிக்கை புரவலர்களுக்கும் நிறுவனங்களுக்கும் அவர்களின் கார்ப்பரேட் சமூக பொறுபுணர்வு நிதியை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு அளித்து துணைபுரியுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால், அத்தகையை நிதிகள் கருத்தியல் ரீதியாக நடுநிலையாக இருக்காது என்பதை மறந்துவிடுகிறது. மேலும், இந்த அறிக்கை, கல்வியில் தனியார் முதலீடுகளின் பங்கை மதிப்பீடு செய்யவோ அல்லது அங்கீகரிக்கவோ இல்லை. அதே போல, இந்தியா முழுவதும் தனியார் ஆங்கிலவழி பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை மதிப்பீடு செய்யவோ அங்கீகரிக்கவோ இல்லை. பொறுப்பற்ற மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கல்வியின் தரத்தில் சமரசம் செய்வதோடு அது இந்தியாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளை (குறைக்காது) அதிகரிக்கும்.
தேசிய மாதிரி கணக்கெடுப்பின் 71 வது சுற்றுப்படி, கிராமப்புறங்களில் பள்ளி செல்லும் குழந்தைகளில் 21 சதவீதமும், நகர்ப்புறத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளில் 42 சதவீதமும் தனியார் அல்லது அரசு நிதி உதவி பெறாத பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர் என்று குறிப்பிடுகிறது. பள்ளிக்குச் செல்லாத 6 முதல் 18 வயது வரையிலான குழந்தைகள், (பள்ளியில் சேராத மற்றும் இடை நிறுத்தம் செய்யப்பட்டவர்கள்) தனியார் பள்ளிகளில் 5 கோடி குழந்தைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பொதுத்துறை மூலம் ஆரம்பக் கல்வி வழங்கப்படுவதும், பல்வேறு சாதிகள், வகுப்புகள் மற்றும் மதங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இத்தகைய பள்ளிகளில் கற்பிக்கப்பட வேண்டியது மிக முக்கியமானது. சாதி, மதம், வர்க்கம் மற்றும் மொழி ஆகியவற்றின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட முதன்மை மற்றும் தொடக்கக் கல்வியை ஊக்குவிக்கும் கொள்கைகள் முக்கிய காரணமாக உள்ளன.
இந்த அறிக்கை, குடும்பங்கள் கல்விக்காக செலவிடும் வருமானத்தின் பங்கை மதிப்பிடுவதிலும் தவறிவிட்டது. ஒவ்வொரு கல்வி நிலையின் நிதியுதவி -தொடக்க, இடைநிலை மற்றும் உயர் கல்வி நிலை ஆகியவை அதற்கே உரிய சவால்களுடன் வருகின்றன. எடுத்துக்காட்டாக, கேரள மாநிலத்தில் நடைமுறையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கல்வி முறை நிறுவனமயமாக்கப்பட்ட கல்வி நிதியுதவியின் ஒரு சாத்தியமான மாதிரி வடிவம் என்றுகூட குறிப்பிடப்படவில்லை. சமத்துவத்தை அடைதல், அனைவருக்கும் மலிவாக தரமான கல்வி ஆகிய நோக்கங்களை அடைவதில் பொதுத்துறை – தனியார் கூட்டு என்ற ஒரு புதிய மாதிரி முயற்சி வெற்றி பெறலாம்.
கல்வி சீர்திருத்தம் சில அடிப்படைக் கொள்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் – இன்னும் தரப்படுத்தப்பட்ட தனிநபர் கற்றல், கல்வியறிவு, எண்ணியல், அறிவியல் உணர்வு ஆகியவற்றில் பள்ளிகளுக்கு இடையிலான போட்டி மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதன் விளைவாக அமைப்புகளின் சமத்துவத்தை உறுதி செய்ய முடியும். 21ம் நூற்றாண்டில், தொழில்நுட்பம் உலகம் முழுவதும் மதச்சார்பற்ற மற்றும் சமமான கல்விக்கு ஆதாரமாக விளங்குகிறது. கான் அகாடமியால் அறிவுப் பகிர்வு செய்யப்பட்டிருப்பது ஒரு பொதுவான எடுத்துக்காட்டாக இருக்கிறது. இதனை பில்கேட்ஸ்கூட(அவருடைய சொந்த ஒப்புதலில்) செய்தார். ஆரம்ப, நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி அளவில் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு இத்தகைய தொழில்நுட்ப தளங்கள் உடனடியாக பயன்படுத்தப்பட வேண்டும்.
இதை கவனியுங்கள்: சத்தீஸ்கரில் பழங்குடி மக்கள் அதிகம் வாழும் பகுதியான ராம்பூர் அல்லது மும்பையின் தாராவியில் உள்ள ஒரு குழந்தை அமெரிக்காவில் சிறந்த பள்ளியான வாஷிங்டன் டி சி அருகே அமைந்துள்ள தாமஸ் ஜெபர்சன் உயர்நிலைப்பள்ளியில் வழங்கப்படும் தரமான கல்வியைப் பெறுவது என்பது சாத்தியம். உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு ஒரே கல்வியுரிமைதான். அந்த கல்வி அனைவருக்கும் மலிவு விலையில் வழங்கப்பட வேண்டும். இதற்கு தொழில்நுட்பம் வழங்கியுள்ள தீர்வை பயன்படுத்த வேண்டும்.
செம்மொழிகள், தாய்மொழிகள் மற்றும் பிராந்திய மொழிகள் ஆகியவற்றின் மூலம் நமது கலாச்சாரத்தைப் பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதற்காக தேசிய கல்விக் கொள்கை 2019-ஐ நான் மதிக்கிறேன். இருப்பினும், இந்தியாவில் ஆங்கிலம் படித்தால் கிடைக்கும் வருமானத்தை யாரும் மறுக்க முடியாது. ஆங்கில மொழியில் சரளமாக பேசுபவர்கள் ஆங்கிலம் தெரியாதவர்களைவிட மூன்று மடங்கு அதிக வருமானம் உள்ள வீடுகளில் வாழ்கின்றனர். இதை புறக்கணிப்பதன் மூலம், தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019 ஒரு மொழி ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சமூக ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும். மேலும், மக்கள் தொகையின் பலனை இழப்பதால் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருக்கும். இந்த அறிக்கை, மக்களுக்கு கல்வி வழங்குவதில் மாநில அரசுகளின் பங்கு மற்றும் முக்கியத்துவத்தை வலியுறுத்தவில்லை. சிறப்பு கல்வி மண்டலங்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படாத குழுக்ளை குறிவைத்து அதைப்பற்றி பேசுகின்றன. ஆனால், கல்வியில் பின்தங்கியுள்ள மாநிலங்களை அடையாளம் கண்டு அவற்றை மேம்படுத்தாமல் இத்தகைய குறிவைக்கும் உத்தி தோல்வியடையும்.
சுகாதாரத் துறையில், மாநிலங்களுக்கிடையில் அடிக்கடி ஒப்பீடுகள் செய்யப்படுகின்றன. இதனால் பட்ஜெட் மற்றும் கொள்கை முன்னெடுப்புகள் சிறந்த நடைமுறைகளுடன் ஒழுங்குபடுத்தப்பட்டு மாநிலங்கள் முழுவதும் செயல்படுத்தப்படுகின்றன. இந்த அறிக்கையின் மூலமாகவும், புதிய மசோதா மூலமாகவும், கல்வி மத்திய அரசாங்கத்தின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்படுவதன் மூலம் சமரசம் செய்யப்படும் என்பதற்கு அறிகுறிகள் உள்ளன. அனைவருக்கும் கல்வி திட்டம் என்ற சர்வ சிக்ஷா அபியானின் கடந்த கால பணிகளை தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019 மதிப்பீடு செய்யவில்லை. மாறாக ராஷ்டிரிய சிக்ஷா ஆயோக் அல்லது தேசிய கல்வி ஆணையத்தை எவ்வாறு நிறுவுவது மற்றும் மையமாக நிர்வகிப்பது என்பது குறித்து ஒரு முழு அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கல்வி முறையை மையப்படுத்தலை நோக்கிச் செலுத்துகிறது. அதனால், இது பொருளாதாரத்துக்கும் சமூக நல்லிணக்கத்துக்கும் விரோதமானது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.