Advertisment

வீழும் பாராளுமன்ற ஜனநாயகம் 

இந்தியாவின் 15 மாநிலங்கள் ஒரு கட்சியால் ஆளப்பட்டு, அதே கட்சி கூட்டணியோடு 362 மக்களவை, 163 ராஜ்யசபா உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்க முடிந்தால், இந்தியா இன்னொரு “மக்கள் குடியரசாக” மாறுவதை எதுவும் தடுக்க முடியாது. அந்த வாய்ப்புக்கு இன்னும் காலம் தேவைப்பட்டாலும் அதை முற்றிலும் நிராகரிக்க முடியாது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chidambaram opinion

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் விவாத மேடைகள். இந்திய நாடாளுமன்றத்தில் பெரும் விவாதங்கள் நடந்துள்ளன. 1962-ல் நடந்த சீனா-இந்தியா போரில் இந்தியா அவமானகரமான தோல்வியை சந்தித்தது. (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

P Chidambaram ப.சிதம்பரம் 

Advertisment

அமெரிக்க ஆய்வு  நிறுவனமான  ஃப்ரீடம் ஹவுஸ் இந்தியாவை ஓரளவு சுதந்திரமான ஜனநாயக நாடு என்றே தரவரிசைப்படுத்தியுள்ளது. ஸ்வீடனின் வி-டெம் நிறுவனமோ இந்தியாவை  எதேச்சதிகாரமான நாடு என சித்தரிக்கிறது. எகனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட்டின் ஜனநாயக குறியீட்டில், இந்தியா 53 வது இடத்திற்கு பின்தள்ளப் பட்டுள்ளது. இந்த வீழ்ச்சியில் பாராளுமன்றத்தின் இரு அவையை சேர்ந்தவர்கள் தமது பங்களிப்பை செலுத்தியுள்ளனர்.  

இதையும் படியுங்கள்: லிப்ஸ்டிக் பூசப்பட்ட எண்கள்: ப. சிதம்பரம்

இந்தியாவின் பாராளுமன்ற ஜனநாயகம் எவ்வாறு வீழ்ந்தது என்பது குறித்த எனது சிறு பட்டியலில் வாசகர்கள் தங்கள் தரப்பு நியாயங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். இதோ எனது பட்டியல்:

1. ராஜ்யசபாவின் நடைமுறை  விதி 267 (லோக்சபாவும் இதேபோன்ற விதியைக் கொண்டுள்ளது) அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை மீது விவாதிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்களால் செயல்படுத்தப்படுகிறது. கடந்த மாதங்களில், அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை விவாதிக்க இரு அவைகளிலும் இந்த விதி பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் சீன ஊடுருவல் முதல் ஹிண்டன்பர்க்  அறிக்கை வரை விவாதிக்க எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். இந்த வேண்டுகோள்கள் அனைத்துமே அவைத்தலைவரால் நிராகரிக்கப் பட்டன.

முடிவு:

இந்திய பாராளுமன்றத்தை பொறுத்த வரையில், ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட அன்றைய அலுவல்களை ஒதுக்கி வைத்து விட்டு விவாதிக்க வேண்டிய அவசர பொது முக்கியத்துவம் எதுவும் இல்லை.

இந்திய மக்கள் மிகவும் பாதுகாப்பாகவும், திருப்தியுடனும் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் நம்ப வேண்டும், அவர்களைப் பற்றிய எந்த விஷயமும் பாராளுமன்றத்தில் அவசரமாக விவாதிக்கத் தகுதியற்றது.

அதிபராக விரும்பும் பிரதமர்  

2. பிரதமர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தால் அவர் அந்த அவையின் முன்னவராக கருதப் படுவார். 17வது மக்களவையின் முன்னவர் பிரதமர் மோடி. அவர் இரு அவைகளிலும் அரிதாகவே இருப்பார். ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு அவர் பதிலளித்து வருகிறார். இதைத் தவிர அவர் வேறு எந்த சந்தர்ப்பத்திலும் பேசியதாக எனக்கு நினைவில்லை. நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வில்லை. ஒரு அமைச்சர் அவர் சார்பாக பேசுவார். (ஒவ்வொரு புதன்கிழமையும் இங்கிலாந்து நாட்டின் ஹவுஸ் ஆப் காமன்ஸ் போல பிரதமரின் கேள்வி நேரம் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.) திரு மோடியின் பாராளுமன்ற அணுகுமுறை ஜவஹர்லால் நேரு, டாக்டர் மன்மோகன் சிங், ஏ.பி. வாஜ்பாய் போல இல்லை. அவர் பிரதமராக இருந்து கொண்டே அதிபர் மாதிரி நடந்து கொள்கிறார். பிரதமர், அதிபர் போல செயல்பட்டால் இந்தியா நீண்ட காலம் நாடாளுமன்ற ஜனநாயக நாடாக இருக்காது.

3. இங்கிலாந்தின் மக்களவையான ஹவுஸ் ஆப் காமன்ஸ் ஒரு வருடத்தில் 135 நாட்கள் கூடும். இந்தியாவில், 2021 ஆம் ஆண்டில், மக்களவை 59 அமர்வுகளையும், ராஜ்யசபா 58 அமர்வுகளையும் நடத்தியது. 2022 ஆம் ஆண்டில், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் தலா 56 அமர்வுகள் இருந்தன. பெரும்பாலான நாட்களில் இடையூறுகள் காரணமாக பல அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. மறைந்த பா.ஜ.க தலைவர் அருண் ஜெட்லி,  நாடாளுமன்ற அமர்வுகளை தடுப்பது என்பது நாடாளுமன்ற உத்திகளின் ஒரு பகுதி என்று ஒரு முறை கூறியது மிகவும் பிரபலமானது. 

2010 குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் ஒரு அமைச்சரின் ராஜினாமா மற்றும் ஜே.பி.சி விசாரணை  குழு அமைத்து விசாரிப்பது தொடர்பாகவே முடிந்தது. அந்த அமர்வில் மக்களவை தமக்கு ஒதுக்கப்பட்டதில் 6 சதவீத நேரத்தையும், ராஜ்யசபா 2 சதவீத நேரத்தையும் மட்டுமே பயன்படுத்தியது. சமீப காலங்களாக இந்த மாதிரியான காலவிரயம் மேலும் முன்னேற்றம் பெற்று வலுவடைந்து வருகிறது. நடப்பு பட்ஜெட் அமர்வில் (இரண்டாம் பகுதி), கருவூல பெஞ்ச்கள் ஒவ்வொரு நாளும் இடையூறுகளை வழிநடத்துகின்றன. சில அமர்வுகள் மற்றும் அதிக இடையூறுகள் பாராளுமன்ற அமர்வுகளை பொருத்தமற்றதாக மாற்றும். மசோதாக்கள் விவாதம் இன்றி (கடந்த காலங்களில் இருந்ததைப் போல) நிறைவேற்றப்படலாம். பாராளுமன்றம் வருடத்தில் சில நாட்கள் மட்டுமே விவாதங்களுடன் இந்த இடையூறும் இல்லாமல் நடக்கிறது. இப்படி அடிக்கடி அமளியுடனே பாராளுமன்றம் நடந்தால் பாராளுமன்ற கூட்டமே தேவையற்றதாகி விடும். எதையும் விவாதிக்காமல், கூச்சல் மற்றும் இடையூறுகளுக்கு மத்தியில் அனைத்து மசோதாக்களையும் நிறைவேற்றும்  முறை சரியானது  இல்லை. வெறும் வாக்கெடுப்பு மட்டும் நடத்திவிட்டு பாராளுமன்றம் தனது கடமையை முடித்துக் கொள்ளும்.  

4. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மக்கள் பிரச்சனைகளை விவாதிக்கும் விவாத மேடைகள். இந்திய நாடாளுமன்றத்தில் பெரும் விவாதங்கள் நடந்துள்ளன. 1962-ல் நடந்த சீனா-இந்தியா போரில் இந்தியா அவமானகரமான தோல்வியை சந்தித்தது. ஹரிதாஸ் முந்த்ராவின் நிறுவனங்களின் பங்குகளில் எல்.ஐ.சி முதலீடு செய்தது தொடர்பான குற்றச்சாட்டுகள் விவாதிக்கப்பட்டன. போஃபர்ஸ் துப்பாக்கிகள் இறக்குமதி தொடர்பான குற்றச்சாட்டுகள் பலமுறை விவாதிக்கப்பட்டன. பாபர் மசூதி இடிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. எப்போதும், விவாதங்கள் வாக்கெடுப்பு இல்லாமல் முடிவடையும். ஒரு பாராளுமன்ற ஜனநாயகத்தில், அரசாங்கம் விவாதத்திற்கு பயப்படத் தேவையில்லை, காரணம்  பாராளுமன்றத்தில் அரசுக்கு பெரும்பான்மை பலம் இருக்கும். அரசு அஞ்சுவது ஒன்றே ஒன்றுக்கு தான் விவாதம் நடந்தால் சில உண்மைகளை எதிர்க்கட்சிகள் பேசி விடுமோ என்ற பயம் தான். விவாதமே இல்லாத பாராளுமன்ற சகாப்தத்திற்குள் அரசு நுழைந்து விட்டதா என நான்  பயப்படுகிறேன். என்னுடைய பயம் உண்மையாக இருந்தால் இந்தியாவில் பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு நாம் விரைவிலேயே விடை கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். 

5. பாராளுமன்ற கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று கற்பனை செய்து பாருங்கள். அனைத்து உறுப்பினர்களும் பெரிய மண்டபத்தில் கூடுகிறார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். இந்திய குடியரசின் அதிபரை தேர்ந்தெடுக்க அனைத்து உறுப்பினர்களும் வாக்களிக்கிறார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். அந்த வேட்பாளரை எதிர்த்து யாரும்  வாக்களிக்க  மாட்டார்கள். வாக்களிக்காமலும் இருக்க முடியாது. உண்மையில், வாக்களிக்க வேறு வேட்பாளர்கள் இருக்க மாட்டார்கள். வேறு வேட்பாளர் இல்லை. இந்த முடிவை ‘மக்கள் ஜனநாயகத்தின்’ வெற்றியாக நாடு கொண்டாடுகிறது. 

இந்தியாவில் இது நடக்குமா? நடக்கும். ஏனென்றால் நாம் சீராக ஒரு கட்சி ஆட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். இந்தியாவின் 15 மாநிலங்கள் ஒரு கட்சியால் ஆளப்பட்டு, அதே கட்சி மற்றும் அதன் கூட்டணியினர் 362 மக்களவை உறுப்பினர்களையும், 163 ராஜ்யசபா உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்க முடிந்தால், இந்தியா இன்னொரு “மக்கள் குடியரசாக” மாறுவதை எதுவும் தடுக்க முடியாது. அந்த வாய்ப்புக்கு இன்னும் காலம் தேவைப்பட்டாலும் அதை முற்றிலும் நிராகரிக்க முடியாது. இந்தியா இப்படி ஒரு மக்கள் குடியரசாக மாறும் போது, இந்தியாவில் பாராளுமன்ற ஜனநாயகம் ஓய்வெடுக்க வேண்டிய இடத்துக்கு சென்றிருக்கும்.

தமிழில் : த. வளவன்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India P Chidambaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment