Advertisment

வெளியூரிலிருந்து வேலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தருகிறதா தங்கும் விடுதிகள் ?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தங்கும் விடுதியில் ரகசிய கேமராக்கள்

தங்கும் விடுதியில் ரகசிய கேமராக்கள்

நித்யா பாண்டியன்

Advertisment

தங்கும் விடுதியில் ரகசிய கேமராக்கள் : பெண்களின் பாதுகாப்பு... உறுதி செய்யப்படுகிறதா என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கிறது. உறுதி செய்யப்படுமா என்ற கேள்விகளுக்கு பதில் ஏதும் இல்லை. பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் ஆளாகி வரும் நிலை இன்றைய கால கட்டத்தில் மிகவும் சகஜமான செய்தியாக படித்துவிட்டு செல்லும் மன நிலைமைக்கு நாம் வந்து விட்டோம். ஆக பெண்களின் பாதுகாப்பு பலருக்கு அச்சுறுத்தும் செய்தியாக இருக்கிறது. பாலியல் வன்கொடுமைகளே பழகிப் போன நம் மனதில், பாதுகாப்பான சூழலில் பெண்கள் வசிக்கின்றார்களா என்பதைப் பற்றி பெரிதும் யோசிப்பதில்லை.

தங்கும் விடுதியில் ரகசிய கேமராக்கள்

பொதுவாக பெண் குழந்தைகள் தொடங்கி வேலைக்காக வெளியூர் வரும் பெண்கள் வரை அனைவரும் தங்கள் வாழ்நாளில் சந்திக்கும் ஒரு காலக்கட்டம் என்பது விடுதிகளில் தங்கும் காலக்கட்டம். சிறந்த பள்ளிக்கூடம், 100% தேர்ச்சி, கட் - ஆஃபில் நல்ல கல்லூரி கிடைக்கும் என்று தவம் இருந்து பெற்ற பிள்ளைகளை நாமக்கல், திருச்செங்கோடு, கோவை, சென்னை, உதகை போன்ற இடங்களில் இருக்கும் போர்டிங் பள்ளிகளுக்கு அனுப்பி படிக்க வைப்பது நம் பெற்றோர்களின் அத்தியாவசிய கடமைகளில் ஒன்றாகிப் போனது என்பதை மறுக்கவே இயலாது.

பள்ளி முடிந்தது. பொறியியல், மருத்துவம், மேலாண்மை போன்ற படிப்புகளை தேர்ந்தெடுக்கும் பெண்களுக்கு, அவர்கள் பெற்றோர்கள்  இருக்கும் ஊர்களிலேயே கல்லூரிகள் கிடைத்துவிடுவது கிடையாது. மீண்டும் விடுதி வாழ்க்கை. சில சமயங்களில் கல்லூரி வளாகத்திற்குள், கல்லூரியே நிர்வகிக்கும் விடுதிகளில் இடம் கிடைத்துவிடும். மாணவர்களின் சேர்க்கைகள் அதிகரித்துவிட்டால், பெண்கள் கல்லூரிகளுக்கு அருகில் இருக்கும் தனியார் விடுதிகளை தேர்வு செய்துகொள்வது வழக்கம்.

வேலைக்குச் செல்லும் பெண்கள் நிலையும் கிட்டத்தட்ட இப்படியே. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களாய் இருந்தாலும் கூட, நகரங்களில் அப்பெண்கள் தனியாக வீடு எடுத்து தங்க இயலாது. நிகழும் தற்கொலைகள், கொலைகள், காதற் தோல்வி பிரச்சனைகள் என தினம் தினம் பார்த்து சலித்த வீட்டு உரிமையாளர்கள் ஆண்களுக்கு மட்டுமே போர்சன்களை வாடகைக்கு விடுகின்றார்கள். மேலும் புதிய ஊர்களில் பாதுகாப்பு கருதி அலுவலகங்களுக்கு அருகிலேயே தனியார் விடுதிகளில் பெண்கள் தங்கிவிடுகிறார்கள். இவர்களுக்கு விடுதிகள் பரிந்துரை பெரும்பாலும், அவர்களின் அலுவலகத்தில் ஏற்கனவே விடுதியில் இருந்து தங்கி வேலை பார்க்கும் ஒருவர் மூலமாக கிடைக்கப் பெறுவது வாடிக்கையான ஒன்று.

Hidden Camera in Ladies Hostel, தங்கும் விடுதிகளில் ரகசிய கேமராக்கள்

தனியார் விடுதிகளில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கின்றார்களா ?

பெண்கள் பாதுகாப்பாக இருக்கின்றார்களா என்பதை விட, ஒரு தனி மனிதன் தன்னுடைய Privacy க்கு களங்கம் வராத வகையில் பாதுகாப்பானதாய் இருக்கின்றதா தனியார் தங்கும் விடுதிகள் ? நமக்குத் தெரியாது. ஒரு பிரச்சனை அல்லது ஒரு அசம்பாவிதம் நடக்கும் வரையில் இது போன்ற கேள்விகள் நம்முள் எழுவதில்லை.

சென்னை ஆதம்பாக்கத்தில் விடுதி ஒன்றை நடத்தி வந்த உரிமையாளர், பெண்களின் குளியலறை மற்றும் ஸ்விட்ச் போர்ட்கள், சீலிங் போன்ற இடங்களில் ரகசிய கேமராக்களை பொருத்தி வைத்திருப்பது மிக சமீபமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரை காவல் துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

சென்னை ஆட்சியர் அதன் பின்பு ஒரு உத்தரவு ஒன்றினையும் அதில் 15 முக்கியமான கட்டளைகளையும் அறிவித்திருக்கிறார். முறையான உரிமம் பெறாமல் பெண்கள் மற்றும் சிறார்களுக்கான விடுதிகளை நடத்தும் உரிமையாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தங்கும் விடுதிகளை எப்படி தேர்வு செய்வது ?

போக்குவரத்து வசதி, உணவு, கட்டணம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு விடுதியை தேர்ந்தெடுப்பதும் நிராகரிப்பதும் அவரவர் பொருளாதார சூழல் சார்ந்தது. ஆனால் பாதுகாப்பான விடுதிகளை எப்படி தேர்வு செய்வது ?

1. அனைத்து  வசதிகளுடன் கூடிய விடுதி என்றால், விடுதியின் காப்பாளர் மற்றும் உரிமையாளர் பற்றி முழுமையான தகவல்கள் பற்றி அக்கம் பக்கம் விசாரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

2. விடுதியின் உரிமையாளர், பேச்சு வார்த்தை ஆகியவை எல்லை மீறிப் போகிறதா என்று யூகிக்க கற்றுக் கொள்ளுங்கள். தோழமையான அணுகுமுறை என்று நினைத்த அனைத்தையும் அவர்கள் பேசினால் கொஞ்சம் நிதானித்து வேறு விடுதியை பார்ப்பது நலம்.

3. உங்களின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் தங்கியிருக்கும் விடுதிகளை தேர்வு செய்வது நலம். அல்லது அவர்கள் தங்கியிருக்கும் விடுதிகள் அல்லது வீடுகளுக்கு அருகிலேயே விடுதியை தேர்ந்தெடுப்பதும் கூட நலம். ஏதாவது பிரச்சனை என்றாலோ, பாதுகாப்பு சூழல் வேண்டியோ அவர்களின் உதவியை நாடுவதற்கு மிகவும் எளிதானதாக இருக்கும்.

4. நீங்கள் தங்கியிருக்கும் விடுதி பற்றி அருகில் இருப்பவர்கள் என்ன பேசுகின்றார்கள் என்பதையும் நீங்கள் விசாரிப்பது நலம்.

5. கூடுமான வரையில் தனிமையில் இருப்பதை தவிர்த்துவிடுங்கள். இரண்டு அல்லது மூன்று பெண்களுடன் ஒரு விடுதி அறையையோ அல்லது வீட்டினையோ தேர்வு செய்வது உங்களின் பாதுகாப்பினை  உறுதி செய்யும்.

6. ஹிட்டன் கேமரா டிடெக்டர் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து ஆன் செய்தால், செல்போனில் உள்ள கேமரா மூலம் வீடியோ தானாக செயல்பட ஆரம்பிக்கும். அறை முழுவதும் வீடியோ எடுக்கும் போது, எங்காவது கேமரா பொருத்தப்பட்டிருந்தால் உங்களின் போன் பீப் ஒலி எழுப்பும்.

7. எலக்ட்ரானிக் கடைகளில் கிடைக்கும் டிடெக்டர்கள் பயன்படுத்தியும் நீங்கள் இந்த சோதனையை மேற்கொள்ளலாம்.

8. உங்களின் அறைக்கு விடுதியில்  தரும் பூட்டுகளுக்குப் பதிலாக நீங்கள் மாற்று பூட்டுகளையும் பயன்படுத்துவது நலம். சாவிகளை உங்களுடன் அறையை பகிர்ந்து கொள்ளும் நண்பர்களிடம் மட்டும்  கொடுங்கள்.

9. விடுதியில் ஏதாவது பிரச்சனை, லைட் அல்லது ஸ்விட்ச் போர்ட் போன்றவை மாற்றப்பட வேண்டும் என்றால் ஞாயிற்றுக் கிழமைகளில் மாற்றச் சொல்லுங்கள். நீங்கள் அல்லது உங்களின் நண்பர்கள் முன்னிலையில் வேலைகள் நடத்தப்படும் போது இந்த பிரச்சனைகள் தவிர்க்கப்படலாம்.

10. நிறைய பேர் தங்கியிருக்கும் விடுதிகளா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். நிறைய பேர் இருக்கும் போது அந்த விடுதியின் நம்பகத்தன்மை அதிகம் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

11. உங்களின் பெற்றோர்களை உள்ளே அனுமதிக்கும் விடுதிகளா என்று கேட்டுக் கொள்ளுங்கள். இங்கு பல இடங்களில் பெற்றோர்களைக் கூட விடுதிகளில் அனுமதிப்பதில்லை விடுதி உரிமையாளர்கள்.

12. அனைத்திற்கும் மேலாக, உங்களின் விடுதி முறையான உரிமம் பெற்று நடத்தப்படுகிறதா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.

பிரச்சனைகள் எங்கும் நடக்கலாம். அந்த சவால்கள் அனைத்தையும் சமாளித்து முன்னேறும் மனத்திடத்துடன் இருங்கள்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment