/tamil-ie/media/media_files/uploads/2017/11/nellai-suside.jpg)
பி.கண்ணப்பன் ஐபிஎஸ்
தமிழ் நாட்டைத் தற்போது உலுக்கிக் கொண்டிருப்பது, சமீபத்தில் நிகழ்ந்த கந்து வட்டி மரணங்கள். கந்து வட்டி கொடுமைகளும், அதைத் தொடந்து மரணங்களும் ஏதோ இப்போதுதான் அதிகரித்திருப்பதாக கருத முடியாது. இது போன்ற சம்பவங்கள் அவ்வப்பொழுது நிகழ்வதும் அதைத் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுப்பதும், பின்னர் காலப்போக்கில் கந்துவட்டிக்காரர்கள் மீதான நடவடிக்கைகளில் தொய்வு ஏற்படுவதும் வாடிக்கையான நிகழ்வுகளாக உள்ளன.
ஒரு மாவட்டத்தில் திறமையான அதிகாரி பணியில் இருக்கும் பொழுது, கந்துவட்டி உள்ளிட்ட சமூகக் குற்றங்கள் மீது தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அவர் மாறுதலில் சென்ற பின்னர் அவரைத் தொடர்ந்து வரும் அதிகாரிகள் அந்த குற்றங்கள் மீது அதிகக் கவனம் செலுத்தாமல் இருந்தால், அந்த சமூகப் பிரச்னைகள் மீண்டும் வீரியத்துடன் தலையெடுக்க ஆரம்பித்துவிடுகிறது.
கந்துவட்டி கொடுமையின் காரணமாக இரண்டு குழந்தைகள் உள்பட 4 பேர் அடங்கிய ஒரு குடும்பம் அவர்களது உயிரை மாய்த்துக் கொண்ட கொடூர சம்பவம் சமீபத்தில் திருநெல்வேலியில் நடந்துள்ளது. அதைத் தொடர்ந்து, திரைப்படத்துறையைச் சார்ந்த அசோக்குமார் என்பவரும் கந்துவட்டி காரணமாகத் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். தற்பொழுது கந்துவட்டிகாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவிப்புகள் வருகின்றன. இது குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இத்துடன் கந்துவட்டி மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
எந்த ஒரு சமூகப் பிரச்னையாக இருந்தாலும், அதை மேலோட்டமாகப் பார்க்காமல், அதன் ஆழத்தைப் பார்க்க வேண்டும். அதன் வேர்கள் எங்கெங்கு பறந்து விரிந்துள்ளது என்பதை கண்டறிந்து, அதற்கேற்றவாறு நடவடிக்கை எடுத்தால்தான் முழுமையான தீர்வு கிடைக்கும்.
காவல்துறையோ அல்லது நீதிமன்றமோ மட்டும் கந்துவட்டியின் கொடுமைகளையும் அதன் விளைவாக நிகழும் மரணங்களையும் முழுமையாகத் தடுத்துவிட முடியாது. ஆனால் காவல்துறையும் நீதிமன்றங்களும் கந்துவட்டி தொடர்பான குற்றங்கள் தங்களது கொடுஞ்சிறகுகளை விரித்து, சமுதாயத்தில் பரவாமல் ஓரளவுக்குத் தடுக்க முடியும். அப்படியானால், அக்குற்றங்களை எப்படி வேரறுக்க முடியும்?
ஏழை எளிய மக்களுக்கும், நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்களில் ஒரு பகுதியினருக்கும் பல சந்தர்ப்பங்களில் அவசரத்தேவைகளுக்குப் பணம் கொடுத்து உதவ முன் வருபவர்கள் கந்துவட்டிக்காரர்கள் என்பதுதான் இன்றைய யதார்த்த நிலை. திடீரென ஏற்படும் மருத்துவ செலவுகள் உள்ளிட்ட குடும்பச் செலவுகளுக்கு, அம்மக்கள் உடனடியாக நாடிச் செல்லும் இடம் கந்துவட்டிக்காரர்கள்தான். அதே போன்று, தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்பவர்களும், சிறு சிறு தொழில் செய்பவர்களும் கந்துவட்டிக்காரர்களின் வாடிக்கையாளர்கள்தான்.
கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வகையான வங்கிகள் மற்றும் மைக்ரோ பைனான்ஸ் என பல நிதி அமைப்புகள் நம் நாட்டில் இருந்தாலும், பல சமயங்களில் அவை ஏழை எளிய மற்றும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மக்களின் அன்றாட அவசர, அவசிய தேவைகளை எளிதில் பூர்த்தி செய்வதில்லை என்பதை மறுக்க முடியாது. இந்த பொருளாதாரப் பிரச்னைக்கான தீர்வுகள் பல கூறப்பட்டாலும், சமுதாய வாழ்வியல் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றமும் ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
’உன்னுடைய அன்றாட வேலையைக் கவனிக்க சைக்கிள் உனக்கு போதுமே. கடன் வாங்கி, மோட்டார் சைக்கிள் ஏன் வாங்க வேண்டும்? அப்படி வாங்கும் கடனை உன்னால் எப்படி அடைக்க முடியும்? கடனை அடைக்காவிட்டால் அது உன் குடும்பத்தில் என்னென்ன பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று யோசனை செய்தாயா?’ என்று மோட்டார் சைக்கிள் வாங்கத் துடிக்கும் ஒரு நடுத்தர வகுப்பைச் சார்ந்த ஒரு நபரிடம் இடித்துரைக்கும் குணம் கொண்ட நண்பர்கள் உறவினர்கள் எத்தனை பேர் தற்பொழுது இருக்கிறார்கள்.
’கடன் வாங்கி மோட்டார் சைக்கிள் வாங்குவதும், வாங்காததும் அவரவர் சொந்த விருப்பம். அதில் நாம் ஏன் தலையிட்டு, கெட்ட பெயர் சம்பாதிக்க வேண்டும்’ - என்ற உணர்வுதான் பெரும்பாலானவர்களிடம் வெளிப்படுவதை நாம் காண முடிகிறது.
ஒருவர் தான் சம்பாதிக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை குடும்பச் செலவுக்கும், ஒரு பகுதியை மருத்துவச் செலவுக்கும், ஒரு பகுதியை வருங்காலத்திற்கான சேமிப்பு என்றும், கணக்கிட்டு, கடன் வாங்காமல் வாழ வேண்டும் என்று எத்தனை பேர்கள் தற்பொழுது எண்ணுகிறார்கள்?
வங்கிகளும், நிதி நிறுவனங்களும் அனைத்து தரப்பு மக்களையும் கடன் வாங்க ஆசை வார்த்தை காட்டி, ஊக்கப்படுத்துவதை இன்று நாம் காண முடிகிறது. ஆனால் வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்று அந்த நிதி நிறுவனங்கள் முழுமையான யோசனை கூறுவதில்லை.
கடந்த கால சமுதாய வாழ்வியல் முறை பல அரிய பாடங்களை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. ஒருவரின் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாகவோ, அல்லது திடீரென ஏற்பட்ட மருத்துவச் செலவு காரணமாகவோ, ஒரு நபர் கடன் தொல்லைக்கு ஆட்பட்டால், அவரைக் கடன் சுமையிலிருந்து மீட்க சமுதாயத்தில் சில நியதிகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளன. அவைகளில் ஒன்று ‘சோத்து மொய்’ என்ற பழக்கம். அதாவது, கடன் சுமையில் பாதிக்கப்பட்டவர் அவரது உறவினர்களையும், நண்பர்களையும் வரவழைத்து விருந்து கொடுப்பார். விருந்து உண்டவர்கள் அவரவர் தகுதிக்கு ஏற்ப மொய் பணத்தை விருந்து படைத்தவருக்குக் கொடுத்துவிட்டு செல்வார்கள். கடனை அடைத்து புதியதொரு வாழ்க்கையைத் தொடங்க அவ்வாறு கிடைத்த மொய் பணம் பயன்படுத்தப்படும். இது போன்று, நல்ல பழக்கங்கள் காலப்போக்கில் மறையத் தொடங்கிவிட்டன.
ஏட்டுக் கல்வி பெருகியுள்ள இன்றைய சமுதாயத்தில், பெருபாலானோர் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையில் இருந்து விலகி, தனித்து வாழத் தொடங்கிவிட்டனர். சுக, துக்க காரியங்களுக்காக மட்டும் சந்தித்து, குடும்ப நலம் விசாரிக்கும் நிலையில் உறவினர்கள் என்ற பாதுகாப்பு வளையம் சுருங்கிவிட்டது.
ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் தொழில் சார்ந்த தேவைகளுக்கான நிதியுதவி எளிதில் கிடைக்கும் வகையில் தற்பொழுது உள்ள நிதி அமைப்புகள் செயல்பட்டால், அம்மக்கள் கந்துவட்டிக்காரர்களை நாடிச் சென்று, அவர்களின் பிடியில் சிக்காமல் வாழ்க்கை நடத்த பெரிதும் துணைபுரியும்.
அதே சமயம், கந்துவட்டிக்காரர்கள் மீதான சட்டரீதியான தொடர் நடவடிக்கையும் கடுமையாக்கப் பட வேண்டிய அவசிய சூழல் தற்பொழுது ஏற்பட்டுள்ளது.
(கட்டுரையாளர் பி.கண்ணப்பன் ஐபிஎஸ், தமிழக காவல்துறை தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தனது பணியின் மூன்றில் இரண்டு பங்கு காலகட்டத்தை தென் மாவட்டங்களில் கடந்தவர்)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.