Advertisment

இந்தியாவின் மின் துறை அதிர்ச்சியை தடுப்பது எப்படி?

ஷாலு அகர்வால் மற்றும் கார்த்திக் கணேசன் : அனல் மின் நிலையங்களின் செயல்திறனை அதிகரிக்க வேண்டும் மற்றும் இழப்பைக் குறைக்க ஒழுங்குமுறை ஆணயங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

author-image
WebDesk
New Update
இந்தியாவின் மின் துறை அதிர்ச்சியை தடுப்பது எப்படி?

மின் உற்பத்தி நிலையங்களில் கடந்த ஆண்டு அக்டோபரில்,நிலக்கரி இருப்பு குறைவாக இருந்ததால் கணிசமான அளவு மின் பற்றாக்குறையை இந்தியா எதிர்கொண்டது. ஏழு மாதங்களுக்குப் பிறகு, மாநிலங்கள் முழுவதும் நிலக்கரி பற்றாக்குறையால் மின்வெட்டு நேரிடுங்கின்றன என்ற செய்திகளால் மறுபடியும் முதலில் இருந்து தொடங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.  ஒருபுறம், சந்தையில் விலையுயர்ந்த நிலக்கரி மற்றும் மின்சாரம் வாங்குவதற்கான அவசரத்தில் உள்ளோம்.  மறுபுறம், ஆந்திரா மற்றும் குஜராத் போன்ற மாநில அரசுகள் மின் பற்றாக்குறையை சமாளிக்க நுகர்வை  குறைக்கும்படி தொழிற்சாலைகளை கேட்டுக் கொண்டுள்ளன. கோவிட் பெருந்தொற்று ஊரடங்கு காலத்துக்குப் பிறகு பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டதால், நிலக்கரி போன்ற பொருட்களுக்கான தேவைக்கும்-விநியோகத்துக்குமான இடைவெளி உலகளவில் அதிகரித்து, விலை உயர்வுக்கு வழிவகுத்தது. புவிசார் அரசியல் பதட்டங்கள் தற்போதுள்ள நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளன. இதுபோன்ற மு்ன் எப்போதும் இல்லாத ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், எதிர்கால அதிர்ச்சிகளுக்கு இந்திய மின் துறை எவ்வாறு மிகவும் நெகிழ்ச்சியுடன் இருக்க முடியும்?

Advertisment

ரஷ்யா-உக்ரைன் மோதல் காரணமாக உலகளாவிய விநியோகத் தடைகளால் நிலக்கரி விலை வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டன. கடந்த ஆண்டை விட 2022-23 நிதியாண்டில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலை 35 சதவீதம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, உள்நாட்டில் உடனடி விநியோக  சந்தையில் நிலக்கரி விநியோகத்தைப் பாதுகாக்க மின் உற்பத்தியாளர்கள் மார்ச் மாதத்தில் 300 சதவிகிதம் வரை பிரீமியம் செலுத்தினர்.

மாநில அனல் மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு  வீழ்ச்சியடைந்தாலும், பருவநிலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வெப்பமான நாட்கள் காரணமாகவும் மார்ச் மாதத்தில் இந்தியாவின் எரிசக்தி தேவையானது திடீரென அதிகரித்தது.  மார்ச் மாத த்தின் மையப்பகுதியில் உச்ச மின் தேவை என்பது 199 GW ஆக உயர்ந்தது. கடந்த ஆண்டுகளின் கணிக்கப்பட்ட போக்குகளை விடவும் மார்ச் கடைசி வாரத்தில் மின் தேவை 13 சதவிகிதம் அதிகமாக இருந்தது, மின்சார சந்தையில் அதிக மின்சார விலையும் சேர்ந்தது. இதனால் மின் விநியோக நிறுவனங்கள் (டிஸ்காம்கள்),  விலையுயர்ந்த மின்சாரத்தை வாங்குதல் அல்லது  வருவாய் மீட்பு அல்லது மின் விநியோகத்தில் நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்ளுதல் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன.  .பல மாநிலங்கள் செய்வது போல, மின் விநியோகத்தை பகிரிந்து கொள்ள  வேண்டும்.

இந்த நெருக்கடியை போக்க மின்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கைவசம் உள்ள சுரங்கங்களில் நிலக்கரியின் அதிகபட்ச உற்பத்தியை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்குதல், மின்சாரம் அல்லாத துறைகளுக்கு நிலக்கரி விநியோகத்தை கட்டுப்படுத்துதல்  மற்றும் சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் மின்சாரத்தின் மீது யூனிட்டுக்கு ரூ.12 விலை வரம்பு நிர்ணயம் செய்தல் ஆகியவை அடங்கும். ஆனால் புற காரணிகளால் நேரிடும் இத்தகைய இடையூறுகளுக்கு துறையின் பின்னடைவை மேம்படுத்த நாம் கூடுதலாக இன்னும் அதிகமாக செயல்பட வேண்டும்.

முதலில், மின் உற்பத்தி நிலையங்கள் திறம்பட செயல்படுவதை உறுதிசெய்ய சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படும் அமைப்பை உருவாக்குவதை உறுதி செய்ய வேண்டும். . இந்தியாவில் சுமார் 200 ஜிகாவாட் நிலக்கரி அடிப்படையிலான உற்பத்தி திறன் உள்ளது, இது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் கிட்டத்தட்ட 70 சதவிகிதம் ஆகும். இருப்பினும், (CEEW) ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் மதிப்பீட்டின்படி, உற்பத்தியின் விகிதாசாரப் பங்கு பழைய திறனற்ற ஆலைகளில் இருந்து வருகிறது, அதே சமயம் புதிய மற்றும் திறமையான சாதகமான நிலக்கரி விநியோக ஒப்பந்தங்கள் அல்லது மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் தேவையில்லாமல் செயலற்ற நிலையில் உள்ளன. எரிபொருள் ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்வது மற்றும் திறமையான ஆலைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் அனுப்புவதை மேற்கொள்ளுதல் ஆகியவற்றால் ஆண்டு நிலக்கரித் தேவையில் 6 சதவிகிதம் வரை  இந்தியா குறைக்க முடியும்.  மேலும் மழை நாளுக்கு அதிக நிலக்கரியை ஒதுக்கீடு செய்யலாம். .

இரண்டாவதாக, மின் விநியோக நிறுவனங்களில் ஸ்மார்ட் மதிப்பீடு மற்றும் தேவையை நிர்வகிக்கும் முறையை செயல்படுத்த வேண்டும். நம்மிடம்  நடுத்தர மற்றும் குறுகிய கால தேவை முன்னேற்பாட்டுக்கான மேம்பட்ட கருவிகள் உள்ளன. இருப்பினும், சில மின் விநியோக நிறுவனங்கள் தங்கள் கொள்முதல் முடிவுகளைத் தெரிவிக்க இந்த வழியை மேற்கொண்டன.  90 சதவிகிதத்துக்கும் அதிகமான மின்சாரம் நீண்ட கால ஒப்பந்தங்கள் மூலம் வாங்கப்படுவதால், மின் விநியோக நிறுவனங்கள் ஆற்றல்மிக்க மதிப்பீடு மற்றும்  நிர்வகிப்பதற்கும் சிறிய ஊக்கத்தைக் கொண்டிருக்கின்றன. நாள் நேர விலை நிர்ணயம் மற்றும் திறமையான நுகர்வு நடத்தையை மேம்படுத்துதல் ஆகியவை உச்ச தேவையை குறைக்க உதவும் மற்றும் சந்தையில் பீதி ஏற்படுவதை தவிர்க்க உதவும்.

மூன்றாவதாக, மின் விநியோக நிறுவனங்களின் இழப்புகளைக் குறைக்க மின்சார ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு அதிகாரம் அளிப்பது. இருபது ஆண்டுகளாக துறைசார் சீர்திருத்தங்கள் இருந்தபோதிலும், மின் விநியோக நிறுவனங்களின் மொத்த இழப்புகள் 21 சதவிகிதமாக உள்ளது (2019-20). இவை செயல்பாட்டின் திறமையின்மை மற்றும்  மாநில அரசாங்கங்கள் மற்றும் நகராட்சி அமைப்புகள் உள்ளிட்ட நுகர்வோரிடமிருந்து நிலுவைத் தொகையை பெறுவதில் மோசமான நிலை ஆகிய இரண்டையும் பிரதிபலிக்கிறது. மின் விநியோக நிறுவனங்கள் உற்பத்தியாளர்களுக்கு உரிய நேரத்தில் பணம் செலுத்த முடியாமல் போனதற்கும் இந்த இழப்புகளே காரணம், இதனால் நிலக்கரி இந்தியா நிறுவனத்திற்கு பணம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், தேவையிருக்கும் போது நிலக்கரியை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது.  ஸ்மார்ட் மீட்டர்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் போன்ற தொடர் முயற்சிகள் தவிர, மின்சாரத் துறையின் விநியோகச் சங்கிலி முழுவதும் நிதி ஆதாரம் வழங்குவதை ஊக்குவிப்பதற்கும், செலவு மீட்பை ஒரு முக்கிய அளவீடாக வைத்திருப்பதற்கும் ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு அதிகாரம் அளிப்பதும்  முக்கியமானதாக இருக்கும்.

நாட்டின் வளர்ச்சி அபிலாஷைகளின் அடிப்படையில், இந்தியாவின் மின் தேவை கணிசமாக உயரும்,  மேலும் மாறக்கூடியதாகவும் உள்ளது. அதிகரித்துவரும் காலநிலை, புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் ஆகியவை நாம் ஆற்றலை உருவாக்குவது, விநியோகிப்பது, நுகர்வது போன்றவற்றில் மிகவும் திறமையானதாக மாற வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இந்திய மின் துறையின் நீண்ட கால மீள்திறனுக்காக நாம் இப்போது செயல்பட வேண்டும்

இந்த கட்டுரை முதன்முதலில் அச்சுப் பதிப்பில் ஏப்ரல் 29ம் தேதியன்று 'Shock-proofing power’ என்ற தலைப்பில் வெளிவந்தது. அகர்வால் ஒரு மூத்த  திட்டத் தலைவராகவும், கணேசன் டெல்லியில் உள்ள எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் (CEEW) கவுன்சிலில் இயக்குநராகவும் உள்ளார்.

தமிழில்; ரமணி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment