scorecardresearch

LGBT : உங்கள் குழந்தைகளின் பாலினத் தேர்வினை மதித்து செயல்படுங்கள்

குடும்பத்தினர் குழந்தைகளிடம் “ஆண் – பெண்” என்ற பாலினத் தேர்வு மட்டுமே இருப்பதாக ஒரு பிரம்மையை உருவாக்காதீர்கள்.

LGBT : உங்கள் குழந்தைகளின் பாலினத் தேர்வினை மதித்து செயல்படுங்கள்
LGBT parenting

கேஷவ் சூரி

எதிர்பாலினத்தவர் மீதான காதலை வெளிப்படுத்துவதிலேயே நம் வீடுகளில் பலவிதமான சிக்கல்கள் இருக்கின்றன. சாதி, மதம், சமுதாய அந்தஸ்து ஆகியவற்றை காரணம் காட்டி குடும்பத்தினர் தங்கள் பிள்ளைகளின் தேர்வுகளை தட்டிக் கழித்துவிடுகிறார்கள்.

எதிர்பாலினத்தவர் மீதான காதலுக்கே இந்நிலை என்று வருகையில், தன்பாலின ஈர்ப்பு மற்றும் ஓரினச் சேர்க்கை தேர்வுகள் என்று வரும் போது நிலை இன்னும் மோசமகிவிடுகிறது.

பாலினம் மற்றும் பாலியல் சார்ந்த புரிதல்கள் மற்றும் பேச்சுகள் இன்றளவும் நம் சமூகத்தில் ரகசியம் என்றும், வெளிப்படையாக பேசுதல் தவறு என்றும் தொடர்ந்து கற்பிக்கப்பட்டு வருகின்றோம். பெற்றோர்களாக நாம் நம் பிள்ளைகளுக்கு இதனையே கற்பிக்கின்றோம்.

வெளிப்படையாக தனக்கு இது பிடித்திருக்கிறது. இவனை/ளை பிடித்திருக்கிறது என்று பேசக் கூடிய அளவிற்கு ஒரு சூழ்நிலையை உருவாக்கித் தருவது தான் நாம் நம்முடைய அடுத்த தலைமுறையினருக்கு செய்யும் நல்ல விஷயம்.

குடும்பத்தினரின் புரிதல்

குழந்தைகள், குடும்பத்தில் இருந்து தான் அனைத்தையும் கற்றுக் கொள்கிறார்கள். அவர்களின் விருப்பத்திற்கு எப்போதும், ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வுகள் இருப்பதை அவர்கள் உணர வேண்டும். ஆண் குழந்தைகளை வெளியில் விளையாட அனுப்பவதும், பெண் குழந்தைகளை கண்ணாடி முன்னுறுத்தி அழகு பார்ப்பதும் மட்டுமே அவர்களுக்கான தேர்வுகள் என்று ஒரு முன் முடிவுடன் செயல்படாதீர்கள். அவர்களுக்கு அங்கு ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வுகள் இருக்கின்றன என்பதை புரியவைத்தால், அவர்கள் தங்கள் மனதில் தோன்றுவதை வெளிப்படையாக பேசுவார்கள். நாளை அவர்களின் பாலினத் தேர்வு பற்றியும் சுதந்திரமாக பேசுவார்கள்.

தன்பாலின ஈர்ப்பு என்பது எதிர்பாலின ஈர்ப்பினைப் போல் இயற்கையானது தான். இந்த தேர்வினை குழந்தைகள் பல்வேறு குடும்ப சூழலுக்கு மத்தியில் தேர்ந்தெடுப்பதும் நிகழ்கிறது. பிறப்பில் இருந்தும் கூட இப்படியாக இருக்கலாம்.

பொதுவாக பள்ளிகளில் கொஞ்சம் தயங்கித் தயங்கி பெண்களுக்கான தன்மையுடன் விளங்கும் ஆண் குழந்தைகளைத் தான் அவர்களின் நண்பர்கள் சண்டைக்கு இழுப்பார்கள். இங்கு தான் பெற்றவர்கள் அவர்களை நன்கு கவனித்து புரிந்து கொள்ள வேண்டும். அக்குழந்தைகளுக்கு பெற்றவர்களின் ஆதரவு மிகவும் முக்கியமானது. நானும் அப்படியான ஒரு குழந்தையாகத் தான் இருந்தேன்.

பள்ளி நாடங்களில் நான் எப்போதும் பெண் கதாப்பாத்திரத்தினை ஏற்று நடிப்பதைக் கண்டு என்னுடைய நண்பர்கள் என்னை அடிக்கடி கேலி செய்வார்கள். அதனை அவ்வளவு எளிமையாக கடந்துவிட்டேன் என்று கூறினால் அது பொய்தான். நான் யார் என்ற புரிதல் வரும் வரை எனக்கு அனைத்தும் கஷ்டமாகவே இருந்தது.

வெளிப்படையான கருத்துப் பரிமாற்றம்: 

தன்னைப்பற்றிய புரிதல் என்பது எளிது. ஆனால் அதற்கான அங்கீகாரம் என்பது தான் கடினமானது. வாழ்க்கையை மாற்றும் தன்னைப் பற்றிய புரிதலுக்கான பயணத்தை தனியாக மேற்கொள்வது அவ்வளவு கடினம். குடும்பத்தினர், தங்கள் குழந்தைகளிடம் “ஆண் – பெண்” என்ற பாலின தேர்வு மட்டுமே இருப்பதாக கூறி ஒரு பிரம்மையை உருவாக்காதீர்கள். அவர்களிடம் தன் பாலின ஈர்ப்பு மனிதர்கள் பற்றியும், திருநங்கை, திருநம்பி, பல்பாலியல் ஈர்ப்பு பற்றியும் வெளிப்படையாக பேசுங்கள். மேலும் அவர்களின் முடிவுகளுக்கு மதிப்பளிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

எந்த ஒரு மனிதனுக்கும் தன் பாலியல் ரீதியான புரிதல்களை தெரிந்து கொள்ள கால அவகாசம் தேவைப்படும். மேலும், கோபம், ஓய்வற்ற தன்மை, தற்கொலை செய்ய எத்தனித்தல் போன்றவைகள் தன்னைப் பற்றிய புரிதல்கள் ஏற்பட்ட பின் தோன்றுவது இயல்பு. இது போன்ற சூழலில் பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு தூண்களாக இருந்து ஆதரவு அளிக்க வேண்டும். இத்துறை சார்ந்த மனநல ஆலோசகர்கள் மற்றும் மருத்துவர்கள் மிகவும் குறைவு. இது போன்ற சூழலில் நம்பிக்கை மிக்கவர்களின் உதவியை பெற்றவர்கள் நாடுவது நலம். ஒரு நல்ல தோழனாக இருந்து அவர்களுக்கான பாதையை வழிகாட்டுங்கள் என்பது தான் உங்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கும் ஒரே ஒரு உதவி.

தன்பாலின ஈர்ப்பு செயல்பாட்டாளார் மற்றும் லலித் சூரி ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனத்தின் தலைமை அதிகாரி கேஷவ் சூரி எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.

தமிழில் நித்யா பாண்டியன்

Stay updated with the latest news headlines and all the latest Opinion news download Indian Express Tamil App.

Web Title: How to start a conversation on lgbtqi issues at home keshav suri has answers