அசுர வேகமா? அரக்க வேகமா?

பண மதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி என அடுத்தடுத்து மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் மக்களை எப்படி பாதிக்கிறது என்பதை விளக்குகிறார், இரா.குமார்

இரா.குமார்

அதிகம் பேசுகிறார். விழாக்களில் பங்கேற்கிறார். வருடத்தின் பாதி நாட்கள் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்கிறார். யார்? பிரதமர் மோடிதான்.

முன்பு பிரதமராக இருந்த மன்மோகன் சிங் பேசவேமாட்டார். கூட்டணி ஆட்சிக்குத் தலைமை ஏற்றதால், சிலவற்றைக் கட்டுப்படுத்த இயலவில்லை. செயல்படாத பிரதமர் என்று பெயர் வாங்கினார்.

ஒரு வலிமையான தலைமை தேவை என மக்கள் விரும்பினார். தன்னை ஒரு வலிமையான தலைவராக மோடி காட்டிக்கொண்டார். மீடியாக்களும் மோடியைக் கொண்டாடத் தொடங்கின. அவரை பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவித்தது.

கறுப்புப் பணம் முழுவதையும் மீட்டு, மக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்று கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளிவிட்டார், மோடி. இதனாலேயே, மோடியை நம்பி, அவருக்காகவே பாஜகவுக்கு மக்கள் வாக்களித்தனர். பாஜகவினரே எதிர்பார்க்காத வகையில் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்தது அக்கட்சி. மோடி பிரதமர் ஆனார். இந்தியாவில், பேசியே ஆட்சியைப் பிடித்தவர்கள் யார் என்று கேட்டால், முதலில் திமுக. இரண்டாவது மோடி.

மோடி பிரதமர் ஆகி மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டன. அடுத்தடுத்து பல திட்டங்களை அறிவிக்கிறார். அதிரடி நடவடிக்கைகளை எடுக்கிறார். இவற்றால் மக்கள் பயனடைந்திருக்கிறார்களா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது.

தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்தார். ஒரு வாரம் ஊர் ஊராகப் போய் கூட்டிப் பெருக்கினார். இந்த திட்டம் பற்றி விளம்பரம் செய்ய பல நூறு கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. விளைவு என்ன? என் தெரு, ஊர், மாநிலம் முன்பு எப்படி இருந்ததோ அப்படியேதான் இருக்கிறது. சரி மற்ற மாநிலங்களாவது தூய்மையாகிவிட்டதா என்றால், அதுவும் இல்லை.

கறுப்புப் பணத்தை ஒழிக்கப் போகிறேன் என்று சொல்லி, அதிரடியாக பண மதிப்பு இழப்பு அறிவிப்பை வெளியிட்டார். 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். 50 நாட்கள் பொறுங்கள், பிறகு என்னைக் கேளுங்கள் என்று வாக்குறுதி அளித்தார். வங்கிகளிலும் ஏடிஎம் வாசல்களிலும் மக்கள் வரிசையில் நின்று காத்துக்கிடந்தனர். நாட்டுக்காக கஷ்டத்தைத் தாங்கிக் கொள்ளுங்கள் என்றார்.

தாங்கிக்கொண்டோம். பயன் என்ன?

நாட்டின் பொருளாதாரம் உயர்ந்ததா? இல்லை. மாறாக, ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்துள்ளது. 70 லட்சம் கோடி கறுப்புப் பணத்தில் 10 சதவீதமாவது மீட்கப்பட்டதா? இல்லை. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு உயர்ந்ததா? இல்லை. விலைவாசி குறைந்ததா? இல்லை. எகிறிக்கொண்டுள்ளது. மொத்தத்தில் மக்கள் கஷ்டப்பட்டதுதான் மிச்சம். பணமதிப்பு இழப்புத் திட்டம் முழு தோல்வி என்றுதான் சொல்ல வேண்டும்.

50 நாட்கள் பொறுங்கள் என்றார் மோடி. 250 நாட்கள் ஆகிவிட்டன். இந்தப் பிரச்னை பற்றி எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு நாடாளுமன்றத்தில் கூட பதில் சொல்லவில்லை. நாடாளுமன்றத்துக்கு வராமலே நழுவிவிட்டார். மூன்று ஆண்டுகளில் ஒருமுறைகூட பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியதில்லை.

இப்போது ஜிஎஸ்டி அமல். இந்த திட்டம் சிறப்பானது. இனி யாருமே வரி ஏமாற்ற முடியாது என்று கூறுகிறது மத்திய அரசு. நல்ல விஷயம். நாட்டின் வளர்ச்சிக்கு வரி செலுத்த வேண்டும்தான்.

யாருமே வரி ஏய்ப்பு செய்ய முடியாது என்றால், நாட்டின் வரி வருவாய் பெருமளவு அதிகரிக்கும்தானே. அது போதாதா? பிறகு ஏன் வரியை அதிகரிக்க வேண்டும்?

தமிழகத்தைப் பொருத்தவரை ஓட்டல்களில் 2 சதவீதம் வாட் வரி இருந்தது. இப்போது ஏசி ஓட்டல்களில் 18 சதவீதம் வரி. சாதாரண ஓட்டல்களில் 14 சதவீதம் வரி. வீட்டில் சமைத்துச் சாப்பிடுங்கள் வரி கட்ட வேண்டாம் என்று சொல்கிறார், மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன். மிளகு, சீரகம் போன்ற மளிகைப் பொருட்களுக்கு வரி அதிகரிக்கப்பட்டு விலை கூடிவிட்டதே. மக்களை கசக்கிப் பிழிகிறது ஜிஎஸ்டி வரி.

பணமதிப்பு இழப்பு நடவடிக்கையின்போது கீழ்தட்டு மக்களோ மேல்தட்டு மக்களோ பாதிக்கப்படவில்லை. நடுத்தர மக்கள்தான் வங்கி வாசலில் வரிசையில் காத்துக்கிடந்து அவதிப்பட்டனர். சிலர் உயிரை விட்டனர்.

இப்போது ஜிஎஸ்டி வரியும் அப்படித்தான். கீழ்த்தட்டு மக்களுக்குப் பிரச்னையில்லை. ரோட்டு ஓர கடையில் சாப்பிட்டுவிடுகின்றனர். பணக்காரர்களுக்கு 18 சதவீத வரி செலுத்துவது ஒரு பிரச்னையில்லை. பாதிக்கப்படுவது நடுத்தர வர்க்கம்தான். ஒரு குடும்பத்தில் நான்கு பேர் போய் ஓட்டலில் சாப்பிட்டால் குறைந்தது 72 ரூபாய் வரிகட்ட வேண்டும். ஜிஎஸ்டி வரும் முன்பு 8 ரூபாய்தான் வரி.

உணவுப்பண்டங்களுக்கான மூலப் பொருட்களுக்கு வரி விலக்கு அளித்துள்ளோம். பாலுக்கு வரி கிடையாது. காபித்தூள், சர்க்கரைக்கு வரி விலக்கு. எனவே, காபி விலை குறைய வேண்டும். ஜிஎஸ்டியை காட்டி ஓட்டல்கள் விலை உயர்த்தக் கூடாது என்று மத்திய அரசு தரப்பில் சொல்லப்படுகிறது.

எந்த ஓட்டலிலாவது விலை குறைந்துள்ளதா? இல்லையே. 18 சதவீத வரியால் விலை உயர்ந்துதான் உள்ளது. ஓட்டல்கள் கொள்ளையடிக்கின்றன என்றால் அதைத் தடுக்க வேண்டியது யார் பொறுப்பு? அரசுதானே செய்ய வேண்டும். மாநில அரசின் பொறுப்பு என்று மத்திய அரசு கையைக் காட்டலாம். வரியை உயர்த்தியது மத்திய அரசு. அதனால், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டியதும் மத்திய அரசின் பொறுப்புதான். மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிடலாமே. இட்டதா? இல்லையே.

அரசாங்கம் என்பது மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான். அது லாபம் ஈட்டவேண்டிய கம்பெனி அல்ல. ஆனால் லாபம் ஈட்ட வேண்டிய கம்பெனியின் நிர்வாகி போல மோடி செயல்படுகிறார். எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1.50 குறைத்தபோது, அதன் பயன் மக்களுக்குக் கிடைக்காதபடி வரியை ரூ. 1.50 உயர்த்தி, பறித்துக்கொண்டது மத்திய அரசு.

முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை எடுக்கும்போது, சில பாதிப்புகள் ஏற்படும். அது சீராக சிறிது காலம் ஆகும். அதில் இருந்து மக்கள் மீண்ட பிறகே அடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் எல்லா வியாபாரமும் படுத்துவிட்டது. இப்போதுதான் கொஞ்சம் சீரடையத் தொடங்கியது, அடுத்த அடியாக ஜிஎஸ்டியால் வரி உயர்வு. மூச்சுவிட நேரம் கொடுக்காமல் அடுத்தடுத்து அடி.

அசுர வேகத்தில் செயல்பட்டு சீர்திருத்தம் செய்யலாம் தவறில்லை. ஆனால், மோடியின் நடவடிக்கை அரக்க வேகமாக இருக்கிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Opinion news in Tamil.

×Close
×Close