Advertisment

எதிர்காலத்துக்குள்ளே பயணம்!

யாழ்ப்பாண சிவில் விமானசேவை - இலங்கையின் ’போர் – அமைதி’ பயணத்தின் அடையாளம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
iaf indian peace keep force sri lanka jaffna - எதிர்காலத்துக்குள்ளே பயணம்

iaf indian peace keep force sri lanka jaffna - எதிர்காலத்துக்குள்ளே பயணம்

இலங்கையில், தோல்வியடையும் என முன்னரே கணிக்கப்பட்ட இந்திய அமைதி காக்கும் படை, 1980-களில் எங்கு தன் படைகளை விமானங்களில் கொண்டுபோய் இறக்கியதோ, விடுதலைப்புலிகள் இயக்கத்திடமிருந்த யாழ்ப்பாணத் தீபகற்பத்தை மீட்க இலங்கை விமானப்படை எங்கு பெருமளவு இராணுவத்தினரைக் கொண்டுபோய் குவித்து, பதில் தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் படுகாயமடைந்த ஏராளமான படையினரை (அவர்களில் கணிசமானவர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு வீடுதிரும்பியது தனிக்கதை) விமானங்களில் தூக்கிப்போட்டுக்கொண்டு வந்ததோ, அந்த சிறிய பலாலி இராணுவ விமானதளமானது, மீண்டும் குடிமக்கள் பயன்படுத்தக்கூடிய – யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையமாக ஆக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமாற்றம், பல வழிகளில் ஒரு நீண்ட பயணமாக அமைந்துவிட்டது. போருக்கும் அமைதிக்கும் இடையில் இலங்கை கடந்துவந்துள்ள நெடுந்தொலைவின் அடையாளமாக, பலாலி விமானதளம் ஆகியிருக்கிறது எனலாம்.

Advertisment

போர் முடிந்து பத்து ஆண்டுகள் கடந்துவிட்டநிலையில், யாழ்ப்பாணத்தை உலகின் பல்வேறு நாடுகளுடன் இணைக்கக்கூடிய இடமாக பலாலி விமானநிலையம் மாறியுள்ளது. போர்நடந்த காலப்பகுதியில் உலகளாவிய அளவுக்கு இலங்கைத் தமிழர்கள் புலம்பெயர்ந்தபோதும், அவர்கள் வந்துசெல்லக்கூடிய ஒரே விமானநிலையமாக கொழும்பு விமானநிலையம் மட்டுமே இருந்தது. வடக்கிழங்கையின் இதயம் போன்ற பகுதியின் ஊடாக சீனாவால் அமைத்துத் தரப்பட்ட சாலை, தலைநகர் கொழும்புவையும் யாழ் தீபகற்பத்தையும் இணைப்பதை எளிதாக்கியுள்ளது. யாழ்ப்பாணம்- கொழும்பு இருப்புப்பாதைப் போக்குவரத்தும் மீளக்கொண்டுவரப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், எத்தனையோ ஆண்டுகளாக இவ்விரண்டு நகரங்களுக்கும் இடையிலான விமானப்பயணம் மட்டும் சாதாரணமானதாக இருந்திருக்கவில்லை. ஆங்காங்கே சோதனைச்சாவடிகளில் பெட்டிகளைத் திறந்துகாட்டுவதும் பிறகு அவற்றைப் பூட்டுவதுமே ஒவ்வொரு பயணியும் அனுபவிக்கவேண்டிய மிகச்சிறிய துரதிர்ஷ்டம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பொதுவாக, யாழ்ப்பாணம் போவதற்கு முன்னர் எப்படியும் கொழும்புவில் ஓர் இரவு முழுவதும் தங்கியாகவேண்டும்; அப்போது எந்த நேரத்திலும் விடுதலைப்புலிகளைத் தேடுவதாக விடுதிகளில் அதிரடிசோதனைகள் நடத்தப்படும் என்கிறபடிதான் நிலைமை இருந்தது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ்நாட்டிலிருந்து ஒரு சிவிலியன் விமானம் அங்கு போய் இறங்கியிருக்கிறது. இந்திய – இலங்கை உறவின் கலவையான வரலாற்றை- குறிப்பாக எவ்வளவோ காலமாக தென்மாநிலமான தமிழ்நாடு கொண்டிருக்கும் சிறப்பையும் அது சுமந்துசென்றுள்ளது.

இருதரப்பு உறவானது, தமிழர் பகுதியான வடக்கு இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்குமிடையிலான போக்குவரத்தை நம்பிக்கையோடு அந்நாட்டரசு அனுமதிக்கும் அளவுக்கு மாறியிருக்கிறது. சிங்கள பௌத்தத் தரப்பினருக்கு, வடக்கிலிருந்து தமிழர் படையெடுப்பு நிகழ்ந்துவிடும் எனும் பலதலைமுறை அச்சம் இருக்கத்தான்செய்கிறது. போர்க்காலத்தில் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் மேற்கொண்ட நிலைப்பாடு, இதை மேலும் அதிகரித்தது. இந்த நிலையில் இவ்விமானநிலையத்தை மீளமைப்பு செய்வதற்கு இந்தியாவின் நிதியுதவியை இலங்கை நிராகரித்துவிட்டது. ஆனால், முறைப்படியும் முறையற்ற வகையிலும் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு இந்த விமான இணைப்பு உதவியாக அமையும்.

நீண்ட காலம்கூட இல்லை, அண்மையில்தான், இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையே ஒரு பாலத்தைக் கட்டவேண்டும் என அந்நாட்டுப் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க விருப்பம் தெரிவித்திருந்தார். தீவுநாடான இலங்கையை தெற்காசியாவின் பெருநிலப் பகுதியான இந்தியாவுடன் இன்னும் நெருங்கச்செய்யும் அந்தப் பாலமாக, யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் விளங்கமுடியும்.

தமிழில்: இரா.தமிழ்க்கனல்

Iaf
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment