Advertisment

நீதித்துறையே கலங்கி நின்றால்...?

கர்ணன் எழுப்பிய விதத்திலோ, அவரது நடவடிக்கைகளிலோ தவறு இருக்கலாம். ஆனால், அந்தக் குற்றச்சாட்டை உதாசீனப்படுத்திவிட முடியுமா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நீதித்துறையே கலங்கி நின்றால்...?

சந்திரன்

Advertisment

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு உச்ச நீதிமன்றம் ஆறு மாதம் சிறைத் தண்டனை விதித்திருக்கிறது. அத்துடன் கர்ணனிடம் எந்த ஊடகமும் பேட்டி காணக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் விவகாரம் இத்துடன் நிறைவடைந்து விட்டதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருதியிருப்பார்கள். ஆனால், விவகாரம் இன்னும் முடியவில்லை. காவல்துறையிடம் மாட்டாமல் கர்ணன் இன்று வரையிலும் தலைமறைவாக இருக்கிறார். ‘இதோ... விரைவில் தன்னிடம் சரணடைந்துவிடுவார்’ என்ற தகவலை அடிக்கடி கேட்டுவிட்டதால் காவலர்களும் சலிப்படைந்துவிட்டனர்.

நீதிபதி கர்ணனுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் இடையிலான மோதல் புதிதல்ல. அவர் ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றியபோது, சக நீதிபதிகளுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்தார். தன்னிடம் ஜாதிய அணுகுமுறையுடன் நடந்துள்வதாகக் குற்றம்சாட்டியிருந்தார். அதன் காரணமாக அவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதற்காக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார் கர்ணன். பிறகு, சக நீதிபதிகளின் நடவடிக்கையால் மன அழுத்தத்தில் இருந்ததாக மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

ஆனால், இதையெல்லாம் தாண்டி சில கேள்விகளுக்குப் பொது அரங்கில் பதில் தெரிவிக்கப்பட வேண்டியது அவசியம் என்று தோன்றுகிறது.

நீதிபதி கர்ணன் விவகாரத்துக்குப் பிறகு கடந்த 2009ல் அவரை நீதிபதியாகத் தேர்ந்தெடுத்த கொலீஜியத்தில் இடம்பெற்ற நீதிபதி ஒருவர், வாய் திறந்திருக்கிறார். அதில், கர்ணனை நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கும் வரை அவர் யாரென்றே தங்களுக்குத் தெரியாதென்றும், அவர் குற்றவியல் வழக்கறிஞர் என்று (சிலர் அவரை சிவில் வழக்குரைஞர் என்றும் கூறுகிறார்கள். நீதிபதிகளுக்கே வெளிச்சம்!) ஒரு நீதிபதி சிபாரிசு செய்ததால், ஒப்புக்கொண்டதாகக் கூறுகிறார். ஒரு நபர் யாரென்றே தெரியாமல் அவரை நீதிபதியாகத் தேர்ந்தெடுக்க முடியும் என்றால், நீதித்துறையில் நீதி கிடைக்கும் என்பதை சாமானியர்கள் எப்படி நம்புவது?

கடந்த ஆண்டு நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலீஜியம் முறையை மாற்றியமைக்க மத்திய அரசு முயற்சித்தது. அதை நீதிபதிகள் ஒரே குரலில் எதிர்த்தார்கள். நீதிபதிகளின் நியமனத்தில் அரசு தலையீடு கூடாது, அது நீதித்துறை சம்பந்தப்பட்டது என்று முழங்கினார்கள். நீதிபதிகளின் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை இருந்தால், ஆட்சியாளர்கள் தலையிடத் தேவையே இருக்காதே? அதை ஏன் நீதிபதிகள் யோசிக்கவில்லை.

அதேபோல, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஊழல்கள் குறித்து கர்ணன் குரல் எழுப்பியிருக்கிறார். கர்ணன் எழுப்பிய விதத்திலோ, அவரது நடவடிக்கைகளிலோ தவறு இருக்கலாம். ஆனால், அந்தக் குற்றச்சாட்டை உதாசீனப்படுத்திவிட முடியுமா? அதில் உள்ள உண்மைத்தன்மை ஆராயப்பட வேண்டும் அல்லவா? குறிப்பாக, அருணாசலப் பிரதேச முன்னாள் முதல்வர் கலிகோ புல்லின் மரணத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் அல்லவா?

அதே நேரத்தில், நீதிபதி கர்ணனின் நடவடிக்கைகளும் நீதித்துறையை கேலிக்கூத்தாக்கின என்பதில் சந்தேகமில்லை. ஒருவர் தனக்கு இடமாறுதல் அளிக்கப்பட்டால் முறையிடலாம். ஆனால், சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு மேலதிகார மட்டத்துக்கு தானே தண்டனை வழங்குவது எந்த விதத்தில் சரி?

அதேபோல், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவுப்படி தன்னைக் கைது செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொல்கத்தா காவல்துறையை மிரட்டுகிறார். பதிலுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கிறார். இதையெல்லாம் பார்த்த பிறகு, நீதித்துறையை சாமானியன் தைரியமாக அணுக முடியுமா?

அவர் சரணடைவது நல்லது. தன்னுடைய வழக்கை, குடியரசுத் தலைவரோ அல்லது நாடாளுமன்றமோ மட்டுமே விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளலாம். அதே நேரத்தில், மாறி வரும் கால சூழலுக்கேற்ப நீதிபதிகளும் மனிதர்களே. அவர்களது பிரச்சினைகளைச் சமாளிக்க மக்கள் பிரதிநிதிகள், குடியரசுத் தலைவர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இடம்பெறும் கூட்டு விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். அதேபோல, நீதிமன்றங்களில் நாடாளுமன்றம் தலையீடு கூடாது என்று வறட்டுப் பிடிவாதம் பிடிக்காமல், மக்கள் பிரதிநிதிகளுக்கு நீதிபதிகள் மதிப்பளிக்க வேண்டும்.

சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த ‘சோதனை மேல் சோதனை’ என்ற பாடலில் “துன்பப்படுறவங்க தெய்வத்துக்கிட்ட முறையிடுவாங்க, அந்த தெய்வமே கலங்கி நின்னா யாரால ஆறுதல் சொல்ல முடியும்?” என்ற வசனம் பிரசித்தி பெற்றது. ஆட்சியாளர்கள், ஊடகம், அரசுத் துறைகள், மதத் தலைவர்கள் என்று பல நிலைகளிலும் பிரச்சினை வந்தால் நீதித்துறையிடம் முறையிடுவார்கள். நீதித்துறையே கலங்கி நின்றால்...?

Supreme Court Justice Karnan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment