scorecardresearch

வங்கியில் டெப்பாசிட் செய்தால்… இனி அது உங்களுக்கு இல்லை

மத்திய அரசு புதிதாக கொண்டு வர உள்ள நிதித்தீர்வு மற்றும் வைப்புக்காப்பீடு வரைவு மசோதா 2017 நிறைவேற்றப்பட்டால், பல பாதிப்புகள் ஏற்படலாம்.

வங்கியில் டெப்பாசிட் செய்தால்… இனி அது உங்களுக்கு இல்லை

சரவணக்குமார்

வங்கியில் வைப்புத்தொகை வைத்துள்ளீர்களா? அப்படியென்றால் இதை படியுங்கள்

“வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி சேர்த்து வச்ச பணத்தையெல்லாம் சிட்பண்டில் போட்டு ஏமாந்துடாதே. வட்டி குறைவாக இருந்தாலும் வங்கியிலேயே போடு”- இப்படிச் சொன்ன காலமெல்லாம் மலையேறிவிட்டது. வங்கியில் பணம் போட்டால் கிடைக்குமோ கிடைக்காதோ என்கிற அச்ச உணர்வு மக்களிடையே துளிர்விட ஆரம்பித்துள்ளது.

இதற்கு காரணம், மத்திய அரசு திரி கிள்ளிப்போட்ட ‘நிதித்தீர்வு மற்றும் வைப்புக்காப்பீடு வரைவு மசோதா 2017’ (FRDI) என்கிற வெடிகுண்டு. தற்போது நடைபெற இருக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் வெடிக்கப்போகிறது. இதுவே அனைத்து தரப்பினரிடமும் பெரும் பீதியை கிளப்பியுள்ளது.

உண்மையில், மத்திய அரசு எதற்காக இச்சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதை காண்பதற்கு முன்னால், இம்மசோதாவின் சாராம்சத்தை பாமரனுக்கும் புரியும் வகையில் சுருக்கமாய் பார்த்துவிடுவோம்.

நீங்கள் இரண்டு லட்சத்தை வங்கியில் வைப்புத்தொகையாக போட்டுள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இது முதிர்வு பெரும் பொழுது, வங்கி அப்பணத்தை தராமல் மேலும் சில காலத்திற்கு தன்னிச்சையாக முடிவெடுத்து டெபாசிட்டாக தானே வைத்துக்கொள்ளலாம். இதற்கு உங்கள் அனுமதியெல்லாம் தேவையில்லை. அதாவது உங்கள் தொகையை வங்கி தனது முதலீடாக எடுத்துக்கொண்டு பிற்பாடு கொடுக்கும். ஒருவேளை பாங்க் திவாலாகிவிடும் என்கிற பட்சத்தில் மட்டுமே இந்த சட்டம் தன் கரங்களை நீட்டும். மற்ற நேரங்களில் சாதுவாய் படுத்திருக்கும்.

நோ…நோ… பணம் எனக்கு இந்த நிமிடத்தில் வேண்டும் என அடம்பிடித்து நீதிமன்ற கதவுகளை தட்டுவதற்கு இச்சட்டத்தில் இடமே இல்லை. அவர்கள் தரும்பொழுது வாங்கிக்கொள்ள வேண்டியது மட்டுமே உங்கள் வேலை.

இம்மசோதா சட்டமானால் வங்கிகளை இழப்பில் இருந்து காக்கும் வகையில் நிதித் தீர்வாணையம் என்கிற அமைப்பு உருவாக்கப்படும். இது வங்கிகளின் ஆபத்பாந்தவனாக இருந்து திவாலாகாமல் காப்பாற்றும்.

சரி… மத்திய அரசு இச்சட்டம் கொண்டுவர கூறும் காரணம் தான் என்ன?

‘வங்கிகளின் வாராக்கடன் சுமை அதிகரித்துவிட்டது. இச்சூழலில் திவால் என்கிற நிலை வந்துவிட்டால் என்ன செய்வது? அதற்குத்தான் இது. ஆனால் அப்படி ஒரு நிலை வராது. ஏனென்றால் அரசு வங்கிகளுக்கு 2.11 லட்சம் கோடி முதலீட்டு தொகையாக நாங்கள் வழங்க உள்ளோம்’ என்கிறது மத்திய அரசாங்கம்.

இது குறித்து வங்கிகளின் தரப்பில் என்ன சொல்கிறார்கள்? என்பதை அறிய பல்வேறு வங்கி அதிகாரிகளிடமும் பேசினோம்.

“இச்சட்டம் தேவையற்ற ஒன்று. மத்திய அரசு பல லட்சம் கோடிகளை முதலீடாக கொடுத்து வங்கிகளை பலப்படுத்தும் பொழுது வங்கிகள் எப்படி திவாலாகும்? முதலில், கோடிகளில் குளித்துக்கொண்டு கடன் கட்டாத பண முதலைகளிடம் கடனை வசூலிக்கும் வகையில் கறார் சட்டம் கொண்டுவந்தாலே போதும், வங்கிகள் வாராக்கடனில் இருந்து வெளியே வந்துவிடும். இப்பொழுதுள்ள சட்டங்களை வைத்து அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. அதைவிட்டு விட்டு இப்படி பொதுமக்களின் அடிமடியில் கை வைக்கும் இந்த மசோதா தேவையா?

அடுத்ததாக, மக்களின் பணம் கிடைக்காது என்கிற பேச்சுக்கே இடமில்லை. இதற்கு உதாரணமாக சில சம்பவங்களை சொல்லலாம். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தன்னோடு இரண்டு நலிந்த வங்கிகளை இணைத்துக்கொண்டது. அதேபோல் ஸ்டேட் பாங்கிலும் மற்ற சில வங்கிகளிலும் இது போன்ற இணைப்புக்கள் நடந்துள்ளன. இப்பொழுது வரை அந்த வாடிக்கையாளர்களின் வைப்புத்தொகைகள் பாதுகாப்புடன் இருக்கின்றன. அவர்கள் நினைத்த நேரத்தில் பணம் எடுக்கவும் முடிகிறது. இத்தனைக்கும், எவ்வளவு டெபாசிட் தொகை வைத்திருந்தாலும் வங்கி திவாலாகும் பொழுது ரூபாய் ஒரு லட்சம் மட்டுமே அவர்களுக்கு கிடைக்கும் என்கிற சட்டம் நடைமுறையில் பல காலமாக இருக்கிறது. அச்சட்டம் கொண்டுவந்த வேளையில் வராத பீதி இப்பொழுது எதற்கு? சமூக ஊடகங்களே இதை ஊதிப் பெரிதாக்குகின்றன. வங்கிகள் திவாலாகும் என்கிற பயம் அர்த்தமற்றது. ஆகையால் எப்பொழுதும் போல வங்கிகளில் டெபாசிட் போடலாம் எடுக்கலாம். இச்சட்டத்தால், தேவைப்படும் நேரத்தில் பணம் எடுக்க முடியால் போய்விடுமோ என பயந்து, இப்பொழுதே பணத்தை எடுத்து பாதுகாப்பற்ற இடங்களில் போட்டு வைக்க வேண்டாம்” என்கிறார்கள்.

பொருளாதார ஆலோசகர் சோம.வள்ளியப்பனிடம் இதைப்பற்றி கேட்டோம்.
“இந்த சட்டம் பற்றி இன்னும் முழுமையாக தெரியவில்லை. தற்போது தெரிந்து கொண்டது வரை என்னுடைய கருத்தை சொல்லுகிறேன். வங்கிகள் முறையாக நடக்காததற்கும், அதில் பணம் போடுபவர்களுக்கும் என்ன சம்மந்தம் இருக்க முடியும்? வங்கிகளின் நட்டத்திற்கு அவர்களின் வாடிக்கையாளர்கள் எந்த வகையில் காரணமாவார்கள்?

சுதந்திர இந்தியாவில், ‘குளோபல் டிரஸ்ட் பேங்க்’ மட்டுமே திவாலானது. நாட்டுடமையாக்கப்பட்ட எந்த வங்கியும் திவாலாகவில்லை. உண்மையில் இப்படி ஆவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இதனால் இந்த சட்டம் பயன்படவே பயன்படாத நிலையில் இது எதற்கு?

வங்கியில் டெபாசிட் செய்தால் ரிஸ்க் குறைவு என்பதோடு, தேவைப்படும் வேளையில் எடுத்துக்கொள்ள முடியும் என்பதன் அடிப்படையில் பொதுமக்கள் வங்கிகளை நாடுகிறார்கள். ஆனால் இந்த நிலை இன்றைக்கு கேள்விக்குறியாகி உள்ளது.

வங்கிகளின் தற்போதைய நிலைமையை சரி செய்வதற்காக கிட்டத்தட்ட 2 லட்சம் கோடிகளை கொடுப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எதிர்காலத்திலும், இப்படி கொடுத்துக்கொண்டிருக்க முடியாது என்பதால் இச்சட்டத்தை கொண்டுவருகிறார்கள்.
அப்படி கொண்டுவரும் பட்சத்தில், வைப்புத்தொகையை முதலீடாக மாற்ற விருப்பம் உள்ளவர்களுக்கே இதுபோன்று செய்ய வேண்டும். முன்பெல்லாம் கடனீட்டு பத்திரங்கள் (Debentures) வெளியிடுவார்கள். விருப்பமிருப்பின் அதை ஐந்து வருடங்கள் கழித்து பங்குகளாக மாற்றிக்கொள்ளலாம். அது போல இப்பொழுதும் கொண்டுவந்து, அந்த பங்கின் வெளிமார்க் விலையை விட டெபாசிட்தாரர்களுக்கு சலுகை விலையில் வழங்க வேண்டும்.

சாதாரண மக்களை பாதிக்கும் இந்த சட்டத்தை மத்திய அரசு கொண்டுவரும் என்று நான் நம்பவில்லை. அப்படியும் அதை நிறைவேற்றினால், நியாயம் என்று எதைச் சொன்னாலும் அதை நியாயமாக ஏற்றுக்கொள்ள முடியாது.” என்று முடித்துக்கொண்டார்.

எது எப்படி இருப்பினும், தற்போதைய நிலையில் மத்திய அரசு செய்ய வேண்டியது ஒரு விஷயம் மட்டுமே…

மக்களின் பீதியை போக்கி, அவர்களின் பணம் அவர்களுக்கு தான் என்பதை உணர்த்த வேண்டும். இல்லையெனில், சிறு துளியாய் சேர்த்த தங்களின் சேமிப்பு ஒரு நொடியில் கரைந்து போவதாக நினைக்கும் மக்கள், ஒன்றுசேர வங்கிகளை முற்றுகையிட ஆரம்பிப்பார்கள். இதனால் நேற்று சிட்பண்டுகளுக்கு ஏற்பட்ட நிலை இன்று வங்கிகளுக்கு ஏற்படும்.

Stay updated with the latest news headlines and all the latest Opinion news download Indian Express Tamil App.

Web Title: If you deposit in the bank its no longer you