scorecardresearch

வசந்தத்தின் இடி முழக்கம்

உலகமயமாக்குதலின் அதிகரித்து வரும் தாக்கத்தில் வலது பக்கம் திரும்பிக்கொண்டிருக்கும் இந்தியாவோடு உரையாடல் நிகழ்த்தும் வல்லமை புரட்சிகர இயக்கத்திற்கு இருக்கிறதா?

வசந்தத்தின் இடி முழக்கம்

சிவிக் சந்திரன்

நீங்கள் யார் பக்கம் இருக்கிறீர்கள்? நக்சல்பாரி, ஸ்ரீகாகுளம் காலங்களில் இருத்தலியல் பற்றியும் அராஜகவாதம் பற்றியும் உளறிக்கொண்டிருக்க போகிறீர்களா? சாலை உங்களை தேடுகிறது. மக்கள் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். வரலாற்றின் விழைவை கேளுங்கள்.

பின்னாட்களில் இந்தியவின் மிகச்சிறந்த புரட்சிகர பாடகராக கொண்டாடப்பட்ட கத்தர் அப்போது வாரங்கலில் ஒரு கல்லூரியில் பொறியியல் படித்துக் கொண்டிருந்தார். பேருந்து நிலையங்களிலும் இடுகாடுகளிலும் பிச்சைகாரர்களையும் பாலியல் தொழிலாளர்களையும் அழைத்து புத்தக வெளியீடுகள் நடத்திக் கொண்டிருந்த காலம் அது. அதிகாரத்துக்கு எதிராக கொந்தளித்துக்கொண்டிருந்த இளைஞர்களின் கோபம் பற்றி எரிந்து கொண்டிருந்தது. கவிதையாகவும், பாடலாகவும், புனைவாகவும், நிகழ்த்துக் கலையாகவும், வீதி விசாரணைகளாகவும், கலாச்சார எதிர்வாதங்களாகவும் அவை ஒவ்வொரு மொழியிலும் கனன்று கொண்டிருந்தன.

எழுபதுகள் என்று அழைக்கப்பட்ட அந்த காலகட்டத்தின் கலாச்சார புரட்சியின் ஒரு பகுதியாக நானும் இருந்தேன். அப்படிதான் நான் இயக்கத்தில் சேர்ந்தேன். ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்க அப்போது நான் கேரளாவிலுள்ள வயநாட்டுக்கு வந்திருந்தேன். அடியோருடே பெருமான் (ஆதிவாசிகளின் கடவுள்) என்று அறியப்பட்ட வர்கீஸ் போலி என்கவுண்டரில் காவல்துறையினரால் சுட்டு கொல்லப்பட்ட காலம் அது. ஒரு சிறுநகரத்தின் பேருந்து நிலையத்தில் சில நண்பர்கள் நின்று கொண்டு அப்போது வெளியாகியிருந்த ஒரு கவிதையைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தோம். அந்த உரையாடலில் எங்களுக்கு அறிமுகமில்லாத ஒருவர் இணைந்து கொண்டார். பிறகு நான் தங்கியிருந்த இடத்திற்கு வந்தார். அவரது தோள் பையில் ரெட் லிட்டரேச்சர் இதழின் சைக்ளொஸ்டைல் செய்யப்பட்ட பிரதிகள் இருந்தன – செங்கோட்டை மீது சிவப்பு கொடி, இந்த பத்தாண்டை விடுதலைக்கான பத்தாண்டாக உருவாக்கு, கிளர்ச்சி செய்வதில் நியாயம்…

கொஞ்சம் நாடகத்தில் ஆர்வம் கொண்ட, நவீன, இருத்தலியல் இலக்கியத்தில் அக்கறை கொண்ட ஒரு நடுத்தர வர்க்க இளைஞன் அப்போது நக்ஸலைட் ஆகிறான். நெருக்கடி காலத்தில் சிறைபட்டு வெளியேறிய பிறகு சிறை கவிதைகள் என்கிற தொகுப்புடன் அவன் மீண்டும் கலாச்சார மைய நீரோட்டத்தில் தோன்றுகிறான்.

இது என் தலைமுறையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களின் கதை. அவர்கள் முதலில் தங்களை ரெட் லிட்ரேச்சரோடு பரிச்சயப்படுத்திக்கொண்டார்கள். பின்னர் தெருக்களில் இறங்கி ஒடுக்கப்பட்டவர்களிடமிருந்து அரசியல் பாடங்களை கற்றார்கள்.

எழுபதுகள் என்பது நக்சல்பாரி பற்றி மட்டுமல்ல. வியட்நாமுக்கு எதிரான போருக்கு கிளம்பிக் கொண்டிருந்த ராணுவ வீர்ர்களிடம் “துப்பாக்கிகள் இல்லை பூக்கள்” என்று அமெரிக்க கல்லூரிகள் கூக்குரல் விடுத்த காலம் அது. பாரிஸில் புரட்சி வெடித்தது. பீப்பாய்களின் மீதேறி நின்று தடை செய்யப்பட்ட புத்தகங்களை விற்றுக்கொண்டிருந்தார் சார்த்தர். லத்தீன் அமெரிக்கவில் விடுதலை கோட்பாடு வலுப்பெற தொடங்கியது. பாயக் காத்துக் கொண்டிருந்தார்கள் கறுப்புச் சிறுத்தைகள். காஸ்ட்ரோவும் சேவும் தங்களது துப்பாக்கிகளை அங்கிள் சாமின் (அமெரிக்கா) மூக்கின் கீழ் நிற்க வைத்த காலகட்டம் அது. அமெரிக்காவை மண்டியிட வைத்துக்கொண்டிருந்தது வியட்நாம். விவே லா வியட்நாம் (வெல்க வெல்க, வியட்நாம்) என்றும் ஃப்ரீ ஃபீரீ மண்டேலா (மண்டேலாவை விடுதலை செய்) என்றும் உலகெங்கும் இளைஞர்கள் முழக்கமிட்டுக்கொண்டிருந்த காலகட்டம் அது. உலகம் விடுதலை பெறும் அதுவும் இப்போதே என்று நாங்கள் எல்லோரும் உண்மையிலேயே நம்பிய காலம் அது. இடது பக்கத்தில் இதயத்தை கொண்ட எந்த இளைஞன்தான் நக்சலைட் ஆகாமல் இருப்பான்?

கல்கத்தாவின் வீடுகளிலிருந்து 14லிருந்து 25 வயது வரையிலான இளைஞர்களில் ஒருவராவது ’காணாமல்’ போய்க்கொண்டிருந்தார்கள். அந்த காலகட்டத்தைப் பற்றி இப்படி சொல்கிறார் மஹாஸ்வேதா தேவி: நமது குழந்தைகளை நம்மால் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை? கைகளில் இதயங்களை பிடித்துக்கொண்டு அவர்கள் துரத்திய கனவுகளை அம்மாக்களாக நாம் ஏன் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை?

கேரளாவில் எழுந்த கோபமுற்ற ஒரு தலைமுறையின் கலாச்சார எதிர்ப்புணர்வின் வடிவமான ஜனநாயக கலாச்சார மையத்தின் தோல்வியை அம்மா அறியானில் காட்டினார் ஜான் ஆப்ரஹாம். ”அம்மா, எவ்வளவு தியாகங்கள். கனவுகளின், பைத்தியகாரத்தனத்தின், போதையின், தனிமையின், விடுபடுதலின் தியாகங்கள் அம்மா! கண்ணீரின், வியர்வையின், ரத்தத்தின் தியாகங்கள்!”

நக்சலைட் இயக்கத்தில் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தீவிரமான அரசியல் பயிற்சி எல்லாம் பெறவில்லை. செயிண்ட் பீட்டர்ஸ்பர்கின் விண்டர் பேலசின் மீது (அரசர்கள் வாழ்ந்த அதிகாரப்பூர்வமான மாளிகை) சிவப்பு நட்சத்திரத்தை ஒளிரவிட்டவர்கள் கம்யூனிஸ்ட் அறிக்கையை வாசித்திருக்கவில்லை. சீனாவில் ராணுவ பின்னடைவுக்கு வழி வகுத்த பெரும் பேரணியில் கலந்து கொண்டவர்களின் கைகளில் தாஸ் கேப்பிடல் இருந்திருக்குமா என்ன? அப்படிதான் நமது சூழலிலும் அது இருந்தது. அது பற்றி கத்தர் சொல்வதை கேளுங்கள்.
80களின் தொடக்கத்தில் நான் ஆசிரியராக பொறுப்பேற்கவிருந்த டிஸ்டண்ட் தண்டர் என்கிற பத்திரிக்கைக்கு அவரை மெட்ராஸில் வைத்து ஒரு நேர்காணல் எடுத்தேன். “நான் சொல்லப்போவதை நீங்கள் எடிட் செய்துவிடுவீர்கள். இருந்தாலும் சொல்கிறேன்” என்றார். “அரசியல் காரணங்களுக்காக மட்டுமே ஒரு கலைஞன் ஒரு அரசியல் இயக்கத்துடன் தொடர்பு வைத்துக்கொள்வதில்லை. அந்த இயக்கத்தோடு அவன் அகநிலை சார்ந்து அடையாளப்படுத்திக்கொள்வதாலேயே தொடர்பை ஏற்படுத்திக்கொள்கிறான். குறைந்தபட்சம் என்னைப் பொறுத்தவரையில் அது உண்மை. மாவோயிஸ்டுகளுடன் எனக்கிருக்கும் உறவு ஆன்மீகரீதியானது” என்றார் அவர். இப்போது மீண்டும் செய்திகளில் இடம் பிடிக்கிறார் கத்தர். ஆயிரக்கணக்கானவர்களை புரட்சியின் பாதைக்கு திருப்பிய, நூற்றுக்கணக்கானவர்களை தனது பாடல்கள் மூலம் உணர்ச்சிவயப்பட வைத்த பாடகர் கத்தர் இப்போது ஆன்மிக தேடலில் இருக்கிறாராம்! மற்றவர்களுக்கு அவரது பயணம் புரியாது. புரட்சியை கைவிடாத, காவி அணிந்த தேடல் அது.
புரட்சி கொண்டு வரும் புதிய ஆன்மீகம் பற்றி கிராம்ஷி சொல்லியிருப்பதை மேற்கோள் காட்டும் அறிவுஜீவிகள் கத்தரை புரிந்துகொள்ள முடியவில்லை என்பது கத்தரின் தவறு இல்லை. கத்தரிடம் நாம் ஏமாறுவோம் என்று நாம் அஞ்ச வேண்டாம். தனக்குள் ஒரு வனத்தை சுமந்தலையும் சிங்கத்தை எந்த கூண்டும் கட்டுப்படுத்த முடியாது. கத்தர் மாவோயிஸ்டுகள் பற்றி கவலைப்பட வேண்டியதை விட முக்கியமானது மாவோயிஸ்டுகள் கத்தர்களை பற்றி கவலைப்பட வேண்டியது. ஆக்கப்பூர்வமான மக்கள் ஏன் ஒவ்வொருவராக இயக்கத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்? கத்தரை விசாரணை செய்வதை விட்டுவிட்டு மாவோயிஸ்டுகள் தங்களை விசாரணைக்குட்படுத்திக்கொள்ள வேண்டும். நக்ஸல்பாரியின் ஐம்பதாவது வருடத்தில் இயக்கமும் அதன் தத்துவமும்தான் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருக்கிறது. உலகமயமாக்குதலின் அதிகரித்து வரும் தாக்கத்தில் வலது பக்கம் திரும்பிக்கொண்டிருக்கும் இந்தியாவோடு உரையாடல் நிகழ்த்தும் வல்லமை புரட்சிகர இயக்கத்திற்கு இருக்கிறதா? அரசு, வன்முறை, தனி நபர், வர்க்கம், சாதி-பாலின அடையாளங்கள், ஒழுக்கம் உள்ளிட்ட பல பிரச்னைகளில் தங்களுடைய நிலைப்பாடுகளை மாவோயிஸ்டுகள் மறுபரிசீலனை செய்யவில்லை என்றால் இயக்கம் எந்த முன்னேற்றமும் அடையாது.

பின்குறிப்பு: நாங்கள் சிறைக்குள் நுழைந்த போது எங்களுக்காக காத்துக்கொண்டிருந்தார் நக்சலைட் தோழர் மாதவேட்டன். நம் போன்ற புரட்சிவாதிகளை ஏன் நக்சலைட்டுகள் என்று அழைக்கிறார்கள் என்று அவர் கேட்டார். வங்காளத்தில் உள்ள நக்சல் என்கிற கிராமத்திலிருந்து உருவான இயக்கம் என்பதால் என்றோம். கேரளாவில் உள்ள சோக்லி என்கிற கிராமத்தில் உருவாகியிருந்தால்?! ஹாஹா! நமது புரட்சிவாதிகளை சாக்லேட்டுகள் என்று அழைத்திருப்போம்!

மலையாளத்திலிருந்து ஆங்கிலத்துக்கு: அம்ரித் லால்
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு: கவிதா முரளிதரன்.

ஜனநாயக கலாச்சார மையத்தின் ஒருங்கிணப்பாளராக இருந்த சிவிக் சந்திரன், கவிஞர், மற்றும் நாடக கலைஞர். புதிய சமூக அமைப்புகள் பற்றிய சிற்றிதழான பாடபேதம் இதழின் ஆசிரியர்.

Stay updated with the latest news headlines and all the latest Opinion news download Indian Express Tamil App.

Web Title: In the wake of the spring thunder